நிறம்

colour


 


அன்புள்ள ஜெ,


நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது!


http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html


உங்கள் கருத்து?


விஜயசங்கர்


 


அன்புள்ள விஜயசங்கர்,


ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள்.


”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன்.


”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்”


வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக ஏதாவது சின்ன பரிசு வாங்கி கொடுப்பார்கள். அதற்கு வண்ண தாளில் பொட்டலம் கட்டுவது பெயர் ஒட்டுவது என்றெல்லாம் ஏகப்பட்ட சடங்குகள் உண்டு. ஐம்பது ரூபாய் எதற்கு என்று கேட்டேன்


”லாவண்யாவுக்கு யாருமே கிஃப்ட் குடுக்க மாட்டாங்கதானே…அதுக்குதான்” என்றாள்.


”ஏன் கிஃப்ட் குடுக்க மாட்டாங்க?”


”ஏன்னா அவளுக்கு ஃப்ரன்ட்ஸே கெடையாதுல்ல?” ‘


‘ஏன் ஃப்ரண்டிஸ் கெடையாது?”


”அவள்லாம் கறுப்புதானே? அதான்”


எனக்கு கொஞ்சநேரம் புரியவில்லை. ”கறுப்பா இருந்தா என்ன?” என்றேன்


”அய்யோ அப்பா , மக்கு மாதிரி பேசாதே. கறுப்பா இருக்கிற பொண்ணுகூட ஃப்ரன்டா இருந்தா கேவலம்தானே? அதான்”


உண்மையில் அதுதான். மேலும் விசாரிக்க விசாரிக்க ஆச்சரியம் தாளவில்லை. அவள் படிக்கும் கிறித்தவ கான்வென்டில் வெண்ணிறத்துக்கு மட்டும்தான் மதிப்பு. பத்து பெண்கள் அபாரமான சிவப்புநிறம். இரண்டு முஸ்லீம் பெண்கள். நாலைந்து நாயர் பெண்கள். சில கிறித்தவ மீனவப் பெண்கள் மற்றபடி எல்லாருமே கறுப்பு அல்லது மாநிறம். வெள்ளைநிறப்பெண்களுக்கு அபாரமான மதிப்பு.


”கறுப்பு டீச்சர் வந்தால்கூட அவங்க கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. ஸ்கூல் டிராமாவுக்கெல்லாம் அவங்கள மட்டும்தான் சேத்துப்பாங்க…


அந்த வெண்ணிறப் பெண்கள் பிற பெண்களிடம் நட்பாக இருப்பதில்லை. தங்களுக்குள்தான் நட்பாக இருப்பார்கள். ”நாம நல்ல கொழந்தைங்களா இருந்தா சிலசமயம் நம்மளை சேத்துப்பாங்க” என்றாள் சைதன்யா. அந்த நட்புக்காக மற்ற பெண்கள் நடுவே அடிதடி, போட்டி.


ஒரு நாலைந்து பெண்கள் தீவிரமான கருப்பு நிறம். அவர்களை எவருமே பொருட்படுத்த மாட்டார்கள். என்ன கொடுமை என்றால் அந்தப் பெண்களுடன் பிற சுமார் கறுப்புப் பெண்களும் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தனியாகத்தான் வர வேண்டும், தனியாகத்தான் போக வேண்டும்.


”மிஸ் எல்லாம் அவங்களை நல்லாவே அடிப்பாங்க. கறுப்பு சனியனேன்னு திட்டுவாங்க” எனக்கு அதிர்ச்சி. அப்படியெல்லாம் திட்டுவார்களா என்ன?


”இங்கு தீந்து போச்சுன்னு சொன்னப்ப உன் உடம்பிலே தொட்டு எழுதுன்னு எங்க ஸிஸ்டர் சொன்னாங்க” அந்த சிஸ்டர் அதிவெண்மை கொண்ட சிரியன் கிறித்தவப்பெண்.


”லாவண்யாவுக்கு நீ மட்டும்தான் ஃப்ரன்டா?” என்றேன்.


”ஆமா. நானும் கொஞ்சம் கறுப்புதானே. அதனால நான் அவளுக்கு ஃப்ரன்டு. அவ எனக்கு தினமும் நெல்லிக்கா கொண்டு வருவா” நெல்லிக்காய் நாலைந்து நாள் வராவிட்டால் அந்த நட்பும் சிதைவுற வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.


நான் லாவண்யாவுக்கு நூறு ரூபாய்க்கு ஒரு பரிசு வாங்கி கொடுத்தனுப்பினேன். ”நீ இதை எல்லா பொண்ணுகளும் பாக்கிற மாதிரி அவளுக்கு குடு” என்றேன்.


”மத்த பொண்ணுகள் என்னை கிள்ளுவாங்களே”


”என்ன பாப்பா நீ? நீதானே கிளாஸிலே கிள்ளல் எக்ஸ்பர்ட்?”


”அது சரிதான்…..” பிறகு ”நானும் பயங்கரமா கிள்ளட்டா?” என்று அனுமதி கோரி பெற்றுக் கொண்டாள்


என்ன நடக்கிறது நம் பள்ளிகளில்? மெல்ல மெல்ல நாம் பண்பாட்டுப் பயிற்சி இல்லாத ஒரு வர்க்கத்தை ஆசிரியர்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறோமா என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும்தான் பள்ளியில் படித்திருக்கிறேன். என் கிளாஸில் சுதாகரன் என்ற நாயர் பையன் மட்டும்தான் சிவப்பு. அவனை போட்டு மொத்தி எடுப்போம். செவத்த பயலே என்று அழைத்தால் அவன் வந்து வணங்கி நின்றாக வேண்டும். இல்லாவிட்டால் அடிதான். கல்லூரியில் சிவப்பு நிறமான அய்யர் பையன்களை சட்டையை கழற்றி கிளாஸில் கண்ணீர் மல்க அமரச் செய்வோம்.


மேலும் நான் படிக்கும்போது வாத்தியார்கள் அராஜகமாகப்பேசமுடியாது.பேசினால் பையன்களே வாத்தியாரைப்பிடித்து அலகு திருப்பி விடுவார்கள். பையன்களில் எட்டுபேருக்கு பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே திருமணமாகி பிள்ளைகுட்டிகள் இருந்தன. அது வேறு காலம்


விசித்திரமான ஒரு பண்பாட்டுத் திருப்பம் நமக்கு நிகழ்ந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் அழகிய பெண்ணின் நிறம் என்பது மாமை தான். அதாவது மாந்தளிர் நிறம். மாநிறம். ஆனால் கண்ணகி செந்தாமரை நிறம். அந்த இடைவெளிக்குள் நம் அழகு மதிப்பீடு தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.


அருண்மொழிக்கு அவள் சிவப்பா இல்லையே என்ற ஆதங்கம் உண்டு. எனக்கு என் தங்கை ஒரு பெண் பார்த்தாள். நான் மலையாளப்பெண்ணை மணக்க விரும்பவில்லை, எனக்கு தி.ஜானகிராமனின் கதாநாயகிதான் இலட்சியம். நான் பெண் பார்க்கவே செல்லவில்லை. அந்தப் பெண்ணை பின்னாளில் அருண்மொழி ஒருமுறை நேரில் பார்த்தாள் ”அப்படி செவப்பா இருக்கிறாளே, நீ எதுக்கு வேண்டம்னு சொன்னே?” என்றாள்.


”சிவப்பா இருந்தா வேண்டாம்னு சொல்லக் கூடாதா?” என்றேன்


”நல்ல செவப்பா இருக்கா. உனக்கெல்லாம் கொழுப்பு. திமிர். பெரிய இவன்னு நெனைப்பு…”என்றாள் அருண்மொழி கோபமாக. இன்று வரை புரிந்து          கொள்ள முடியாமல் இருப்பது இந்த கோபம்தான் .


நண்பர் யுவன் சந்திரசேகரின் மனைவி உஷா நல்ல கறுப்பு நிறம். யுவன் உஷா உஷா என்று உருகும் ஆசாமி. அவன் தீ நிறத்தில் இருப்பான். நான் அருண்மொழியிடம் உஷா கறுப்புதான் என்றேன்.


”என்னைவிடவா?”


”ஆமாம்”


அதன் பின்னர்தான் கொஞ்சம் சமாதானம்.


தமிழில் நாம் கடந்தாகவேண்டிய பண்பாட்டு அகழி இது


ஜெ


 


 


மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் டிசம்பர் 2009


 


நிறம் ஒரு கடிதம்


நிறம் கடிதம் 2

தொடர்புடைய பதிவுகள்

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.
நிறம்- கடிதம் 2
மூதாதையர் குரல்
அசுரர் இன்று
சென்னையின் அரசியல்
அசோகமித்திரன்,வெண்முரசு,சென்னையில் சாதி
காஷ்மீர் கடிதம்
புலியும் புன்னகையும்
ஒரு வெறியாட்டம்
சேவை வணிகர்கள்
டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்
கேரளக் குடிநிறுத்தம்
தேர்வு – ஒரு கடிதம்
வல்லுறவும் உயிரியலும்
கழிப்பறைகள்- கடிதங்கள்
பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்
விதிசமைப்பவனின் தினங்கள்
சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2017 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.