கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா என்கிறார். தண்ணீர் கொண்டுவருபவள் ஒரு பேரழகி. நாரதர் அவளிடம் காதல்வயப்பட்டு, அவள் குடும்பத்தினரிடம் போராடி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம்செய்து வைத்து, பேரன் பேத்திகள் எடுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்போது பெருமாள் திரும்பி வரும்படி அழைக்கிறார். 'இதோ என் கொள்ளுப் பேத்திக்குத் திருமணம் முடிந்தபின் வருகிறேன்' என்கிறார் நாரதர். பிரமை கலையும்போது அது ஒரு கணநேர மாயமே என அறிகிறார். அந்த பெண் மாயாதேவி.


 


தல்ஸ்தோய்


குடும்ப வாழ்க்கை நம்மை ஐந்து பெரும் கற்பனைகளால் கட்டிப்போட்டிருக்கிறது. ஒன்று நாம் நம் குடும்பம் மீது கொண்டுள்ள அன்பு. இரண்டு, நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு. மூன்று, நாமில்லாவிட்டால் அவர்கள் இருக்கமுடியாது, அவர்கள் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு என்ற நம் அகந்தை. நான்கு அவர்கள் இல்லாமல் நாம் வாழமுடியாது என்ற நம் பலவீனம். ஐந்து, நம்முடைய காலம் முடிவற்றது என்ற பிரமை. நமக்குப்பிடித்தமானதைச் செய்ய நாம் இந்த வாழ்க்கையின் கட்டுகளைக் காலப்போக்கில் அறுத்தபின் நிறையவே நேரமிருக்கிறது என்ற நம்பிக்கை.


சம்சாரத்தின் கட்டுகளை மெல்லமெல்ல அறுத்தவர் எவருமில்லை என்பது இந்திய ஞானமரபின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று. ஒரு தருணத்தில், ஒரு கணநேரத்துத் தீர்மானத்தில் , வைராக்கியத்தையே வாளாகக் கொண்டு அறுத்துக்கொண்டால்தான் உண்டு. புத்தர் முதல் ராமானுஜர் வரை, சங்கரர் முதல் நாராயணகுரு வரை நாம் காண்பது அந்தக் கணநேரத்து வைராக்கியத்தைத்தான். அவர்களே ஞானத்தை தங்கள் முழு இருப்பாகக் கொள்ளும் நிலை நோக்கிச் செல்கிறார்கள். அதையே  'கூறாமல் சன்யாசம் கொள்ளுதல்' என்று மரபு சொல்கிறது. லட்சோபலட்சம்பேர் அந்தக் கணத்துக்கு முந்தைய கணத்தில் நின்று தவித்துத் தவித்து இறந்துகொண்டிருக்கிறார்கள்.


ரிஷி அல்லாதவன் கவிஞனல்ல என்று ஒரு சம்ஸ்கிருதக் கூற்று உண்டு. ஞானம் கனியாத இலக்கியமென்பது உயர்தரக் கேளிக்கை அல்லாமல் பிறிதல்ல. ஆனாலும் எழுத்தாளன் ஞானி அல்ல. ஏனென்றால் அவனுடைய ஊடகம் இலக்கியம். அதன் கச்சாப்பொருள் இக உலக வாழ்க்கை. அதை சாதகம் செய்து அவன் தன் ஞானத்தை அடைகிறான். அதேசமயம் அது அவனை வாழ்க்கையில் கட்டிப்போடவும்செய்கிறது. தல்ஸ்தோயை ஒரு மெய்ஞானி என்று சொல்பவர்கள் உண்டு. இந்திய ஞான மரபின் பெரும் பாரம்பரியத்தில் நின்று பார்க்கும்போது அவரை ஞானத்தைத் தொட்டுத் தொட்டு மீளும் முடிவிலாத ஊசலாட்டத்தில் தவித்த பெரும் படைப்பாளி என்று மட்டுமே சொல்லமுடியும் என நான் நினைக்கிறேன்.


எந்த எழுத்தாளனும் அந்த இடத்திலேயே இருக்கிறான். தன் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் அவன் ஞானியர் தொடும் உச்சியைத் தானும் தொடுகிறான். ஆனால் உடனே திரும்பி வந்து சாதாரண மனிதனாக வாழவும் செய்கிறான். சாதாரண மனிதனாக அவனிருக்கையில் தன் படைப்பூக்க நிலையின் உச்சிகள் அவனை பிரமிப்படையச்செய்கின்றன. ஆனால் அந்த ஆளுமையைத் தன்னுடையதாக அவனால் கொள்ள முடிவதில்லை, அது அவனைவிட பிரம்மாண்டமானதாக இருக்கிறது. அதைத் துறக்கவும் அவனால் முடிவதில்லை, ஏனென்றால் அது அவன் என்பதும் உண்மை. ஆகவே முடிவில்லாத ஒரு ஊசலாட்டத்தில் அவன் இருக்கிறான். குற்றவுணர்ச்சியில் இருந்து பெருமிதத்துக்கும், கொந்தளிப்பில் இருந்து பரவசத்துக்கும் அவன் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறான். தல்ஸ்தோயின் வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.


[image error]


[பிளம்மர் திரையில் தல்ஸ்தோயாக]


தல்ஸ்தோயின் அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் எப்போதும் மோதிக்கொண்டிருந்தன. இளமையில் செல்வந்த பிரபுகுடும்பத்து இளைஞராக, போர்வீரராக, போகக்களியாட்டங்களில் திளைத்தார். ஆனால் இனம்புரியாத ஒரு முழுமைக்காக அவரது அகம் தேடிக்கொண்டும் இருந்தது. அந்த முரண்பாட்டின் கொந்தளிப்பே அவரை எழுத்தாளனாக ஆக்கியது. அவரது மையக்கதாபாத்திரங்களான பியர், லெவின், நெஹ்ல்யுடோவ் ஆகிய அனைவரிடமும் அந்த அகமோதல் மையம் கொண்டிருப்பதைக் காணலாம்.


தல்ஸ்தோயின் மெய்த்தேடல் அவரை கடைசியில் தல்ஸ்தோய்தரிசனம் என்று பின்னாளில் அடையாளம் காணப்பட்ட ஒரு கொள்கைநிலை நோக்கி கொண்டு சென்றது. உடைமையற்றிருத்தல், உழைப்பால் வாழ்தல், போக மறுப்பு, இயற்கையில் இருந்து மெய்மையை நேரடியாகப் பெற்றுக்கொள்ளுதல், அமைப்புகளுக்குக் கட்டுப்படாமலிருத்தல் என்று அதன் அடிப்படைகளை வகுக்கலாம். அன்று ஐரோப்பிய இலட்சியவாதத்தின் உச்சமாக இருந்த தரிசனம் அது. தோரோவிடமும் எமர்சனிடமும் வெளிப்பட்டது. அது பதினேழாம்நூற்றாண்டு முதலே ஐரோப்பிய சிந்தனையில்  உருக்கொண்டு வளர்ந்து வந்த ஒன்று. காந்திய சிந்தனையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாக தல்ஸ்தோயின் தரிசனம் இருந்தது என்பது நாமறிந்ததே.


தல்ஸ்தோயின் தனிவாழ்க்கையில் இதற்கு நேர் எதிரான உத்வேகங்கள் அவரைத் துரத்தின. தன் வாழ்க்கையின் கடைசிநாள் வரை அவருக்குக் காமம் தேவைப்பட்டது. தன் தீவிரமான பாலியல் வேட்கையுடன் ஓயாது போராடினார் தல்ஸ்தோய். தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கட்டற்ற பிரியம் கொண்டிருந்தார். அவரது மனைவி சோஃபியா அலக்ஸாண்டிரவ்னா அவரைத் தன் காமத்தால், பிரியத்தால், உணர்ச்சிகரமான தீவிரத்தால், பிடிவாதத்தால், கட்டற்ற உலகியல் வேட்கைகளால் முழுமையாகவே கட்டிப்போட்டிருந்தார்.


இந்த இருமைநிலை காரணமாக தல்ஸ்தோய் அவரது வாழ்க்கையின் இறுதிநாட்களில் தீவிரமான மனப்போராட்டங்களுக்கு ஆளானார். கடைசி இரு வருடங்களில் தன் மனைவியுடன் கொண்ட மோதலால் கடும் துயரமும் ஏமாற்றமும் அடைந்தார். அவரது கொள்கைநிலை சம்சாரத்தை முழுமையாகத் தாண்டிவிட்டிருந்தது. அவர் செய்ய வேண்டியிருந்தது குடும்பத்தையும் உறவுகளையும் துறந்து செல்லுதலே. அதைச் செய்யமுடியாமல் அவர் தன் மனைவியிடம் கட்டுண்டு கிடந்தார். அவளைத் துயரப்படுத்த, அவளிடமிருந்து துண்டித்துக்கொள்ல, அவரால் முடியவில்லை. தானும் வதைபட்டுப் பிறரையும் வதைத்தார்.


சோபியா டால்ஸ்டாயா


கடைசியில் அன்று தல்ஸ்தோய் அந்த முடிவை எடுத்தார். தன் மனைவியிடமும் குடும்பத்திடமும் இருந்து பிரிந்து தன் இல்லத்தை விட்டு வெளியேறினார். தெளிவான திட்டம் ஏதும் இல்லாமல் தெற்கு ருஷ்யாவுக்குப் பயணம் செய்தார். ஆனால் மிகமிகக் காலம்தாழ்ந்த முடிவு. அப்போது அவருக்கு வயது 81.இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு உடல்நிலை இருக்கவில்லை. அஸ்டபோவோ ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய தல்ஸ்தோய் அங்கே இருந்த ரயில்நிலைய விடுதியில் தங்கி நோயுற்று மரணமடைந்தார்.


தல்ஸ்தோய் வீட்டை விட்டு வெளியேறியதும் ரயில் நிலையத்தில் இறந்ததும் உலக அளவில் பெரும் முக்கியத்துவம் உடைய செய்திகளாக ஆயின. அவரது தரிசனத்துக்கு அடிக்கோடிடுவதாக அந்த மரணம் அமைந்தது. தல்ஸ்தோயின் கொள்கையும் அவரது மரணமும் ருஷ்ய அறிவுலகில் ஆழமான பாதிப்பைச் செலுத்தின. பின்னர் ருஷ்யாவில் மார்க்சிய சிந்தனைகள் எளிதில் வேரூன்ற தல்ஸ்தோய் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. அதை லெனின் அவர் கார்க்கியிடம் நிகழ்த்திய உரையாடலில் உணர்ச்சியுடன் குறிப்பிடுகிறார். தல்ஸ்தோயின் மரணம் மூலம் அவரது படைப்புகள் ருஷ்ய பாமரனுக்கு இன்னமும் நெருக்கமானவையாக ஆயின என்கிறார்.


தல்ஸ்தோயின் வரலாறு பலரால் எழுதப்பட்டுள்ளது. புல்ககோவ் 'தல்ஸ்தோயின் கடைசி வருடம்' என்ற நூலைஎழுதியிருக்கிறார். விக்டர் ஸ்கெலோவ்ஸ்கி [ Viktor Borisovich Shklovsky] எழுதி ராதுகா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ' லெவ் தல்ஸ்தோய்' நூல்தான் தல்ஸ்தோயின் வாழ்க்கையைப்பற்றிய விரிவான உள்தகவல்களுடன் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூல் என்பது என் எண்ணம். தமிழகத்தில் பரவலாக வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்றும் கூட. தல்ஸ்தோயின் ஆன்மீக பரிணாமத்தையும் அதை ஒட்டித் தனிவாழ்க்கையில் வந்த அகக்கொந்தளிப்புகளையும் விரிவாக சித்தரிக்கும் இந்நூல் அவர் வெளியேற நேர்ந்த சூழலை ஒரு பேரிலக்கியத்தன்மையுடன் விவரிப்பதாகும்.


ஹெலென் மிரன், சோஃபியாவாக


தல்ஸ்தோய் தன் இறுதிக்காலத்தில் வீட்டை விட்டுச் சென்ற நிகழ்ச்சியை சித்தரிக்கும் The last station  என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஜேய் பாரினி [Jay Parini] எழுதிய நாவலை ஒட்டி மைக்கேல் ஹாஃப்மான் [Michael Hoffman ]இயக்கத்தில் வெளிவந்துள்ள அமெரிக்கப் படம். ஸ்கொலோவ்ஸ்கியின் நூலுடன் ஒப்பிட்டு நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளை வைத்துப்பார்த்தால் இந்தப்படம் தல்ஸ்தோயை அமெரிக்காவின் முதலாளித்துவ கோணத்தில் விளங்கிக்கொள்வதற்கான ஒரு முயற்சி. உண்மையை நோக்கி செல்வதற்குப் பதிலாக உண்மையைத் தனக்குச் சாதகமாக விளக்கிக்கொள்ளும் தன்மையே இதில் அதிகம்.


ஒரு படமாகப் பல வகையிலும் நிறைவளித்த ஆக்கம். முக்கியமாக தல்ஸ்தோய் ஆக நடித்த கிறிஸ்டோபர் பிளம்மர் [ Christopher Plummer]. தல்ஸ்தோய் மிக உயரமான பிரம்மாண்டமான ஆகிருதி கொண்ட மனிதர். அவரது கைகளும் முகமும் மிகப்பெரிய்வை. அவரே தன் சாயலில் படைத்த கதாபாத்திரமான போரும் அமைதியும் நாவலின் பியர் ஒரு ராட்சதனாகவே காட்டப்படுகிறான். வெறும் கையால் சுவரில் ஆணியை அடித்து இறக்க பியரால் முடியும் என்கிறார் தல்ஸ்தோய். ஒரு கட்டத்தில் ஒழுக்கமற்ற மனைவியான ஹெலென் மீது கடும் சினம் கொண்டபோது பியர் மிகப்பெரிய கல்மேஜை ஒன்றை அப்படியே தூக்கி வீசுகிறான். குலைநடுங்கிய ஹெலென் தப்பி ஓடுகிறாள்.


அத்தகைய தல்ஸ்தோயின் தோற்றத்துக்கு பிளம்மர் மிகச்சரியாகப் பொருந்துகிறார். பல படங்களில் டிராக்குலாவாக நடித்தவர் அவர் என்று தெரிந்தபோது ஒரு புன்னகை வருவதைத் தடுக்கமுடியவில்லை. தல்ஸ்தோயின் பெரிய கைகள் கொண்ட தோற்றம், சற்றே கூனலுடன் நடக்கும் நடை, அரைவார் பட்டையில் இரு கைகளையும் புகுத்திக்கொண்டு நிற்கும் தோரணை, சிரிப்பு ,பேச்சு எல்லாவற்றையும் அழகாக நடித்துக்காட்டியிருக்கிரார் பிளம்மர். எனக்கு ஒரு கோணத்தில் தல்ஸ்தோய் நித்ய சைதன்ய யதியை நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.


பிற கதாபாத்திரங்களையும் உண்மையான மனிதர்களின் சாயலிலேயே அமைத்திருப்பதை ஆச்சரியமென்றே சொல்லவேண்டும். தல்ஸ்தோயின் மனைவி சோபியா அலக்ஸாண்டிரவ்னா [ஹெலென் மிரன் . Helen Mirren] , அவரது பிரியத்துக்குரிய மாணவர் விளாடிமிர் செர்க்கோவ் [ பால் கியாமட்டி, Paul Giamatti ] ஆகியோரும் பெரும்பாலும் துல்லியமான முகச்சாயலுடன் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். [ஒருவேளை ருஷ்யர்களுக்கு நம்மை விட அதிகத் தோற்ற வேறுபாடு புலப்படலாம்.]


[image error]

விளாடிமிர் செர்க்கோவ்


சோபியா வாக நடித்துள்ள  ஹெலென் மிர்ரன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டு பிரபுகுலச் சீமாட்டி ஒருவரின் நாசூக்கும் பெருமிதமும் கொண்ட நடவடிக்கைகளையும் சோபியாவின் அடம், கட்டுக்கடங்காத சீற்றம் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


தல்ஸ்தோயின் இரு பக்கங்களையும் தெளிவாக சித்தரித்துக்கொண்டு ஆரம்பிக்கிறது திரைப்படம். அவரது ஆன்மீகஞானத்தை அறிந்து அதை மட்டுமே காணக்கூடியவராக செர்க்கோவ் வருகிறார். வரலாற்றில் செர்க்கோவ் ஒரு 'தல்ஸ்தோயியன்' என தன்னை அறிவித்துக்கொண்டவர். தல்ஸ்தோய் முன்வைத்த உயர் இலட்சிய வாழ்க்கையைப் பரப்பத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ருஷ்யாவில் தல்ஸ்தோய், செக்கோவ் போன்றவர்களின் நூல்களை மிகக்குறைவான விலையில் அச்சிட்டு மக்களிடையே பரப்பியவர்அவர்.


தல்ஸ்தோயிய கொள்கைகளில் முழுமையாக ஈடுபட்ட செர்க்கோவ் அதற்காக தல்ஸ்தோயிய கம்யூன் ஒன்றை அமைத்து நடத்தி வந்தார். தல்ஸ்தோயின் எழுத்துக்களை முழுக்க நாட்டுடைமையாக ஆக்கி அவற்றை அத்தனை மக்களுக்கும் இலவசமாகக்  கொண்டுசென்று சேர்க்கவேண்டும் என்ற தீவிரத்துடன் இருந்தார்.


தன் வாழ்நாள் முழுக்க தல்ஸ்தோயிய நம்பிக்கையுடன் வாழ்ந்த செர்க்கோவ் பலவாறாக சிதறி, பலவகைப்பட்ட பாடபேதங்களுடன் கிடந்த  தல்ஸ்தோயின் எழுத்துக்கள் சீராகத் தொகுக்கப்படவும் அவரது கருத்துக்கள் அனைத்து உலகமொழிகளிலும் சென்று சேரவும் பெரும் பங்காற்றியவர். கடைசிக்காலத்தில் தல்ஸ்தோய் முன்வைத்த கருத்துக்கள் அமைப்புக்கு எதிரான கலகக்குரலாக இருந்தமையால் செர்க்கோவ் அரசிடமிருந்தும் ருஷ்ய திருச்சபையிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளானார். பலகாலம் ஜாரின் ருஷ்யாவில் இருந்து தப்பி இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தார்.  ஆனாலும் அவர் தளராமல் தல்ஸ்தோய் தரிசனங்களை முன்னெடுத்தார்.


இடதுசாரி நம்பிக்கைகள் கொண்டிருந்த செர்க்கோவ் ருஷ்யப் புரட்சிக்குப்பின் ருஷ்யா திரும்பி தல்ஸ்தோயின் படைப்புகளுக்கு முழுமையான செம்பதிப்புகள் உருவாகக் கடைசிவரை உழைத்தார். தல்ஸ்தோயை ஒருபோதும் செர்க்கோவ் வணிகப்பொருளாக ஆக்கவில்லை. அவரை ஒரு நவீன ஞானியாக மட்டுமே எண்ணினார். அவரை உலகம் முழுக்கக் கொண்டுசெல்வதற்காக மட்டுமே உழைத்தார். செர்க்கோவ் தல்ஸ்தோயின் இலக்கியமதிப்பை அறிந்தவரல்ல, அவரது மெய்ஞானத்தை மட்டுமே பெற்றுக்கொண்டவர்.


பால் ஜியாமெட்டி,செர்க்கோவாக


ஆனால் செர்க்கோவ் நம்பிக்கையுடன் ஆரம்பித்த தல்ஸ்தோய் கம்யூன் சீக்கிரமே வீழ்ச்சி அடைந்தது. அதை அரசும் திருச்சபையும் அழித்தன என்று ஒரு பக்கம் சொன்னாலும் உயர்லட்சியங்களின்படி ஒரு அமைப்பை உருவாக்குவதென்பது எப்போதுமே தோல்வியடைகிறது என்பதையும் சேர்த்துக்கொண்டே அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் பின்னாளில் ருஷ்யாவில் உருவான பொதுவுடைமைக் கம்யூன்கள் பலவற்றுக்கு தல்ஸ்தோய் கம்யூன் பெரும் முன்னுதாரணமாக அமைந்தது என்பதை அதன் வரலாற்றுப்பங்களிப்பாகக் கொள்ளலாம். செர்க்கோவ் பின்னாளில் ருஷ்ய கம்யூனிச சமூக அமைப்புக்குப் பணியாற்றினார்.


நேர்மாறாக சோபியா தல்ஸ்தோயின் அகவாழ்க்கையை மட்டுமே அறிந்து அதனூடாக மட்டுமே தல்ஸ்தோயை மதிப்பிடக்கூடியவராக இருந்தார்.  ஸ்கெலோவ்ஸ்கியின் நூலில் சோபியாவின் குணச்சித்திரம் மிக விரிவாக வருகிறது. பிரபுகுலத்தில் பிறந்து, நுண்கலைகள் நாகரீகநடத்தைகள் உயர்குடிப்பாவனைகள் வழியாகவே வளர்ந்து முதிர்ந்த சோபியா தல்ஸ்தோய் நம்பிய எதையும் ஏற்றுக்கொண்டவரே அல்ல. விவசாயிகளை ஒழுக்கமற்ற, அழுக்கான மக்கள் என்றும் அரைமிருக வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும் அன்றைய ருஷ்ய நிலப்பிரபுக்களைப் போலவே அவரும் நம்பினார்.  அவர்கள் கடுமையாக உழைக்க வைக்கப்பட்டுக் குறைவான ஊதியத்துடன் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே ஒழுங்காக இருப்பார்கள், இல்லையேல் அது அவர்களுக்கே நல்லதல்ல என அவர் நினைத்தார். அவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டால் அவர்கள் அதை குடியிலும் விபச்சாரத்திலும் அழிப்பார்கள் என்று வாதாடினார்


ஆகவே இயற்கையுடன் போராடிப்போராடி ருஷ்ய விவசாயி பெற்ற ஆன்ம பலம், மண்ணுடன் அவனுக்கிருக்கும் தெய்வீகமான உறவு ஆகியவற்றைப்பற்றி தல்ஸ்தோய் கொண்டிருந்த மதிப்பைத் தன் கணவரின் ஒரு வகை அசட்டுத்தனம் என்றே சோபியா கருதினார்.  ருஷ்ய பழமைவாத திருச்சபையின் தீவிர நம்பிக்கையாளராக இருந்த சோபியா அதன் ஆடம்பர திருப்பலிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் மிகவும் ஈடுபட்டு வந்தார். 'ஏழைகளின் ஏசு' என்ற தல்ஸ்தோயின் நம்பிக்கையைத் திருச்சபைக்கு எதிரான ஒரு அவமதிப்பாகவே சோபியா எடுத்துக்கொண்டார்.


சோபியா தன் குடும்பத்தைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டார். தல்ஸ்தோய் குடும்பம் பாரம்பரியம் மிக்கது. ஆனால் அன்றைய ஜார் ஆட்சியில் பலவகையிலும் சேவையாற்றிப் பிற பிரபுக்கள் மேலே சென்றுகொண்டிருந்தபோது தல்ஸ்தோய் குடும்பம் அத்தகைய பொருளியல் வெற்றியை, அதிகாரத்தை அடையவில்லை என்ற கவலை அவருக்கிருந்தது. அவர் தன் மகன்களின் எதிர்காலத்தைப்பற்றிப் பெரிதும் கவலைகொண்டிருந்தார். தல்ஸ்தோயின் வாரிசுகளில் கடைசி மகளான அலக்ஸாண்டிரா அல்லது சாஷா மட்டுமே ஒரு இலக்கியவாதியாக, ஞானத்தேடல்கொண்டவராக தல்ஸ்தோயின் மதிப்பை அறிந்திருந்தார்.


விளாடிமிர் புககோவ், தல்ஸ்தொயுடன்


மகன்களுக்கு தல்ஸ்தோயின் இலக்கியம் மீது அறிமுகமோ மரியாதையோ இல்லை. அவர் மீது தனிப்பட்ட முறையிலும் அவர்கள் நன்மதிப்புடன் இருக்கவில்லை. குறிப்பாக மூத்தமகன் செர்ஜி சூதாடியாகவும் குடிகாரனாகவும் இருந்தார். சில சீமாட்டிகளுடன் அந்தரங்க உறவுகளில் திளைத்த தல்ஸ்தோயின் இன்னொரு மகன் லேவ் தல்ஸ்தோய் தந்தையைக் கடுமையாக வெறுத்து நிராகரித்தார். . சோபியாவுக்கு நெருக்கமான மகனாக இருந்தவர் அவரே. சோபியாவை கடைசிக்காலத்தில் பின்னின்று இயக்கியதும் அவரே.


இந்நிலையில் சோபியா தல்ஸ்தோயின் எழுத்துக்களை ஒரு முக்கியமான சொத்தாக நினைத்தார். உண்மையில் ஐரோப்பாவெங்கும் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல லட்சம் மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டுவந்த தல்ஸ்தோய் நாவல்கள் தல்ஸ்தோயின் குடும்ப சொத்துக்களைவிடப் பற்பல மடங்கு அதிக செல்வத்தை ஈட்டித்தருபவையாக இருந்தன. சோபியா உண்மையில் தல்ஸ்தோயின் அந்த செல்வத்தின் மீது மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார்.தல்ஸ்தோய் மீது தன் குழந்தைகளின் தந்தை, தன் கணவர், ஆகவே தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமே உரியவர், என்ற அளவில் மட்டுமே ஈடுபாடு கொண்டிருந்தார். வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் தல்ஸ்தோய் மீது வேறு எவ்வகையான அன்பையும் கனிவையும் சோபியா காட்டவில்லை. சொல்லப்போனால் தல்ஸ்தோய் விரைவில் இறந்து விடவேண்டும் என்றே சோபியா விரும்பினார்.


சோபியா இலக்கியத்தை சமூக மாற்றத்துக்கான வழியாக நினைக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதே சமயம்  மிகச்சிறந்த வாசகி. தல்ஸ்தோயை அவர் மணம் செய்யும்போது தல்ஸ்தோய் எழுதிய அனேகமாக எல்லா ஆக்கங்களையும் வரிக்குவரி வாசித்து நினைவில் வைத்திருந்தார். தல்ஸ்தோயை சோபியா கவர்ந்தமைக்கு முக்கியமான காரணமே அந்த இலக்கிய ஆர்வம்தான். காதல் நாட்களில்தான் தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். அந்த ஒட்டுமொத்த நாவலையும் சோபியா ஆறுமுறை கையால் திருப்பித்திருப்பிப் பிரதி எடுத்திருக்கிறார்.


ஆனால் சோபியா தல்ஸ்தோய் படைப்புகளில் உள்ள மொழியழகு, விவரணை நுட்பம், கதாபாத்திரங்களின் சிக்கலான குணச்சித்திரம், நிகழ்ச்சிகள் பின்னிச்செல்லும் பிரம்மாண்டம் ஆகியவற்றை மட்டுமே ரசித்தார். அவரைப்பொறுத்தவரை இலக்கியமென்பது பிற நுண்கலைகளைப்போல இத்தகைய கூரிய ரசனைக்குரிய ஒரு கலைவடிவம் மட்டுமே. இசைநிகழ்ச்சிகள் எப்படி பிரபுகுல வீடுகளில் நிகழ்கின்றனவோ, இசைக்கலைஞர்கள் எப்படிப் பெரும் செல்வத்தை ஈட்டுகிறார்களோ அப்படியே இலக்கியமும் செல்வமீட்ட வேண்டும் என அவர் நினைத்தார்.


'கடைசி நிலையம்' செர்க்கோவுக்கும் சோபியாவுக்குமான இந்த முரண்பாட்டை முன்வைத்தபடி ஆரம்பிக்கிறது. செர்க்கோவ், வாலண்டின் புல்ககோவ் என்ற இளம் எழுத்தாளரை தல்ஸ்தோயின் செயலராக நியமிக்கிறார். புல்ககோவ்,தல்ஸ்தோயின் அகிம்சை, எளியவாழ்க்கை போன்ற கொள்கைகளைப் பரப்புவதற்காக வாழ்நாளெல்லாம் போராடியவர். காந்தியுடன் தொடர்பு கொண்டிருந்தவர். புரட்சியின்போது ருஷ்யாவிலிருந்து வெளியேறினார். பின்னர் ருஷ்யா சென்று தல்ஸ்தோயின் யாஷ்னா பல்யானா மாளிகையில் தங்கி அவரது நூல்களையும் கடிதங்களையும் சீர்ப்படுத்தி வெளியிடுவதில் முழு வாழ்க்கையையும் செலவிட்டார்.


திரைப்படத்தின் தொடக்கத்தில் செர்க்கோவ் வீட்டுச்சிறையில் இருக்கிறார். மாஸ்கோவிலும் தல்ஸ்தோயின் சொந்த ஊரான டுலாவிலும் தல்ஸ்தோயிய கம்யூன்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.  கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு எழுத்தாளனாக அறிமுகமாகியிருக்கும் புல்ககோவ் செயலராகப் பணியாற்ற வருகிறார், தல்ஸ்தோயின் கருத்துக்களை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்ட புல்ககோவ் உடைமையற்ற வாழ்க்கை, போகமறுப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர். தல்ஸ்தோயை சந்திக்கும்போது தல்ஸ்தோய் அவரது நூலை வாசித்திருப்பதாகச் சொல்லக்கேட்டு மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறார்.


புல்ககோவ் தல்ஸ்தோயின் இல்லமான யாஷ்னா பல்யானாவுக்கு வரும்போது தல்ஸ்தோய்க்கும் சோபியாவுக்குமான முரண்பாடு உச்சமடைந்திருக்கிறது. சோபியா தல்ஸ்தோயின் நூல்களுக்கான மொத்த பதிப்புரிமையையும் அவர் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எழுதிவைக்கவேண்டுமென விரும்புகிறார். அதற்காக தல்ஸ்தோயைக் கட்டாயப்படுத்துகிறார். சோபியாவை ஊதாரியும் அதிகார மோகம் கொண்டவனுமாகிய  மகன் லேவ் தூண்டி விடுகிறான். சோபியா தல்ஸ்தோயை உணர்வு ரீதியாகத் தாக்குகிறார். அன்பு காட்டுகிறார், கெஞ்சி அழுகிறார், வெறிகொண்டு கத்திக் கூச்சலிட்டு அவரைப் பொறுமையின் விளிம்புக்குத் தள்ளுகிறார்.


செர்க்கோவ் புல்ககோவிடம் சோபியா செய்வதை எல்லாம் ஒரு நாட்குறிப்பில் பதிவுசெய்து தனக்கு அளிக்கவேண்டும் என்று கோரி அனுப்பியிருக்கிறார். ஆனால் யாஷ்னா பல்யானாவுக்கு வந்ததும் சோபியா புல்ககோவை இனிய, நேர்மையான இளைஞராக அடையாளம் கண்டுகொண்டு இன்னொரு நாட்குறிப்பேட்டைக் கொடுத்து செர்க்கோவ் செய்வதை எல்லாம் பதிவுசெய்து அளிக்க வேண்டும் என்று கோருகிறார். இரு தரப்புகளுக்கும் நடுவே, இரு தல்ஸ்தோய்களுக்கும் நடுவே, புல்ககோவ் மாட்டிக்கொள்கிறார்.


செர்க்கோவ் , தல்ஸ்தோய் ஒரு உயில் மூலம் அவரது மொத்த எழுத்துக்களையும் ருஷ்ய மக்களுக்காக எழுதி வைக்கவேண்டும் என்று கோருகிறார். செர்க்கோவை ஏமாற்றுக்காரன், பொறுக்கி, முகஸ்துதி மூலம் கிழவரை மயக்கி சொத்துக்களை அபகரிக்க முயல்பவர் என்று சோபியா குற்றம்சாட்டிக்கொண்டே இருக்கிறார். செர்க்கோவ் சோபியா தல்ஸ்தோயின் வாழ்க்கையை நரகமாக்குவதாகவும், அவரை எழுதவோ சிந்திக்கவோ விடாமல் செய்வதாகவும், தன் மனைவி அப்படிச் செய்தால் அவளை விட்டு ஐரோப்பாவுக்கு ஓடிப்போவேன் அல்லது மண்டையில் சுட்டுக்கொள்வேன் என்றும் சொல்கிறார்.


விக்டர் ஸ்ஹொகலாவ்ஸ்கி


உண்மையில் சோபியாவால் தல்ஸ்தோய் பற்றிப் பிறர் கொண்டிருக்கும் மதிப்பை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 'நீங்கள் இவரை என்ன என்று நினைக்கிறீர்கள்? இவர் ஒரு கிறிஸ்து என்று சொல்கிறீர்கள். இவர் கிறிஸ்து அல்ல என எனக்குத் தெரியும்' என்கிறார். 'ஆம்,அவர் கிறிஸ்து அல்லதான், ஆனால் ஒரு ஞானி' என்று செர்க்கோவின் ஆதரவாளரான டாக்டர் செர்ஜியெங்கோ சொல்கிறார். சோபியா  நக்கலாகச் சிரிக்கிறார். அவர்கள் சொத்துக்களுக்காகப் பசப்புகிறார்கள் என நினைக்கிறார்.


உண்மையில், சோபியா தன்னை தல்ஸ்தோய் அளவுக்கே முக்கியமான எழுத்தாளராக நினைத்தார்.  பின்னர் வெளியான பல கடிதங்களில் அவர் எழுதப்போகும் நாவல்களை தல்ஸ்தோய் எழுதிய நாவல்களை விட மேலானவையாக, உலகப்புகழ்பெறப்போகின்றவையாக சொல்லியிருக்கிறார் என்பதை நாம் ஸ்கெலோவ்ஸ்கியின் நூலில் வாசிக்கலாம் .  தல்ஸ்தோயின் நாவல்கள் எல்லாம் தன்னால் செம்மைப்படுத்தப்பட்டமையால்தான் உலகப்புகழ்பெற்றன, ஆகவே அவற்றில் தனக்கும் முக்கியமான பங்கு உண்டு எனக் கருதினார்.


ஆனால் சோபியா எழுதிய கடிதங்கள் அவருக்கு அன்றைய ருஷ்ய உயர்குடிகள் கையாண்ட செயற்கையான சம்பிரதாய பாவனைகளும் ஆடம்பரமான சொல்லாட்சிகளும் கொண்ட அசட்டு நடை மட்டுமே கைவரும் என்று மட்டுமே காட்டுகின்றன. ஆக, பிரச்சினை சோபியாவால் தல்ஸ்தோயின் உண்மையான மதிப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை, அதற்கு அவரது அறியாமையின் விளைவான ஆணவம் தடையாக நின்றது என்பதுதான் . இதை இத்திரைப்படம் காட்டாமல் விட்டு விட்டது.


இத்திரைப்படம் காட்டும் சித்திரம் இது. செர்க்கோவின் கோரிக்கையின்படி தல்ஸ்தோய் அவரது நூலின் உரிமையை ருஷ்ய மக்களுக்கு எழுதி வைக்கிறார். பின்னாளில் சில அமெரிக்க எழுத்தாளர்கள் சொன்னது போல செர்க்கோவின் பெயருக்கு அல்ல, இலவசப்பதிப்புகளாக வெளியிடும் உரிமை மட்டுமே செர்க்கோவுக்கு அளிக்கப்பட்டது.  தன்னுடைய நிலங்களை விவசாயிகளுக்கு அளிக்க அவர் ஆசைப்பட்டாலும் சோபியாவின் எதிர்ப்பால் அது கைகூடவில்லை. தல்ஸ்தோய் எழுதிய உயிலை வாசிக்க நேர்ந்த சோபியா கடும் கோபம் கொள்கிறார். தல்ஸ்தோய் தனக்குப் பெரும் அநீதி இழைத்துவிட்டதாகச் சொல்கிறார். தற்கொலைசெய்து கொள்வதாக மிரட்டுகிறார். தீவிரமான ஒரு மோதலுக்குப்பின் தல்ஸ்தோய் யாஷ்னா பல்யானாவை விட்டு வெளியேறுகிறார். புல்ககோவிடம் சோபியாவுக்கு ஒரு கடிதத்தை கொடுத்துச் செல்கிறார். தன்னைத்தேடவேண்டாம் என்றும், திரும்பி வரப்போவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்


செல்லும் வழியில் தல்ஸ்தோய் மகள் அலக்ஸாண்டிரா அல்லது சாஷாவை மட்டும் கூடவே அழைத்துக்கொள்கிறார். அவரது அந்தரங்க மருத்துவர் கூடவே இருக்கிறார். அவர்கள் தெற்கு மாகாணத்துக்குச் செல்கிறார்கள். தல்ஸ்தோய்க்கு எங்கே செல்வது என்ற திட்டமேதும் இல்லை. வழியில் நோய்வாய்படுகிறார். காய்ச்சல் இருக்கிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரயில்நிலையத் தங்கும் அறையில் அவரை வைத்திருக்கிறார்கள். செர்க்கோவைப் பார்க்க தல்ஸ்தோய் ஆசைப்படுகிறார். செர்க்கோவ் வருகிறார். அவரிடம் தான் விடைபெற்றுக்கொள்வதாகவும் தன் நம்பிக்கைகளை செர்க்கோவ் முன்னெடுக்கவேண்டும் என்றும் , சோபியாவுக்கு அவர் அங்கிருப்பது தெரிந்தால் தேடிவந்துவிடுவார் என்றும் அவரைப்பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்


உலகம் முழுக்க இருந்து செய்தியாளர்கள் வந்து அந்த ரயில்நிலையம் முன்னால் கூடுகிறார்கள். தல்ஸ்தோயின் மரணம் அனேகமாக உறுதியாகி விட்டிருக்கிறது. அவர் சொத்துக்களை உதறியது பற்றிய விவாதம் ஊடகங்களில் நிகழ்கிறது. அப்போது சோபியா வந்துசேர்கிறார். ருஷ்ய பாரம்பரிய திருச்சபையின் பாதிரியாரையும் கூட்டி வருகிறார். ஆனால் அவரைச் சந்திக்க தல்ஸ்தோய் விரும்பவில்லை என்று செர்க்கோவ் தெரிவிக்கிறார். தனக்கு தல்ஸ்தோய் மேல் உரிமை உண்டு என்று சோபியா கத்துகிறார். 'இல்லை, அவர் உங்களை அழைக்கவில்லை. செர்க்கோவைத்தான் வரச்சொன்னார்' என்று தல்ஸ்தோயின் மகளே சொல்ல சோபியா திரும்புகிறார். அருகிலேயே ஒரு அறையில் தங்கியிருக்கிறார்


மறுநாள் தல்ஸ்தோய் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. சோபியா வந்து தல்ஸ்தோயைச் சந்திக்கிறார். தல்ஸ்தோய் நினைவிழந்த நிலையில் இருக்கிறார். தல்ஸ்தோய் அருகே அமரும் சோபியா தன்னை மன்னிக்கும்படி கோருகிறார். தன்மேல் பிரியம் இருக்கிறதா என்று சோபியா கேட்க 'ஆமாம்' என்று தல்ஸ்தோய் சொல்வது அவள் இதயத்துக்குக் கேட்கிறது. 'கடைசிவரை அன்பிருக்கிறதா ? ' என்று சோபியா கேட்க தல்ஸ்தோய் 'கடைசிவரை' என்று பதில் சொல்கிறார். தல்ஸ்தோய் உயிர் பிரிகிறது. சோபியா துயரத்துடன் ரயிலில் திரும்பிச்செல்கிறார்.


துல்லியமான ஆவணத்தன்மையுடன் அதேசமயம் உத்வேகமான நாடகத்தருணங்கள் வழியாக நகரும் இந்தத் திரைப்படம் பலவகையிலும் என்னைக் கவர்ந்தது.  கண்முன் வரலாறு ஓடிச்செல்லும் அனுபவத்தை அளித்தது. என் ஆதர்சமான தல்ஸ்தோயை நேரில் பார்த்துக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தேன். கிழவரின் நகைச்சுவை [நான் சொல்வதை நம்பவேண்டாம், நான் தல்ஸ்தோய்வாதி இல்லை] உணர்ச்சிகரத்தன்மை எல்லாமே அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.


ஆனால் வரலாற்றைப் புனைவாக்கும்போது நாம் இன்றைய மதிப்பீடுகளை அதன் மேல் ஏற்றுகிறோம், அது இயல்பும்கூட. இந்தப்படம் சமகால அமெரிக்க- ஐரோப்பிய நோக்கில் அமைந்தது. தல்ஸ்தோய் பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பலவகையான கசப்புகளும் அவதூறுகளும் திரிபுகளும் உண்டு. அவற்றின் பின்னணியிலேயே நாம் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.


தல்ஸ்தோயை கம்யூனிச ருஷ்யா அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியப்பதாகையாக ஆக்கிக்கொண்டது. அவரது கொள்கைகள் கம்யூனிசத்துக்கான முதல் திறப்புகளாக முன்வைக்கப்பட்டன. இதற்கு எதிர்வினையாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தல்ஸ்தோயைக் குறைத்து மதிப்பிடும் விமர்சனங்கள் ஏராளமாக எழுந்து வந்தன. தல்ஸ்தோயின் கொள்கைகளும் நம்பிக்கைகளும் கிறுக்குத்தனமானவை, சுய ஏமாற்றுத்தன்மை கொண்டவை, நடைமுறைப்பார்வையற்றவை எனத் திரும்பத்திரும்ப எழுதப்பட்டது. தல்ஸ்தோயியர்கள் கனவுஜீவிகள் அல்லது மோசடியாளர்கள் என வசைபாடப்பட்டார்கள். அதற்கேற்ப,செர்க்கோவ் உள்ளிட்ட தல்ஸ்தோயியர்கள் இடதுசாரி சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிட்டிருந்தார்கள்.


இரண்டாவதாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கத்தோலிக்க எழுத்தாளர்கள் தல்ஸ்தோயைக் கடுமையான கத்தோலிக்க எதிர்ப்பாளர் என அடையாளம் கண்டார்கள். ஆகவே அவரது கிறிஸ்து பற்றிய விளக்கங்களையும், இயற்கைவாழ்க்கை நோக்கையும் , உடைமை மறுப்பையும் அவர்கள் போலித்தனம் என்று முத்திரை குத்தினார்கள்.


இந்த எதிர்ப்புகள் கீழ்மட்டத்தில் அப்பட்டமான வெறுப்புடன் முன்வைக்கப்பட்டாலும் மேல்மட்டத்தில் நுட்பமான இலக்கியதந்திரங்களுடன் கலந்து முன்னெடுக்கப்பட்டது. தல்ஸ்தோயை சுயஏமாற்றுக்காரர் என்று காட்ட தஸ்தயேவ்ஸ்கியை நேர்மையான அப்பட்டமான பெரும்கலைஞர் என ஒரு படி மேலே தூக்குவது அதில் முக்கியமான உத்தி. தல்ஸ்தோயின் பலவீனங்களை ஒன்றுவிடாமல் கணக்கிட்டுப் பார்ப்பவர்கள் தஸ்தயேவ்ஸ்கியின் பலவீனங்களை கணக்கில்கொள்வதில்லை. தல்ஸ்தோய் தன் பிழைகளையும் பலவீனங்களையும் அப்பட்டமாக வாக்குமூலமிட்டார் என்பதையும் தஸ்தயேவ்ஸ்கி அப்படி செய்யவில்லை என்பதையும்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.


அத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.