ஆல்காட்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்


ஆல்காட் மீதான பல தாக்கங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் விடுபட்டுப் போன இந்தியத் தாக்கம் ஒன்று உண்டு. சுவாமி தயானந்தருடையது அது. சுவாமி தயானந்தருக்கும் ஆல்காட்டுக்கும் நல்ல உறவு இருந்தது. பின்னாளில் பிரம்மஞான சபையின் மறைஞானப் போக்கும் பௌத்த சார்பும் அந்த உறவைக்கசந்துகத்தரிக்க வைத்துவிட்டது. ஆனால் ஆரிய சமாஜத்தின் சாதிய எதிர்ப்பு நிச்சய்மாக ஆல்காட்டின் ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


ஏனெனில் ஆல்காட்டின் ஆன்மிக குருவான ப்ளாவட்ஸ்கியின் உலக பார்வை இனவாதபார்வையே. மேலும் 1880களிலேயே ஆரிய சமாஜம் 'ஆரிய தலித்தோத்தார் பாடசாலா'என்கிற பாட சாலையை நிறுவியிருந்தது. 'தலித்' என்கிற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்திய முதன்மையான இந்திய அமைப்பு ஆரிய சமாஜமே.

பின்னாட்களில் ஆரிய சமாஜமும் இடைநிலை சாதிகளால் தேக்க நிலை அடைந்ததுஎன்றாலும் தொடக்க கால தலித் போராளிகள் பலரை தென்னிந்தியாவிலும் ஆரியசமாஜத்தால் தாக்கம் பெற்ற துறவிகளே த்வேகப்படுத்தினர். எனவே இந்தியசூழலில் ஆல்காட்டின் பஞ்சமர் பள்ளி ஆரிய சமாஜ தாக்கத்தினால்

ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.


பணிவன்புடன்


அரவிந்தன் நீலகண்டன்


 


 


"தலித் இயக்க முன்னோடி ஆல்காட்".

எப்பொழுதும் போல ஜெயமோகனின் அருமையான பதிவு.


நமது வரலாற்று பார்வை அல்லது குருடு…தெளிவாகத் தெரிகிறது.
ஆஷா என்ற NGO நிறுவனத்திற்காக ஆல்காட் அடையாறு பள்ளி ப்ராஜெக்ட் விஷயமாக 8/10 வருடம் முன்னர் பேசியது நினைவுக்கு வருகிறது.
இப்பொழுது தான் அதன் வரலாற்று தன்மை தெரிகிறது.
நாம் வெறும் அக்பர் பீர்பால் இது தான் வரலாறு என்று நினைக்கிறோம்.
வரலாற்று பார்வை இருந்தது என்றால் (அதாவது இந்த பதிவை அப்பொழுதே நான் படித்திருந்தால் ) இன்னும் விஷயம் அதன் உட்கருத்து, நன்றாக உள்வாங்கி அதன் மூலம்  என் ஆர்வம உணர்ச்சி வேகத்துடன் வெளிப்பட்டிருக்கும்
வரலாற்றைக் குறித்து எனக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு நன்றி
காதலுடன்
ஸ்ரீதர்

அன்புள்ள ஜெயமோகன்,


உங்களது பதிவில் Nandanar's Children: The Pariaiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850-1956 என்ற ராஜ் சேகர் பாசு எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தப் புத்தகத்துக்கான தமிழாக்க உரிமத்தை சேஜ் பதிப்பகத்திடமிருந்து கிழக்கு பதிப்பகம் பெற்று தமிழாக்க வேலைகளிலும் இறங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.


வேலைகள் தீவிரமாக நடந்தால், ஒருவேளை புத்தகம் ஜனவரி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியாகலாம்.


சேஜ் பதிப்பகத்தின் விற்பனை மேலாளரிடம் இந்தப் புத்தகம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, புத்தகத் தலைப்பில் 'பறையர்கள்' என்ற வார்த்தை வருவதால் இந்தப் புத்தகத்தை விற்பதில் கடைக்காரர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதாகவும் அதனால் புத்தகம் அவர்கள் எதிர்பார்த்த அளவு விற்கவில்லை என்றும் சொன்னார். அகடெமிக் பேராசிரியர்களும் மாணவர்களும்தான் பெரும்பாலும் இந்தப் புத்தகத்தின் வாசகர்கள். அப்படிப்பட்டவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் கடைக்காரர்களுக்கே இந்தத் தயக்கம்! புத்தகம் தலித்துகளைக் கீழ்மைப்படுத்தும் ஒன்றல்ல. எந்தப் பொருளில் இந்த வார்த்தை (பறையர்கள்) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்கூட அறியாத அளவுக்குத்தான் இங்கே சூழல் இருக்கிறது.


தமிழில் வெளியாகும்போது விற்பனைக் காரணங்களுக்காக மிக நியூட்ரலான தலைப்பு ஒன்றைத்தான் வைப்பதாக உள்ளேன்.


பத்ரி


Badri Seshadri

Managing Director and Publisher


http://www.nhm.in/


 


அன்புள்ள பத்ரி,


பறையர் என்ற சொல்லை ஆய்வுநோக்கில் பயன்படுத்துவதில் பிழை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். நான் தலித் ஆய்வு அமைப்புகளில் பலமுறை அச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதை இழிவுபடுத்தும் சொல்லாகப் பயன்படுத்துவதே பிழை. ஆனால் அப்படி இழிசொல்லாக அது இருந்த காலகட்டம் மாறிவிட்டது என்றும் தோன்றுகிறது.


ஆனால் நீங்கள் இன்னும் பெரிய வணிக விற்பனைச்சூழலில் இருக்கிறீர்கள். எனக்கு அந்தக் கட்டாயங்கள் புரியவில்லை. என்னைவிட நீங்களே அதை அறிவீர்கள்


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.