ஐன்ஸ்டீனின் கனவுகள்

நான் அமெரிக்காவில் இருந்து வாங்கிவந்த நாவல்களில் ஒன்று ஐன்ஸ்டீனின் கனவுகள். [Einstein's Dreams] ஆலன் லைட்மான் [ Alan Lightman] எழுதிய புகழ்பெற்ற சிறுநாவல் இது. அரைமணிநேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய நாவல்களில் ஒன்று. அதிக புனைவுச்சிக்கல்கள் இல்லாத நேரடியான படைப்பு. இதைத் தமிழாக்கம் செய்யலாம் என்று ஈரோடு விஜயராகவனிடம் கொடுத்தேன். மொழியாக்கம் செய்துவிட்டார் என்றார். விரைவில் வெளிவரலாம்.


[image error]


இளம் அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905இல் அவரது சார்பியல் கோட்பாட்டை வெளியிடும் காலத்தில் இருந்த மனநிலையை விவரிக்கும் நாவல் இது. நாம் வாழும் இந்த உலகம் சில திண்மைகளின் மேல் அமைந்துள்ளது. காலம், இடம் சார்ந்த திண்மை அவற்றுள் முக்கியமானது. சட்டென்று சார்மை வெளிப்பட்டு அந்தத் திண்மைகள் ஆட்டம் காணுமென்றால் நம் ஆழ்னமனம் திடுக்கிடுகிறது.அது அறிந்து உள்வாங்கி சமைத்துள்ள மொத்தப் பிரபஞ்சத்தையும் திரும்பக் கட்டியெழுப்ப முயல்கிறது


அந்த முயற்சியைக் கனவுகளாக எதிர்கொள்கிறார் ஐன்ஸ்டீன். அதைச் சித்தரிக்கும் நாவல் இது. முப்பது சிறிய அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் ஐன்ஸ்டீன் கண்ட முப்பது தனித்தனியான கனவுகளைச் சித்தரிக்கிறது. ஒவ்வொரு கனவும் வாழ்க்கையை சார்மை விதிகளின்படி திருப்பி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. ஐன்ஸ்டீன் காப்புரிமை அலுவலகக் குமாஸ்தாவாக, சார்பியல் கோட்பாட்டைத் தொட்டுவிட்டுத் திகைத்து நிற்பவராக இந்நாவலின் தொடக்கத்தில் அறிமுகமாகிறார்.


1905ல் சுவிட்சர்லாந்தில் பெர்னே நகரில் தன் காப்புரிமை அலுவலகத்திற்கு ஐன்ஸ்டீன் ஜூன் 29 காலை வருமிடத்தில் அவரை அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறது நாவல் . அந்தக்காலையில்தான் ஐன்ஸ்டீன் நகரும் துகள்களின் மின்னியக்கவியல் என்ற தன் ஆய்வேட்டை முடித்துத் தட்டச்சுக்குக் கொடுக்கிறார். அதில் பின்னாளில் சார்பியல் கோட்பாடு என்றபேரில் புகழ்பெற்ற கொள்கையை முன்வைத்திருந்தார். அரை மணி நேரம் கழித்துத் தட்டச்சாளர் அலுவலகத்திற்குள் நுழையும்போது நாவல் முடிகிறது. தொடர்ந்து முப்பது நாட்களில் கண்ட முப்பது தனிக்கனவுகளாக நாவல் முன்னகர்கிறது. ஒரு முடிவுப்பகுதியுடன் நிறைவடைகிறது


இந்தக்கனவுகளை வெவ்வேறு வகையில் காலம் வெளி பற்றிய அவதானிப்புகளாக வாசிக்கலாம். உதாரணமாக முதல் கனவில் காலம் ஒரு வட்டச்சுழற்சியாகி மனிதன் முடிவில்லாமல் செய்வதையே திரும்பச் செய்து அடைந்தவற்றையே திரும்ப அடைந்து வாழும் நிலையைக் காட்டுகிறது. அவ்வாறு விதவிதமான கோணங்களில் அமைந்த காலம் வழியாக வாழ்க்கைநிகழ்வதைக் காட்டுகின்றன இக்கதைகள்.


ஓர் இலக்கிய வாசகனாக எனக்கு இக்கதைகள் பெரிய அனுபவத்தை அளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் கனவுகளைவிட சிக்கலான நுண்மையான கனவுகளை இலக்கியத்திலும் கவிதையிலும் நாம் ஏற்கனவே வாசித்திருக்கிறோம். கனவு என்பதை காலமில்லாத காலநிகழ்வு என்று கொண்டால் அங்கே காலம் அடையும் பலவடிவங்களை இன்னும் பிரமிப்பூட்டும்படி நாம் புனைவிலக்கியத்தில், சரிரியலிஸ ஓவியங்களில் காணமுடியும்.


இந்தக் கதைகளின் முக்கியமான குறைபாடு என்னவென்றால் இவை கனவின் காலமின்மையில் நிகழும் படிமவெளியை மொழியால் அள்ளமுடியாமல் நின்றுவிடுகின்றன என்பதுதான். ஆகவே ஒரு கனவைக் காணும் அனுபவம் நிகழ்வதில்லை, கனவைப்பற்றிய ஒரு உரையாடலைக் கேட்கும் அனுபவமே எஞ்சுகிறது.


இந்தக் கனவுகள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையைப் பல கோணங்களில் விளக்கும் அறிவியல் முக்கியத்துவம் கொண்டவை என்று வாசித்தேன். அந்த அம்சம் எனக்கு முக்கியமாகப் படவில்லை.


இந்த எளிய சிறிய நாவல் புனைவின் பாய்ச்சலுக்காக அல்லாமல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்காக வாசிக்கப்படவேண்டியது

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.