நேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்

Nehru
தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை
நேரு முதல் மல்லையா வரை. .

அன்பின் ஜெ. .


உங்கள் எதிர்வினைக்கும், கட்டுரையை வெளியிட்டதற்கும் நன்றி.


எனது தரப்பில் சில விஷயங்களைச் சொல்லிப் பார்க்கிறேன் – நாம் விவாதிப்பது தெளிவடைகிறதா என.


”நான் தொழில்முனைவோர் அனைவரும் பொதுநலம்நாடிகள் என்று சொல்லவில்லை. நல்லவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்களில் பேதம் பார்க்கக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்களில் ஊழல் செய்பவர்களும் அரசை ஏமாற்றுபவர்களும் பொதுமுதலை மோசடி செய்பவர்களும் தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்லவில்லை.


மாறாக தொழில்முனைவோர் வலிமையான இடதுசாரி இயக்கங்களால் நிகர் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறேன். அரசும் அமைப்புகளும் அவர்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்கிறேன். தொழில்முனைவோர் லாபநோக்கம் மட்டுமே கொண்டவர்கள். அவர்கள் பொதுநலம் விரும்பிகள் அல்ல. ஆனால் லாபநோக்கம் சமூகத்துக்கு எதிரானது அல்ல. லாபநோக்கம் கொண்ட தொழில்செயல்பாடுகள் பொருளியல்ரீதியாக ஆக்கபூர்வமானதாக அமையமுடியும். ஆகவே சுயலாபச் செயல்பாடுகள் மேல் ஒட்டுமொத்தமாக நாம் கொள்ளும் காழ்ப்பு முதலாளித்துவப் பொருளியலுக்கு ஏற்புடையதல்ல என்கிறேன்.


அதேசமயம் இடதுசாரிகளால் தொழில்முனைவோர் அனைவருமே சுரண்டல்காரர்கள் என்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பத்தை நம்பி வெறுப்பைக் கக்குவதும், தேவையானபோது மட்டும் இடதுசாரி கோஷங்களை கையிலெடுத்துச் சேறுவீசுவதும் பிழை என்கிறேன். – இது உங்கள் வரிகள்.


இதுவரை, நான் உங்கள் கருத்துக்களை முற்றிலும் ஆமோதிக்கிறேன். ஆனால், நான் மாறுபடும் இடம் ஒன்றுதான். இதைச் சொல்ல நீஙக்ள் கையாண்ட உதாரணம் தவறு. மல்லையா. சுரண்டல் தொழில் மாதிரியில் இருந்து மேலெழுந்தவர் – எனவே தான் அவரின் வாழ்க்கை முறையும் சேர்ந்து இன்று அவர் வேட்டையாடப்படுகிறார்.


ஆனால், இந்திய சமூகத்தில் – அமைப்பு ரீதியாக இவர்கள் மிகவும் பத்திரமாக உள்ளார்கள் என்பதே உண்மை. இதே போன்ற குற்றத்தை அவர் அமெரிக்காவில் செய்திருந்தால், 30-35 ஆண்டுகள் வரை உள்ளே இருக்கும் சாத்தியங்கள் உண்டு என்பதுதான் உண்மை. அதனால் தான், சத்யம் ராஜூவும், ஹைதராபாத்தில் உண்மையைச் சொன்னார். அவரின் நிறுவனம் அமெரிக்கப்பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆன ஒன்று. அங்கே சொல்லியிருந்தால், குறைந்தது 25-30 வருடம் ஜெயில்.


”நவீனப்பொருளியலில் தொழில்முனைவோர் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள் என்பது என் கருத்து என்கிறேன், ஆனால் இடதுசாரிகள் அதை மறுப்பதை புரிந்துகொள்கிறேன்” – உங்கள் வரிகள்


இந்த இடத்தையும் நான் ஒத்துக் கொள்கிறேன் ஒரு மாறுதலோடு – நான் இடதுசாரிகள் ஒரு தரப்பு – மொத்தச் சூழலையும் வைத்து, வலது- இடது என மட்டும் பாராமால், பொருளியல் செல்வம் உருவாக்குதல் என்னும் தரப்பிலிருந்து, இந்தியச் சமூகப் பொருளாதாரச் சூழலை (இன்றைய சூழலில், சூழியலும் உண்டு) அணுகும் ஒரு கருத்தியலை முன்வைக்கிறேன்.


உங்கள் கட்டுரையின் மையப் புள்ளியில் இருந்து நான் விலகும் இடம் இதுதான். ஏனெனில், கேரளத்தில் வெற்றிகரமாக இயங்கும் மில்மா கூட்டுறவுப் பால் உற்பத்தித் தொழில் நிறுவனத்தின் மாதிரியை அப்படி அணுகினால் தான் புரிந்து கொள்ள முடியும். FACT போன்ற, ஒரு பெரும் பொதுத் துறை நிறுவனத்தைச் செயலிழக்கச் செய்த இடதுசாரித் தொழிலாளிகளியக்கம், எப்படி மில்மாவை அனுமதித்தது என நோக்கினால், நான் சொல்ல வருவது புரியும். ஏனெனில் மில்மா, பல லட்சம் உள்ளூர் மக்களின் தினசரிப் பொருளாதாரத்தை நேர்மறையாகப் பாதிக்கும் ஒரு பொருளியல் சக்தி. உற்பத்தியாகும் பால், மக்களின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளூர் நுகர்வோரிடையே விற்கப்பட்டு, பலன் வாரா வாரம் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும் மாதிரி.


அங்கே வேலை நிறுத்தம் நடத்தினால், பொதுமக்களே அவர்களை அடித்துத் துரத்திவிடுவார்கள்.


அதே போல் தான் அர்விந்த கண் மருத்துவமனை மாதிரியும். அது இடது வலது என்னும் சித்தாந்தகளுக்கு அடங்காமல், அதைத் தாண்டிய ஒரு தளத்தில் இயங்குகிறது. இதையும் பாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.


”நான் சுட்டிக்காட்டுவது தொழில்முனைவோர்களுடன் அரசுக்கு இருக்கும் உறவை ஒருவகை மோசடி அல்லது ஊழல் என்று மட்டுமே பார்க்கும் பார்வையின் அபத்தத்தை மட்டும்தான். தன் தொழில்துறையில் நிதிமுதலீடு செய்யாத முதலாளித்துவ அரசு என ஏதுமில்லை. அதில் இழப்புகளை அத்தனை அரசுகளும் சந்திப்பதுண்டு. அந்த இழப்புகள் தள்ளுபடி செய்யப்படுவதும் இழப்புக்குள்ளான தொழில்துறைகளை அரசு பெரும்பணம் பெய்து மீட்பதும் எல்லாம் உலகமெங்கும் நிகழ்வது. சென்ற இருபதாண்டுகளில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் ஜப்பானும் அவ்வாறு நிதிபெய்து வங்கி, தொழில்துறைகளை மீட்டெடுத்த வரலாறு நம் முன் உள்ளது. இதை ஓர் இடதுசாரி கண்டிப்பதை புரிந்துகொள்கிறேன். எதையும் அறியாத ஒருவர் இதை வரிப்பணத்தை அள்ளிக்கொடுப்பது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் அறியாமையை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்” – உங்கள் வரிகள்


இந்தப் புள்ளியில் ஒரு வேறுபாட்டைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவில், தொழில்த் துறையும், அரசும் இணையும் புள்ளிகள் பல – மிக முக்கியமான இணைவு அமைப்பு ரீதியாக – CII, NASSCOM, ASSOCHAM என அமைப்பு ரீதியாக இணையும் புள்ளிதான் ஓரளவு நேர்மையான இணைதல். ஆனால், நான் சொல்லும் க்ரோனி கேப்பிடலிஸ்ட்கள் இதைத் தாண்டிய உறவு வைத்திருப்பவர்கள் என்பது மிகக் கடுமையாக விமரிசிக்க வேண்டிய ஒன்று. எடுத்துக் காட்டாக, காங்கிரஸ் ஆட்சியில் அம்பானிகளும், ஜிண்டால்களும் கொண்டிருந்த உறவு. இந்த ஆட்சியில் அதானி கொண்டிருக்கும் உறவு. 2008 ல், அமெரிக்காவில் நிகழ்ந்த நிதி ஊழலில், அரசு, நிதிநிறுவனங்களை மீட்க, கிட்டத் தட்ட 1 ட்ரில்லியன் டாலருக்கும் (65 லட்சம் கோடி ரூபாய்) மேல் நிறுவனங்களுக்கு வழங்கியது. அந்த நிதியில் ஒரு முக்கியமான அளவை, அந்நிதி நிறுவனத்தில் இருந்த, அந்நிதி ஊழலில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள், தங்களுக்கான போனஸாக எடுத்துக் கொண்டதை நாம் கட்டாயம் கண்டித்தாக வேண்டும். இதை உங்கள் கட்டுரை சுட்டிக் காட்டத் தவறுகிறது. மத்திய, கிழக்கு மாநிலங்களின் பழங்குடியினரை வெளியேற்றி, நிறுவனங்கள் தாதுத் தோண்டல்களில் ஈடுபடுகின்றன. mindless mining என்றால் என்னவென்று, ஒரு முறை பெல்லாரிக்கோ / கோவாவிற்கோ சென்று பாருங்கள். இதை க்ரோனி கேப்பிடலிஸ்ட்கள் வரம்பு மீறிச் செய்கிறார்கள். இது வரிப்பணத்தை அள்ளிக் கொடுப்பதற்குச் சமமானதுதான்.


ஆனால் அதே சமயம், மென்பொருள்த் துறையின் துவக்க காலத்தில், வருமான வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. அது அந்தத் தொழிலின் லாபத்தைப் பெருக்கி, இன்று பெரும் துறையாக உருவெடுத்ததில் அரசின் நேர்மறையான பங்கு. ஆனால், இன்று அம்பானி, அதானி, ஜிண்டால், ஜி. வி,கே, ஜெயப்ரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற க்ரோனி கேப்பிடலிஸ்ட்களின் தொழிலுக்காகக் கொடுக்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்கள் எனச் சொல்லப் பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டால், அது நிச்சயம் வரிப்பணக் கொள்ளைதான். டாட்டாவோ / ஷிவ் நாடாரோ / அஸீம் ப்ரேம்ஜியோ / கிரண் மஜும்தாரோ தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லக் கேட்கவில்லை எனக் கவனியுங்கள்.


*


”அன்புள்ள பாலா, பெருநோட்டு அகற்றம் குறித்து நீங்கள் எழுதிய பதற்றம்மிக்க கட்டுரைகளை, அதிபயங்கர ஆரூடங்களை இப்போது பார்க்கிறேன். அதிலிருந்த உணர்ச்சிகரமே இக்கட்டுரையிலும் உள்ளது” – உங்கள் வரிகள்


இது ஆதாரமில்லாத குற்றச் சாட்டு. அந்த சமயத்தில், நான் குழுமத்தில் எழுதியதெல்லாம் இவைதான்.



இது, வடக்கில், ரபிப் பருவ விதைப்பின் போது தடாலென அறிவிக்கப்பபட்டிருப்பது, வேளாண் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
86% நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டால், நோட்டுப் பரிமாற்றம் மட்டுமே நிகழும் ஊரக்ப் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும்.
பழைய நோட்டுக்களுக்குப் பதில் நோட்டுக்கள் தயாராக இல்லை. இதைப் ப்ரிண்ட் செய்ய 4-5 மாதங்கள் பிடிக்கும்.
பின் தயாரிப்புகள் இன்றி, அவசரத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் – பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கும் எனச் சொல்லியிருந்தேன்.
மன்மோகன் சிங் / ப. சி போன்றவர்களும் அமர்த்தியா சென், கௌஷிக் பாஸு, ஜான் ட்ரேஸ், அருண் ஷோரி, லாரி சம்மர்ஸ் எனப் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அவர்கள், கள்ளப் பணம் ஒழிக்கும் நோக்கத்தில் தவறில்லை. -ஆனால், பணமாக இருக்கும் கருப்புப் பணம் 4-5 ச்தம் தான் – அப்படியே அதைச் செய்ய வேண்டு மெனிலும், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யாமல், பொது மக்களை அவதியுறச் செய்வது தவிர்க்கப் பட வேண்டுமெனச் சொல்லியிருந்தார்கள். இதற்கு, பாஜபா தரப்பு ஆதரவாளர்கள் – அர்விந்த் விர்மானி, பிபேக் டெப்ராய், சுர்ஜித் பல்லா, குருமூர்த்தி போன்ற பொருளாதார அறிஞர்கள் மறுப்புச் சொல்லியிருந்தார்கள் – கறுப்புப் பணம் இதனால் ஒழிந்து விடும் என.

2013 ஆம் ஆண்டு, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நோட்டு மாற்றத் திட்டதை – அது வெறும் நோட்டு மாற்றம் தான் – பா. ஜ. பா, ஏழை மக்கள் பாதிப்பார்கள் என எதிர்த்து அறிக்கை விட்டது. அது யாருக்கும் தொந்தரவில்லாமல் செய்யப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கை. அதன் நோக்கம், கள்ள நோட்டுக்களைத் தடுப்பதுதான்.


ஆனால், உங்கள் கட்டுரையை நோக்குங்கள் – நீங்கள் சொன்னது என்ன என


இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன் பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்


இதை ஒரு எமோஷனல் ட்ராமாவாக உருவகித்தது நீங்கள் தான்,


இதைச் செய்து விட்டு, ஜப்பான் சென்ற பிரதமர், 4 நாட்கள் கழித்து வந்ததும், அதன் பிரச்சினைகளைக் கண்டு – என்னைக் கொல்ல சதி. . 70 ஆண்டுக் கொள்ளையைத் தடுக்க முயலும் என்னைக் கொன்று விடுவார்கள் என்று வசனம் பேசியது, மு,க வின் ‘கொல்றாங்கோ” டயலாக்கைத் தான் நினைவுபடுத்தியது.


நடந்த குளறுபடிகளைப் பட்டியலிடுகிறேன்:



86 சதம் நோட்டுக்களுக்கு மாற்று நோட்டு இல்லை.
புது நோட்டுகளுக்கு ஏ. டி. எம் மெஷின்கள் மாற்றப்படவில்லை
கூட்டுறவு வங்கிகளை இதில் இருந்து நீக்கியது. அது விவசாயத்தைப் பாதிக்கும் என உணர்ந்து, அரசுப் பண்ணை விதைகள் வாங்க, ப்ழைய நோட்டுக்களை அனுமதித்தது.
கிட்டத்த்ட்ட 50 முறைகள் விதிகளை மாற்றியது / பணம் எடுப்போருக்கு விரலில் மை என விதி கொண்டு வந்து அதை 2 நாட்கள் நடத்தியது.
வங்கி மேனேஜர்களிடம் அதிக்ப் பணம் செலுத்துவோர் கணக்குக் காண்பிக்க வேண்டும் என விதிகளைக் கொண்டு வந்தது. குருமூர்த்தி போன்றவர்கள் அதற்கு சப்பைக் கட்டுக் கட்டியது
தவறு நடந்ததை மாற்ற பணமில்லாப் பரிமாற்றம் எனப் புதுக் கதை விட்டது. . பிச்சைக்காரர்கள் கூட பணமில்லாப் பரிமாற்றம் செய்கிறார்கள் என நாட்டின் பிரதமர் பேத்தியது.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தொலைக்காட்சி அறிவி ஜீவிகள் அனைவரும் ஏ. டி. எம்மில் பணம் இருக்கு / இல்லை என அடித்துக் கொண்டது – எனப் பல தமாஷ்கள் நடந்தன.


உங்களுக்கு, இதனால், ஏழை மக்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார்களா எனத் தெரிய வேண்டுமானால், எனது தோழி, அபர்ணா கிருஷ்ணனின் தொலைபேசி என் தருகிறேன் – இவர் ஒரு IISC பட்டதாரி. படிப்பு முடிந்து, க்டந்த 20 வருடங்களாக, திருப்பதி அருகே தலித்வாடா என்னும் தலித் கிராமத்தில் அவரக்ளோடு வசித்து வருகிறார். அவரை அழைத்துக் கேளுங்கள். நமக்குத் தெரிந்த நண்பரான, கண்ணன் தண்டபாணியைக் கேளுங்கள்.


இன்று, இந்தக் கூத்து முடிந்து ஆறு மாதங்களில், ஒரு நாள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜக்தீஷ் பக்வதி ஒரு நாள் கொடுத்த ஒரு நாலு பேரா பேட்டியை மேற்கோள் காட்டி, பணமதிப்பு பெரும் நன்மை எனப் பதிவிட்டிருந்தீர்கள். இதைத் தவிர பண மதிப்பிழப்பு நன்மை என யாராவது சொன்னார்களா எனப் பாருங்கள். வரிகள் பலமடங்கு அதிகமாகின என்னும் ஒரு வரியையும் பார்த்தேன் – நான் கண்ட வரையில், சோப்பு / டிடர்ஜெண்ட் நிறுவனங்கள், இரு சக்கர வாகனங்கள், கமர்ஷுயல் வாகனங்கள், கார்கள், என மத்திய வரிக்கட்டும் அனைத்து நிறுவனங்களும் அந்த மூன்று மாதங்கள் (அக்டோபர்-டிசம்பர்) – விற்ப்னைச் சரிவைச் சந்தித்தன. அரசே இன்று, அந்த மூன்று மாதங்களின் பொருளாதார வளர்ச்சி 0. 5 சத்ம் வீழ்ந்தது என அறிக்கை கொடுத்திருக்கிறது. (அதுவும், 2015 அக்டோபர்-டிசம்பர் பொருளாதார வளர்ச்சி மதிப்பைக் குறைத்து –  ) – ஆனாலும், மத்திய வரி அதிகரித்தது என்னும் நிதிமந்திரியின் கூற்றில் ஒரு உண்மை உண்டு – அது விலை குறைந்து போன க்ரூட் ஆயிலின் மீது, அரசு அதிகரித்த கலால் வரியின் விளைவு என நான் ஊகிக்கிறேன்.


டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஒரு இங்லீஸ் தினத்தந்தி பேப்பரின் மீது வைக்கும் மதிப்பை, உலகின் மிகப் பெரும் பொருளாதார நிபுணர்களான இந்தியர்கள் மீதும் வையுங்கள். அமர்த்தியா சென்னும், மன்மோகன் சிங்கும் பெரும் அறிஞர்கள். பின்னர், உர்ஜித் படேல், பாராளுமன்றக் குழுவுக்கு முன்பு சாட்சியம் அளிக்கையில், ஒரு சங்கடம் விளைவிக்கும் கேள்வி எழ, மன்மோகன் சிங், உர்ஜித் படேலிடம் – நீங்கள் அதற்குப் பதில் அளிக்க அவசியமில்லை என அவரை விடுவித்தார். ஜி. எஸ். டி மசோதாவில், ஒரு தேவையில்லாத ஷரத்தை எடுத்து வாதித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் எம். பிக்களிடம் – அது தேவையில்லாதது – நாம் முன்னே செல்வோம் எனச் சொல்லி, அதை முன்னெடுக்க உதவினார்.


மன்னிக்கவும் – அவர்களையெல்லாம் விட, உங்களுக்கு அதிகம் பொருளாதாரம் தெரியும் என நான் நம்பவில்லை.


அடுத்த மிக முக்கிய புள்ளி


இது அரசியல்கட்டுரை மட்டுமே என்றால் கோபம் கொள்ளமாட்டீர்கள்தானே?


இந்தப் புள்ளியை சந்தேகமேயில்லாமல் ஒப்புக் கொள்கிறேன். எனது கட்டுரை எனது அரசியல் நிலையை நிச்சயமாகப் பிரதிபலிக்கிறது.


நான் உங்களுடன் நேரில் உரையாடுவதில்லை எனவும் யோசித்தேன் – உங்களுடன் நேரில் இருக்கும் போது, உங்களை உபசரிக்கவோ / நீங்கள் சொல்வதை மட்டுமே கேட்கவோ தான் தோன்றுகிறது. வாதிட மனம் வருவதில்லை. இலக்கியம் என என் மனதில், ஒரு குருவின் இடத்தில் இருத்தியிருக்கும் போது, வாதிட சங்கடமாக உள்ளது.


கடிதத்தில், எனக்கே எனக்கான ஸ்பேஸ் என ஒரு ஆறுதல். வாழ்த்த வயதில்லை, அதனால் திட்றோம் கேஸ். .


பாலா




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2017 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.