நித்யா -கடிதங்கள்

muni nara


திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.


என்னுடைய மின் அஞ்சலுக்கு பதிலாக, நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்ட ‘நித்யாவின் இறுதிநாட்கள் ‘ ( http://www.jeyamohan.in/97384#.WPRyxo... )என்ற கட்டுரையைப் படித்தேன்.


உங்கள் கட்டுரை எனக்கு பயனுள்ளதாக உள்ளது. திரு. நித்ய சைதன்ய யதி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலாக இருந்தது,அவரைப் பற்றி United Writers வெளியிட்டுள்ள ‘அனுபவங்கள் அறிதல்கள்’ என்ற புத்தகத்துக்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை.


அந்தப் புத்தகத்தில், அவர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு ‘மரணத்தை எதிர்கொள்ளல்’ (பக்கம் 101) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.


அக் கட்டுரையை படித்த பின்தான், திரு. நித்ய சைதன்ய யதி, அவருடைய மரணத்தை எவ்வாறு எதிர் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது.அக்கேள்வியால் உந்தப்பட்டு, நான் உங்களுக்கு என்னுடைய முந்தைய மின் அஞ்சலை அனுப்பினேன். உங்களுக்கு, என்னுடைய நன்றிகள் பல.


எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே, இறப்பு, மரணம் என்ற சொற்கள் என்னை ஈர்த்தே வந்துள்ளன.


மரணம் என்ற வார்த்தையின் முழுப் பொருள், மகா + ரணம், அதாவது மிகப் பெரிய ரணத்தால் வேதனைப்பட்டு, உயிரானது உடலை விட்டுவெளியேறுதல் என்பார் என் அக்குபங்சர் ஆசான்களில் ஒருவரான அக்கு ஹீலர். உமர் பாரூக்.


அவர் மேலும் சொல்வார்:


1. நாம், இயற்கையின் விதிகளான பசித்த பின் உணவு உண்டு,தாகமெடுத்த பின் நீர் அருந்தி, உடல் கேட்கையில் அதற்கு ஓய்வுகொடுத்து, இரவு 9 மணிக்கு உறங்கச் சென்றால், நோயற்ற வாழ்வுவாழ்ந்து, நம் உடலை விட்டு உயிர் பிரிகையில், வலிகள், தொந்தரவுகள், நோய்கள், எதுவும் இன்றி இயற்கையாக உயிர் பிரியும். அதனைத்தான் நம் முன்னோர்கள் இறப்பு என்கிறார்கள்.


2. நமக்கு வரும் சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை, நம் உடலே, உடலை சுத்தம் செய்யும் ஒரு கழிவு நீக்க வேலை. இந்த வேலையை நாம் மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், அனுமதிக்கையில், நமக்கு பெரிய எந்த ஒரு நோயும் வராது. இன்று மனிதர்களுக்கு வரும் கான்சர், சிறுநீரக செயலிழப்பு, உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம், சிறிய நோய்களான ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப் போக்கு, போன்றவற்றுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதுதான்.


3. மருந்துகள், எந்த ஒரு நோயையும் தீர்ப்பதில்லை.


பாயசம் இல்லாத விருந்து இல்லை. பக்க விளைவு இல்லாத மருந்து இல்லை. மருந்துகளின் பக்க விளைவுகள்தான், மனித குலம் இன்று எதிர் கொள்ளும் அனைத்து நோய்களுக்கும் காரணம்.


4. ‘பட்டினியே சிறந்த மருந்து (லங்கணம் பரம அவுஷதம்)’ என்றனர் நம் முன்னோர்கள்.


இதனையே திருவள்ளுவர் சொன்னார்:


குறள் 942:


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


பொருள்:


உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே

தேவையில்லை.


5. நோய்க்கு சிகிச்சை அளித்தால் சரியாகும். இறப்பு என்பது நோய் அல்ல. அதற்கு சிகிச்சை கிடையாது. எனவே சிகிச்சை அளித்து இறப்பை நிறுத்த, முடியாது.


இது போன்ற உண்மை விளம்பும் கோட்பாடுகளால் கவரப்பட்டு நான் அக்குபங்சர் பயின்று, அக்குபங்சரிஸ்டாக சிகிச்சை அளித்து வருகிறேன். மருந்துகள், ஆய்வுக் கூட அறிக்கைகள், அறுவை சிகிச்சைள் இன்றி, மிக, மிக குறைந்த செலவில் பலர் குணமடைந்துள்ளார்கள்.


நோய்கள், இறப்பு ஆகியவை பற்றிய பயத்தை, என்னிடம் இருந்து விரட்டியதில் அக்கு ஹீலர். உமர் பாரூக் உள்ளிட்ட என்னுடைய அக்குபங்சர் ஆசான்கள் 17 பேர்களின் பங்கு, முதன்மையானது.


ஒருவரின் உயிர் பிரிந்ததை,மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் போது, காசர்கோட்டில் என்னுடைய கிராமத்தில் அவருடைய ஆயுள் முடிந்து விட்டது எனச் சொல்வோம். அவர் மரணித்து விட்டார் எனச் சொல்ல மாட்டோம். காரணம், மரணம் என்பது எதிர் மறைச் சொல்.


காசர்கோட்டில் உள்ள பெர்லா கிராமம் என்னுடைய சொந்த ஊர். அங்கு என்னுடைய பரம்பரை வீடு Kuntikana உள்ளது. என்னுடைய இன்னொரு தாத்தாவின் (அம்மாவின், அப்பா) பரம்பரை வீடு, காசர்கோட்டில், சட்டஞ்சால் அருகில் உள்ள ‘தயிரா’ ஆகும்.


என்னுடைய இரு தாத்தாக்களின் பரம்பரை வீடுகளிலும் சில நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி

கோயில்கள் உள்ளன.

என்னுடைய கிராமம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் நான் காசர்கோட்டுக்கு ரயிலில் செல்லும் போது, அந்த ஊர் பற்றி, அங்கு நீங்கள் இருந்ததைப் பற்றி நீங்கள் எழுதியது அவ்வப்போது நினைவுக்கு வரும்.


நன்றியுடன்.

ஆர் ராதாகிருஷ்ணன்


 


nitya sea


அன்புள்ள திரு ஜயமோகன்,


திரு நித்ய சைதன்ய யதி பற்றி வாசித்தேன்.[நித்யாவின் இறுதிநாட்கள் ] தொடர்புடைய கட்டுரைகளையும் வாசித்தேன்.

ஸ்ரீ நாராயண குரு கல்வி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவு அறிந்திருந்த எனக்கு அவருடைய வேதாந்த ப்ரதிபத்தி ப்ரமிப்பை ஏற்படுத்திது.


1992-95 ஆண்டுகளில் அஸ்ஸாமில் பணியாற்றியபோது ஸ்ரீ சங்கரதேவரைப்பற்றிய பரிச்சயம் ஏற்பட்டது. நாம்கர்கள் (Namgarh) பற்றி முதன்முதலாக தெரிந்துகொண்டேன். பௌத்த மதம் குறித்தும் அறிந்தேன்.


அஸ்ஸாம் கீழை பௌத்த நாடுகளின் நுழைவாயில். தாய்லாந்து பர்மா பாக்கு தேக்கு, சீனத்துப்பட்டு இவற்றின் விளைநிலம் இங்கு ஆரம்பம். குவாஹாடி என்றால் வடமொழியில் பாக்குச்சந்தை என்று பொருள்.


தென்மேற்கில் நாராயணகுரு சங்கரமூர்த்தியை ப்ரதிஷ்டை செய்தார். வடகிழக்கில் சங்கரதேவர் நாராயணமூர்த்தியை நாம்கர்களில் ஷராய்களில் எழுந்தருளப்பண்ணி அனைத்து வகுப்பினரும் வழிபட உதவினார். மேலும் பல ஒற்றுமைகள். மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போல ஒரு அருள் பொழியும் தெய்வம், தாய் போல எதுவும் எதிர்பாராமல் அன்பு காட்டும் தேவதை தேவை. இந்த இரண்டு ஸாதுக்களும் அந்த தெய்வத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.


இன்றளவும் ஷராய் அஸ்ஸாமின் அதிகார பூர்வமான கலாசார சின்னம்.ஷராய் என்பது ஒரு புத்தவிஹார வடிவில் பித்தளையில் செய்யப்பட்ட சிறிய வழிபாட்டுப்பொருள். இதனுள் ஸாளக்ராமம் இத்யாதிகளை எழுந்தருளப்பண்ணி ச்ரவணம்,கீர்த்தனம் முதலிய அனுஷ்டானங்களை செய்வர்.


யார் ஆலய பூஜை, ஆவாஹனம் பண்ணலாம்? ஸம்ஸ்காரம், தீட்சை உடையவர்கள் மட்டும் தானே? இதிஹாஸ புராண காலத்திலிருந்தது ,இன்று வரை, தெரிந்தும் தெரியாமலும், தீக்ஷித குடும்பங்களில் கண்டெடுத்த, கொண்டெடுத்த குழந்தைகள் உண்டு. ஈச்வர ஸங்கல்பம் என்று சொல்வார்கள். ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாது என்பது நியதி.

சாஸ்த்ர மர்யாதை குலையாமல் மனித தர்மம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிது. அதனால்தான் இந்த ஸாதுகள் வேத வேதாந்தங்களுக்கு தங்கள் அங்கீகார முத்ரையை பதித்தார்கள். ஆனால்

தற்கால ஜாதீய அரசியல் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல இயலாது.


அன்புடன்


கிருஷ்ணன். சாமவேதம்


 


நித்யாவின் இறுதிநாட்கள்
தொடர்புடைய பதிவுகள்

நித்யாவின் இறுதிநாட்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.