கடிதங்கள்

saratha


 


பேரன்புக்குரிய ஜெ,


என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? இருமுனைகளும் கூர்மைகொள்கின்றன. உச்சகட்ட கசப்பு வெறுப்பு வசைபாடலுக்கு அப்பால் அரசியலே இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இரு சாராரும் மறுதரப்பை தங்கள் கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாகச் சுட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே நிற்பவர்கள் இருவருக்கும் பொது எதிரிகளாக ஆவார்கள்.


 


இது அப்படியே இங்கு அமெரிக்காவில் இருக்கும் அரசியல் சூழலுக்கும் பொருந்தும். ட்ரம்ப்பும் மோதியும் ஒத்தவர்களோ இல்லையோ, இருவரின் தீவிர ஆதரவாளர்களுக்கும் சரி, எதிர்ப்பாளர்களுக்கும் சரி இம்மியளவும் வித்தியாசம் இல்லை. இணையத்தில் ஏதாவதொரு வலதுசாரி-இடதுசாரி விவாதத்தை எடுத்துக்கொண்டு, பெயரை/கட்சியை மட்டும் மாற்றி (ட்ரம்ப் இடத்தில மோதி, மோதி இடத்தில ட்ரம்ப்) வாசித்து பார்த்தால் சுவாரஸ்யமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.


 


சாரதா


அட்லாண்டா


 


 


அன்புள்ள சாரதா


 


பெரிய அளவில் அழிவுகள் உருவாகும்போதெல்லாம் இந்த துருவப்படுத்தல் மிக விசையுடன் முன்னரே நிகழ ஆரம்பித்துவிட்டிருப்பதை உலகவரலாறு எங்கும் காண்கிறோம். வெறுப்பின் குரல் இன்னொரு வெறுப்பின்குரலை வளர்க்கிறது. மாறிமாறி உண்டு இரு பூதங்களும் வளர்கின்றன. எல்லா வரிகளும் திரிக்கப்படுகின்றன. எல்லா தரப்புகளும் ஒற்றைப்படையாக ஆக்கப்படுகின்றன. கடைசியில் இரண்டு வாள்கள் மட்டுமே எஞ்சுகின்றன


 


ஜெ


 


*


 


அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


 


ஒரு வருடம் முன், என் மனைவி என் கையில் ஒரு குங்குமம் புத்தக இதழை கொடுத்து , இந்த கட்டுரை உங்களுக்கு பிடிக்கும் என்றாள் . அது உங்களின் “முகங்களின் தேசம் ” தொடர். ஆரம்ப முதலே மிகவும் ஈர்க்கப்பட்டேன். இணைய தளத்தில் மொத்தத்தையும் படித்தேன்.


 


பிறகு சிறிது சிறிதாக தங்கள் இணைய தளத்தில் கட்டுரைகளையும் படிக்க ஆரம்பித்தேன். சென்னையில் இருந்தால் வசதியாக புத்தக வடிவில் படிக்கலாம் ,அதுவும் வேண்டியது மட்டும். தற்சமயம் வெளி நாட்டில் அஞாத வாசம் , ஆகையால் கையையும் காலையும் கட்டிப்போட்டாற்போன்ற நிலை.


 


வேண்டியது என்றால் , வேண்டாதது தங்களுக்கு எழுதப்படும்  காழ்ப்புணர்ச்சி கடிதங்கள், கட்டுரைகள். முக்கியமாக யார் முதன்மை எழுத்தாளர்கள் என்ற சர்ச்சை.


 


நான் படித்த காலத்தில், ஐம்பது அறுபதுகளில் , அறிவியலோ கணிதமோ எதை தேர்வு செய்து படித்தாலும் , மூட்டை மூட்டையாக ஆங்கில ,தமிழ் இலக்கியம் திணிக்கப்பட்டது. அது கொஞ்சம் ஊறியதும் ஒரு சுவை பிறந்து, படிப்பு முடிந்து வேலை ,குடும்பம் என்று ஆன பின்பும் ஒரு இன்ப அனுபவமாக இருக்கிறது. என் மனைவியும் கல்லூரி ஆங்கில இலக்கிய ஆசிரியை ஆக இருந்தவள்.தமிழ் நவீன இலக்கியத்தில் என்னை விட அதிக ஆர்வம் உண்டு.


 


நான் அவளிடம் கேட்டேன். இன்றைய நிலவரம் என்ன? இவர் எழுத்துக்களில் ராஜநாரயணனின் கரிசல் காட்டு எழுத்துக்கள் போல் ஒரு மணம் உள்ளது. மலை நாட்டு வளம் உள்ளது. பரந்த நோக்கம் தெரிகிறது. மக்களின் பலஹீனங்களை பற்றி ஒரு பரிவு, சாமான்ய மக்களிடமும் விஷயங்களிலும் மதிக்கக்கூடிய அம்சங்களைத் தேடும் பண்பு வெளிப்படுகிறது.  ஆனால் சினிமா தொடர்பும் இருக்கிறது. வேறு யார் யார் நல்ல எழுத்தாளர்கள்?


 


மனைவி சொன்னாள் .” நான் பலர் எழுத்துக்களை படிக்கிறேன். ஜெயமோகன் தவிர யாரையும் உங்களுக்கு recommend பண்ண தோன்றவில்லை. நவீன எழுத்துலகத்தில் இவருக்கு ஒரு தனி இடம் உண்டு.”


 


அவள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். பல விமர்சகர்கள் இலக்கியம்  என்றால் என்ன என்பதில் தெளிவாக இல்லை. அது ஒரு சொல் ஓவியம். அதின் வர்ண ஜாலங்கள்,ஒளி நிழல் ஓட்டங்கள், உயிர்துடிப்பும் , அழகும், பரிமாற்றமும், போன்ற உள்ளக்கிளர்ச்சி ஊட்டும் அம்சங்களே பிரதானம். எழுத்தாளரின் அறிவியல், பொருளாதார ,சரித்திர, நூல் அறிவில்  குறைகள் தோன்றினால்,அவை  விமர்சனங்களுக்கு விஷயம் ஆகக்கூடாது என்பது நெடுங்காலமாக நிலை நின்ற நியதி.


 


ஆனால் படைப்பில் முரண்பாடு இருக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கு உதாரணமாக


” snow in a harvest scene” என்பது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


 


தங்களுக்கு வந்துள்ள சில கடிதங்கள் destructive criticism என்பதற்கும் தாழ்ந்த நிலையில் உள்ளன. அவற்றை எழுதுபவர்கள் எழுத்தாளர்களாக இருந்தால் , அவை பிற்காலத்தில் அவர்களுக்கே வெட்கப்படும் விஷயங்களாக, ஆனால்  அழித்து எழுத முடியாதவை ஆக தோன்றலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


 


அன்புடன்,


 


 


கிருஷ்ணன்


 


அன்புள்ள கிருஷ்ணன்


 


உண்மையில் ஒரு படைப்பைப்பற்றி ஆக்கபூர்வமான மதிப்பீட்டை வைப்பது மிகமிகக் கடினம். அதைப்பற்றி சலம்புவதே எளிய வழி. அதைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். கருத்துத்தரப்பைப்பற்றி ஒரு மறுதரப்பைச் சொல்வதே கூட மிகக்கடினமானது. திரிப்பது, குறுக்குவது எளியது. அதற்குத்தான் அதிகவாசகர்களும் அமைவார்கள். ஆனால் இதெல்லாம் ஏறத்தாழ உலகமெங்கும் ஒரே வகையில்தான் நிகழ்கின்றன என நினைக்கிறேன்.


 


கருத்துக்களைப்பொறுத்தவரை நக்கல், கிண்டல், வசை என ஆரம்பிக்கும் எவரையும் எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என் தரப்பு. புனைகதைகளைப்பொறுத்தவரை அப்புனைகதையின் நுட்பங்களை புரிந்துகொண்டவராகத் தெரியும் ஒருவரின் மாற்றுக்கருத்துக்கே குறைந்தபட்சம் மதிப்பு அளிப்பேன். என் இடமும் பங்களிப்பும் பிற எவரைவிடவும் எனக்குத்தெரியும் – பெரும்பாலான எழுத்தாளர்களைப்போல.


 


ஜெ


 


 


அன்புள்ள சு மோ


 


இல்லை இல்லை அன்புள்ள ஜே எம்


 


யார் கமல்?  நல்ல கேலிப் படம்.


 


சுய மோகா (NARCISSTIC)  நல்ல பதம்.


 


எதோ ஒரு படத்தில் பிரகாஷ் ராஜ் வசனம், “பண்ணி பல குட்டி போடும், அனால் சிங்கம் ஒண்ணு ரெண்டுதான் போடும்”.


 


விட்டுத்தள்ளுங்கள் ஜெ எம்.


 


அனால் அந்த கார்ட்டூன் அற்புதம்.


சிவா சக்திவேல்


 


 


அன்புள்ள சிவா,


 


பலகோணங்களில் நம்மை மற்றவர்கள் புனைந்து உருவாக்குவது நல்லதுதானே? நாம் யார் என்ற சிக்கல் எழும்போது ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்ளலாம்


 


சுயமோகம் இல்லாத எழுத்தாளர்கள் உண்டா என்ன?


 


ஜெ



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.