ஆயுதமேந்திய ஜனநாயகம்!


அன்பின் ஜெ.,


மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, சாதாரண மனிதர்களுக்கு ஆயுதம் அளித்து, இந்த சண்டையில் அவர்களைப் பலிகடா ஆக்குகிறார்கள் என்பதாய் ஒரு எண்ணம் இருந்தது. உச்ச நீதி மன்றம் அதைத் தடை செய்து ஆணை விதித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், சத்தீஸ்கர் அரசும் இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது போன்ற செயல்பாடுகள் உள்ளன. E.A.S.ஷர்மா, ராமசந்திர குகா போன்ற பெட்டிஷனர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றுக் கடிதம் எழுதி உள்ளார்கள் (அவுட்லுக், ஆகஸ்டு-1).


உங்கள் எண்ணங்கள் என்ன?


பாலா



அன்புள்ள பாலா


இந்த விஷயத்தில் எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்குமென நான் நினைக்கவில்லை. ஒரு சிவில் சமூகத்தில் ஆயுதமே இருக்கக்கூடாது- அதுவே ஓர் அரசின் இலக்காக இருக்கவேண்டும். ஆயுதம் இருக்க இருக்க சிவில் சமூகத்தின் வன்முறை அதிகரிக்கும். அது அந்த சமூகத்தின் கட்டுக்கோப்பையே காலப்போக்கில் அழிக்கும்.


அந்த ஆயுததாரி அமைப்பை எவரும் எதற்கும் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதே முதல் அபாயம்.  அந்தமக்களை ஒருவகைக் கூலிப்படைகளாக முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பயன்படுத்தலாம். அந்த மக்கள் தங்களுக்குள்ளேயே ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்.  ஒருகட்டத்தில் அந்த மக்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்க வேண்டியிருக்கும்


ஆயுதங்களுக்குப் பழகிப்போனால் அந்த மக்களை மீட்டெடுப்பது எளியதல்ல. இன்று வடகிழக்கு மாகாணங்கள் அந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன. எண்ணிப்பாருங்கள். பழங்குடிக் காலம் முதல் வரலாறு முழுக்க நம் மக்கள் ஆயுதங்களுடன் மட்டுமே இருந்திருக்கிறார்கள். சமூகம் ஆயுதமேந்தியவர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஆயுதம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது


என் குடும்ப வீட்டில் ஓர் அறை முழுக்க துருப்பிடித்த ஆயுதங்கள் கிடக்கும். எங்கள் ஆழ்மனம் போல, அங்கும் அந்த கொலை ஆயுதங்கள் துருப்பிடித்துக் கிடக்கின்றன. ஆனால் சென்ற யுகத்தில் என் முன்னோர் அதை நம்பி வாழ்ந்திருக்கிறார்கள்.மிகமெல்ல, பல படிகளாக, நம் சமூகத்தில் ஜனநாயகத்துக்கான அடிப்படைகள் அமைக்கப்பட்டன. அதாவது மக்கள் கைகளில் இருந்து ஆயுதங்கள் இல்லாமலானதே நம் சமூக வரலாற்றில் கடந்த இருநூறாண்டுகளில் நடந்த மிகப்பெரிய வளர்ச்சி என்பது.


வேடிக்கை என்னவென்றால்,  எங்கும் மிகத் தீவிரமான அரசு வன்முறை வழியாகவே சமூக வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது என்பதுதான். ஒரு நிலப்பிரபுத்துவ சமூகம் சமூக வன்முறைமிக்கது. இன்றுகூட இங்கே ஒரு நாயர் தன்னுடைய 'தறவாட்டை'ப் பற்றிச் சொல்லும்போது 'அந்தக்காலத்தில் கொல்லும் கொலையும் இருந்த குடும்பமாக்கும்' என்றே சொல்கிறான். அவன் அடையாளமே வன்முறையாலானது. அப்படித்தான் தமிழகத்தில் பெரும்பாலான நிலவுடைமை சாதிகள் சொல்லிக்கொள்கின்றன.அதாவது அன்றெல்லாம் எங்கும் சல்வா ஜூடுமும் ரன்வீர் சேனாவும்தான் உலவிக்கொண்டிருந்தன.


இந்த நிலப்பிரபுத்துவச் சாதிகளின் வன்முறையை மிகவலுவான மைய அரசின் வன்முறை மூலம் பிரிட்டிஷ் அரசு அழித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு அளித்த மாபெரும் கொடையே அதன் மாபெரும் போலீஸ் மற்றும் ராணுவம்தான். சென்ற நூற்றாண்டின் கதை என்பதே பிரிட்டிஷ் போலீஸுக்கும், ராணுவத்துக்கும் உள்ளூர் நிலப்பிரபுக்கள் மற்றும் திருடர்களுடன் நடந்த போராட்டத்தின் கதை என்று சொல்லலாம். பிரிட்டிஷார் இந்தியாவின் சமூக வன்முறையை முழுமையாக இல்லாமலாக்கி உள்நாட்டு அமைதியைக் கொண்டுவந்தார்கள். அதன்பின்னரே நாம் முதலாளித்துவ அமைப்பு நோக்கி நகர ஆரம்பித்தோம்.


அந்த முதலாளித்துவ அமைப்பு சுரண்டலையே ஆதாரமாகக் கொண்டது. ஆகவே பெரும் பஞ்சங்களை உருவாக்கியது. ஆனாலும் அது நிலப்பிரபுத்துவ முறையை அழித்தது. அத்தனை மக்களையும் ஒன்றாகப்பார்க்கும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவந்தது. அந்த சட்டத்தின் ஆட்சி மூலம் சமூக வன்முறையை இல்லாமலாக்கியது. ஆகவே நம் வரலாற்றில் முதல்முறையாகப் 'பொதுமக்கள்' என்ற ஒரு திரள் உருவாகியது. அந்தத் திரளே ஜனநாயகத்தின் அடித்தளம். பிரிட்டிஷார் நமக்கு ஜனநாயகத்தை உருவாக்கி அளித்தனர் என்று சொல்வது மிகையல்ல.


இருநூறாண்டுகளில் இடைவிடாத போராட்டம் மூலம் நம் மக்களிடமிருந்து ஆயுதங்களை உறிஞ்சி எடுத்து இல்லாமலாக்கியது அரசு. இன்று இந்திய அரசு ஆயுதங்களை மக்களுக்குத் திருப்பிக்கொடுக்கிறது என்றால் அதை வெட்கக்கேடு என்றல்லாமல் வேறென்ன சொல்வது?


இடதுசாரி தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றத் தன்னால் முடியாது என ஓர் அரசு அறிவிப்பு செய்வதற்கு நிகரானது சல்வா ஹூதும் அமைப்பு. பிறகெதற்கு அது கோடிக்கணக்கில் நம்மிடமிருந்து வரி பெறுகிறது? கோடிக்கணக்கில் ஆயுதம் வாங்குகிறது?


நாம் ஒவ்வொருவரையும் குடிமகனாக ஆக்கியிருப்பது சட்டத்தின் அதிகாரம் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை. நம்மை ஒருவன் அடித்தால் நமக்காக அவனைத் தண்டிக்க இங்கே அரசும் சட்டமும் நீதிமன்றமும் போலீஸும் உள்ளது என்ற உறுதி. ஆயுதத்தை நம் கையிலேயே தந்து ஓர் அரசு நம்மை நாமே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னால் அது தன்னை ரத்து செய்துகொள்கிறதென்றே பொருள். அரசு பின்வாங்குமிடத்தில் அராஜகம் மட்டுமே வந்து அமரும்.


ஆயுத அபாரமான வசீகரம் கொண்டது. அது கையில் இருக்கும் திடமான அதிகாரம். அந்த ருசியை கண்ட மனிதன் பின் அதை விடமுடியாது. எத்தனையோ தலைமுறைகளாக நம்மை மெல்லமெல்ல ஆயுதமில்லா வாழ்க்கைக்கு பழக்கியிருக்கிறது ஜனநாயகம். ஆயுதம் கிடைத்தால் ஐந்தே நாளில் நாம் பழைய இடத்துக்குச் சென்றுவிடுவோம். எந்த ஒரு பண்பட்ட அமைதியான சமூகமும் ஆயுதமேந்தினால் மிகச்சில மாதங்களிலேயே எந்தக்குரூரத்துக்கும் துணிந்ததாக ஆகிவிடும்


பழங்குடிகளுக்கு ஆயுதம் வழங்கும் அரசு மிகப்பெரிய முட்டாள்தனத்தை, கையாலாகாத்தனத்தைச் செய்கிறது. நல்லவேளை நீதிமன்றத்துக்காவது தெளிவிருக்கிறது


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.