பாரதி விவாதம் 5 – தோத்திரப் பாடல்கள்

தமிழகத்தில் மிகப்பெரும்பாலும் பாரதியை மேற்கோள் காட்டாத தமிழ் எழுத்தாளர்களோ பேச்சாளர்களோ இருக்கமுடியாது என்பது என் எண்ணம். அவரளவு மேற்கோள் காட்டப்பட்டவர் வள்ளுவர் மட்டுமே என்பதும் என் துணிபு. கம்பனைக்கூட பாரதியை விட குறைவாகவே மேற்கோள்களில் காண்கிறோம். தொடர்ந்து ஒரு சமூகத்தால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் குறிப்பிடப்பட்டும் மேற்கோள் காட்டப்பட்டும் வரும் அளவுக்கு தமிழ் சமூகத்தில் , தமிழ் மனங்களில் ஆழமான ஒரு பாதிப்பை அவர் செலுத்தியிருக்கிறார் என்றால், அவரது கவிதைகள் சிறப்பானவை என்று சொல்லலாகாதா?


நான் ஒரு கவிஞன் மேற்கோள் காட்டப்ப்படும்போதே சமூகத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்று புரிந்துகொள்கிறேன். அது தவறா?


எல்லாக் காலத்துக்கும் சமகாலத்தன்மையுடன் இருக்கக்கூடிய வரிகளே மேற்கோள் காட்டப்படும் என்றால் பாரதி காலம் கடந்த தன்மை உடையவனாகக் கணக்கில் கொள்ளவேண்டும் அல்லவா?அப்போது அவன் காலம் கடந்து நிற்கும் படைப்புகளைப் படைத்தவன் ஆகிறான் அல்லவா? சிலவரிகளே இருக்கின்றன என்று சொல்லவும் முடியாது என்று நினைக்கிறேன். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதே சிலப்பதிகாரத்தில் இருந்து பெரிதும் எடுத்து மேற்கோள் காட்டப்படுவது. எனவே பெரும் படைப்பாக இருந்தாலும், அதிலிருந்து சிலவே காலம் கடந்த சிந்தனை உடையதாகவும், மேற்கோள் காட்டக்கூடியதாகவும் இருக்கக்கூடும் அல்லவா


-ராம்



8


ராம்,


நான் ஏற்கனவே சொன்னது போல பாரதி நவீன இந்திய ஜனநாயக யுகத்தைக் கட்டமைத்த முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ் சுயத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். கச்சிதமான சொற்களில் அவ்வரையறைகளை முன்வைத்தவர். 'கம்பனைப்போல்,வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்' என ஒரு மரபைத் தரவரிசைப்படியே அவன் அமைப்பதை கவனியுங்கள். இந்த அம்சமே அவனை எப்போதும் மேற்கோள் காட்டப்படுபவனாக ஆக்குகிறது. அவனுடைய இந்த சமூக அரசியல் வரிகளே அவனை மேடையில் வாழச்செய்கின்றன. உயர்கவித்துவம் வெளிப்படும் வரிகள் அல்ல


ஜெ


8


ஜெமோ


பாரதியின் தோத்திரப் பாடல்கள் தெய்வத்தை நெருங்கி நின்று பேசுபவை.நேர்படக் காட்டுபவை.தெய்வம் இன்னதென்று விளக்க முற்பட்டகருத்தாக்கள் அவற்றை உள்நிலை அனுபவத்தில் ஐயமறக் கண்டு பின்னர் அவற்றை சூத்திரங்களாகவும் தத்துவங்களாகவும் தந்தனர்.பதஞ்சலியின் யோகசூத்திரம், அத்வைதம் துவைதம் உள்ளிட்டஅத்தனை தரிசனங்களும் உள்நிலை அனுபவத்திலிருந்தே உருவானவை.


காலப்போக்கில் பின்பற்ற வந்தவர்கள் தரிசனத்தை விட்டுவிட்டு ஏட்டறிவாய் மட்டுமே அவர்கள் கண்டும் கேட்டும் அறிந்த தத்துவத்தின் வற்றிய முலையைப் பற்றியிழுக்க முற்பட்டனர்.அங்கேதான் வெறும் நம்பிக்கையாய் ஆனது ஆன்மீகம்.


உள்நிலை அனுபவத்துக்கான வேட்கையையும் தேடலையும் வளர்ப்பவைபாரதியின் தோத்திரப் பாடல்கள்.அந்தத் தேடலும் தவிப்புமே அவனிடம்கவிதையாய் மலர்ந்தன.


"உன் வெள்ளக் கருணையிலே இந்நாய்ச்சிறு வேட்கை தவிராதோ"


என்ற தேடலது.


தரிசனத்துக்கான உந்துதலையும் உத்வேகத்தையும் வாசிப்பவர் மனங்களில் ஏற்படுத்துபவை பாரதியின் தோத்திரப் பாடல்கள்.அதேநேரம் அந்த தரிசனம்.எத்தகைய பேரானந்தம் என்பதையும் அனுபவமாய் அனுபூதியாய் உணர்த்துபவை.இதற்கு பாரதி பாடலில் இருந்தோர் உதாரணத்தைக் காணும்முன்திருமூலர் அதே தேடலை விதைக்கும் உத்தியைப் பாருங்கள்.


ஆசிரியர் வகுப்பில் கேள்வி எழுப்புவது போல் தொடங்குகிறார்


"ஒன்று கண்டீர் இவ்வுலகுக்கொரு கனி"


யாரோ ஒரு மாணவர், அது நமசிவாய எனும் ஐந்தெழுத்துதானேஎன்று கேட்க சபாஷ் போடுகிறார்


" நன்றுகண்டீர் அது நமசிவாயக்கனி"


அருநெல்லிகாய் நல்லதெனினும் கடிக்க சிரமப்படுமே,இந்தக் கனி எப்படியோ?


"மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும்"


அதுசரி..சுவையாக இருக்குமா?சாப்பிடலாமா என்றெல்லாம் கேள்வி வர,"தின்று கண்டால் அது தித்திக்கும்தானே"என்று முடிந்த முடிபாகச்

சொல்லிவிடுகிறார்.


"ஒன்று கண்டீர் இவ்வுலகுக்கொரு கனி

நன்று கண்டீர் அது நமசிவாயக் கனி

மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும்

தின்று கண்டால் அது தித்திக்கும் தானே"


தான் பெற்ற அனுபவம் இன்னதென உணர்த்தி அந்த அனுபவத்தைப்பெறும் வேட்கையை ஏற்படுத்துவதே ஆன்மீகப் பாடல்.அது வேட்கையைத் தணிக்காது. வேட்கையை வளர்க்கும்.


இதே தன்மையை பாரதியிடம் காணமுடிகிறது..


இயக்கம் கடந்த வெட்டவெளியிலிருந்து,இயங்கும் அணுக்களின் அசைவுகள்வரை, அந்த அணுக்களின் அதிநுண்ணிய தன்மைவரை வியாபித்து,தனக்கொரு தன்மையின்றி,தன்மையெல்லாம் தானாகி, சர்வ வியாபகமாய் நின்றிருக்கும் பெருஞ்சக்தி. அதை உள்நிலை அனுபவத்தில் உணர்ந்துகொண்டு அதே அடர்த்தியுடன் அந்த அனுபவத்தை பாரதி பகிர்ந்து கொள்கிறார்


"வெட்ட வெளியாய் அறிவாய் வேறுபல சத்திகளைக்

கொட்டு முகிலாய் அணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்

தூல அணுக்களாய் சூக்குமமாய் சூக்குமத்தில்

சாலவுமே நுண்ணியதாய் தன்மையெலாம் தானாகி




தன்மை ஒன்றில்லாததுவாய் தானே ஒருபொருளாய்

தன்மை பலவுடைத்தாய் தான்பலவாய் நிற்பதுவே"


இவையெல்லாம் பாரதியை தனித்தன்மை மிக்க ஆன்மீக தரிசனம் கண்டவனாய் நிலை நிறுத்துகிறது.


மரபின்மைந்தன் முத்தையா


**


மிக‌ முக்கியமான விவாதம்.

ஜெ முன் வைக்கும் மகாகவி என்பதன் இலக்கணம் ,அளவுகோல்

வெகுவாக யோசிக்க வைக்கிறது.ஜெ வின் ஆட்டத்தின் விதிகளே வேறு என்று தோன்றுகிறது , அவர் மதிப்பெண் அளிக்கும் விஷயங்கள் வேறு.


ஜெ ஒரு விரிவான பின்புலத்தில் பாரதியை வைத்துப் பார்க்கிறார் ,அந்தப் பின்புலத்தை ஆழமாக அறிந்திருக்கிறார்.


மகாகவி என்று ஜெ முன் வைக்கும் தாகூர் படைப்புகள் பற்றி யாரேனும் விரிவான ஒரு பார்வை வைத்தால் …தாகூர் / பாரதி என்ற ஆளுமைகளை கவி / மகாகவி என்ற கோணத்தில் வைத்துப் பார்க்கலாம்.


கார்திக்

*


உணர்ச்சி மிகுதியால் பாரதியைத் தூக்கிப்பிடிப்பது அவரைப் பலவீனப்படுத்தும் என்பதை உணர்கிறேன். உண்மையில் இந்த விவாதத்தின் முதல் கடிதத்தில் அப்படித்தான் தோன்றியது. அதனால் ஜெ சொல்வதை கவனித்து மட்டும் வந்தேன். தமிழ் மரபில் மற்ற கவிகளையும் ஒப்பிட நினைத்தது அதனாலேயே.


தனிப்பாடல்கள் உதாரணம் ஒன்று. வினாயகர் நான்மணிமாலையில் உள்ள இது தவிர்க்க முடியாதது. பெருவலியில் கோமல் இமயமலை உச்சியில் அடைந்ததன் மூலவடிவம் போன்ற மகத்தான சிந்தனை. இதில் பாரதியின் உலகம் – எல்லா உயிர்களும் தழுவிய சிந்தனை மாண்பும், கவிதை உச்சமும் தெரிவதால் 'ஒரு சோறாக' இங்கே இடுகிறேன். இது போன்ற வரிகள் எல்லாக் காலத்திலும், எந்த நாட்டு மக்களுக்கும் உணர்ந்து படித்தால் ஒரு மன உச்சத்தைத் தரும். மகாகவியில்லாத ஒருவர் இப்படி உலகம் தழுவிய அன்பையும், ஒளிரும் வார்த்தைகளையும் சிந்திக்க முடியுமா?


பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!


ஞானாகாசத்து நடுவே நின்று நான்

'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெல்லாம்

இன்புற்று வாழ்க' என்பேன்! இதனை நீ

திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி

"அங்கனே யாகுக!" என்பாய் ஐயனே!


கம்பனின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் இரண்டாயிரத்திற்கும் மேல் கவித்துவ உச்சம் கொண்டவை என்றால் பாரதியின் எழுதிய பாடல்களிலும் இதே விகிதத்தில் பாடல்கள் இருக்கும். ஆனால் நான் இப்படிச் சொல்லும் போது ஒரு அபத்தம் எனக்கே இடிக்கிறது. சில கவிதைகள் எழுதி அதில் ஓரிரு கவிதைகள் உச்சமாக அமைந்துவிட்ட எவரையும் மகாகவி என்று சொல்ல முடியுமா? முடியாதென்றே தோன்றுகிறது. ஆகவே மேலும் ஜெ என்ன சொல்கிறாரென்று கவனிக்க வேண்டியது தான். :)


சங்கரன் பிரகாஷ்.


*


நண்பர்களுக்கு,


இந்த விவாதத்தைத் தொகுத்துப்பார்க்கும் ஒருவர் என்னுடைய வாதங்களுக்கும் நண்பர்களின் எதிர்வாதங்களுக்கும் உள்ள அடிபப்டையான வேறுபாடொன்றை கவனிக்கக்கூடும். நான் பாரதியை வாசித்து, ரசித்து, அவரை மதிப்பிட முயல்கிறேன். மதிப்பிடுவதென்பது தமிழ் இலக்கியமரபிலும் இந்திய இலக்கிய மரபிலும் உலக இலக்கியமரபிலும் அவரைப் பொருத்திப்பார்ப்பதன் மூலமே சாத்தியமாகும்.


பாரதியே அந்தவகையான அளவுகோலை சர்வசாதாரணமாக உருவாக்குகிறான். 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப்போல்' என அவன் சொல்லும்போது ஒரு மிகச்சரியான தரவரிசையை உருவாக்குவதை கவனிக்கலாம். பண்டைய இலக்கியங்கள் அச்சுக்கு வந்துகொண்டிருந்த காலகட்டம், விவாதங்கள் ஆரம்பிக்காத காலகட்டம், அப்போதே இந்தத் துல்லியமான மதிப்பீடு உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பது. பாரதியின் ரசனையையும் திறனாய்வுமனநிலையையும் அடையாளம் காட்டுவது.


இதேபோல இந்திய அளவில், உலக அளவில் ஒரு விரிவான ஒப்பீட்டின் அடிப்படையிலேயே ஒருவரை மகாகவி என்று சொல்லமுடியும் என்பதே என் தரப்பு. அது பாரதியின் கவிதைகளிலுள்ள நயங்களை அல்லது நுட்பங்களை நிராகரிக்கும் பார்வை அல்ல. ஆகவே அந்த நயங்களையும் நுட்பங்களையும் சுட்டிக்காட்டுவது அதற்கான பதிலும் அல்ல. அவரது கவிதைகள் ஒப்பீட்டளவில் தரத்திலும் அளவிலும் எப்படி முதன்மைபெறுகின்றன என்றே சொல்லவேண்டும். அவரது கவித்துவச் சிந்தனைகளில் அவரிடம் மட்டுமே உள்ள தனித்தன்மை என்ன என்றே சுட்டவேண்டும்.


நான் ஆரம்பம் முதலே அவரது கவிதைவேகத்தை அங்கீகரித்தே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நவீன இந்திய மகாகவி என நான் நினைக்கும் தாகூருடன் ஒப்பிட்டால், தமிழின் பேரிலக்கிய மரபுடன் ஒப்பிட்டால் தூயகவித்துவம் வெளிப்படும் அழியாத கவிதைகள் மிகக்குறைவே என்பதை முதலில் குறிப்பிடுகிறேன். அவரது கவிதைகளில் உள்ளதாக நண்பர்களால் சுட்டப்படும் தரிசன தனித்துவம் என்பது இந்திய நவவேதாந்த எழுச்சியின் சிறு துளிமட்டுமே என்று சொல்கிறேன். அவை இதுவரை மறுக்கப்படவில்லை.


இந்த விவாதத்தில் நாம் ஓர் பொதுப்புள்ளியை நோக்கி நம்மையறியாமலேயே முனைகொண்டுவிட்டோம் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் நான் சொல்லிய இரு விமர்சனங்களில் ஒன்றுக்கு, பாரதியின் உரைநடை மற்றும் புனைவிலக்கியங்கள் அவரது சமகால இந்திய எழுத்துக்களுடன் ஒப்புநோக்க மிக ஆரம்ப நிலையில் இருப்பவை என்பதில் அனேகமாக எவருக்குமே மாற்றுக்கருத்தில்லை என்று தெரிகிறது. மறுப்பு ஏதும் எழவில்லை.


இரண்டாவதாக பாரதியின் கவிதைகளின் உயர்கவித்துவம் பற்றிய விவாதத்தில் அவரது சமூகம் சார்ந்த பாடல்கள், தேசிய இயக்கப்பாடல்கள் மெல்லமெல்லக் கைவிடப்பட்டு அவரை ஒரு வேதாந்த-சாக்த கவிஞர், இறையனுபவத்தை எழுதியவர், அந்த இடத்திலேயே அவரது கவிதையின் வெற்றி உள்ளது என்று சொல்லும் முனை வந்து சேர்ந்திருக்கிறது.


'இறையனுபவத்தை நேர்நின்று காட்டும் தன்மை கொண்டவை, சர்வசகஜமாக இறைவனைக் கையாள்பவை' என்பதே இப்போது பாரதியின் கவித்துவ வெற்றிக்கான ஆதாரமாக முன்வைக்கப்படும் இறுதி வாதமாக இருக்கிறது. பாரதி ஒரு பக்தகவிஞர் என்பதே முடிவான வரியாகத் திரண்டு வந்திருக்கிறது.


தமிழின் நெடிய மரபில் இறையனுபவத்தை மொழியில் அனுபவமாக்கிய பெருங்கவிஞர்களில் ஒருவராக பாரதியைக் கொள்ளமுடியுமா? ஆழ்வார்களின் அனுபவத்துடன் பாரதியின் அனுபவத்தை ஒப்பிட்டு அவற்றில் இல்லாத ஒரு சிறப்பம்சம் பாரதியில் உண்டு என்று சொல்லமுடியுமா என்றே நான் கேட்பேன். பாரதி கண்ணன்பாட்டு முதலியவற்றில் முன்வைக்கும் பாவபக்தி என்பது உலகமெங்கும் எப்போதும் இருந்துகொண்டிருப்பது. அவற்றில் உச்சகட்ட கவிவெளிப்பாடுகள் எவ்வளவோ உள்ளன. பாரதியின் காலகட்டத்திலேயே பல ஞானிகள் அந்த தளத்தில் எழுதியிருக்கிறார்கள். பாரதி அந்த பொதுமரபுக்குள் நின்றே எழுதுகிறான். ஆகவே இறைவனை பல்வேறு பாவநிலைகளில் நின்று பாடினான் என்பது பாரதியின் ஒரு தனிச்சிறப்பல்ல.


கண்ணன் பாட்டில் மிகச்சிறந்த கவிதைத்தருணங்கள் உள்ளன. ஆனால் பாவபக்தி என்ற வகைமைக்குள் நமக்கு தமிழில் கிடைக்கும் பாடல்களுடன் ஒப்பிடுகையில் பாரதி அதில் முன்பில்லாத உச்சமெதையும் தொடவில்லை என்பதே என் கருத்து. நாயக-நாயகி பாவத்திலேயே பாரதியும் நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார். கண்ணன் என் சேவகன், கண்ணன் என் தந்தை போன்ற கவிதைகள் சாதாரணமான மொழிபுகளாகவே இருக்கின்றன. முத்தையா எடுத்துத் தந்துள்ள கண்ணன் என் தந்தை பாடலே அதற்குச் சான்றாகும்.


நான் கவிதை என்ற வடிவில் இத்தகைய எளிய அர்த்தங்கள் அல்லது உணர்ச்சிநிலைகளுடன் நிறைவடைய மாட்டேன். கவிதை அதற்கும் அப்பால் செல்லவேண்டும் என்றே நினைப்பேன். என் நோக்கில் கவிதைக்கான மூன்று இலக்கணங்கள் உள்ளன. பிறிதொன்றிலாத தன்மை, மொழியனுபவமாக வெளிப்பாடு கொண்டிருத்தல், தரிசனம். இந்தக் கவிதைகளில் உள்ள பாவபக்தி என்பது புதியதல்ல. மொழியனுபவமாக வெளிப்பாடு கொண்டிருப்பவை சில வரிகளே ஒழிய முழுக்கவிதையும் அல்ல. மெய்ஞான தரிசனமோ மிகமிக மரபார்ந்ததாக உள்ளது.


நான் ஏற்கனவே சொன்னவற்றையே மீண்டும் இவ்விவாதம் மூலம் உறுதிசெய்துகொள்கிறேன். பாரதியின் மெய்யான கவித்துவம் வெளிப்பட்ட இடங்கள் மிகக்குறைவே. அவற்றைக்கொண்டு அவரை தமிழின் மரபில் வந்த ஒரு நல்ல கவிஞர், நவகவிதைக்கு வழிகோலிய முன்னோடி என்று சொல்லலாமே ஒழிய மகாகவி என்று சொல்லுதல் மிகையானதாகவே அமையும்


ஜெயமோகன்

தொடர்புடைய பதிவுகள்

பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்
பாரதி-கடிதங்கள்
பாரதி விவாதம் 4 – தாகூர்
பாரதி விவாதம் 2 – மகாகவி
உணவும் விதியும்
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதியின் இன்றைய மதிப்பு
கடிதங்கள்
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
நிழலில்லாத மனிதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.