கூடங்குளம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,


கூடங்குளம் பற்றிய உங்கள் பதிவையைப் படித்தேன். உண்மையில் அணுசக்தி மட்டும் தான் நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கு தீர்வாக அமையும் என்ற மத்திய அரசின் பேச்சு எடுபடாததுதான். ஜார்ஜ் புஷுடன் மன்மோகன் சிங் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த வகையில் அதை எதிர்ப்பதும் ஜைதாபூர் போன்ற நிலநடுக்கப் பாதிப்புள்ள இடங்களில் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதும் ஏற்கத்தக்கதே. அதே சமயம் கூடங்குளம் மிகுந்த நிலநடுக்கப் பாதிப்புள்ள இடமல்ல. உண்மையில் பூமியில் எந்த இடம் தான் முற்றிலும் நிலநடுக்கப் பாதிப்பற்றது?


3.5 பில்லியன் டாலர் செலவு செய்து அணுமின் நிலையத்தைக் கட்டிமுடித்தாகிவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அணுமின் நிலையங்களுக்கு இன்றைய மாற்று என்ன என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா? நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்கலாம். நிலக்கரி இந்தியாவில் நிறையவே கிடைக்கிறது, ஆனால் அதை தோண்டுவதும் பயன்படுத்துவதும் சுற்றுசூழலுக்கு மிகுந்த பாதிப்பை உருவாக்குகிறது. அதற்குப் பதில் அணைகளைக் கட்டி நீரில் இயங்கும் மின் நிலையங்களைக் கட்டலாம் ஆனால் அதுவே நிலநடுக்கங்களை உருவாக்குகிறது என்று கருதப்படுகிறது. அதுபோக வனங்களும் அழிகின்றன. இந்தியாவில் நீர் மின் நிலையங்கள் கட்ட நீர் வளமும் குறைவு, அதுவும்  தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அது மிகவும் குறைவு. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் படித்தேன் சூரிய சக்திப் பலகைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றுப்புறத்தை பெரிதும் மாசுபடுத்துவதால் சீனாவில் ஒரு ஊர் மக்கள் அதற்கு எதிராகப் போராடி அடி வாங்கினார்கள் என்று.


அணுமின் நிலையங்கள் மட்டும் தான் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றனவா? உலகத்திலேயே மிகவும் பயங்கரமான தொழிற்சாலை விபத்துக்களில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயு விபத்து ஒரு ரசாயனத் தொழிற்சாலையால் ஏற்பட்டது என்பது நாம் அறிந்ததே. பல அணுமின் நிலைய விபத்துக்களை விட அதிகமாக மக்கள் அதில் பாதிக்கப்பட்டனர். அதை விடுங்கள், எண்டோஸல்பான் கேரளத்தில் இத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? பொதுவாக பசு போல சாதுவாகக் நம் நகரங்களில் காட்சியளிக்கும் பல ரசாயனத் தொழிற்சாலைகள் இந்த வகையைச் சேர்ந்தவையே. அவற்றை எல்லாம் எதிர்க்க நாம் தயாராக இருக்கிறோமா?


அதற்காக நான் அணுமின் நிலையங்களே நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்குத் தீர்வு என்று கூறவில்லை. ஆனால் அதை முற்றிலும் நிராகரிக்கும் முன் அதற்கு பதில் என்ன என்பதையும் எண்ண வேண்டும் என்று தான் கூறுகிறேன். கூடங்குளத்தை பொறுத்தவரை அது செர்னோபில் உலையின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டது. செர்னோபில் RBMK என்ற வகையைச் சார்ந்தது, கூடங்குளம் VVER 1000 மற்றும் VVER 1200 வகையைச் சார்ந்தது. இது இன்று பல மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தபடும் அணு உலைகளுக்கு நிகராகவே கருதப்படுகிறது.


இன்று அணு உலைகளை புதிதாக எந்த மேற்கத்திய நாடும் நிறுவவில்லை என்றாலும் இயங்கிக்கொண்டிருக்கும் அணு உலைகளை படிப்படியாகத் தான் மூடுகின்றனவே தவிர உடனடியாக அல்ல. ஜெர்மனியைப் பொறுத்தவரை அணு உலைகளை மூடும் திட்டம் அரசியல் சார்ந்தது. அங்கு அரசியலில் பசுமைகட்சிகள் எனப்படும் சுற்றுச்சூழல் தீவிரவாதக்கட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே மற்ற கட்சிகள் அவற்றை விடப் பசுமையாகக் காட்டிக்கொள்ள முயலுகின்றன.


இன்று கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்குக் காரணம் நமது அரசு பொதுவாக மக்களின் நம்பிக்கையை பெறாததே என்று நான் நினைக்கிறேன். பொதுவாக மாசுகட்டுப்பாட்டு விதிகள் சரியாக கடைபிடிக்கப்படும் நிலை இருந்திருந்தால் மக்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பார்களா என்பது சந்தேகமே.


நானும் திருநெல்வேலி மாவட்டத்துக்காரன் தான். இப்போது சென்னையில் வசிக்கிறேன். என்னைப்போல பலர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பிழைப்புக்காக வந்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இங்கு மட்டும் பாதுகாப்பு இருக்கிறதா என்ன? கல்பாக்கம் அணு உலையில் ஏதாவது பிரச்சனை என்றால் சென்னை முழுவதும் தான் பாதிக்கப்படும். அது போக சென்னை பலகாலமாகவே பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுஆயுத ஏவுகணைகளின் எல்லைக்குள் இருக்கிறது. இது தான் இன்று மனித குலத்தின் நிலை. ஒருவரை ஒருவர் முற்றிலும் அழிக்கக் குறி வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் இந்தியா மிகுந்த தயக்கத்துடன் தான் சேர்ந்தது. இதற்குத் துணியாவிட்டால் நாம் மானமிழந்து பிறநாடுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழவேண்டியிருக்கும் என்பதே உண்மை.


இதற்கெல்லாம் காரணம் மனித குலம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு நிகராக தன்னைப் பெரிதாகக் கருதி செயல்படுவதே என்று நான் கருதுகிறேன். ஆனால் வேறு வழியுமில்லை. கணக்குப் பார்த்தால் எதுவுமே சரியில்லை. ஒரு இருதய சிகிச்சை நிபுணரிடம் ஒரு பத்திரிக்கையாளர் எந்த எண்ணெய் இதயதுக்கு நல்லது என்று கேட்டார். அதற்கு அவர் எல்லா எண்ணெயுமே கெட்டது என்றார். ஆனால் இதற்கு அது பரவாயில்லை என்று தான் பார்க்கமுடியும். அது போல ஒரு ஆராய்ச்சியில் ஒரு பிரிவினருக்கு தானிய வகை உணவும் இன்னொரு பிரிவினருக்கு திண்பண்ட வகையும் காலை உணவாகக் கொடுக்கப்பட்டது. அவர்களில் தானிய வகை உண்டவர்கள் நாளை மகிழ்ச்சியோடும் திண்பண்டம் உண்டவர்கள் நாளை கவலையோடும் கழித்தனர், தாங்கள் உண்ட உணவை எண்ணி. ஆனால் கொடுக்கப்பட்ட தானியவகை மற்றும் திண்பண்ட வகை உணவுகள் இரண்டுமே ஒரே அளவு போஷாக்கு கொண்டவையே. இது போலத்தான் அணுசக்தி பற்றிய விவாதமும். ஒளிவுமறைவின்றி உண்மைகளை சொல்லி, பொறுமையுடன் கேள்விகளுக்கு பதிலளித்து, மக்களின் நம்பிக்கையைப் பெறாவிட்டால் மிகவும் கடினம்.


இந்த வகையில் தமிழக அரசின் செயல்பாட்டை நான் வரவேற்கிறேன். மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்துவது நல்லதல்ல. அதே சமயம்  வெறுமனே அணுமின் சக்தியைப் பற்றிய விவாதமாக இல்லாமல் இது ஒட்டுமொத்தமாக நமது எரிசக்திக் கொள்கையைப் பற்றிய விவாதமாக நடைபெற வேண்டும். அப்படிச் செய்தால் இருபுறமும் உள்ள நிறைகுறைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகிறேன்.


அன்புடன்,

சண்முகம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2011 11:54
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.