நகுலன் இலக்கியவாதியா?

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம் . சமீபத்தில் நகுலனின் "நினைவுப்பாதை" என்ற படைப்பைப் படித்தேன் ( நகுலனைப் பற்றி சில வலைப் பதிவுகளில் படித்தபிறகு). பொதுவாக புத்தகங்களை படித்து முடித்த பிறகு ஏதேனும் கதையோ, அதன் மூலம் ஒரு கருத்தோ என்னுள் ஊடுருவுவதை உணர்திருக்கிறேன் . கருத்துக்கள் புலப்படாவிட்டாலும் அக்கதையின் சில கதாபாத்திரங்களின் இயல்புகளையாவது அறிவதுண்டு. ஆனால் "நினைவுப்பாதை" முற்றிலும் ஒரு மாறுப்பட்ட வாசிப்பாகவே எனக்கு அமைத்தது . இப்பொழுதுகூட அக்கதையில்(கதையா?)  வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு . மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா ? என்று எண்ணத் தோன்றுகிறது


(இப்பொழுது "நவீனனின் டைரி " படித்து கொண்டிருக்கிறேன் . அதிலும் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது). நினைவுப்பாதையின் இறுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர் எழுதியதை போல் ஒரு 20  பக்கம் போகிறது . அவரது எழுத்தின் தன்மை பிடிபடமாட்டேன் என்கிறது. இவ்வாறான புத்தகங்களை வாசிக்க ஏதேனும் சிறப்பு மனநிலை வேண்டுமா என்ன?(எழுதியபோது நகுலனின்  மனநிலை எப்படி இருக்கும் ?) . அவரின் எழுத்து நடை ஒரு வித வித்தியாசமான வகையில் இருக்கிறது. மேலும் நினைவுப்பாதையின் நடுவில் 2  பக்கங்களில் வார்தைதாவல்கள் அதிகம் . ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லாதது போல ( உண்மையில் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை ).  இவ்வாறானா புத்தகங்களை எவ்வாறு உள்ளெடுத்து கொள்வது .


உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும் ,

பிரவின் சி


 



 


அன்புள்ள பிரவீன்


நகுலனைப்பற்றி விரிவாகவே என்னுடைய இலக்கியமுன்னோடிகள் வரிசை நூலில் எழுதியிருக்கிறேன்.


நகுலனின் எழுத்துமுறையை ஒரு முழுமையான இலக்கிய அனுபவமாக எடுத்துக்கொள்ளமுடியாது. அதை ஒரு விதிவிலக்கான  இலக்கிய அனுபவம் என்று கொள்வதே நல்லது. உலகமெங்கும் அப்படிப்பட்ட எழுத்து ஒரு மெல்லிய துணை ஓட்டமாக இலக்கியத்துடன் வந்துகொண்டிருக்கும். அதற்கு மைய ஓட்டமாக அமையும் ஆற்றலும் முழுமையும் கிடையாது. அதே சமயம் அது தன்னுடைய உண்மைத்தன்மை காரணமாக புறக்கணிக்கப்படமுடியாததாகவும் இருக்கும்


நான் என் விமர்சனத்தில் ஒரு உவமையை சொல்கிறேன்.நூலகத்தில் நூல்களில் வாசகர்களின் குறிப்புகளும் கிறுக்கல்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தை ஒரு  பெரியநூல் என்றால் அந்நூலில் எழுதப்பட்ட குறிப்புகளே நகுலனின் எழுத்துக்கள். நூல் என்ன என்று தெரியாமல் குறிப்புகள் பொருள் அளிக்காது. நூலை ஒட்டி மட்டுமே அவை நிலைநிற்க முடியும்.


இலக்கியம் என்பது மெய்யான வாழ்க்கைக்கு நிகரான ஒரு கற்பனை வாழ்க்கையை வாசகன் வாழும்படிச் செய்கிறது. வாழ்க்கையைவிடச் செறிவான, காரண காரிய உறவுள்ள, அழகுநேர்த்தி உள்ள ஒரு வாழ்க்கை அது. அதுவே அதன் முதல் தகுதி.  அங்கே மனிதர்கள் இயற்கை எல்லாமே முழுமையாகவே எழுத்தாளனின் கற்பனையால் உருவாக்கப்பட்டிருக்கும். வாசகனின் சிந்தனையை தூண்டி வரலாற்றையும் சமூகவாழ்க்கையையும் புத்தம் புதியதாகக் கண்டடையச்செய்கின்றது அந்த நிகர் வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் அது உச்சகணங்களை வாசகன் வாழச்செய்கிறது.  அதன் வழியாக அவன் ஞானமும் விவேகமும் கொள்ளச்செய்கிறது.


அதை உருவாக்கும் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தை, அதன் வரலாற்றை அறிந்தவன். தன்னுள் புகுந்து தேடுவதன் வழியாக அந்த சமூகத்தின் ஆழத்தை அறிய முடிந்தவன். அதை நிகர்வாழ்க்கையாக வாசகன் அனுபவிக்கச்செய்யும் மொழியாளுமை கொண்டவன். பேரிலக்கியவாதிகள் அப்படிப்பட்டவர்கள்.


அந்த மைய இலக்கிய ஓட்டத்தின் மீதான விமர்சனக்குறிப்பாக வருபவை நகுலன் பாணி எழுத்துக்கள். நகுலனுக்கு வாழ்க்கையனுபவம் என்பது வாசிப்பனுபவமே. அவர் அந்த வாசிப்புவாழ்க்கைக்கே தன் எழுத்துக்கள் வழியாக எதிர்வினையாற்றுகிறார். எதிர்வினை மட்டுமே. அவரால் ஒரு நிகர்வாழ்க்கையை எழுதிக்காட்டிவிட முடியாது. அதற்கான மொழி அவரிடம் இல்லை. இலக்கியவாதியின் புனைவுலகம் மொத்தவாழ்க்கையையே கற்பனையால் உருவாக்கிவிடக்கூடிய அவனுடைய திறனுக்குச் சான்று. நகுலனில் அனேகமாக கற்பனையே கிடையாது.


ஆகவே நகுலனை ஒரு முறையான இலக்கியவாதி என்றோ நாவலாசிரியர் என்றோ சொல்லமுடியாது. சரியான பொருளில் அவருடையவை இலக்கிய ஆக்கங்களும் அல்ல. அவை இலக்கியத்தின் இரண்டாம்தளத்தைச் சேர்ந்தவை. இலக்கியவாசகன் நகுலனை அவரது இலக்கிய இடையீட்டுக்காக வாசிக்கலாம், ரசிக்கலாம்.


நகுலனின் முக்கியத்துவமென்பது அவரது நிலையழிந்த இருப்பின் தடங்களாக அவா எழுத்தின் சிலபகுதிகள் உருவாகியிருக்கின்றன என்பதனால் மட்டுமே. நினைவுப்பாதை நாவலில் தன்னிச்சையாக ஓடும் சில உரைநடைப்பகுதிகள், கடைசியில் உள்ள கவிதைகள், வாக்குமூலம் நாவலின் கேள்விப்பட்டியல், சில கவிதைகள்– அவ்வளவுதான் ரசனை உடைய இலக்கியவாசகன் பொருட்படுத்தக்கூடியவை.


அப்பகுதிகளில் நகுலன் தன்னோட்ட எழுத்து என்ற ஒன்றை முயன்றிருக்கிறார். தன்னை மீறி நிகழும் உணர்ச்சிகளின், எண்ணங்களின் வெளிப்பாடாக அமையும் சொற்களை பதிவுசெய்து வைப்பது இவ்வெழுத்து. இது ஒருவகை மனவசிய வாக்குமூலம் போன்றது. மனநோயாளியின் உளறல் போன்றது.


அதில் சொல் விளையாட்டுக்களுக்கு இடமுண்டு. அவை வழக்கமான சொல்விளையாட்டுக்களல்ல, ஒரு சொல்லில் மனம் சுற்றிக்கொண்டு துடிப்பதுதான் அது. நாமனைவருக்குமே அதற்கிணையான அனுபவங்கள் உண்டு.


இந்த எழுத்தின் சிறப்பியல்பே இதில் பிரக்ஞையின் இடையீடு இல்லை என்பதுதான். ஆகவே அவற்றுக்கு ஒரு அபாரமான நேரடித்தன்மை உள்ளது.


பிரக்ஞையின் இடையீடு இல்லாமலிருப்பதனால் அவற்றில் மொழித் தொடர்ச்சி இல்லை. அர்த்த ஒழுங்கும் இல்லை.சில பகுதிகளில் நேரடியாகவே அகவலியை மொழி வெளிப்படுத்துகிறது. சில இடங்களில் கவித்துவம் கைகூடியிருக்கிறது. சில இடங்களில் மொழி திகைத்து நிற்பதும் முக்கியமாகிறது.


தன்னியல்பு எழுத்தில் தமிழின் ஒரே முன்னுதாரணம் நகுலனே. அதன் தொடக்கப்புள்ளியின் கடைசிப்புள்ளியும் அவரே. அவரைப்போல எழுத பலர் பிரக்ஞைபூர்வமாக முயன்று புள்ளியில்லாமல் எழுதுவது உளறுவது என அபத்தக்களஞ்சியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தன்னோட்ட எழுத்தினாலேயே நகுலன் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக ஆகிறார். ஆனால் இது மிகமிகச்சிறிய அளவுக்கே அவரால் சாதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் நகுலனுக்கு நிகரான அளவுக்கு அந்த கட்டற்ற மனப்பாய்ச்சலை அசோகமித்திரன், ப.சிங்காரம் ஆகியோர் அவர்களின் புனைவுலகில் சாதித்திருக்கிறார்கள்.


நகுலன் அவரது அறுபது வயதுக்குமேல் அல்ஷைமர் நோயால் அவதிப்பட்டார். அந்நோயைப்பற்றி எதுவும் தெரியாமலிருந்த எண்பதுகளில் இளம் எழுத்தாளர்கள் அவரைச் சந்திக்கும்போது அந்நோயை ஒருவகை அவதூத நிலை என்றெல்லாம் எண்ண தலைப்பட்டார்கள். உதாரணமாக, நகுலன் ஒருவரை சந்தித்தால் பத்து நிமிடத்தில் மறந்து விடுவார். அவரிடமே நீ யார் என்று கேட்டுக்கொண்டிருப்பார். தமிழ் இளம் எழுத்தாளர் பலர் இக்கேள்வியை பிரம்மாண்டமான தத்துவக்கேள்விகளாக விளக்கி புளகாங்கிதம் கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு நகுலனுக்கு ஒரு 'மிஸ்டிக்' பிம்பம் சிற்றிதழ்களால் அளிக்கப்பட்டது.


ஜி.நாகராஜனைப் போலவே நகுலனும் அவரது மாறுபட்ட வாழ்க்கைமுறை காரணமாக சிறியதோர் வட்டத்தால் மிகைப்படுத்தப்பட்ட எழுத்தாளர். அன்றும் இன்றும் தமிழின் நல்ல வாசகர்கள் நகுலனை பெரிதாக நினைத்ததும் இல்லை, நிராகரித்ததும் இல்லை. ஆனால் இலக்கியத்தின் உண்மையான அக எழுச்சியை அறியாத மேலோட்டமான எழுத்தாளர்களுக்கும் இளம் வாசகர்களுக்கும் அவர்கள் மூளைத்திறனை பிறரிடம் காட்டிக்கொள்வதற்கான சிறந்த உபாயமாக நகுலன விதந்தோதுதல் பயன்பட்டிருக்கிறது.


நகுலனை பிடிக்கும் என்று சொல்லுதல் தன்னை நுண்வாசகனாக காட்டும் என்ற பிரமை கொஞ்சநாள் இருந்தது, அப்படிச் சொன்னவர்களெல்லாமே ஒருவகை அசடுகள் என காலப்போக்கில் நிரூபணமாக அந்த மாயை அழிந்தது. நகுலனை முன்னுதாரணமாகக் கொண்டு இஷ்டப்படி உளறி வைத்து அதை பேரிலக்கியமாக தானே எண்ணிக்கொள்ளும் பேதமையும் கொஞ்சநாள் வாசகர்கள் இல்லாமல் எழுத்தாளர்களே எழுதி வாசிக்கும் சின்னஞ்சிறு சிற்றிதழ்களில் புழக்கத்தில் இருந்தது. இன்று உண்மையான வாசகர்கள் என ஒரு வட்டம் உருவாகி வரவே அந்த பாவ்லாக்கள் மறைந்தன.


நகுலனின் கதைகளையும் நாவல்களையும் இன்று வாசிக்கும் ஒரு நல்ல வாசகன் பெரும்பாலான எழுத்துக்கள் எந்த மன எழுச்சியும் இல்லாமல் எழுதப்பட்ட மிகமிக தட்டையான ஆக்கங்கள் என்பதை உணரமுடியும். அவற்றுக்கு மிஸ்டிக் நிறம் கொடுக்கும் முட்டாள்தனம் அவனிடம் இல்லை என்றால் கதவிடுக்கில் கை சிக்கிக்கொண்டு கதறும் குழந்தை போல மொழியிடுக்கில் சிக்கிக்கொண்டு ஆன்மா கதறும் சில இடங்களை அவரது எழுத்தில் அவனால் காணமுடியும்.


அந்த தீவிரத்தை உணர்ந்த வாசகன் நகுலனை முக்கியமான இலக்கியவாதி என்று சொல்லமாட்டான்- முக்கியமான சில இடங்களை தொட நேர்ந்தவர் என்றே சொல்வான். அவரை மிஸ்டிக் என்று சொல்லமாட்டான், இலக்கியம் வாங்கிய களப்பலி என்று எண்ணிக்கொள்வான்


ஜெ


நகுலன் நினைவு


நகுலன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.