கூடங்குளம்

இந்திய அரசு சுயநலமும் ஆணவமும் கொண்ட அதிகாரிகளாலும், அறியாமையும் பணவெறியும் கொண்ட அரசியல்வாதிகளாலும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக்கொண்டு, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு நடத்தப்பட்டுவருவது என்பதற்கான தூலமான ஆதாரங்களில் ஒன்று கூடங்குளம் அணுமின்நிலையம்.


1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது. சொல்லப்போனால் லட்சக்கணக்கான டன் தேயிலை, தோல், சீனி ஆகியவற்றுக்குக் கடனில் மூழ்கிக்கொண்டிருந்த ருஷ்யா தரவேண்டியிருந்த பணத்தை இதன்மூலம் வஜா செய்துகொண்டார்கள். அதற்காக இந்திய அரசின் கையைப்பிடித்து முறுக்கினார்கள். அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தாராளமாக விலைகொடுத்து வாங்கினார்கள்.  1988 ஆம் ஆண்டிலேயே கோர்பசேவ்-ராஜீவ்காந்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.



ஆனால் பல்வேறு சர்வதேச அணுபாதுகாப்பு அமைப்புகள் இதை அங்கீகரிக்கவில்லை. ஆகவே பத்தாண்டுக் காலம் கிடப்பில் கிடந்த இந்தத் திட்டம் 2001ல் மீண்டும் சூடு பிடித்தது. 2004 முதல் அங்கே கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. சில வருடங்களில் அணுமின்சாரம் இங்கே உற்பத்தியாகும் என்று சொல்லப்படுகிறது. இத்தனைநாளாக அங்கே உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பெரும்பாலும் எவருக்குமே தெரியாது.


இந்த அணு உலையின் அபாயங்கள் பற்றி மிக விரிவாகவே செயல்பாட்டாளர்களும் நிபுணர்களும் எழுதிவிட்டிருக்கிறார்கள். இந்த அணு உலையின் சூத்திரமே மிக அதிகமான வெப்பத்தை வெளிவிடும் தன்மை கொண்டது என்பதும் ஆகவே மிக அதிகமான கனநீர் தேவைப்படுவது என்பதுமாகும். ஆகவே உலைக்குக் கிட்டத்தட்ட மொத்த தாமிரவருணிநீரில் பாதி தேவைப்படும். போதாததற்கு பேச்சிப்பாறை அணைநீரையும் எடுத்துக்கொள்ள முயன்றார்கள். அது குமரிமாவட்ட மக்களின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது.


இந்த அணு உலை தென்னகத்தின் பூகம்பப்பாதையில் உள்ளது. கூடங்குளம் முதல் திருநெல்வேலி வரையிலான பகுதிகளில் இருமுறை மெல்லிய நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. கடைசியாக 2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்த அணுஉலைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி 1988 முதலே நிகழ்ந்து வருகிறது. இப்போது சில தனிப்பட்ட செயல்பாட்டாளர்களின் முயற்சியால் மக்கள் திரட்டப்பட்டு போராட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இப்போதுள்ள எச்சரிக்கைக்குக் காரணம் சமீபத்தில் ஜப்பானில் புக்குஷிமா அணு உலை சுனாமியால் பாதிக்கப்பட்டதும் அது ஒரு மாபெரும் மானுடப்பேரழிவாக இப்போதும் நீடிப்பதுமாகும். புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு 'பாதுகாப்பா'னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.


இந்த மக்கள் போராட்டம் சிலநாட்களாக நடந்து வருகிறது. இன்று நான் அந்த உண்ணாவிரதப்பந்தலுக்குச் சென்றிருந்தேன். நாளையும் செல்வதாக இருக்கிறேன். பொதுவாக உலகளாவிய ஊடகங்கள் அணு ஆற்றலுக்கு எதிரான போராட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. சொல்லப்போனால் இன்னும் உலகத்துக்கு ஆபத்தாக நீடிக்கும்  புக்குஷிமா அணுஉலை விவகாரம்கூட மெல்லமெல்ல ஊடகங்களால் கைவிடப்பட்டுவிட்டது.  தமிழில் தினமணி இந்தப் போராட்டம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறது.


அணு உலை ஆதரவாளர்களும் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட அண்ணா ஹசாரே போராட்டம் பற்றி சொல்லப்பட்ட எல்லா அபத்தமான வாதங்களையும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றியும் சொல்கிறார்கள். அதாவது மக்கள் ஆதரவு பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மீறி இந்தப்போராட்டம் நடத்தப்படுவதனால் இது ஜனநாயக விரோதமானது, இதை நடத்துபவர்களுக்குப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லை, உண்ணாவிரதம் இருப்பது சண்டித்தனம், இதை நடத்தும் செயல்பாட்டாளர்களின் தனிப்பட்ட நோக்கம் ஐயத்துக்குரியது, அவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது, இது நடுத்தர வர்க்கம் சொத்துக்களைப் பாதுகாக்கும்பொருட்டு நடத்துவது– என்றெல்லாம்.


ஆச்சரியமென்னவென்றால் அண்ணா ஹசாரே பற்றி இதையெல்லாம் சொன்னவர்கள் பலர் இந்த போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். வேறுமனிதர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள்.  இந்தப்போராட்டம் மிகமிக முக்கியமானது, தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான ஆதரவுக்குரியது. மக்கள் நலன்களுக்கு எதிராக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துகொள்ளும் தருணங்களிலெல்லாம் இதே போல மக்கள் தெருவுக்கு வந்து போராடியிருக்கிறார்கள். அரசியல்நோக்கற்ற செயல்பாட்டாளர்கள் அவர்களை வழிநடத்தியிருக்கிறார்கள். சூழியல் போராட்டங்கள் முதல் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் வரை. இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கே சமீபத்தில் அண்ணா ஹசாரேயின் போராட்டம் பெற்ற கவனமும் வெற்றியுமே தூண்டுதல்.


 


சுப.உதயகுமாரன்


இந்தப் போராட்டம் வெற்றிபெறுமா என்ற வினாவை சிலர் எழுப்பக்கேட்டேன். எந்த வகையான காந்தியப்போராட்டமும் அடிப்படையில் வெற்றிதான் பெறும். இந்தியாவின் அணு உலைகளின் பாதுகாப்பின்மை மற்றும் அவற்றில் உள்ள ஊழலைப்பற்றி இந்திய அளவில், ஏன் சர்வதேச அளவில் கவனப்படுத்த முடிந்தமையால் ஏற்கனவே இந்த போராட்டம் பெருவெற்றி பெற்றுவிட்டது என்றே நினைக்கிறேன். இன்றுவரை மக்களைக் கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் அறிவியலாளர்கள் போகிறபோக்கில் 'அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் வேலையைப்பாருங்கள்' என்று பொருள்வரச் சொல்லும் சில வரிகளையே நாம் பதிலாகப் பெற்றுள்ளோம். நாம் தேர்வுசெய்துள்ள மக்கள் பிரதிநிதிகளைப் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளுவதை மட்டும் இந்த போராட்டம் செய்தாலே போதுமானது.


குட்டிசெர்னொபில் ஆன கூடங்குளம் உடனடியாக மூடப்பட வேண்டும். வேறு வழியே இல்லை. அதற்காகப் போராடும் மக்களுக்கும் வழிநடத்தும் நண்பர் உதயகுமாரனுக்கும் வாழ்த்துக்கள்.


 


தொடர்புடைய பதிவுகள்





அண்ணா ஹசாரே போராட்டம் , ஒரு வரலாற்றுத்தருணம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2011 04:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.