இளமாறனின் காடு

சிறுவயதில், காட்டைப் பற்றிய தீராத விருப்பம் ஆத்தாவின் கொள்ளிபத்தை பிசாசு கதைகளிலும், அரிபிசாசு கதைகளிலும் ஆரம்பித்தது. ஊர் பண்ணகட்டுகளுடன், உடும்பைத் தேடி காராம் பத்தைகள், சூராம் பத்தைகள் நிரம்பிய கோயில் காடுகளிலும், கரம்பு நிலங்களிலும் அலைந்து திரிவேன். மிக அரிதாக பழநிக்குச் சென்ற பயணங்களில், வழியில் தென்படும் மொட்டைப் பாறைகளில், காட்டை வளர்த்து, சிறிது நேரம் கானுலா செல்வேன்.  பின்பு மீண்டும் பேருந்தில் புகுந்து கொள்வேன்.  பசும் மரங்கள் நிறைந்த மலைகள் இல்லாத சமவெளியில் பிறந்த அபாக்கியத்தை எண்ணி மனம் வருந்துவேன்.  கல்லூரிப் படிப்பு, வேலை என சில வருடங்களுக்குப் பின், திடீர் என்று ஒரு நாள் விழித்தெழுந்து, கனவில் மட்டுமே கண்ட மலைக்காட்டினை நனவில் கண்டேன். ஊர் திரும்பிய பின், 'காடு' நாவலை வாங்கி படிக்கத் தொடங்கினேன். 6 மாதங்களுக்கு முன்பு 'காடு' நாவலை படித்து முடித்து விட்டு, அதன் பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆயின. அந்த பாதிப்பு – சில சிறுகதைகள், சில திரைப்படங்கள், சில வாழ்க்கைச் சம்பவங்கள், சில மறந்து, தொலைந்து போன குழந்தைக் கால நட்புகளின் நினைவுகள் மட்டுமே தரும் பாதிப்பு.


காடு

காடு


இந்த நாவலை நான் வாங்குவதற்குக் காரணம், அதன் பெயர் – 'காடு'. காடு என்ற எளிய ஒற்றைச்சொல், பல்லாயிரம் பக்கங்களுக்கு  எழுதப்பட்டாலும் தீர்ந்தே போகாத, விரிந்தே செல்லக்கூடிய சொல். ஒரு பெருங்காட்டை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஒற்றைவிதையை ஒத்த சொல். நாவலைப் படிக்கும் முன், ஒரு வேட்டைக்காரன் வந்து செல்லும் காட்டைப் பற்றிய கதை என்றோ அல்லது பழங்குடிகள் வாழும் காட்டைப் பற்றிய கதை என்றோ தான் நினைத்து இருந்தேன். ஆனால் படிக்க தொடங்கிய பின்தான் தெரிந்து கொண்டேன்.  காடு என்பது நாவல் நடப்பதற்கான ஒரு நிலம் என்று. அந்த நிலத்தை வைத்துக்  கொண்டு, எளிய மனிதர்களைப் பற்றி சொல்ல வந்த கதை என்று. அந்த எளிய மனிதர்களின் காமத்தை சொல்ல வந்த கதை என்று.


கிரிதரன் என்னும் பதின்பருவ சிறுவன் ,  தன் மாமாவின் காண்ட்ராக்ட் வேலையை மேற்பார்வையிட காட்டுக்கு வருகிறான். அவனது காட்டு வாழ்க்கை,  ஊர் வாழ்க்கை , அதற்கு பின்பான நகர வாழ்க்கை அவனது நினைவுகளால் சொல்லப்படுவதே (நனவோடை உத்தி?)  'காடு' நாவல். படித்து முடித்து, ஒரு மாதத்திற்கு பின் நாவலை மீண்டும் நினைவில் கொண்டு வந்தேன். கதை என்று பார்த்தால் எளிமையான கதைதான். ஆனாலும் மிகவும் பாதித்ததிற்குக் காரணம் காட்டின் மீதான என் தனிப்பட்ட பித்தா? இல்லை கதை மாந்தர்கள் சிலரின் வாழ்க்கை, நான் நேரில் கண்ட, கேட்ட சிலரின் வாழ்க்கையைப் போன்றதனாலா? யோசித்த பின், புலப்பட்ட காரணம் – அபத்தக் கனவுகளும், எதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்புகளும் கொண்ட பதின்பருவ சிறுவன், அவன் எதிர்பார்த்தே இருக்க முடியாத வாழ்க்கை வாழ நேரிட்டதன் அவலம்.  மலை உச்சியில் பலகாலம் இருந்த பாறை ஒன்று, திடீர் என்று ஒரு நாள் உருண்டோடி, தரையை அடைந்து, மீளவே முடியாத அந்த உச்சியை மீண்டும் மீண்டும் எண்ணி, எண்ணி ஏங்கும் வாழ்க்கை வாழ்வதன் துயரம். நினைத்த வாழ்வையும் வாழ முடியாமல், கிடைத்த வாழ்வையும் வாழ ஒவ்வாமல், அலைக்கழிப்புகளால் ஆன வாழ்வின் அவலம். சொந்த வாழ்க்கையின் இன்ப, துன்ப அனுபவங்களாலும், படித்த, பார்த்த மனிதர்களாலும்  மட்டுமே படைப்புகளை அடையாளப்படுத்தி புரிந்து கொள்பவன் நான்.  இந்த நாவலையும், அப்படியே  அடையாளப்படுத்திப் படித்தேன். என்றாலும்,  ஒரு தனி மனிதனின் ஒட்டு மொத்த வாழ்வைக் கூறி, அது தரும் அனுபவத்தாலும் புரிந்து கொள்ள செய்த படைப்பு இது.


உண்மையில் இந்த நாவலை என் வாசிப்பில் நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? கனவு, காதல், எதார்த்தம் – என்ற மூன்று இணை கோடுகளை, ஊடுருவிச் செல்லும் ஒரு தனிக்கோடாகக் காமம்.  நெற்றியில் பூசப்பட்ட மூன்று சந்தனக்கோடுகளை, ஊடறுத்துச் செல்லும் குங்குமக் கோடு போல.  அந்தக் காமம் ஊடறுத்துச் சென்ற ஒருவனின் வாழ்வைப் பற்றிக் கூற வந்த நாவல் என்றே புரிந்து கொள்கிறேன். கனவை விதைக்கும் சங்கப்பாடல்களைக் கற்ற கிரிதரன் (அருமையான குறியீட்டுப் பெயர்!), காட்டிற்கு செல்கிறான். அங்கே தன்னைப் போலவே சங்கப்பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அய்யரை (தி.ஜாவின் சாயல்) சந்திக்கிறான். கனவின் இருமுகங்களாக அய்யரும், கிரியும்.


அய்யரின் கனவிற்கும், கிரியின் கனவிற்கும் உள்ள வித்தியாசம் – அய்யரின் கனவு, எதார்த்தத்தைத் தெரிந்து கொண்டு, அதில் இருந்து மேலெழுந்த கனவு. நல்ல படிப்பு, வேலை, குடும்பம், ரசிக்க சங்கீதம், தடவ பெண்கள் எல்லாவற்றுக்கும் மேலே அவர் எப்போதும் காதலிக்கும் காடு என நிறைவான வாழ்வு வாழ்ந்தாலும், அவைகளைத் தாண்டிய, தீரவே தீராத ஏக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதன் கனவு. மாறாக, கிரியின் கனவு எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலாத வயதில், 'குண்டியில் கிருமி கடிக்கும் நாய்' போன்றவனின் கனவு . தன்னைக் கவிஞனாகவும் நினைத்துக்கொள்கிறான்.  கனவுகளும், கற்பனைகளும்  கவிஞனுக்குப் பஞ்சமா? கூடவே காதலும், காமமும் சேர்ந்து கொண்டால்? இவர்களுக்கு ஊடாகக் கனவின் பல இணைமுகங்களாக சோதிடக்கனவுகளில் வாழும் கிரியின் அப்பா, மூன்றாவது குழந்தை பிறந்தாலாவது வாழ்க்கை சுபிட்சமாகும் என்ற கனவில் வாழும் அம்பிகா அக்கா, அவளது கணவன்.


கனவுகளின் காதலானாக வரும் கிரி, காட்டில் குளிக்கும் மலைப்பெண்ணான நீலியைப் பார்க்கிறான். அவளுடன் காதல் கொள்கிறான். இங்கே காதலின் இருமுகங்களாக கிரியும், மலை  நீலியும். காதலில்  விழுபவன் காட்டில் அலைகிறான். தான் மேற்பார்வை செய்ய வந்த வேலையில் கவனம் கொள்ளாது போகிறான். இறுதியில் அவன், காண்டிராக்ட் வேலையையே வாழ்வாதாரமாக கொள்கிறான். காட்டில் தான் ஒரு போதும் கற்காத அதன் நெளிவு, சுளிவுகளில் வாழ்வின் எதார்த்தத்தை உணர்கிறான். எதார்த்தத்தை  முற்றிலும் புரிந்து கொண்ட முகங்களாக குட்டப்பனும், மாமாவும். அவர்கள்  கனவுகளோ, காதலோ அற்றவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் இளவயதிலேயே எதார்த்தத்தின் பிடிக்குள் வந்தவர்கள் என்பதால்தான்.  இவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒருவகையில் கிரியின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள். இவர்களை  ஊடுருவிச் செல்லும் அந்த தனிக்கோடாகக் காமம்.


நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகம் ஆகும் மனிதர்களின்  காமம், கிரிதரன்  பயணப்படும் காடு  மரம், செடி, கொடிகளால் ஆனதல்ல  மனித உறவுகளின் காமத்தால் ஆனது  என்பதைத் தெரிவிக்கிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் மிளாவின் காலடித் தடம் காட்டிற்கான திறப்பு வாசல் என்றால், இரண்டாம் அத்தியாயத்தில் வரும் மாமாவின் இளவயது புணர்ச்சி, காமத்திற்கான திறப்பு வாசலாக  உள்ளது. காமம் என்றவுடன், ஊரில் கொண்டாடப்பட்ட  பண்டிகையான காமாண்டி ஞாபகம் வருகிறது.  தெரு முக்கில், கம்புகளால் போடப்பட்ட சிறு பந்தல், வைக்கோல் பிரிகளால் சூழப்பட்டு இருக்கும். பந்தலுக்கு  15 நாட்கள்  விளக்கு போடப்படும், 16- நாளின் முடிவில் மன்மதன் , ரதி என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து லாவணி பாடல்கள் பாடப்படும். முடிவில் பந்தல் தீயிட்டுக் கொளுத்தப்படும். வைக்கோல் பிரியில் மூளும்  தீயில் மன்மதனின் காமம் பற்றி எரியும். தீயினை சுற்றி சிறுவர்களும்,  இளஞ்செட்டுகளும் நடனம் ஆடுவார்கள். புரியாத வயதில் நடனமாடி, புரியும் போது பண்டிகை காணாமல் போய், காமம் மட்டும் மீதம் இருக்கும் வயதில், மனிதர்களின் காமத்தைப் புரிந்து கொள்ளும் திறப்பு வாசலாகவும் உள்ளது நாவலின் இரண்டாம் அத்தியாயம்.


எண்ணை செட்டிச்சியின் மகளை, மாமா புணருவதில் தொடங்கும் காமத்தின் ஓட்டம்,  பங்குபணம் போட்ட ஊர் நாயர்கள், செட்டிச்சி மகன், வெள்ளைக்கார பாதிரி, மாமி, போத்தி,  குட்டப்பன், சினேகம்மை, குரிசு, கத்தரிக்கோல் இரட்டையர்கள், அய்யர், மேனத்தி  என  பலவித மனிதர்களின் வழியே ஓடி,  கிரிதரனின், 40-வயதிலும் விடவே முடியாத கைப்பழக்கம் வழியே  தொடர்கிறது. காட்டின்(மரம், மனிதன் ) மறுபக்கமாய் காமம். கசிந்துருகும் பாறை நீராகவும், ஆர்ப்பரிக்கும்  மழைக்கால மலை அருவியாகவும் ஓடும் காமம். கதை மாந்தர்கள் எல்லோரும் வழியாகவும் ஊடுருவி நிற்கும் காமம்.  அவர்கள் எல்லோரின் இருப்பின் மீதான விருப்புக்கு அடிப்படையாக இருக்கும் காமம். கிரிதரன் கனவும், காதலும் கொண்ட பருவத்தில் செய்யும் அந்தச் செயலால், எரிச்சலையும், தனிமையையும் உண்டாக்கும்  காமம்.  அதே செயலால், பிற்பகுதி வாழ்வின் மீதான எரிச்சலையும், தனிமையையும் போக்க உதவும் காமம். கனவோ, காதலோ இல்லாத, கரும்பாறை குரிசுவைக்  கூட  எதார்த்தத்தை நாடச்  சொல்லும் காமம்.


கோட்டயம்  புஷ்பநாத்தின் மோகினியைப் போல வரும் மாமியும், மதம் கொண்ட யானையாக  வரும்  மேனத்தியும் காமத்தின் இரு முகங்கள்.  சிறு வயதில், பட்டினியால் அலைந்தவள் மாமி. செல்வ செழிப்பிற்கு பின், அவள் கொள்ளும் பசி அவளிடம் அதுவரை உறைந்திருந்த காமத்தின் பசி. காண்பவர்கள் எல்லோரிடமும் துளி காமத்தினை விட்டுச் செல்லும் மேனத்தி, ஊரில் வாழும் மாமியின் மலை வடிவம் . நாவலில் வரும் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பயந்தவர்களாவோ, அவர்களால் அடக்கி ஆளப்படுபவர்களாவோ, கட்டுப்பட்டவர்களவோ  உள்ளனர். மாமா, மாமியைத் திருமணம் செய்து, பின்பு வந்த பத்து வருடங்களில் அவளின் காலடியில் கட்டுண்டு கிடக்கிறார். மாமாவின் மலைவடிவமான எஞ்சினியர் மேனன், மேனத்தியின் சொல்லுக்கு மறுசொல் கூறாதவராக வருகிறார். மாமியிடம் கொண்ட காமத்தில் சலித்தோ அல்லது அதற்கு ஈடு கொடுக்க பயந்தோ, ரெசாலத்தின் மனைவியிடம் மாமா தொடர்பு கொள்கிறார்.  மலையில் எஞ்சினியர் மேனன், மேனத்தியை விட்டு, ஏதோ ஒரு பங்களாவில் பெண்களுடன் கூடுவது இதே காரணத்தில் தான். இந்த இருவருக்கும் காமம் இங்கே ஒரு இளைப்பாறுதலின் ஒரு வழி. கிரியின் அப்பா, அவனின் அம்மாவிற்குக் கட்டுப்படுகிறார். அவருக்குள் இருக்கும் ஆண் வெளிவரும் நேரம், அவர் தன்னை உணராத  குடிபோதையில் இருக்கும் போதும் மட்டுமே. அந்த நேரத்தில்  கிரியின் அம்மா, காட்டும் காதல் அவரிடம் வெளிப்படும் ஆணை ரசிப்பதால் தான்.


மாறாக, குழந்தையில் இருந்து அம்மாவின் கண்டிப்பு கலந்த காதலை மட்டுமே கண்ட கிரி,  அவன் ஆணாக மாறிய பின்பு, அவளிடம் வரும் மாற்றத்தைக் கண்டு திடுக்கிடுகிறான். அம்மாவின் காதல், எச்சரிக்கை கலந்த அன்பாக மாறுகிறது. மலையில் கண்ட நீலியுடன் கிரி கொள்ளும் காதல், ஒரு வகையில் அவன் அம்மாவிடம் இனி காணவே முடியாத  காதலின் மறுவடிவம். இந்த நேர்-எதிர் என்ற பாகுபாடு இல்லாமல், சமநிலையுடன் வரும் இரு எதார்த்த பாத்திரங்கள்- குட்டப்பனும், சினேகம்மையும். சினேகம்மை குட்டப்பனின் பெண் வடிவம். அவர்களுக்கு இடையே  ஏற்படும் உறவு, தூய காமத்தின் ஒருங்கிணைந்த நிலை மட்டுமே. கிரிதரன் தன் வாழ்க்கை முழுக்க, பெண்களால் அலைக்கழிக்கப்படுகிறான். அவனது வாழ்க்கை பெண்களால் கட்டமைக்கப் பட்டு, அவர்களாலேயே அழிக்கப்படும் வாழ்க்கை. விஷக் கந்தகம் அம்மாவின் அன்பில் வளர்ந்து, கருஞ்சிலை  நீலியின் காதலில் விழுந்து,  காமப் பிடாரி மேனத்தியிடம் தன்னை இழந்து, காம யட்சி மாமியின் மார்புச்சரிவுகளில்  இருந்து தப்பி, கருங்குரங்கு வேணியின் மாறாத முகச்சுளிப்பில்  வாழ விதிக்கப்படுகிறான். முடிவில் கனவு, காதல் என்ற இந்த இரண்டு முகங்களில் இருந்து, காமம் மட்டும் தொடரும் எதார்த்தம் என்ற முகத்தை நோக்கிச் சென்ற அவனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய நாவல் என்றே புரிந்து கொள்கிறேன்.


நாவலைப் படிக்க ஆரம்பித்த நான் முதலில் கவனித்தது அதன் நடையை. சொல்லும் காட்சியை, உணர்வை  துல்லியமாக சொல்ல தேவையான சொற்களால் அமைந்த சிறு சிறு  சொற்றொடர்கள்  கொண்ட நடை. அதே நேரத்தில் ஒரு வித அமைதியுடன்,அவ்வப்போது பொங்கி எழுந்தபடி செல்லும்  எளிய நடை. காட்டையும், காமத்தையும், மனதையும் விலாவாரியாகவும்,  பெரும் சம்பவங்களை போகிறபோக்கிலும் சொல்லிச் செல்லும் கவித்துவமான நடை. ஒரு மையத்தை எடுத்துக்கொண்டு, அதை நாவலாக கற்பனையாலும், சேகரிக்கப்பட்ட தகவல்களாலும்  முழுக்க முழுக்க  வளர்த்து எடுக்காமல், எழுத்தாளன் தான் அனுபவித்த, உணர்ந்த, கேட்ட  சுய வாழ்வின் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பகுதியை  அதில் சேர்க்கும் போது, அந்த படைப்பு  வலிமை  பெறுகிறது.


உதாரணமாக, நாவலில்   பரவிக் கிடக்கும் காடு பற்றிய அக, புற வர்ணனைகள்  காட்டுக்குள் சாதாரணமாக சென்று வந்த ஒருவருக்கு புதிதாகவே  இருக்கும்.  காடு சிறிதளவாவது தலைக்கேறிய ஒருவரால் மட்டுமே அவ்வாறான  வர்ணனையை எழுத முடியும். அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் 'சிலந்தி வலைப் பின்னல்களில் மென்மையான குகைகள் ' போன்ற வர்ணனைகளில் இருக்கும் ஒரு குழந்தைப் பார்வை,காட்டை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ள தூண்டவும் செய்கிறது. 'ஊமைச் செந்நாய்', 'படுகை' போன்ற சிறுகதைகளில் காடு பற்றிய வர்ணனைகளை படித்து இருந்தாலும், 'அத்தகைய வெயில் முன்பெல்லாம் சமவெளிகளில் மட்டுமே அடிக்கும்', 'காட்டை கண்டவனால் காட்டை விடமுடியாது', 'காடு ஒவ்வொரு கணமும் புதிதாக இருக்கக்கூடிய ஓர் இடம்' போன்ற  'காட்டின்' வர்ணனைகள் மனதில் திடுக்கிடலையும், எரிச்சலையும், கசப்பையும் தூண்டுகிறது. நான் மட்டுமே கவனித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்ட காட்டின் நுட்பங்களைக் கண்டதன்  திடுக்கிடல் அது. யாரும் ஏறாத  மலைச்சிகரத்தில் ஏறி, பெருமிதம் கொள்ளும் போது, அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் கண்ட திடுக்கிடல் அது.  அப்படியே கவனித்திருந்தாலும், இந்த நுட்பங்களைத் தாண்டி, புதிதாக காட்டைக் காண  வேண்டியதன் எரிச்சல் அது. மனதில் சேமித்து வைக்கப்பட்ட உவமைகள் பல காலியாவதன் கசப்பு அது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காடு கிளர்த்தும் காம, பெண் நினைவுகளை பற்றிய வரி,  ஆழ்மனதின் ஒரு துளியைத் தொட்டு எழுதியது போன்ற வரி.

காட்டைப் பற்றி எழுதியதிலேயே சிறந்த வரி  என்று நான் நினைப்பது  – 'சாலை என்பது மனிதன் காட்டை உரிமை கொள்ளச் செய்யும் முதல் முயற்சி'  என்ற வரி. காட்டில் புகுந்த சாலை,  நம் அந்தரங்கத்தில் புகுந்த அந்நியன் ஒருவன் போல. அதன் பிறகு காடு, பழைய காடாகவும் இருக்க போவதில்லை. நாம், பழைய மனிதனாகவும் இருக்கப்போவதில்லை. இதைப்  போல பல நுட்பமான வரிகள் நாவலெங்கும் பரவிக் கிடக்கிறது. காட்டைப் போலவே, அதில் வாழும் உயிர்களைப் பற்றிக் கூறும் போதும், அதே நுட்பமான வரிகள். தேவாங்கு காட்டில் வாழும் சிறு விலங்கு.  ஊரில் நரிக் குறவர் ஒருவர் அதைக் கொண்டு வந்தபோது கண்டதாக நினைவு. அதன் பிறகு சில புகைப்படங்களில் மட்டுமே பார்த்த, மங்கலான நினைவு. நாவலில் வரும் மூன்றே வரிகளில், அந்த விலங்கு உயிருடன் எழுந்து வருகிறது.


'தேவாங்கின் அசைவுகளில் ஆயிரம் வயதான அலுப்பு, சலிப்பு' – என்ற முதல்வரியில்  அதன் அசைவுகளும், 'தேவாங்கு 'நான் வேற என்னத்த கண்டேன்' என்பது போல பாவமாய்த்  திரும்பிப் பார்த்தது" – என்ற வரியில் அதன்  எப்போதும் சோர்வான கண்களும், தொடர்ந்து வரும் உரையாடலில், குட்டப்பன் ரெசாலத்திடம் சொல்வதை போல இயல்பாக வரும், 'ஆனை சவிட்டிப் போட்ட குட்டிக்குரங்கு' என்ற வரியில் அந்த மொத்த விலங்கும் உயிர் பெற்று எழுகிறது. முதல் இரண்டு வரிகளும்  ஒரு தொடர் உரையாடலின் போது, மனதில் எழும் வர்ணனைகள். கடைசி வரி, உரையாடலின் ஒரு அங்கமாக வந்து முந்திய இரண்டையும் பூர்த்தி செய்கிறது. தேவாங்கை இதுவரை பார்த்திராதவர்கள் கூட, கடைசி வரியில் அந்த விலங்கை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒரு வேளை இதைத்தான், 'எழுத்தாளனையும் மீறி நிகழும் எழுத்து' என்கிறார்கள் போலும்.


சரி, காட்டை விடுத்து, பெண்களிடம் போகும் போதும்,  'இழைத்த மரத்தில் தெரியும் சரும வரிகள்' போன்ற அதே நுட்பமான  வர்ணனைகள். குறிஞ்சி நிலமான மலையைப் பற்றிய பல சங்கப்பாடல் வரிகள் – கபிலராலும், பரணராலும் பாடப்பட்ட வரிகள் – நாவலில் இறைந்து கிடக்கின்றன. படிக்க, படிக்கத் தூண்டும் அழகிய வரிகள். ஆனாலும் ஒரு வருத்தம். பல பாடல் வரிகளின்  ஆழம் புரியவில்லை என்பதால் அவை வருவதின் சூழலும் புரியவில்லை. தமிழ் ஒழுங்காகக் கற்காததின் விளைவு. ஆனால் 'சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக்கிளி கடியும் பூங்கட் பேதை'  என்று தொடங்கும் பாடலின் வரிகள்  மட்டும் புரிகிறது. பூத்தொடுத்துக் கொண்டே, கிளிவிரட்டும் அந்தப் பெண்ணை என் வாழ்வில் இதுவரையிலும் காணாது, பெருமூச்சு விடுவதால் என்னவோ நன்றாகப் புரிகிறது போலும். சங்கப் பாடல்களைப் படித்தபின் அந்த சூழலைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் நாவலின் சம்பவங்களில், சங்கப்பாடல்களின் உரிப்பொருள்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.  நீலியின் மறைவுக்குப் பின், கிரி அவள் நினைவுகளில் ஏங்குவதெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கூடிய பாலைத்திணை என்று புரிகிறது.


நாவலின் வடிவம் என்று பார்த்தால், மார்கழியில் வாசலில் போடப்படும் புள்ளிக் கோலம் போன்றது. குறுக்கும் நெடுக்குமாக புள்ளிகளின் வழியே, மாவுடன் பரவும் கை, நிமிர்ந்து எழும்போது , உருவாகி இருக்கும் முழுக் கோலம் போல. சம்பவங்கள் முன்னும் பின்னும் வெட்டி இழுக்கப்பட்டு, ஒரே மூச்சில் எழுதப்பட்டது போல உள்ளது.  நிகழ்வுகள் வந்து இணையும் புள்ளிகள்  அவ்வளவு இயல்பாக உள்ளது. தேர்ந்த தச்சனின் கைத்திறன் போலும்! கச்சிதமாக உள்ளது. நாவலுக்குக் கச்சிதம் தேவை  தானோ?


நாவலின் மற்றொரு பலமான அம்சமாக இருப்பது  உரையாடலில் இருக்கும் அங்கதமும், வட்டார வழக்கின்(மேற்கு கன்னியாகுமரி?)  சரளமும். 'ஏன்வே மோங்குதீரு? ', 'நீக்கம்போ… குருவோ .', 'படு கேமன்', 'கண்ணானை ' போன்ற உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை என்றாலும், வட்டார வழக்கு படு சரளமாகவே இருப்பதாகவே நினைக்கிறேன்.  கூடவே  மிளா, அயனி, காந்தாரி போன்ற புரியாத உதிரிச் சொற்கள், காட்டில் பூக்கும் பெயர் தெரியாப் பல வண்ண மலர்களின் பட்டியல் தருகிறது. (வட்டார வழக்குச் சொற்களுக்கான பொருள் இணைப்பைத் தராததற்கு நன்றி).


நாவலின் நெருடலாக,  என் முதல் வாசிப்பில் உணர்ந்தது – சி.வி. ராமன் பிள்ளை,சங்ஙம்புழா, போத்தியின் ஜமா என வரும்போது கதை கூறுவது கிரிதரனா, இல்லை ஜெயமோகனா  என்ற  சந்தேகம். இது ஜெயமோகன் அவருடைய கட்டுரைகளில் சொன்ன  மனிதர்களை மீண்டும் இங்கேயும் பார்ப்பதால் ஏற்படுவது. இதனால்  வாசிப்புத் தொடர்ச்சி அறுபடுவதால் சிறு சங்கடம் எழுகிறது.


இரண்டாம் வாசிப்பில் சில இடங்களில் பேசுவது கதாபாத்திரங்களா இல்லை  ஜெயமோகனா என்ற சந்தேகம். அந்த கதாபாத்திரங்களின்  போகிறபோக்கில் வந்து விழும்  சில சரளமான,  உரையாடல் வரிகளில் இருக்கும் ஆழம், அவர்களின் முதிர்ச்சி ஜெயமோகனுடையதோ என்ற சந்தேகம். இது என் வாசிப்பின் கோளாறா இல்லை ஒரு நாவலை எவ்வாறு புரிந்து படிக்க வேண்டும் என்று தெரியாததன் கோளாறா  என்று தெரியவில்லை. ஆனால் என் வாசிப்பில் உணர்ந்த நிஜ உணர்வுகள்.


காடு நாவலைப் படிக்க விரும்பும் எவருக்கும், வாசித்த வாசகனாக சொல்ல விரும்புவது என்னவென்றால்,  தயவு செய்து ஜெயமோகனின் கட்டுரைகள், நாவலின் முன்னுரை, பின்னட்டை வாசகம் என எதையும் படிக்காதீர்கள். மெதுவாக பின்னர் படித்துக் கொள்ளுங்கள்.  நேராக கதைக்குள் சென்று விடுங்கள். அங்கே உங்களுக்கென ஒரு உலகம் காத்திருக்கிறது. அங்கே உங்களை ஒப்படைத்து விடுங்கள்.


நாவலைப் படித்த முடித்த பின்பு எதிலும் நம்பிக்கை அற்ற தன்மை மனதில் ஏற்பட்டது.    "என்ன மயிறு வாழ்க்கை.. இவ்வளதுதான் .. ஒண்ணும் பெருசா புடுங்க முடியாது" என்ற ஒரு எண்ணம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் படித்து இருந்தால், வேட்டிக்கும், ஜம்பருக்கும் இடையே பிதுங்கி நிற்கும் சிவந்த சதை போல, நீலிக்கும், மாமிக்கும் இடையில் மனம் பிதுங்கி இருந்திருக்கும். இப்போது கிரியின் அழிந்த கனவும், வாழ்ந்த வாழ்வும் பெரிதாகத் தெரிகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து  மீண்டும் படித்தால் புதிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.


ஆத்தா அடிக்கடி சொல்வாள் – "பதினாலு வருஷம் வாழ்ந்தவனும்  கிடையாது…பதினாலு வருசம் வீழ்ந்தவனும் கிடையாது". அவள் எந்த  அர்த்தத்தில் சொல்கிறாள் என்று அப்போது புரியவில்லை. கிரி பிற்கால வாழ்வில் சிறுகச், சிறுக காசை சேர்த்து, அவன் பிள்ளைகள் அதில் படித்து, வாழ்வில் சொல்லிக்கொள்வது போல வருகிறார்கள். பட்டமரத்தில் துளிர் விடுவது போல.  அந்த அர்த்தத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். கிரியாவது பிற்பகுதி வாழ்வில் ஓரளவு முன்னேறுகிறான். ஆனால் கிரி  வாழும் வாழ்க்கையின் பிம்பமாய் வாழும் அண்ணாச்சியின் வாழ்க்கை பின்னர் என்ன ஆனதென்று தெரியவில்லை. யார் கண்டது  அங்கே இன்னொரு நாவல் நிகழ்ந்து முடிந்திருக்கலாம்.


வாழ்வின் பல தோல்விகளுக்கு பிறகு, அய்யரைக் கடைசியாக வந்து சந்திக்கும் கிரிதரன்  அவரிடம் 'நான் என்ன தப்பு செய்தேன்னு நீங்க நினைக்கிறீங்க…' என்று கேட்கிறான். 'எல்லோரும் செய்ற தப்புதான் …அகங்காரம் … உன்னைப்பத்தியே நினைக்கிறது… மத்தவங்க உன்னை பேனனும்னு நினைக்கிறது…' என்று சொல்கிறார். கூடவே அவர் அந்தத் தோல்வியை எதிர்பார்த்தவர் போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறார். உண்மையில் அய்யருக்கு, கிரிதரனின் தோல்வி அவன் மலைக்கு வந்த நாளே தெரிந்து விட்டதோ?


நாம் எல்லோரும் எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையில் இருக்கிறோம். நம் வாழ்க்கை, நம் எதிர்காலம் என்ற சட்டகத்திற்குள் தான்.எப்போதும் சிந்திக்கிறோம். வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்ற பயத்தில் தான் வாழ்கிறோம். உண்மையில் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது என்ன? கழுத்தில் போட்ட மாலை, அது இருக்கும் வரை கனக்கும் தருணம் போன்றது தானா?


சில சமயங்களில் யோசிக்கும் போது, போத்தி சொல்வது போல 'மனுசன சாமிகள் வட்டா போட்டு விளையாடுதுவ', அதில் வெற்றி, தோல்விகள் அவ்வப்போது வந்து செல்லும் நிகழ்வுகள் என்று தோன்றுகிறது. இருக்கும் கணம் மட்டுமே வாழ்க்கை. அதில் இருந்தபடியே, எல்லாவற்றையும் இழப்பதே வாழ்க்கை என்று தோன்றுகிறது. ஆனாலும் ?????….ஆனாலும் ….?????


நாவலைப் படித்து முடித்த, சில நாட்களுக்குப் பிறகு  சில வருடங்களுக்கு முன்பு படித்த, கண்டராதித்தனின் கவிதை ஒன்று, யதேச்சையாக நினைவில் வந்தது.


" துக்கமாகவும், கண்ணீருடனும்

கடந்து விட்ட நேற்றை

ஒரு நரி கவ்விப் போனதைப் பார்த்தும்

பார்க்காதது போலிருந்து விட்டேன்


கொண்டைத் தலையுடன்

கண்களை உருட்டியுருட்டி

நமக்கெல்லாம்

உயரேயொரு

கிளையிலமர்ந்து

பசியாற்றும் பட்சியின்

அலகிலிருந்து உதிர்ந்தது

இந்த நாள்


நேற்றை

இன்றை

கடப்பது போல

நாளையை கடந்தும்

பறந்து கொண்டிருக்கிறது

ஒரு பறவை"


ஆம், அந்தப் பறவைதான் 'நான் நான் ' என்கிறது. பின்னர் 'ஏன்', 'ஏன்' என்கிறது.


நாவலை முடித்த, இந்த ஆறு மாதங்களாக, மீண்டும் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது. அது மனதில் இடைவிடாது தொக்கி நிற்கிறது. படிச்ச தம்புரானாலும் சொல்ல முடியுமா என்று சந்தேகிக்கும் கேள்விதான். இருந்தாலும்  யாராவது பதில் சொல்ல முடியுமா? உண்மையில் காமம், சுயநலம் தவிர மனித உறவுகளுக்கு வேற ஏதாவது அடிப்படை உண்டா?


பி.கு:

1. நாவலைப் பற்றிய என் எண்ணங்களை,எழுதத்தூண்டி, ஊக்கப்படுத்திய 'பராக்கா' அரவிந்திற்கு நன்றி.குரங்குத்தவத்தின் கட்டுரைகள் எனக்கு ஒரு ஊக்கமூட்டி.

2. இதை விரித்து இன்னும் தெளிவான மொழியில், ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்றே எழுதிய பிறகு எண்ணுகிறேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதற்கான உழைப்பை அளிக்கமுடியாது. குறைகள் கண்டால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.


-இளமாறன்


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.