உப்பும் காந்தியும்

அன்புள்ள ஜெ.மோ. அவர்கட்கு,


உலகின் மிகப் பெரிய வேலி கட்டுரை மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த வேலி எப்படி இருந்திருக்கும், அங்கே கால்நடைகள் என்ன செய்திருக்கும், அதை சுற்றி இருந்த காடு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் மனதில் ஓயாத கேள்விகள் எழுகின்றன. ஒரு மாக்ஸ்காம் வந்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. இப்படி எதனை ஆச்சரியங்கள், விஷயங்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறதோ?


கொங்கு வட்டாரத்தில் திருமண சடங்குகளில் உப்பு பிரதான இடம் வகிக்கிறது. நிச்சயம் செய்வதற்கு முன் கோவிலில் உப்பு, சக்கரையை ஒரு கூடை நிறைய வாங்கி மாப்பிள்ளை- பெண் வீட்டார் பரிமாறிக் கொள்வார்கள்.


ரகுநாதன்

கோவை


ஜெ,


உலகின் மிகப்பெரிய வேலி படித்தேன். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் ஒவ்வொரு கால கட்ட கோர முகமும் இப்போதுதான் புதிய ஆவண ஆதரங்களுடன் பேசப்படத்தொடங்கியுள்ளன. மதுஸ்ரீ முகர்ஜியின் சர்ச்சிலின் மறைமுகப்போர் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம். ஆனால் பொதுவில் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி இத்தகைய புத்தகங்கள் வெளிச்சம் போடப்படுவதே இல்லை. வலையுலகத்தில் மட்டுமே பேசப்படும் புத்தகங்களாகவே பெரும்பாலும் இவை இருக்கின்றன.


கல்வி, பிரசாரம், பிரித்தாளும் கொள்கை ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய வேலியை உண்மையில் அவர்கள் இந்தியாவின் மனங்களில் உருவாக்கினார்கள். அதன் விளைவாக இந்திய சமுதாயப்பரப்பில் உருவான இடைவெளிகளில் வெகு கவனமாக தங்கள் அதிகாரத்தை நிரப்பி தம் ஆட்சிக்கான இடத்தை உறுதி செய்து கொண்டார்கள்.


விளைவாக, கொத்துகொத்தாக ஒருபகுதி மக்கள் செத்து மடிகையில் கூட பிரிட்டிஷ்கார்களுக்கு எதிராக பெரும் கலகம் என்பது முதல் இந்திய சுதந்திரப்போருக்குப்பின் இந்தியாவில் பெரிய அளவில் உருவாகவே இல்லை. இதன் உச்ச கட்டமாக இரண்டாம் உலகப்போரின்போது ஒரே வருடத்தில் சர்ச்சிலின் இனவெறிக்கு முப்பது லட்சம் வங்காள மக்கள் – பெரும்பாலானவர் ஏழை எளிய கிராம மக்கள்- ஒரே வருடத்தில் பலியானார்கள். கண்ணீரால் காத்த பயிர் என்று நான் எழுதிய சொல்வனக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


அருணகிரி.



அன்புள்ள அருணகிரி,


மதுஸ்ரீ முக்கர்ஜியின் புத்தகத்தை ஒட்டி எழுதப்பட்டுள்ளவை ஆதாரபூர்வமானவை, வரலாற்றுபூர்வமானவை. பத்தொன்பதாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் இனவெறிக்கான ஆதாரங்கள் ஆஸ்திரேலியா முதல் ஆப்ரிக்காவரை உலகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. உலகவரலாற்றின் மோசமான இனவெறியர்களுள் ஒருவரான சர்ச்சில் ஒரு அசட்டு படைப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசைப்பெற்றதும் இனவெறியின் ஆதாரமேயாகும்


ஆனால் உங்கள் கட்டுரையில் 'காந்தியை சமாளிப்பது எளிது என்று நினைத்த பிரிட்டிஷார் சுபாஷை கண்டுதான் அஞ்சினர்' என்ற வகையிலான உங்கள் சொந்த வரிகள் வரலாற்றுப்பிரக்ஞையில்லாத எளிய முன்முடிவு மட்டுமே. நெடுங்காலமாகவே இதை உங்கள் தரப்பு சொல்லிவருகிறது. ஒரு தேசத்தின் பொதுக்கருத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அது எப்படி அதிகார சக்தியாக ஆகிறது என்ற பிரக்ஞையேஇல்லாத 'அடிச்சா உட்டுட்டு ஓடிருவாங்க' என்ற வகை அரசியல் புரிதல் இது.


1918ல் காந்தி இந்தியா வந்தார். படித்த உயர்குடிகளின் அமைப்பாக இருந்த காங்கிரஸை இந்திய சாமானியர்களின் அமைப்பாக, போராடும் அமைப்பாக ஆக்கினார். மிதவாதி தீவிரவாதி பிரிவினையால் கிட்டத்தட்ட செயலற்றிருந்த காங்கிரஸ் அவர் தலைமையில் கோடானுகோடி பேர் பங்கெடுக்கும் மாபெரும் போராட்ட அமைப்பாக ஆகியது. 1925ல் அவர் காங்கிரஸை வழிநடத்த ஆரம்பித்தார். வெறும் இருபத்தைந்து வருடத்தில் அவர் இந்தியாவை சுதந்திரம் நோக்கி கொண்டுவந்தார்.


இந்தியாவின் பாதிப்பங்குத நிலம் அன்று மன்னராட்சியில் இருந்தது. மக்களில் பாதிப்ப்பேர் ராஜபக்தியில் மூழ்கிக் கிடந்தனர்.மிச்சநிலத்தில் பிரிட்டிஷ் பக்தி.1950களில்கூட சொந்த சிந்தனை, சொந்த அடையாளமில்லாமல், சொந்தமாக பெயர்கூட இல்லாமல் வாழ்ந்தவர்கள் இந்தியாவின் பாதிப்பங்கு மக்கள். அந்த மக்கள் திரளை காந்தி மக்களை அரசியல்படுத்தினார். ஜனநாயக உரிமைப்போராட்டத்தை கற்றுதந்தார். அவர்களுக்காக அவர்களே போராடவைத்தார். அதன்வழியாக பேதங்களை களைந்த நவீன தேசியப்பிரக்ஞை ஒன்றை உருவாக்கிக் காட்டினார்.


காந்தி 1918ல் ஆற்றீய முதல் உரையே இந்திய சுயராஜ்யம் பற்றித்தான். ஆனால் அவர் சௌரிசௌராவில் கற்றபாடத்தின் பின் மக்கள்திரளை நம்பாமல் ஓர் அரசியல் போராட்டத்துக்காக இந்தியர்களை பயிற்ற ஆரம்பித்தார். 1918ல் அவர் 1925ல் இந்தியா முழு விடுதலை பெறமுடியும் எண்ரு சொன்னார்.இரு பெரும்போர்களும் பஞ்சங்களும் அவர் கணக்கை தவறாக்கின. அதைவிட முக்கியமாக பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூட்சி மூலம் உருவான முஸ்லீம் லீக் அவரை கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்தது. பதினைந்தாண்டுக்காலம் காந்தி அந்த முஸ்லீம் மதவெறியுயுடன் போராடினார்.


இந்தியாவில் பெரும் பஞ்சங்களை உருவாக்கியபோதும் கூட இந்திய மக்கள் பிரிட்டிஷாரையே ஆதரித்தனர். அதைப்பற்றி சுவாமி விவேகானந்தர் வெதும்பி எழுதியதை நீங்கள் வாசிக்கலாம். காரணம் பிரிட்டிஷ் அரசு மேலோட்டமாக சட்டம் ஒழுங்கை பேணியதும், கல்வி மற்றும் ரயில் உட்பட நவீன வசதிகளைக் கொண்டுவந்ததுமாகும். சுதந்திரம் கிடைத்து முக்கால்நூற்றாண்டாகியும் நம் அறிவுஜீவிகள்கூட இன்னும் அவர்களின் பொருளியல் சுரண்டலை உணர்ந்துகொள்ளவில்லை.


அந்நிலையில் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு அவர்கள் நுட்பமான பொருளியல் சுரண்டல்வலையில் சிக்கி அடிமையாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தி, இருநூறாண்டுகளில் பிரிட்டிஷார் உருவாக்கிய நம்பிக்கையை இருபதாண்டுகளில் அழித்து, பிரிட்டிஷாரைஆட்சி செய்ய அனுமதித்த இந்தியவெகுஜன ஆதரவை களைந்த, மனிதகுல வரலாற்றின் மிகப் பிரம்மாண்டமான மக்களியக்கத்தை அற்பமாகச் சித்தரிப்பது உங்களைப்போன்றவர்களின் முன்முடிவு அரசியலாக சென்ற அரைநூற்றாண்டாக இருந்து வருகிறது. உண்மையில் இதுவே என்னை சர்ச்சிலின் இனவாத அரசியலை விட கசப்படையச் செய்கிறது


காந்தியின் உண்மையான ஆற்றல் பிற அனைவரையும் விட பிரிட்டிஷாருக்கு நன்றாகவே தெரியும். இந்திய வரலாற்றில் காந்திக்கு எதிராகவே பிரிட்டிஷார் உச்சபட்ச பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள். அவருக்கு எதிராகவே அதிகமான போட்டி தலைவர்களை உருவாக்கியிருக்கிறார்கள். காந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் இக்கணம்கூட உச்சகட்டத்தில் தொடர்கிறது. அனேகமாக மனித வரலாற்றில் காந்திக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அளவுக்கு வேறெந்த மனிதருக்கும் நிகழ்ந்ததில்லை.இன்றும் இந்திய தேசத்தின் ஜனநாயகத்தன்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான ஐரோப்பிய சக்திகளின் முதல் இலக்கு காந்தி. அவர்களுக்கு ஆதரவாகவே உங்களைப்போன்றவர்களின் திரிபரசியல் செயல்படுகிறது


சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸுக்குள் உள்ள உட்குழு அரசியலால் தலைமைக்கு வென்றவர்.இந்தியா முழுக்க மக்களால் அறியப்பட்டவர் அல்ல. இந்தியா முழுக்க பயணம்செய்தவர்கூட அல்ல. காங்கிரஸில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் ஒரு இந்தியத்தலைவராக எந்த ஆதரவையும் பெறவில்லை. அவரது செல்வாக்கு வங்கத்துக்குள் மட்டுமே இருந்தது. அவரும் ஆயுதப்போராட்டத்தைப்பற்றி பேசவில்லை. உண்ண்ணாவிரதம், ஒத்துழையாமை போர் உட்பட காந்திய வழிகளிலேயே போராடினார்.


சுபாஷின் வழிமுறையை ஆயுதப்போராட்டம் என்றல்ல செயல்பாட்டாளரியம் [ volunteerism] எனலாம்.ர அவர் ஆயுதப்போர், ராணுவம் என்று முயன்றது ஜப்பானியரின் தூண்டுதலினாலேயே. ஜப்பானியர் வென்றிருந்தால் பிரிட்டிஷாரைவிட கொடூரமான, பழைமைவாத நோக்கும் இனவெறியும் நிறைந்த, ஓர் அன்னிய அரசின் கைப்பாவை ஆட்சியாளராக அவர் இருந்திருப்பார். விதி அவருக்குச் சாதகமக இருந்தது. அவரது வழியின் பிழைகள் இன்று கொஞ்சம் வரலாற்றை அறிந்தவர்களுக்கு வெட்டவெளிச்சமானவை. அவரை பொய்யான பிம்பங்களின் அடிப்படையில் நிலைநிறுத்த முயலவேண்டாம்


சுபாஷின் நாடகியமான தப்பிச்செல்லலே அவரை பிரபலப்படுத்தியது. உலகப்போருக்குப்பின் சரண்டைந்த இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணையை பிரிடிஷ் அரசு நடத்தியபோது அதை ஒரு வாய்ப்பாக கருதி நாடெங்கும் கொண்டுசென்று பிரச்சாரம்செய்தனர் காங்கிரஸார். அதன்பின்னரே சுபாஷ் இன்றுள்ள வீரத்திருமகன் என்ற பிம்பத்தைப் பெற்றார்


இன்று சுபாஷ் பற்றி உள்ள பிம்பங்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை. காந்தியைச் சிறுமைசெய்து எழுதிய வங்காள எழுத்தாளர்களால் ஊதி பெரிதாக்கப்பட்டவை. சுபாஷின் படை பெரும்பாலும் இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து சரணடைந்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. சிறைக்கைதிகளை எந்த சர்வதேச நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் நடத்திய ஜப்பானிய கொத்தடிமை முறையில் இருந்து விடுபடுவதற்காக அவர்கள் அதில் சேர்ந்தார்கள். ஐஎன்ஏ ஒரே ஒருமுறை மட்டுமே பிரிட்டிஷ் படைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வெள்ளைக்கொடியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டார்கள் ஐ.என்.ஏ வீரர்கள். அதன்பின் அவர்கள் ஜப்பானிய ராணுவத்தின் எடுபிடி வேலைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அன்றைய இந்திய ராணுவ பொதுமனநிலை அது.


ஆக சுபாஷ் இந்தியாவில் ஒரு வகையான ஆயுதக்கிளர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கமுடியாது. முயன்றிருந்தால் அதையே சாக்காக வைத்து இந்திய சுதந்திரப்போரை ரத்தத்தால் நசுக்கியிருப்பார் சர்ச்சில். அதற்கு இந்திய ராணுவத்தையே பயன்படுத்தியிருப்பார். 1947 வரைக்கும் கூட இந்திய ராணுவம் பிரிட்டிஷ் விசுவாசத்துடனேயே இருந்தது என்பது வரலாறு.


சயாம் வழியாக இந்தியாவுக்கு ஜப்பானியர் போட்ட 'மரணரயிலில்' ஏறத்தாழ 15 லட்சம் பேராவது செத்திருக்க கூடும் என்பது கணக்கு– அவர்களில் பாதிபேர் தமிழர்கள். கொடூரமான அடிமைமுறையில் அவர்கள் கொல்லப்பட்ட அந்த பாதை வழியாக பலமுறை சென்றிருக்கிறார் சுபாஷ். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் ராஜதந்திர மௌனத்தையே கடைப்பிடித்தார். அவரால் வேறெதுவும் செய்திருக்கமுடியாது. காந்தி ஒருபோதும் அந்த மானுட அழிவுக்கு துணை போயிருக்கமாட்டார்.


சுபாஷ் மீதான இந்த பொய்யான பிம்பம் காந்தியை மட்டம்தட்டுவதற்கானது மட்டுமே. அவரது நோக்கங்கள் உயர்ந்தவை, வழிமுறைகள் முதிர்ச்சியற்றவை, அழிவை கொண்டுவரக்கூடியவை. அதை அவரே கடைசியில் உணர்ந்தார்.


இனியாவது உங்களைப்போன்றவர்கள் காந்தி மீது கொண்டுள்ள காழ்ப்பை கைவிடவேண்டும். வரலாற்றின் விரிவான பின்னணியில் வைத்து காந்தியை மதிப்பிடவேண்டும். காந்தி இந்த தேசத்தின் வாழும் இலட்சியவாதத்தின் அடையாளம். இந்து ஞானமரபின் உள்ளே என்றும் இருந்துவந்த கருணைக்கும், அதன் ஜனநாயகத்தன்மைக்கும் கண்கூடான சான்று. நவீன உலகுக்கு இந்திய ஞானிகள் அளித்த பெரும்கொடை அவர்.


காந்தியைப்புரிந்துகொள்ளாத ஒருவர் இந்தியாவின் மெய்ஞானமரபையோ இங்குள்ள கோடானுகோடி எளிய மக்களின் ஆன்மாவையோ புரிந்துகொள்ளாதவர் மட்டுமே



காந்தியும் சுபாஷும் கடிதம்


http://www.poetryconnection.net/poets/Bertolt_Brecht/661


வெறுப்புடன் உரையாடுதல்


காந்தியும் அம்பேத்காரும்


காந்தியின் துரோகம்


வரலாற்றின் வண்டலில்:கடிதங்கள்


வரலாற்றின் வண்டலில்…


பாவ மௌனம்


அரசியல்சரிநிலைகள்


இரு காந்திகள்.


படிப்பறைப் படங்கள்


எனது இந்தியா


காந்தியின் எளிமையின் செலவு


ஃபுகோகா :இருகடிதங்கள்


மலேசியா, மார்ச் 8, 2001



பழசி ராஜா


காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2011 20:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.