வாழும் கணங்கள்-கடிதங்கள்

இன்று என் தலைவர், சி.கே.ரங்கநாதன் அழைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு.


முகமன் முடிந்ததும், ஒரு பத்து நிமிடம் யானை டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். துல்லியமான சித்தரிப்புக்களோடு, ஒரு மாபெரும் வாழ்க்கை அனுபவத்தைக் கதையில் அடக்கியிருந்ததை மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஜெயமோகன் என் நண்பர் என்று சொல்லிக் கொண்டேன் – தனது வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். தமிழார்வம் உள்ளவர்.


ஜேஜே சூரியோதயம் ஓவியத்தை பற்றிச் சொல்கையில், கலைப் படிப்புக்களைக் காண இடைவெளி தேவை – சிலசமயம் காலம், சில சமயம் தூரம் என்று சொல்லியிருப்பார். அற வரிசைச் சிறுகதைகள் வந்த போது, மிகவும் ஈர்த்தது வணங்கான் – ஆனால் கொஞ்சம் இடைவெளிக்கப்புறம், இப்போது திரும்பத் திரும்பப் படிப்பது – யானை டாக்டர்.


நன்றி


பாலா


ஜெ,


தெரிதலுக்கும் அறிதலுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக விளக்கி இருந்தீர்கள். அறிதலுக்கு சமமான வார்த்தைகளே எவ்வளவு பரவசம் ஊட்டக் கூடியவையாக இருக்கின்றன பாருங்கள்; insight, wisdom, realisation. ஆனால் தெரிதலுக்கு சமமான வார்த்தைகள் தட்டையானவை; knowledge, intelligence, brilliance போன்றவை..  இவை மனதின் லாஜிக் தளத்தில் மட்டுமே செயல்படுகின்றன. நம் கல்வியும் இவற்றைக் குறி வைத்தே இயங்குகின்றன. ஒரு மாணவன் என்றைக்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள ஆரம்பிக்கின்றானோ அப்பொழுதே அவன் ஆசிரியன் ஆகும் தகுதியையும் பெற ஆரம்பிக்கிறான். அதனால்தான் நம் ஆசிரியர்கள் உண்மையில் ஆசிரியர்களே அல்லர்.  ஏனென்றால் அவர்களும் இந்த விஷவட்டத்தின் ஒரு அங்கம்தானே. அவர்கள் வெறுமனே நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை அதனால்தான் அவர்கள் 'நாங்கள் எப்போதும் மாணவர்கள்தான்' என்று அடக்கத்துடன் சொல்கிறார்களோ. அதே போல் புரிதல் என்ற வார்த்தையும், கற்றல் என்பதும் இவை இரண்டுக்கும் இடைப்பட்டதோ?


ராமலிங்கம் நடராஜன்


அன்புள்ள ராமலிங்கம் நடராஜன் அவர்களுக்கு,


எப்போதுமே நம் மரபில் கற்றல் என்பது தெரிந்துகொள்ளுதலுக்கு மேலே உள்ள ஒரு சொல்லாகவே இருந்திருக்கிறது என நினைக்கிறேன்.


குறளில் கல்வி பற்றி வரும் எல்லா வரிகளும் இந்த நுண் பொருளிலேயே கையாளப்பட்டுள்ளன. கல்வி என்பது தெரிந்துகொள்ளுதல் மட்டுமல்ல,அதன் படி வாழமுயல்தலுமாகும் என வரையறுத்தபடிதானே குறள் ஆரம்பிக்கிறது?


எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்


கண்ணென்ப வாழும் உயிர்க்கு


என்ற குறளின் உண்மையான பொருள் என்பது கல்வி கண்களைப்போல முக்கியமானது என்பது அல்ல. கண்கள் வெறும் கருவிகளே. அவை ஆறாவது புலனாகிய மனத்தின் வாசல்கள்.  கண்களால் எதைப்பார்க்கிறோம் என்பதே முக்கியமானது. கல்வியும் கருவி மட்டுமே.


ஜெ


அன்புள்ள ஜெ,


தொன்மையான கருத்து. அந்தி இருளில் சுருண்டுகிடக்கும் கயிறைப் பாம்பு என நினைக்கிறோம். அந்தப் பாம்பை நாம் கடந்து செல்ல ஒரே வழிதான், அது கயிறென அறிதல். அத்வைதத்தின் முக்தி என்பதே அறிதல்தான். முழுமையான அறிதலின் மூலம் அடையும் விடுதலை.



இந்தப் பாம்பு கயிறு analogy பல முறை கேட்ட ஒன்று. ஆனால், இன்று ஒரு குட்டிக் கதையில் (சம்பவத்தில்) தொடங்கி அதன் வழியாக விளக்கும் பொழுது இந்தக் கருத்து முழுமை பெறுகிறது. ஊட்டியில் மாலை நடையின் நடுவே "தொட்டனைத்தூறும் மணற்கேணி" குறளை நீங்கள் விளக்கியதில் ஒரு திறப்பு கிடைத்தது. அதே போல இப்பொழுதும். ஒரு குரு போல இந்த திறப்புக்களை நிகழ்த்துவதற்கு நன்றி 
- ஸ்கந்தா

அன்புள்ள ஸ்கந்தநாராயணன்


பெரும்பாலான உவமைகளைப்பற்றி ஒரு நம்பிக்கை உண்டு, அவை சுருண்டு தூங்கும் பாம்புகளைப்போன்றவை.  மாசக்கணக்கில் வருஷக்கணக்கில் அவை தூங்கிக்கிடக்கும் நம் மனப்பொந்துக்குள்.  சடென்று ஒரு கணத்தில் படமெடுத்து விஷம் கடித்துச்செலுத்தும்.


அப்படி என்னை நோக்கித் திறந்துகொண்ட பல சம்பிரதாயமான படிமங்கள் உண்டு


ஜெ


அன்புள்ள ஜெயன்,


வணக்கம்,நலம் அறிய ஆவல்.
உங்கள் இணையதளத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
அதிகமும் இயற்கை சார்ந்த,குழந்தைகள்/மாணவர்கள் சார்ந்த கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறேன்.
அஜிதனுக்கும் உங்களுக்குமான உறவு பற்றிய கட்டுரையைக் கண்கள் பனிக்கப் படித்தேன்.
நான் இழந்த என் பால்யம்,அப்பாவின் குறைந்த பட்ச அன்பில்/கண்காணிப்பில் கூட வளர முடியாத,அப்பாவின் ஆளுமை உணரமுடியாத சிக்கலான குழந்தையாகவே வளர்ந்தேன்.ஆ

னால் அந்தச் சிக்கலே என்னை இலக்கியம் நோக்கியும் கலைகளை நோக்கியும் நகர்த்தியது என்று இப்போது உணர்கிறேன்.

யானை டாக்டர் படித்தபோது வாழ்வை உணர்ந்து பொறுப்போடு வாழ, 
இயற்கையை அவதானிப்பதும் அதன் கூறுகளில் நம்மையும் ஒன்றாகக் கருதி இயைந்து வாழ்வதும்,இயற்கையிடமிருந்து கற்றுக்  கொள்வதும்- ஞானம்(wisdom ) எவ்வளவு முக்கியம் என்றும் உணர்ந்தேன்.
அன்பும், கருணையும் இந்த மாபெரும் உலகின் முடிவில்லாத மனிதக் கூறுகள் 
என்பதையே எனக்கு யானை டாக்டர்  சொல்லித்தந்தார்.நன்றி.
அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3 என்ற கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன்.

"நம்மை இழந்தபின்னரே நவீனக் கல்விக்குள் செல்லமுடிகிறது" என்ற கூற்று தான் எத்தனை  உண்மையானது.
பள்ளிகள் திறந்து மாதக்கணக்கில் ஆகியும் இன்னும் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை.
நம் அரசுக்குத்தான் குடிமக்கள் மீது எத்துணை அக்கறை.
நகுலனின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
"அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை?"

வேறென்ன சொல்ல?

மீண்டும் நன்றி.
பேரன்பு,
சரவணன்

அன்புள்ள அன்புசெழியன் சரவணன்
நலம்தானே?
அப்பாவுடன் உள்ள உறவின் ஒரு சிக்கல் எல்லா நவீன வாசகர்களுக்கும் இருப்பதைப்போல ஒரு பிரமை. அப்பா என்பது இங்கே ஒரு பெரிய மரபின், கடந்த காலத்தின் பிரதிநிதியாக நிற்கிறாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை எப்படி நமக்கேற்ப வகுத்துக்கொள்வது என்பதே சிக்கல். ஒரு வழிமுறை கிடைத்ததும் பிரச்சினை இலகுவாக ஆகிவிடுகிறது இல்லையா?
ஒருவேளை நம் பிள்ளைகளுக்கு இப்பிரச்சினை இல்லாமல் போகலாம்
ஜெ


வாழும் கணங்கள்

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2


அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1


யானை டாக்டர்-1



யானை டாக்டர்-2
யானை டாக்டர்-3
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.