பிறந்தநாள்

பவா


 


 


இன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள்.இம்முறை வாழ்த்துச்சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?’ என நினைக்கும் உலகைச்சேர்ந்த ஆத்மா. ஆச்சரியம்தான்.


 


நானே தேவதச்சனைக் கூப்பிட்டு நாளை நிகழவிருக்கும் அவருடைய படைப்புக்கள் பற்றிய கருத்தரங்குக்கு வாழ்த்துக்களைச்சொல்லி எனக்கு வாழ்த்துக்களைக் கோரிப் பெற்றுக்கொண்டேன்.


 


பிறந்தநாளுக்கு பெரிதாகக் கொண்டாட்டமெல்லாம் இல்லை. இம்முறை நான் வீட்டிலிருந்தமையால் அருண்மொழி சர்க்கரைப்பொங்கல் செய்திருந்தாள். காலை எழுந்ததும் அதை சாப்பிட்டேன். செய்தித்தாள்கூட வாசிக்காமல் படுத்து உடனே தூங்கிவிட்டேன். நெய்மயக்கம் என்று அதை எங்களூரில் சொல்வார்கள்.


shy

ஷைலஜா


 


வெளியே ஒரே சத்தம். யாரோ வந்து என் வீட்டு வாசலில் நின்றிருக்கும் பேச்சொலி. என் செல்பேசிக்கு ஒரு சிக்கல், வேகமாக வைத்தால் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும். வேறொன்று வாங்கவேண்டும். ஆனால் நான் வைத்திருப்பது நோக்கியா சாதாரண மாடல். அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம்.


 


எழுந்து  நோக்கினால் பவா செல்லத்துரை. கிட்டத்தட்ட பதினாறுபேர் வந்திருந்தார்கள் அவருடன். ஷைலஜா, ஜெயஸ்ரீ ,வம்சி ,மானசி ,சுஹானா என பெரிய கூட்டம். இங்கே புத்தகக் கண்காட்சி நடந்து நேற்றோடு முடிகிறது. தலைமையுரை ஆற்ற பவா வந்திருந்தார். விகடன் ஊழியராக இருக்கும் ராம் ஏற்பாடுசெய்திருந்தார்


 


பிறந்தநாள் அதுவுமாக காலையில் குளிக்கவில்லை. ஷேவ் செய்யவில்லை. தூக்கக் கலக்கம். ஒரு நல்ல சட்டை போடலாமென்றால் பீரோ சாவி எங்கே என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் உற்சாகமாக இருந்தது. ராம் ஒரு கேக் வாங்கிவந்தார். அதை வெட்டினேன்.


 


நான் பிறந்தநாள் கேக்கே வெட்டியதில்லை. எங்களூரில் சாஸ்தா, யக்‌ஷி கோயில்களில் ’வழிபாடு’ அளிப்பதே பிறந்தநாள் கொண்டாட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாஸ்தா. எனக்கு அளப்பங்கோடு கண்டன் சாஸ்தா. அவர் மாடு கன்று விலங்குகளுக்கு உரிய தெய்வம். யானைகளுக்கு விசேஷமாக. அங்கே விறகு பச்சரிசி வெல்லத்துடன் சென்று பொங்கலிட்டு வணங்கி வருவோம்.


jeya

ஜெயஸ்ரீ


 


வளர்ந்தபின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. பிள்ளைகளுக்காக கேக் வெட்டுவோம். நான்தான் வெட்டுவேன்.நானே சாப்பிடவும் செய்வேன். முதல்முறைக் கேக் வெட்டியபோது கூச்சமாகத்தான் இருந்தது. வீட்டில் அருண்மொழி இல்லை. பால் இருந்தது, ஆனால் டீயெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.


 


மதியம் வரை தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொன்னேன். பின் ஒரு நீண்ட தூக்கம். மாலை ஐந்துமணிக்கு அருண்மொழி வந்தாள். நானும் அவளும் அஜிதனும் கிளம்பி புத்தகக் கண்காட்சி சென்றோம். நான் தேவிபாகவதம் வாங்கினேன். அஜிதன் ‘சென்னை மாதிரி வெளியே நிருபர்கள் நின்னுட்டு என்ன புக் வாங்கினீங்கன்னு கேட்டா காமெடியா போயிரும்” என்றான்.


 


ஆனால் அறிவுஜீவி என்பவன் சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குபவன்தான். நான் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கட்டைப்பை நிறைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு சுஜாதாவை பார்க்கச்சென்றேன். “என்ன புக்?” என்று ஆர்வமாகக் கேட்டார். ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தார். போகர்மருத்துவம், ரசவாதம், சங்க இலக்கியத்தில் தாவரங்கள், வேர்ச்சொல் அகராதி என கலவையான புத்தகங்கள்.


uthaya

உதயகுமார்


 


சுஜாதா முகம் மலர்ந்து “அட அட…இதைத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன். இண்டெலக்சுவல்னா வினோதமா எதையாவது வாசிக்கணும்… ஒருத்தர் கையிலே பனிக்கோடாரி மாதிரி நினைக்கவே முடியாத ஒரு புத்தகம் இருந்தாத்தான் அவர் வேற ஆளுன்னு அர்த்தம்’. நான் வைத்திருந்த அடிப்படைஹோமியோபதி, தமிழ்நாட்டுக்கொலைவழக்குகள் போன்ற நூல்களை அவர் ஆர்வமாக எடுத்துக்கொண்டார்.


 


விழாவில் ஷைலஜா சிறப்பாகப் பேசினார். முன்னுரை, வரவேற்புரை அளித்தவர்கள் ஆளுக்கு ஒருமணிநேரம் பேசியமையால் கடைசியில் சிறப்பு அழைப்பாளரான பவா பேசநேரமில்லை. இந்தமாதிரி நகைச்சுவைகள் தமிழ்நாட்டில் சாதாரணம். விழாவில் என்னையும் அருண்மொழியையும் அஜிதனையும்  மேடைக்கு அழைத்து மீண்டும் கேக் வெட்டவைத்தார்கள். ஒரு பிறந்தநாளுக்கு இரண்டு கேக்.


 


மிஷ்கின் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய குரலும் சிர்ப்பும்போல என்னை கவரும் பிறிதொன்றில்லை. பொங்கிக்கொண்டே இருக்கும் ஆளுமை. தன்னம்பிக்கை, மூர்க்கமான அன்பு, நேற்றும் நாளையுமில்லாத பித்து. மிஷ்கின் நாம் புனைவுகளில் மட்டுமே கண்டறியும் கலைஞனின் ஆளுமை கொண்டவர்.


mysh

மிஷ்கின்


 


பறக்கை ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட   உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஒரு கூட்டமே உள்ளே வந்ததில் அவர்கள் கொஞ்சம் திணறிப்போனார்கள். செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மீன் உணவுகள் அங்கே கிடைத்தன. சமீபத்தில் நான் சாப்பிட்ட நல்ல உணவு. [ம்கும், மல்லுக்களுக்கு மீனை தொட்டியிலிருந்து நேரடியாக எடுத்து வாயிலிட்டாலும் ருசிதான் என அருண்மொழி எண்ணிக்கொண்டதை அறிந்தேன்]சூழியல்போராளி உதயகுமார் அவர்களின் வீடு அருகில்தான். அவரும் வந்து எங்களுடன் கலந்துகொண்டார்.,


 


சாப்பிட்டு பத்தரை மணிக்கு வீட்டுத்திரும்பினேன். ஒரு முழுநாளும் பிறந்தநாள் கொண்டாட்டமாகவே முடிந்தது. இப்படி முன்னர் நடந்ததில்லை. ஆனால் நாள் அணைகையில் ஒரு நிறைவு இருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 12:44
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.