பாரதி விவாதம் 2 – மகாகவி

ஜெ,


பாரதியின் சமூகப்பாடல்களில் சில,தேச வணக்கப் பாடல்களில் சில நீங்கலாகப் பார்த்தால் பெரும்பான்மையான பாடல்கள் பேரிலக்கியவகைமையைச் சார்ந்தவைதாம். சாக்த வழிபாட்டு நிலையில்கூடபக்தியையும் கடந்து சாக்தம் குறித்த தத்துவம் பொதிந்த கவிதைகள்பாரதியிடம் இருந்து தோன்றியுள்ளன.



காலமா வனத்தில் அண்டக்

கோலமா மரத்தின்மீது

காளிசக்தி என்ற பெயர் கொண்டு


என்ற கவிதையில் உள்ள உருவகம் ஓர் உதாரணம்.



"பல்வகை மாண்பினிடையே -கொஞ்சம்

பயித்தியம் அடிக்கடித் தோன்றுவதுண்டு"


என்று 'கண்ணன் என் தந்தை'யில் பாடும்போது தந்தை-மகன் உறவினிலான உளவியல் சிக்கலை அழகாகப் பேசுகிறார்.


இப்படி பல இடங்கள் பாரதியின் பேரிலக்கிய ஆளுமையின் பேரிகைகள்.அவரது சக்தி உபாசனை அரவிந்தரிடமிருந்துதான் வந்ததா என்கிற கேள்விஉண்டு. அப்படியே இருந்தாலும் சாக்த உபாசகர்களுக்கான தீட்சை முறைகளை பாரதி பின்பற்றியதாகத் தெரியவில்லை.தன்னளவில்சக்தியை மிக நெருக்கமாக உணர்ந்த சாக்தனாகவே அவன் தெரிகிறான். குரல் காட்டி அன்னை பராசக்தி தன் கவிதைகளைக் கேட்கும் அளவு இயல்பான நாட்டம் சாக்தத்தில் அவனுக்கு இருந்திருக்கிறது


தனித்தன்மை ஒருபுறமும்,ஷெல்லி போன்றவர்களை உள்வாங்கிய புரிதலும் பல்வகை தெய்வானுபவங்களில்(ஆனைமுகன் தொடங்கி அல்லா வரை)மன விகசிப்புடன் திளைத்தலும்,அப்படித் திளைத்த பின்னரும் " சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ -சில பித்த மதங்களிலேதடுமாறி பெருமை அழிவீரோ"என்ற தெளிவும் பாரதியின் மகத்துவத்தை நிலையான இடத்தை உணர்த்துகிற கூறுகள்.


யாப்பு வடிவத்தை நெகிழ்வித்ததில் சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியாருக்குப் பங்குண்டு எனினும் அவரது பாடுபொருள் முருகவழிபாடு மட்டுமே.அதிலும் பாரதி பல்வகைப் பொருட்களைப்பாடுகிறான்.



"சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு

சூதில் பணயமென்றே ஆங்கொரு தொண்டச்சி போவதில்லை"


என்கிறவரிகள் கேசனோவா வரை செல்லுபடியாகக் கூடிய சிந்தனை.எந்தக் கவித்துவமும் உலகளாவிய நிலையில் சிந்தனை பலத்தால்தான்நிற்கும்.திருக்குறள் நிற்பது அதன் சிந்தனைக் கட்டமைப்பால்தான்.


கம்பனை அளவுகோலாக்குவதில் எனக்கு மறுப்பில்லை.காவிய காலத்துமகாகவி ஒருவன் தன் படைப்புகளின் விரிந்த களம் சார்ந்த வாசல்களால்வெளிப்படுகிறான்.பாரதி தன் கள எல்லைக்குள் நின்றே ஒரு மகாகவியின்இலக்கணங்களை உணர்த்துகிறான். கம்பன் முன்னிறுத்திய ஆளுமைஅம்சங்கள் கம்பனின் இதர படைப்புகளிலேயே காணப்படாதபோது, பாரதி எழுதும் சின்னஞ்சிறு கவிதைகளிலேயே கம்பனுக்குஇணைவைக்கக் கூடிய ஆளுமை அம்சங்கள் தெறிக்கின்றன என்பதேஎனது வாதம்.


மரபின்மைந்தன் முத்தையா



நண்பர்களே,


என்னுடைய எளிமையான கேள்வி இதுதான். பராதி மகாகவி, அவரது படைப்புகள் காலம் இடம் தாண்டிய பெரும்படைப்புகள் என்பதை நாம் ஏதேனும் இலக்கிய விமர்சன அளவுகோலைக்கொண்டு மதிப்பிடப்போகிறோமா இல்லை ஒரு உணர்ச்சிகரமான நம்பிக்கையாக வைத்துக்கொண்டாலே போதும் என நினைக்கிறோமா?


1. நாம் பாரதி கவிஞனா இல்லையா, நல்ல கவிஞனா இல்லையா என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் மகாகவியா இல்லையா என்று பேசுகிறோம். தமிழின் பெருங்கவிஞர்களின் வரிசையில் அவன் இடமென்ன என்று. பெருங்கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கமாட்டார்கள். கம்பனுக்குப்பின் சேக்கிழார் ஒரு பெருங்கவிஞர் என்பது என் எண்ணம். தாயுமானவர், குமரகுருபரர் போன்றவர்கள் என் நோக்கில் முக்கியமான கவிஞர்கள். அவர்களின் காலகட்டத்தை வைத்துப்பார்த்தால் பெருநிகழ்வுகள். அவ்வகையில் பாரதிக்கு நிகரானவர்கள். ஆனால் பெருங்கவிஞன் என்பவன் இன்னும் மேலானவன்.


2. பெருங்கவிஞர் என்பவர் யார் என்பதைப்பற்றிப் பெரும் விவாதங்கள் மேலைத்திறனாய்வு தளத்தில் நடந்துள்ளன. ஒரு பெருங்காப்பியத்தை- வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் தொட்டு எழுதுவதும் எல்லா வினாக்களுக்கும் பதில் உள்ளதும் ஒரு பண்பாட்டின் அடித்தளமாகவே எக்காலத்துக்கும் நிலைகொள்வதுமான காவியம்- உருவாக்கியவனே பெருங்கவிஞன் என்பது கூல்ரிட்ஜின் வாதம். ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களையும் சேர்த்து ஒற்றைப்பெருங்காவியமாகக் கொள்ளலாம், ஆகவே அவர் பெருங்கவிஞரே என்கிறார் எலியட்


பெருங்கவிஞன் யார் என்ற விவாதம் சென்ற நூற்றாண்டின் இறுதியில் இலக்கியத் திறனாய்வில் எழுந்த பெரும் கேள்வி. பலசமயம் ஒரு முக்கியமான கவிஞனை மிக அணுகி, அவன் வாழும் காலத்தில் வாழ்ந்து அவன் பேசும்தளத்தில் நின்று, பார்க்கையில் அவனை மகாகவி என மயங்குகிறோம். அத்துடன் உலக இலக்கியம் என்ற விரிந்த பகைப்புலம் இல்லாமல் பார்க்கையில் நாம் பெரும்பாலும் நம் மொழியின் கவிஞனை மேலே தூக்குகிறோம். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் உலக இலக்கியம் உருவான பின்னர் நாம் உலகளாவிய மதிப்பீடுகளை உருவாக்கியே ஆகவேண்டும். அதன் பொருட்டே கூல்ரிட்ஜில் தொடங்கி ஒரு கூட்டுபெரு விவாதம் நிகழ்ந்தது


கூல்ரிட்ஜ் ஆழமான அசல்தத்துவசிந்தனையாளனாக அல்லாதவன் பெருங்கவிஞன் அல்ல என்கிறார். ஏனென்றால் பெரும் கவிதை என்பது மானுட ஞானத்தின் ஒட்டுமொத்தத்தின் நறுமணம். மானுட உணர்ச்சிகள் சிந்தனைகள் மொழி ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடு என்கிறார். ரிஷி அல்லாதவன் கவி அல்ல என்கிறது ஒரு சம்ஸ்கிருதக் கூற்று. நாம் பெருங்கவிஞனிடம் எதிர்பார்ப்பது சில நல்ல கவிதைகளை அல்ல. சமகாலத்தன்மை கொண்ட சிந்தனைகளையோ மரபின் நீட்சியாக நிற்கும் சிந்தனைகளையோ அல்ல. அவனுக்கே உரித்தான ஞானதரிசனங்களை. தன்னளவில் ஒரு தனி தத்துவவாதியாகவும் நிற்கும் தகைமை கொண்டவனே பெருங்கவிஞன். அந்த ஞானதரிசனம் கால இட எல்லைக்குட்பட்டதாக இருக்காது. மானுடமளாவிய முக்கியத்துவம் கொண்டதாக, அழியாத தன்மை கொண்டதாக இருக்கும்.


மொத்ததில் ஒரு பெருங்கவிஞன் நல்ல கவிதைகள் சிலவற்றை உருவாக்கியவன் அல்ல. எக்காலத்துக்குமுரிய பெரும் படைப்புகளை உருவாக்கியவன். ஒரு பண்பாட்டுக்கே அடித்தளமாக அமையும் தகைமை கொண்டவன். மானுடகுலத்துக்கே பொதுவானவன்


3. பாரதி கையாண்ட யாப்பு வடிவில் அவனுடைய பங்களிப்பு ம் முக்கியம். ஆனால் அவர் அதை அந்தரத்தில் இருந்து உருவாக்கவில்லை. யாப்பு வடிவம் தொடர்ந்து நெகிழ்ந்தபடியே வந்துகொண்டிருந்தது. சேக்கிழார் முதல் குமர குருபரர் வரையிலான யுகத்துக்குப்பின்னர் நாட்டார் அம்சங்களையும் இசைப்பாடல் அம்சங்களையும் சேர்த்து கவிதைமொழியை நெகிழச் செய்தவர்கள்பலர். அவர்களின் வரிசையில் வருபவர் பாரதி. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், திரிகூட ராசப்ப கவிராயர் போன்றோர் ஒருபக்கம். கோபாலகிருஷ்ண பாரதி போன்றோர் இன்னொரு பக்கம்.


மூன்றாவதாக இன்னொரு தரப்பும் உண்டு. நவ வேதாந்தக் கொள்கைகளைத் தமிழில் பாடியவரும் தென்காசியைச்சேர்ந்தவருமான செங்கோட்டை ஆவுடை அக்கா. அக்காவின் பல சொல்லாட்சிகளையே பாரதி எடுத்தாண்டிருக்கிறார். ஆவுடையக்காவின் கவிதைகளைப் பார்ப்பவர்கள் அவ்வகையில் ஒரு அறியப்படாத கவிமரபு இருந்திருக்கிறது என்பதை உணரமுடியும். அதன் தொடர்ச்சியே பாரதி.


4. கம்பனில் நாம் காண்பது பல தளங்களில் விரியும் கவித்துவ உச்சம். மானுட விழுமியங்கள் வெளிப்படும் தருணங்கள். இயற்கையின் அழகு மொழியைச் சந்திக்கும் தருணங்கள். சிந்தனைகள் சரியான மொழியைக் கண்டுகொள்ளும் இடங்கள். கம்பனில் அப்படி உச்சகட்ட கவித்துவம் வெளிப்படும் இடங்கள் என எப்படியும் ஒரு இரண்டாயிரம் பாடல்களை எடுத்துவிடமுடியும். பாரதியில் இருபது பாடல்களைக் கண்டுகொள்வதே கடினம்– வ.வே.சு.அய்யரோ, க.நா.சுவோ, வையாபுரிப்பிள்ளையோ சொல்வது அதைத்தான்.


ஜெ


*


ஜெ,


மோகனரங்கனின் நூல் தொகுத்துக் கூறல் மட்டுமல்ல, அதில் விமர்சனப் பார்வை உண்டு. பாரதியின் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாகப் பேசுகிறார்.


ஆரம்ப காலகட்டங்களில் பாரதி ஒரு "தமிழ்ப் பண்டிதராக" மட்டுமே தெரிகிறார்.சிவஞான மாபாடியம் அச்சில் வருவது குறித்துப் புளகாங்கிதமடைந்துஎழுதியிருக்கிறார். இக்காலகட்டத்தில் அவர் எழுதியவை செய்யுள்கள்களும்சம்பிரதாயமான கட்டுரைகளும் மட்டுமே. 1897 – 1903 (15 முதல் 21 வயதுவரை)


அடுத்து தேசபக்தித் தீ அவர் உள்ளத்தில் ஏறியபோது பாடலாசிரியராக,உரைநடையில் புதுஜீவன் பாய்ச்சுபவராக, பத்திரிகையாளராக ஆகிறார். அவரதுதேசபக்தி இந்து மதாபிமானம், மரபு வழிபாட்டுணர்வு, ஆன்மிகம் ஆகியவை ஒருபக்கமும், சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனைகள் இன்னொரு பக்கமும்சரிசமாமாகக் கலந்தது. சமூக சமத்துவமா, சுதந்திரமா எது வேண்டும் முதலில்என்ற மனப்போராட்டத்திற்கு அக்காலத்திய பலரைப் போல பாரதியும்ஆட்பட்டிருந்தார். அவருக்குத் தெளிவு ஏற்படுத்தியதில் தாதாபாய் நவுரோஜியின் சிந்தனைகளுக்கு முக்கியப் பங்குண்டு. பிரிட்டிஷாரின் பொருளாதாரச்சுரண்டல் பற்றி முதன்முதலில் பேசியவர் நவுரோஜி. அவரை மிகப் புகழ்ந்துபாரதி எழுதியுள்ளார்.


நீங்கள் சொல்வது போல நவ வேதாந்த அலையின் தாக்கம்பாரதியின் மீது பெரும் பாதிப்பு செலுத்தியது. ஆனால் இந்த அலையிலும்அவருக்குத் தனித்துவமான சிந்தனைகள் உண்டு. விவேகானந்தரைப் பெரிதும்போற்றியவராயினும், அவரது சில கருத்துக்களை விமர்சிக்க பாரதி தயங்கவில்லை- கீதை முன்னுரையில் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்று வாதிடும் புள்ளி ஒரு உதாரணம். பாடலாசிரியராக உணர்ச்சிகளைக் கொட்டுவதை மட்டுமேசெய்கிறார் – "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி" போல. ஆனால் இதே பாரதி, அதே காலகட்டத்தில் பல கட்டுரைகளில்சாதிப்பிரச்சினையின் பல பரிமாணங்களைப் பகுத்தாய்கிறார், அது ஒதுக்கவேண்டிய விஷயம் என்று கருதவில்லை. அவரது அகம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம்இது. 1904 முதல் 1910 வரை.


1910 அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனை. புதுவை வாசம், அரவிந்தர்தொடர்பு ஆகியவை அவருக்குள்ளிருக்கும் கவிஞனை வெளிக்கொணர்கின்றன். தேவார,திருவாசகங்களைப் பயின்ற சைவ மரபில் வந்த அவர், நம்மாழ்வாரையும்ஆண்டாளையும் தாயுமானவரையும் கம்பனையும் கண்டு கொள்கிறார். உண்மையில் அவர்"கவிதை" எழுதியது 1910க்குப் பின்பு தான்.


* 'கனவு' உலகப் பெரும்கவிதைகளில் இடம்பெறவேண்டும் என்கிறார் மோகனரங்கன்.அது பாரதியின் சொந்தக் கதை, சோகக்கதை மட்டுமல்ல, ஆழ்ந்த படிமம் கொண்டது.


* குயில் பாட்டில் கவிதையின் தரிசனமே பாரதிக்குக் கிடைக்கிறது. ஆனால் அதன்கடைசி வரிகள் "ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ" என்றவரிகளில் அதுவரையில் இருந்த கவியின் ஆளுமையை, இளசை சி.சுப்பிரமணியனின் வார்த்தைகள் நெட்டிச்சாய்க்கின்றன என்கிறார் ரங்கன்.


* பாஞ்சாலி சபதம் பாட்டும், கவிதையும் சரிசமாகக் கலந்தது. மகாபாரதம்முழுவதையும் பாடாமல் போய்விட்டாரே என்று நினைக்க வைப்பதே அதன் வெற்றி.


* கண்ணன் பாட்டு தான் பாரதியின் கவித்துவ உச்சம்.பாரதி தன்னை விஞ்சிப்படைத்த படைப்பு அது.காலத்தின் கொடுங்கரங்களால், 1921ம் ஆண்டு மரணமடைந்து விட்டார்.


இந்தப் பத்தாண்டுகளில் இந்தக் கவிதைகள் போக, ஏராளமான உரைநடையும் எழுதிக்குவித்திருக்கிறார். இன்னும் ஒரு 20-30 ஆண்டுகள் பாரதிவாழ்ந்திருந்தாரேயானால், அவரது படைப்பூக்கம் முழுமையாக விகசித்து அபாரமானகவித்துவம் கொண்ட இலக்கியப் படைப்புகளை அவர் படைத்திருக்கக் கூடும்.


இரண்டு நாவல்களே எழுதிய ப.சிங்காரத்திற்கு தமிழ் இலக்கிய உலகில் "இடம்"அளிக்கப் படுகிறது. புத்தம் வீடு என்ற ஒரே ஒரு படைப்பு எழுதியவருக்கும் அப்படியே. அத்தகைய இலக்கிய உலகில், பாரதிக்கு முன்னோடி என்ற சம்பிரதாயப்பட்டத்தை விட இன்னும் செறிவான ஒரு இடமே அளிக்கப் படவேண்டும்.


"பாரதிக் கல்வி" கட்டுரையின் முதல் பாகம் இப்படி முடிகிறது -


பாரதியைப் பற்றி நிறையவே பேசிவிட்டேன்; எழுதிவிட்டேன். இனி நான் என்னசெய்ய? என்று கேட்ட கரிச்சான் குஞ்சுக்குத் திரிலோக சீதாராம் தந்த பதில்- 'அப்படியா இப்பொழுது பாரதியை மீண்டும் படி' என்பதாம். மீண்டும்மீண்டும் 'படிக்கப் பட' வேண்டியவர் தான் பாரதி. வழிபாடு செய்யவோ,வெறுக்கவோ அன்று.


ஜடாயு


ஜடாயு,


நான் சொன்னவற்றை மீண்டும் சொல்கிறேன்


இங்கே பாரதிக்கு 'இடம்' உண்டா என்று நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை. எந்த ஒரு படைப்பாளியும் குறிப்பிடும்படி ஒரு படைப்பை உருவாக்கியிருந்தால்கூட இலக்கியத்தில் இடம் உண்டு. தாமஸ் மூர் 'An elegy written on a country courtyard' என்ற ஒரே கவிதையால் ஆங்கில இலக்கியத்தில் அழியாக இடம்பெற்றிருக்கிறார். நான் சொல்வது பேரிலக்கியம்படைத்தவர் என்ற இடம் பற்றி.


கண்ணன்பாடல்கள் நம்மாழ்வார் முதல் அஷ்டபதி வரையிலான ஒரு பெரிய மரபின் நீட்சியாகவே நிற்கின்றன. அவற்றின் நினைவை மீட்டுகின்றன. அவற்றின் சுவையைத் திருப்பித் தருகின்றன– சற்று குறைவாக. [வ.வே.சு.அய்யர் அதைக் கண்ணன்பாடல்களுக்கான முன்னுரையிலேயே எழுதியிருக்கிறார்]


குயில்பாட்டு நல்ல கவிதைதான். அதை பாரதி சொன்னதுபோல வேதாந்தமாக விரித்தால் அது கீழேதான் வரும். அதன் சொல்லாட்சிகளின் வேகமே அதன் அழகு. உங்களில் எத்தனைபேர் குயில்பாட்டை ஒன்றுக்குமேல் தடவை வாசித்திருக்கிறீர்கள்? மறு வாசிப்புகளில் அதன் பெரும்பகுதி வெறும் பேச்சாகவே நகர்வதை உணரமுடியும். நான் சொல்வதை மீண்டும் எடுத்துரைக்கிறேன். கண்ணன் பாட்டு முதலியவற்றில் வரும் வேதாந்த தரிசனம் என்பது பாரதியின் அசல் ஞானவெளிப்பாடல்ல. அன்று இந்திய அளவில் உருவாகிவந்திருந்த நவவேதாந்த விவாதத்தின் எளிய பதிவு மட்டுமே. இளசை சுப்ரமணியம் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன். அவர் இந்தப் பின்னணி ஏதும் தெரியாமல் எழுதியிருக்கிறார். அத்துடன் இந்த 'வெட்டிச் சாய்க்கிறது' போன்ற சொல்லாட்சிகள் முதிர்ந்த விமர்சனத்துக்குரியவை அல்ல, மேடைப்பேச்சுக்குரியவை. எல்லாமே வெவ்வேறு தரப்புகள் மட்டுமே


கனவு பாரதியின் சுயசரிதை. அதை உலகப்படைப்பு என்று சொல்வதெல்லாம்….சரிதான், நான் கவிதை என்று சொல்வது முற்றிலும் வேறு அனுபவத்தை….திரிலோக சீதாராமை தமிழில் பாரதிக்கு அடுத்து பெரிய கவிஞராக எண்ணுபவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். அவருக்குக் கவிதை என்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு புரிவதேயில்லை.


பஞ்சாலி சபதம், குயில்பாட்டு, போன்ற மிகச்சில படைப்புகளிலேயே பாரதி கவிஞனாக வெளிப்பாடுகொண்டிருக்கிறான். நான் சொல்வது பெரும்பாலான பாரதியார் கவிதைகள் செய்யுள் என்ற நிலைவிட்டு மேலெழவில்லை என்பதையே. பாரதியின் தோத்திரப்பாடல்கள் போன்றவற்றை உதாரணமாகச் சுட்டுகிறேன். நல்ல கவிதை 'நவில்தோறும் நூல்நயம்' கொண்டது. அதாவது வாசிக்க வாசிக்க ஆழ்பிரதிகளைப் புதியதாக உருவாக்குவது. காலந்தோறும் புதியதாகப் பிறப்பது.


பாரதியார் கவிதைகள் ஒருபக்கம் தேர்ந்த விமர்சகர்களால் அவற்றின் ஆழமின்மைக்காக சுட்டிக்காட்டப்பட்டன. வவேசு அய்யர் முதல் சுந்தர ராமசாமி வரை. மறுபக்கம் வ ரா ,திரிலோக சீதாராம் முதல் மோகனரங்கன் வரையிலானவர்கள் பன்னிப்பன்னிப் பேசியும்கூட பெரிதாக அவற்றில் ஆழ்பிரதிகள் எவையும் உருவாகவில்லை. எல்லாருக்கும் தெரிந்த வரிகளை எடுத்துச்சொல்லி,ஆகாகா என்பதற்கு அப்பால் எந்த புதிய வாசிப்பையும் அவர்கள் அளிப்பதில்லை.


பெருங்கவிஞர்கள் ஒரு அர்த்தவெளியை உருவாக்கியவர்கள் அல்ல. எப்போதும் அர்த்தங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும் ஒரு அந்தரங்க படிம வெளியை உருவாக்கியவர்கள்


ஜெ


ஜெ,


தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் குறித்து சில இடங்களில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் பாரதியை மிக உயர்ந்த இடத்தில் வைப்பதாக நான் நினைக்கிறேன். அவரது பாரதி காலமும் கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு 1983ல் சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது என்றும் படிக்கிறேன். பாரதி ஆய்வுக்கு என்றே அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


எனக்கு அந்தப் புத்தகங்கள் படிக்கக்கிடைக்கவில்லை. ஆயினும், அதுகுறித்து நீங்கள் ஏதும் சொல்ல உள்ளதா?


ராம்


ராம்,


ரகுநாதன் அவர்களின் பாரதியும் ஷெல்லியும் என்ற நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளது. படிக்க வேண்டிய ஓர் புத்தகம். பாரதி பற்றிய புதிய வாசல்களைத் திறந்து காட்டிடும் ஒரு அருமையான ஒப்பீட்டு நூல்.


சங்கர்


சங்கர்,


கலாநிதி கைலாசபதியின் இரு மகாகவிகள் (தாகூர் பாரதி ஒப்பீடு) நூலையும் நினைவுகூரலாம்.


எம்.ஏ.சுசீலா


நண்பர்களுக்கு


பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன


எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது . திரிலோக சீதாராம் மரபில் இருந்து ரா.அ.பத்மநாபன் போன்ற பாரதி ஆய்வாளர்கள் உருவானார்கள்.


இவ்விரு தரப்பும் பாரதிக்கு அளிக்கும் இடம் என்பது நான் முன்னரே சொன்னதுபோல நவீனத் தமிழ்ப்பண்பாட்டு உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவே. கால இடம் கடந்த கவிதையனுபவம் என நான் சொல்லும் ஒன்றை அவர்கள் பேசியதில்லை. அந்த தளத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு அவர்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மட்டுமே பதில் சொல்லியிருக்கிறார்கள்.


ஜெ


[குழும விவாதத்தில் இருந்து]



தொடரும்


தொடர்புடைய பதிவுகள்

பாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்
பாரதி விவாதம் – 1- களம்-காலம்
பாரதியின் இன்றைய மதிப்பு
தமிழில் இலக்கிய விமர்சனம்
இருவகை எழுத்து
அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்-1
எஸ்ராவுக்கு கண்ணதாசன் விருது
கண்ணன் பாடல்கள் ஒரு கடிதம்
நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
பாரதி வரலாறு…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.