அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?

அன்புள்ள ஜெ,


கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீங்கள் எழுதியதை வாசித்தேன்.


நம்முடைய நாடு தீவிரமான எரிபொருள்பற்றாக்குறையால் பிதுங்கிக்கொண்டிருக்கிறது என நீங்களும் அறிவீர்கள் அல்லவா?


இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது? நீர்மின்சாரம் போன்றவற்றை நாம் முடிந்தவரை செய்துவிட்டோம். அனல் மின்சாரத்துக்கு நம்மிடம் எரிபொருள் இல்லை.


மின்சாரம் இல்லாமல் என்ன செய்ய முடியும்?


சாமிநாதன்


[image error]


அன்புள்ள சாமிநாதன்,


நிபுணர்கள் புள்ளிவிவரங்களுடன் பேசுவதை விட்டுவிட்டு சாதாரணமான குடிமக்களாக இதைப்பற்றிப்பேசுவோம்.


எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரப்பற்றாக்குறை இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்பதை எவருமே மறுக்க முடியாது. அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே


ஆனால் நம்முடைய மின்சாரப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு அணு உலைகள் மட்டுமே வழி என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்த எண்ணத்தை நம்மிடம் எவர் எப்படி உருவாக்கினார்கள்? என்னென்ன தரவுகளை அளித்தார்கள்? எந்த தர்க்கங்களைச் சொன்னார்கள்? எப்படி இதை நாம் நம்ப ஆரம்பித்தோம்?


இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுக்கவே அணு உலைகள் ஆற்றல் உற்பத்திக்கு லாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்து விட்டார்கள் என்பதே உண்மை. வேகமாக உலகிலுள்ள அணு உலைகள் மூடப்படுகின்றன.


என்ன காரணம் என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள், அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால் அணு உலைகள் மிகமிக அதிகமாகச் செலவு பிடிப்பவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அணு உலைகளுக்குத் தேவைப்படும் பிரம்மாண்டமான முதலீட்டையும் தொடரும் நிர்வாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்திமுறைகளுக்குச் செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள்தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ளமுடியும் என நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.


இந்தியாவில் அணு உலைகளை விட்டால் இதுவரை இங்குள்ள மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பெரும் முயற்சிகள் என்னென்ன? அணு உலைகளுக்கு செலவிடப்படும் தொகையில் பாதியாவது அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதா? நாமறிய எந்த ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பதல்லவா உண்மை?


இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை


இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.


ஆக நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.


காரணம் என்ன? இந்தியாவில் பெரும்பாலான மின்கம்பிகள் தலைக்குமேலே செல்கின்றன. ஆகவே அவை அறுந்து விழாத உலோகத்தில் தடிமனாக அமைக்கப்படவேண்டியிருக்கிறது. அவை அளிக்கும் மின்தடை பெரும் மின்சார இழப்புக்குக் காரணமாக அமைகிறது. திருட்டுக்கும் வழிவகுக்கிறது.


மின்னிழப்பு உருவாகாத வகையில் நவீன மின்கடத்திகளை மண்ணுக்கடியில் போட்டு மின்வினியோகம் செய்யலாம், உலகின் வளர்ந்த நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. ஆனால் அதற்கான பெரும் முதலீடு நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.


ஆனால் கூடங்குளம் போன்ற ஒரே ஒரு அணு உலை அமைக்க நாம் செலவிடும் தொகை 1988ல் போட்ட கணக்கின்படி 1600 கோடிக்கு மேல். இன்று அது 4000 கோடிக்கு மேல் சென்றிருக்குமென கணக்கிடப்படுகிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அதன் அணுக்கழிவு பராமரிப்புக்குத் தேவையாம்.


இந்தத் தொகை இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.


நெடுந்தூரம் மின்சாரத்தைக் கொண்டுசென்று மின்னிழப்பு உருவாக்குவதற்கு பதிலாக இந்தத் தொகையைச் செலவிட்டு இந்தியாவில் பல்வேறு சிறிய மின்திட்டங்களை அமைத்து ஆற்றல் பற்றாக்குறையை எளிதில் ஈடுகட்ட முடியும். அதைப்பற்றி ஏராளமான நிபுணர்கள் எழுதிவிட்டார்கள்.


ஆனால் அவற்றை நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் செய்வதில்லை. அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை. அது ஆளும்தரப்புக்கு மிக வசதியானது. பிற திட்டங்களில் இந்த முட்டாக்குப்பாதுகாப்பு இல்லை.


இரண்டாவதாக, இந்த அணு உலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன. இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குத்தான் உண்மையில் சென்று சேர்கிறது. அந்நாடுகள் தங்கள் காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கின்றன. ஈடாக பெரும் பணமும் பெற்றுக்கொள்கின்றன. பேரங்கள் ராணுவ ரகசியங்களாகவும் எஞ்சுகின்றன. இந்நாடுகளின் ரகசியபேரங்களும் ஆள்பிடிப்புவேலைகளும்தான் அணுஉலைகளுக்குப்பின்னால் உள்ள தூண்டுதல்கள்.


மூன்றாவதாக,சர்வதேச நிதியங்கள் இம்மாதிரி திட்டங்களுக்கு தேவையான கடன்களைக் கொடுக்கின்றன. உண்மையான வளர்ச்சித்திட்டங்களுக்கு அவை நிதி அளிப்பதில்லை. இந்த நிதியங்களில் அதிக முதலீடு செய்துள்ளவை இந்த அணுஉலைகளை நமக்கு விற்கும் நாடுகளேதான். அதாவது தரம் கெட்ட பொருளை நமக்கு விற்பதோடு அவற்றை வாங்குவதற்கான கடனையும் அவையே வட்டியுடன் நமக்கு அளிக்கின்றன.மொத்தத்தில் நாம் கடன் வலைக்குள் விழுகிறோம்.


இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.


ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.


 


ஜெ


கூடங்குளம் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2011 12:18
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.