அசோகமித்திரன் ஒரு குறிப்பு

ASOKAMITHTHIRAN-41


ஒரு கட்டுரையில் இருக்கும் உணர்வுச்சமநிலையையும் நடுநிலையையும் அரசியல்சரிகளையும் உணர்ச்சிகரமான  குரல்பதிவு எதிர்வினையில் பேணமுடிவதில்லை. அசோகமித்திரனின் எழுபதுகளின் வறுமையைப்பற்றிய சித்திரம் அவரே என்னிடம் பலமுறை சொன்னது. அவர் இருந்தபோதே நான் பதிவுசெய்தது. அவரே பல பேட்டிகளில் அவ்வறுமையை, கைவிடப்பட்ட நிலையை பதிவுசெய்திருக்கிறார். அவருடைய பேட்டிகளை மட்டும் பின்சென்று இன்று வாசிப்பவர்கள் மிக எளிதாக அச்சித்திரத்தை அடையமுடியும்


 


ஆனால் சிலவிஷயங்களை பொதுவில் பதிவுசெய்திருக்கக்கூடாதென இப்போது உணர்கிறேன். உணர்ச்சிகரமான நிலையில் பேசியிருக்கக் கூடாது என்றும்.அதோடு சிலவிஷயங்களில் சிலர் சொன்னதைக்கொண்டு நான் அடைந்த நினைவுப்பதிவு மற்றும் என் காட்சிப்பதிவு பிழையாக இருக்கலாமென்றும் ஒப்புகிறேன். அவை அசோகமித்திரனின் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிகிறது. அதற்காக அவர்களிடம் நான் வருத் தம் தெரிவிக்கிறேன்.


 


அசோகமித்திரனை நான் கொச்சைப்படுத்துகிறேன், விளம்பரம்தேடுகிறேன் என்றெல்லாம் அவரது குடும்பத்தினர் என்னைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட எழுபது கடிதங்கள் வந்துள்ளன. எழுத்தாளர்கள், இதழாளர்கள் என பலபேர் நான் அசோகமித்திரனை அவமதிப்பதாகவும், அவரை  காப்பாற்றும்பொருட்டு அவர்கள் எழுதுவதாகவும் எழுதியிருக்கிறார்கள். மிகமிகக் கடுமையான சொல்லாட்சிகள்.


 


இக்கடிதங்களின் தொனி வெளிப்படையானது. சென்னையின் பிராமண வட்டம் பலகோடிரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களால் ஆனது. அவை நம் காலத்தில் வாழ்ந்த மேதையை கைவிட்டன என்பது வரலாறு. அவரது நண்பர்கள் உட்பட பலர்குறித்து அவர் சொன்னவை, என் கையில் கடிதங்களாகவே உள்ளவை, சொல்லும் வரலாறு அது.


 


இன்று அவர் ஒரு வரலாற்றுத்தருணமாக ஆனபோது அதன்பொருட்டு குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். ஆகவே அதை மறைக்க முயல்கிறார்கள். அவரை தாங்கள் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியதாக, அவர் அரசனைப்போல வாழ்ந்ததாக, இங்கே வரலாறுகள் எழுதப்படலாம். ஆனால் அவரே எழுதிய பக்கங்கள் அதை மறைக்கமுடியாமல் செய்யும். அவை இங்குதான் இருக்கும்.


 


முப்பதாண்டுக்காலமாக படைப்பாளியாக அவரை இவர்கள் எப்படி அணுகினார்கள் என நான் அறிவேன். அவரைப்பற்றி இவர்கள் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்? என்ன செய்திருக்கிறார்கள்? அசோகமித்திரன் வெறும் வணிக இதழ்ப்படைப்பாளியாக சிற்றிதழ்ச்சூழலில் ஒதுக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அன்றுமுதல் அவரை தொடர்ந்து இலக்கியவாசகர் முன் வைத்துவந்த எழுத்தாளன் நான். இதுவரை 56 கட்டுரைகளை அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். 1992லும் 1999லும் இரு மலர்களை அவருக்காக வெளியிட்டிருக்கிறேன். தமிழில் வேறு ஓர் எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனைப்பற்றி இவ்வளவு  எழுதியதில்லை.இது என்னை முன்வைப்பதற்காக அல்ல. அவருடைய எழுத்துமுறை என் எழுத்துமுறைக்கு முற்றிலும் எதிரானது.


 


இன்று ஒருவகையான சாதிப்பாசத்துடன் எழுந்துவந்துள்ள இக்கூட்டத்திற்கு ஓர் எழுத்தாளனுடன் அடுத்த தலைமுறை எழுத்தாளன் கொண்டுள்ள ஆழமான உறவைப் புரிந்துகொள்ள முடியாது.ஒரு முழுவாழ்நாளும் தொடரும் அந்த உரையாடலை உணரவும் முடியாது, எளிதில் கொச்சைப்படுத்திவிடலாம். அசோகமித்திரனால் புகழ்பெறும் இடத்தில் நான் என்றும் இருந்ததில்லை . அவருக்கு நேர் எதிரான சுந்தர ராமசாமியின் முகாமில் இருந்தேன். ஆனாலும் அந்தச்சூழலிலும் சுந்தர ராமசாமியிடமே கூட என் எழுத்தாளர் அசோகமித்திரனே   என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.சுந்தர ராமசாமிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட என்முதல்நூலிலேயே அதைப் பதிவுசெய்தேன்.


 


சரி, அசோகமித்திரனை அதிகபட்சம் ஆறுமாதம் அவரது சாதி கொண்டாடட்டும். அதன்பின் மீண்டும் இலக்கியவாதிகளாகிய நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். எங்கே போய்விடப்போகிறார்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2017 10:04
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.