ஏழாம் உலகம் – கடிதம்

2எeEzham-Ulagam-Wrapper---final



அன்புள்ள ஜெ,


நலமா?


தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது. இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்ட பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்து கொண்டேன். நன்றி.



rajesh


ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்து கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.


நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துகொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துகொள்ள முடிந்தது.


நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று. முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கை மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள். இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம்.


பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்த்தது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரனுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு போடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப்படுகிறது. பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள். இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம்.


ஆனால் தைப்பூசம் முடிந்த பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது. ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும் கணக்குதேன்… அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிடறது ஒர் தொழில் – அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூலதனம்.


இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன். அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.


பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான். ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு… கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான். ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் ஊனமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு. பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் – உதாரணமாக – ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னு ஜனம் நினைக்கும்.


பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்… குடும்ப வாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.


முத்தமையைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன். பண்டாரம் முத்தம்மையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பதினெட்டு பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்டப்படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன். எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசுகிறது. குடையை விரித்துக் கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக் கொள்கிறார்கள்.) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது… முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் – பிறகு வெறுக்க முடியாது. அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும்.


நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில். பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்


இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்துப் பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவைடயும் என்று நம்புகிறேன்.


நன்றி!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றி!


அன்புடன்,


ராஜேஷ்


***


தொடர்புடைய பதிவுகள்

ஏழாம் உலகம் -கடிதம்
ஏழாம் உலகம்- கடிதங்கள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
கதைகளின் வழி
மின் தமிழ் பேட்டி 2
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
ஏழாம் உலகம்- கடிதம்
நூறுநாற்காலிகளின் யதார்த்தம்
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
ஒளியுலகம்
ஏழாம் உலகின் பண்டாரம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்
ஏழாம் உலகம் கடிதங்கள்
ஏழாம் உலகம்- ஒரு பதிவு
ஏழாம் உலகம் இன்று
சந்திப்புகள் – சில கடிதங்கள்
ஏழாம் உலகம் – ஒரு கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2017 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.