‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
53. விழியொளிர் வேங்கைகள்
சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும் புரிந்துவிட்டது. ஒழியாது நிகழ்ந்துகொண்டிருந்த போரில் ஒவ்வொரு நாளுமென தேவர் படைகள் பின்வாங்கிக்கொண்டிருந்தன. சஞ்சீவினி நுண்சொல் இன்றி அவர்கள் அணுவிடையும் முன்னகர முடியாதென்பதை அறியாத எவரும் அக்குருநிலையில் இருக்கவில்லை. ஆயினும் முறைமைப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்லி சுக்ரரிடம் அழைத்துச் சென்றனர்.
கசன் வாயிலில் கூப்புகையில் மலர்களுடன் நின்றிருக்க சுக்ரரின் தனியறைக்குள் நுழைந்த கிருதர் தலைவணங்கி அங்கே ஈச்சை ஓலைப்பாயில் கால்மடித்து அமர்ந்து விழிசுருக்கி நூலாய்ந்துகொண்டிருந்த அவரிடம் பிரஹஸ்பதியின் மைந்தன் கசன் வந்திருப்பதை அறிவித்தார். அப்போது சுக்ரர் கயிலை மலையில் அம்மையும் அப்பனும் ஆடிய இனிய ஆடலொன்றை விவரிக்கும் சிருஷ்டிநிருத்யம் என்னும் குறுங்காவியத்தை படித்துக்கொண்டிருந்தார். அதே முகமலர்வுடன் நிமிர்ந்து நோக்கி “யார், கசனா…! என் இளமையில் அவனை தோளிலேற்றி விளையாடியிருக்கிறேன். எங்கே அவன்?” என்றபடி கையூன்றி எழுந்தார்.
அம்முகமலர்வை எதிர்பார்த்திராத கிருதர் வந்திருப்பவனின் நோக்கம் பற்றி ஆசிரியரிடம் சொல்லலாமா என்று ஐயுற்றார். அப்படி சொல்வது ஒரு வேளை ஆசிரியரின் நுண்ணுணர்வை குறைத்து மதிப்பிடுவதாக பொருள்படுமோ என்ற ஐயம் அவரை தடுத்தது. அந்த இருமுனையில் அவர் உடலும் மெல்ல ததும்பியது. அவரைக் கடந்து சிற்றடிகளுடன் விரைந்துசென்ற சுக்ரர் படியில் மூன்று வெண்மலர்களுடன் வந்து நின்ற பேரழகனைக் கண்டு கைகளை விரித்து உரக்கக்கூவி அருகணைந்து தோள்களை தழுவிக்கொண்டார். உரத்தகுரலில் “வளர்ந்துவிட்டாய்! தோள்திண்மை கொண்ட இளைஞனாகிவிட்டாய்!” என்றார். அவன் குனிந்து அவர் கால்களில் வெண்மலர்களை வைத்துவிட்டு தொட்டு சென்னிசூடினான்.
தன் கைகளால் அவன் புயங்களையும் கழுத்தையும் வருடி முகத்தில் தொட்டு “மெல்லிய மீசை, மென்பட்டு போன்ற தாடி… நன்று! இளமையிலேயே நீ பேரழகு கொண்டிருந்தாய். இளைஞனாக இந்திரனுக்கு நிகராகத் தோன்றுகிறாய்… இளமையில் கண்களில் தெரியும் நகைப்பு… ஆம், இளமையில் மட்டுமே தெரிவது… வருக!” என்றபின் இரு கைகளையும் பற்றி “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றார். “கிருதரே, இவன் என் மைந்தனுக்கு நிகரானவன். பார்த்தீரா, இவனுக்கு நிகரான அழகனை கண்டதுண்டா நீர்?” என்றார்.
அப்போதே கிருதர் என்ன நிகழுமென்பதை உள்ளுணர்ந்துவிட்டார். முடிவுகள் எண்ணங்களால் அல்ல, எப்போதும் உணர்வுகளால்தான் எடுக்கப்படுகின்றன என்று அவர் அறிந்திருந்தார். சுக்ரர் உரத்தகுரலில் “அமர்க… யாரது, இன்னீர் கொண்டுவருக! அமர்க, மைந்தா!” என்றபடி அமர்ந்தார். “நான் ஒரு குறுங்காவியத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். கோடைக் குடிநீர் போல இனியது. வானம்தெரியும் சுனைபோல் ஆழம்கொண்டது. அம்மையிடம் அப்பன் சொல்கிறான், இனியவற்றை விரும்புபவன் இனியவற்றை விதைத்து வளர்க்கட்டும். காதலை விரும்புபவன் அதை காதலிக்கு அளிக்கட்டும் என… அஸ்வாலாயனரின் ஒப்புமைகள் மிக எளியவை. அணிச்செறிவற்றவை, ஆனால் நெஞ்சில் நிற்பவை… நீ காவியம் பயில்கிறாய் அல்லவா?
“ஆம், உண்மையில் வேதமெய்மைக்கும் தத்துவங்களுக்கும் மேலாகவே நான் கவிதையில் ஈடுபட்டிருக்கிறேன்” என்றான் கசன். “ஆம், அப்படித்தான். உன் அகவை அதையே நாடச்செய்யும்… கிருதரே, பார்த்தீரல்லவா?” கிருதர் சுக்ரரை அப்படி ஒரு உவகைநிலையில் கண்டதே இல்லை. பொருள்துலங்கா விழிகளுடன் “ஆம்” என்றார். “என்ன இளமை! இளமையில் எதையும் வெல்லவேண்டும் என எண்ணாது வாழ்பவன் நல்லூழ் கொண்டவன். அவன் அழகையும் இனிமையையும் முழுதாக அறிந்து திளைப்பான்….” என்றார். கிருதர் தலையசைத்தார்.
தன்முன் வந்து நின்ற அழகனைக் கண்ட சுக்ரரின் விழிகள் தேவயானிக்குரியவை என்னும் எண்ணம் கிருதருக்குள் எழுந்தது. கசனிடம் பேசிக்கொண்டிருந்த தேவயானியை தொலைவிலேயே நோக்கியபடி அவர் அணுகியபோது அவள் முகத்திலும், நோக்கிலும், துவண்டு ஒசிந்த இடையிலும் தெரிந்த பெண்மையை முன்பெப்போதும் அவளிடம் அவர் பார்த்ததில்லை. அவனை அழைத்துக்கொண்டு திரும்பி நடக்கையில் அவள் விழிகள் அவருள் மேலும் தெளிந்து எழுந்தன. அதிலிருந்தது காதல் என்பதை ஐயமிலாது உணர்ந்தார். சீற்றமென்றும் ஆர்வமின்மை என்றும் அகல்தல் என்றும் அது தன்னை நடிக்கிறது. ஆர்வமின்மை தன் காதலை பிறரிடமிருந்து மறைக்க, சீற்றம் அதை தன் உள்ளத்திடமிருந்தே விலக்க. அகல்தல் தன் உடலில் இருந்து மறைக்க. காதல் அதை மறைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது. அதைக் கடக்கும் முயற்சிகள் வழியாகவே வலுப்பெறுகிறது. மறுப்பதற்குரிய சொற்கள் வழியாகவே மொழியாகிறது.
அக்காதல் எவ்விளைவை உருவாக்குமென்று அவர் எண்ணமுனை வருநிகழ்வுகளை துழாவிக்கொண்டிருந்தபோதுகூட எழும் காதலொன்றைக் காணும்போது உருவாகும் இனிமை அவருள்ளத்தில் நிறைந்திருந்தது. கசனை நோக்கி ஓடிச்சென்று தழுவிக்கொண்ட சுக்ரரிலும் அதே விழிகளை கண்டார். அச்சமும் ஐயமும் கொண்டு அவர் உள்ளம் தத்தளிக்கையில்கூட ஆழத்தில் நுண் நா ஒன்று அந்த இனிமையைத் துழாவி திளைத்துக்கொண்டிருந்தது. காதலை விரும்பாத உள்ளம் இல்லை. அது உயிர்கள் கொள்ளும் களியாட்டு. ஆனால் அதை மானுடரால் ஆடியிலேயே நோக்கமுடியும். நேர்நின்று நோக்கினால் அதன் பித்து அச்சுறுத்துகிறது. அதன் மீறல் பதைப்பை அளிக்கிறது.
“இங்கே நான் வந்தபின் உன்னை நினைத்ததே இல்லை. வஞ்சத்தால் கூர்கொண்டு முன்செல்பவன் நான். ஆனால் உன்னை மறந்ததே இல்லை என இப்போது உணர்கிறேன்” என்ற சுக்ரர் கிருதரிடம் திரும்பி சிறுவர்களுக்குரிய கொப்பளிப்புடன் “எவ்வளவு வளர்ந்துவிட்டான்! இவனை மடியிலிருத்தி முதல் பறவையை சுட்டிக் காட்டியவன் நான். இவனுக்கு வேதமுதற்சொல்லை ஓதியவனும் நானே. நெய்யை நெருப்பென வேதங்களை இவன் கற்கும் திறன் கண்டு வியந்திருக்கிறேன். ஆசிரியரின் மைந்தன் இவன். எனக்கு இவன் மைந்தனுக்கு நிகர் அல்லது ஒருபடி மேல்” என்றார்.
கசன் கைகூப்பி “என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆசிரியரே. அதன்பொருட்டே இங்கு வந்தேன்” என்றான். இதுவே தகுந்த தருணம் என எண்ணி கிருதர் நாவெடுக்க சுக்ரர் பெருமகிழ்வுடன் அவன் கைகளைப்பற்றி “ஆம், இங்கு நூல் நவில்கையிலெல்லாம் நான் மேலுமொரு மாணவன் என்று நினைப்பதுண்டு. வேட்டைநாய்போல ஆசிரியன் சுட்டிய திசைக்கு பாய்பவனே நல்ல மாணவன். இப்போது உணர்கிறேன், நீயே என் மாணவனாக அமைய வேண்டியவன். எனக்கு நானே என சொல்லும் சொற்களை உன் செவிகளே கேட்க முடியும்” என்றார். “ஆம், அதை நானும் உணர்ந்தேன். தாங்கள் சென்றபின் எந்தையிடம் இத்தனை நாள் கல்வி கற்றேன். அவர் சொற்கள் என் அறிவை சென்றடைகின்றன. அங்கு அவை ஒரு களஞ்சியத்தில் நிறைகின்றன. ஆசிரியரே, அவை அங்கு முளைக்கவில்லை” என்றான்.
கைதூக்கி “நான் விதைக்கிறேன். நூறுமேனி விளையும்” என்று சுக்ரர் கூவினார். “உன்னை முழுமையறிவு கொண்டவனாக்குகிறேன். சென்று அவர் முன் நில்! அவரிடம் சொல், நான் சுக்ரரின் மாணவனென்று! இதுவும் அவர் மீது நான் கொள்ளும் வெற்றியென்றாகுக!” என்றார். கசன் கைநீட்டி மீண்டும் அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “இக்கணம் முதல் நான் தங்கள் அடியவன்” என்றான். அனைத்தும் கைகடந்து சென்றதை உணர்ந்து மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி அக்காட்சியை நோக்கி அமர்ந்திருந்தார் கிருதர். சுக்ரர் திரும்பி “தேவயானியிடம் சொல்க! இவனைப்பற்றி முன்பொருமுறை அவளிடம் நான் சொல்லியிருக்கிறேன். என் ஆசிரியரின் மைந்தன் கசன் என்க! அவரை அவள் நன்கறிவாள், இவனையும் நினைவுகூர்வாள்” என்றார். “அவர்கள் முன்னமே பார்த்துக்கொண்டுவிட்டனர், ஆசிரியரே” என்றார் கிருதர். உரக்க நகைத்து “உண்மையாகவா? பார்த்துக்கொண்டார்களா? நன்று நன்று!” என்றார் சுக்ரர்.
அவர் எப்பொருளில் சொல்கிறார் என்று புரியாமல் ஒருகணம் நோக்கியபின் “தாங்கள் சொல்லாடிக் கொண்டிருங்கள். நான் பிறரிடம் தாங்கள் இவரை மாணவராக ஏற்ற செய்தியை சொல்கிறேன்” என்றார் கிருதர். அவர் சொல்வதற்கு செவிகொடுக்காமல் கசனிடம் “என் மகள் தேவயானி, பேரரசிக்குரிய தோற்றமும் உள்ளமும் கொண்டவள். ஊழும் அவ்வண்ணமே என்கிறார்கள் நிமித்திகர்” என்றார் சுக்ரர். திரும்பி கிருதரிடம் “இவனுக்கு நான் அடிப்படைகள் எதையும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. விதைகள் அனைத்தும் இவனிடம் உள்ளன. அவற்றை உயிர்கொள்ளச் செய்யும் நீர் மட்டுமே என்னிடம் இவன் கற்க வேண்டியது” என்றார்.
தலைவணங்கியபடி வெளியே வந்த கிருதரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டனர். “என்ன சொல்கிறார்? இன்றே அவன் கிளம்பிச் செல்வான் அல்லவா?” என்றார் ஒருவர். இளையவன் ஒருவன் “இங்கு அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று எவரும் அறிவர். ஒருபோதும் நாம் இதை ஒப்ப முடியாது” எனக்கூவ பிறிதொருவன் “என்ன துணிவிருந்தால் அசுரர்களின் ஆசிரியரிடமே தேவகுருவின் மைந்தன் வந்து சேருவான்? இது சூழ்ச்சி” என்றான். “சூழ்ச்சி செய்யவும் அவர்களுக்கு தெரியவில்லை” என்றார் சுஷமர். ஒன்றோடொன்று இணைந்து எழுந்த குரல்கள் அவரைச் சூழ்ந்தன.
ஒவ்வொரு விழியையாக மாறி மாறி நோக்கிய கிருதர் ஒன்றை உணர்ந்தார். சுக்ரர் கசனை உறுதியாக ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஒருவேளை ஏற்கவும் கூடும் என்னும் ஐயம் அவர்களுக்கு இருந்தது என்பதனால்தான் அவர்கள் காத்திருந்தனர். அவர் சொல்லப்போவதை அவர்கள் முன்னரே கணித்து அச்சினத்தை திரட்டிக்கொண்டிருந்தனர். அச்சொற்களை அகத்தே சொல்லிக்கொண்டும் இருந்திருக்கலாம். எண்ண அடுக்குகளுக்கு அப்பால் ஆழத்தில் அவர் அறிந்த ஒன்றையே அவர்களும் அறிந்திருந்தனர். கனிந்த பழத்தில் மரம் தன் இனிமையையும் மணத்தையும் நிறைப்பதுபோல தந்தை தன் மகளின் உள்ளமென எழுந்திருக்கிறார்.
கிருதர் “பிரஹஸ்பதியின் மைந்தரை தன் முதல் மாணவராக நமது ஆசிரியர் சுக்ரர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இனி மறுசொல் வரும் வரை கசன் இங்குதான் தங்குவான்” என்றார். அதை மேலும் அழுத்தி “நம்முடன் அமர்ந்து கல்வி கற்பான். அவனுக்குரிய குடிலையும் பிறவற்றையும் ஒருங்கு செய்ய ஆசிரியர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அனைவரும் திகைத்த விழிகளுடன் அமைதி அடைந்தனர். இளைஞனொருவன் “அவன் எதற்கு வந்தான் என்று ஆசிரியர் அறிவாரா?” என்றான். கிருதர் “ஆசிரியருக்கு கற்பிக்கும் இடத்தில் நாம் இல்லையென்று நான் எண்ணுகின்றேன்” என்றார். “இருந்தாலும் நமது ஐயத்தை சொல்ல வேண்டும். அவர் முதிர்ந்தவர். அக்கனிவால் சிறுமைகளை காணாது செல்லவும் கூடும்” என்றார் சுஷமர்.
சற்று முதிர்ந்த மாணவராகிய சாந்தர் “மிக அழகிய ஒன்று மிகக்கூரியதாகவே இருக்கும் என்கின்றன நூல்கள்” என்றார். கிருதர் “ஆம், ஆயினும் இத்தருணத்தில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று சொன்னார். கிருதர் குடில்களை நோக்கி நடக்க உடன்வந்த சுதமர் “எப்படி அவர் ஏற்றுக்கொண்டார்? இத்தனை வெளிப்படையாகத் தெரியும் ஒன்றை எப்படி அவரால் புரிந்துகொள்ளாமல் இருக்க முடிகிறது? என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார். கிருதர் “புரிந்துகொள்வது மிக எளிது, உத்தமரே. நமதுஆசிரியர் தனது ஆசிரியரை வழிபடுவதை ஒருகணமும் நிறுத்தியவரல்ல. இம்மைந்தன் அவ்வாசிரியனின் மறுவடிவம்” என்றார். சுதமர் அந்த உண்மையை உடலுருவெனக் கண்டவர்போல நின்றுவிட்டார்.
“மண்ணில் பலவகையான காதல்கள் மானுடருக்கு நிகழ்கின்றன. கன்னி மேல் இளைஞர் கொள்ளும் காதல், மைந்தர் மேல் பெற்றோர் கொள்ளும் காதல், தோழர்கள் கொள்ளும் காதல்… ஆனால் ஆசிரியரின்மேல் மாணவன் கொள்ளும் காதல் இவையனைத்திலும் முதன்மையானது. பிற காதல்கள் சுடர்கள் என்றால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள காதலை சூரியன் என்கின்றன நூல்கள்” என்றார் கிருதர். “அத்தனை காதல்களிலும் உள்ளாழத்தில் ஆசிரியனும் மாணவனுக்குமான காதலே அடங்கியிருக்கிறது. கன்னிக்கு ஆசிரியனும் ஆனவனே பெருங்காதலன். மைந்தனுக்கு ஆசிரியனாகிறான் தந்தை. தோழனுக்கு நல்லாசிரியன் தோழனே. கற்றலும் கற்பித்தலும் இன்றி பொன்றாப் பெருங்காதல் நிகழ்வதில்லை.”
“ஏனென்றால் விழைவின்பொருட்டும் வெல்வதன்பொருட்டும் கொள்ளும் காதல்கள் விரைவிலேயே சலித்து பொருளிழக்கும். எல்லையின்றி வெல்லவும் விழையவும் எவரால் இயலும்? கற்றலோ எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” என்று கிருதர் தொடர்ந்தார். “கூறுங்கள், எந்நிலையிலேனும் நமது ஆசிரியருடனான நமது காதல் அணுவிடை குறைபடுமா?” சுதமரும் அவருக்குப்பின் வந்த இருமாணவர்களும் நெகிழ்ந்த முகங்களும் ஒளிவிடும் கண்களுமாக நோக்கி நின்றனர்.
“அது உருமாறக்கூடும். ஆயிரம் திரைகளை அள்ளி போர்த்திக்கொள்ளக் கூடும். பிறிதொன்றென தன்னை நடிக்கக்கூடும். ஆனால் அனல்போல ஒளிக்கும்தோறும் எரிந்தெழும். விதைபோல புதைக்கும்தோறும் முளைக்கும்” என்றார் கிருதர். “இங்கு மூன்று மலர்களுடன் படியேறி வந்தவன் கசனல்ல. பேரழகு மீண்டும் உடல்கொண்ட பிரஹஸ்பதியேதான். கால் நகக்கணு முதல் கூந்தல் இழை வரை அணுவணுவாக நம் ஆசிரியர் நோக்கி மகிழ்ந்து வணங்கி தன் அகத்தில் சூடிய ஆசிரியரின் உருவையே இளந்தோற்றமென இங்கு கண்டு பேருவகை கொள்கிறார்.”
“நம் ஆசிரியர் தன் ஆணவத்தால் தன் ஆசிரியரை எதிர்க்கலாம். இம்மைந்தனை தோள் தழுவுவதால் அச்சிறுமையை கடந்துசென்று மீண்டும் ஆசிரியரை சென்றடைகிறார்” என்றார் கிருதர். பின்னர் புன்னகையுடன் “உறவுகளில் விலகிச்செல்வதும் அணுகுவதற்கான பாதையே. ஏனெனில் அது ஒரு மாபெரும் வட்டம்” என்றார். அவர் அருகே மீண்டும் வந்து “அவன் சஞ்சீவினிக்காகவே வந்துளான்” என்றான் இளமாணவன். “ஆம், அவன் அதை கற்றுச்செல்வான். அவர்கொண்டுள்ள பேரன்பை அவன் அவ்வகையில் களவுக்கு கருவியென்றாக்குவான்” என்றான் இன்னொருவன்.
“ஆசிரியரிடமிருந்து அதை அவன் கற்கவியலாது. ஏனெனில் பிறிதெவருக்கும் அதை கற்பிக்க மாட்டேன் என்று விருஷபர்வனுக்கும் தைத்யர் குலத்துக்கும் அவர் வாக்களித்திருக்கிறார். அந்த நுண்சொல் நம் ஆசிரியருக்குரியதல்ல, அசுரர்களின் செல்வமது. அனைத்தையும்விட நம் ஆசிரியரை அவர் அளித்த அச்சொல்லே கட்டுப்படுத்தும்” என்றார் கிருதர். “அவ்வாறு எண்ணுவோம்” என்றார் சுஷமர். “ஆம், அவ்வாறே நடக்கவேண்டும்” என்றார் பிறிதொருவர். தயங்கிவர்களாக தங்களுக்குள் முழுத்துச் சொட்டும் சொற்களின் தாளத்தைக் கேட்டவர்களாக அவர்கள் கலைந்து சென்றனர்.
விரைவிலேயே கசன் சுக்ரரின் குருநிலையில் அனைவராலும் விரும்பப்படுபவனாக ஆனான். முதலில் அவன் மேல் ஐயமும் அதன் விளைவான சினமும் விலக்கமும் அனைவரிடமும் இருந்தது. அவனை சுக்ரரின் முன்னிலையில் இருந்து அவனுக்கென ஒருக்கப்பட்ட குடிலுக்கு அழைத்துச் செல்கையில் எண்ணி எடுத்த சொற்களால் மறுமொழியிறுத்தார் கிருதர். மாற்றாடை ஒன்று வேண்டுமென்று அவன் கேட்டபோது “மரவுரி அணிவீர்களா அல்லது மலராடையா?” என்று மெல்லிய ஏளனத்துடன் கேட்டார். அதை அவன் உணர்ந்தாலும் “மாணவர்களுக்குரியது மரவுரி அல்லவா?” என்று இயல்பாக மறுமொழி சொன்னான்.
“இங்கு அந்தணர்களுடன் அசுரர்களும் மாணவர்களாக உள்ளனரா?” என்று அவன் கேட்டபோது “இங்குள்ள அந்தணரும் அசுரரே” என மறுமொழி சொல்லிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். அவன் “நானும் அசுரனென்றாக விழைகிறேன், கிருதரே” என பின்னாலிருந்து கூவி சொன்னான். அறியாமல் அவர் திரும்பிவிட அவன் புன்னகைத்து “என் மேல் சினம்கொள்ளவேண்டாம், கிருதரே. நான் நேற்றென ஏதுமிலாது வாழ்பவன்” என்றான். அச்சிரிப்பின் இளமையில் அவர் முகம் மலர்ந்தார். உடனே தன்னை இறுக்கிக்கொண்டு திரும்பிச் சென்றார். ஆனல் மீண்டும் அம்முகம் நினைவுக்கு வந்தபோது புன்னகைசெய்தார்.
அன்றிரவு கசன் தன் குடில்விட்டு வெளியே இறங்கி முற்றத்தில் நின்றபோது அப்பால் மைய முற்றத்தில் நின்ற வேங்கைகளில் ஒன்று அவனை நோக்கி மெல்ல உறுமியது. செவி கோட்டி மூக்கை நீட்டி அவனை கூர்ந்தபின் பின்னங்காலெடுத்து வைத்து உடலைக் குவித்து பதுங்கி முனகியது. அவன் புன்னகையுடன் கைகள் நீட்டி அதை அழைத்தான். அங்கு நின்று செவிகளை அசைத்தபடி அவனை மதிப்பிட்டது. திரும்பி விலாவிலமர்ந்த பூச்சியை விரட்டிவிட்டு கையால் முகத்தை வருடிக்கொண்டது. ஆனால் அதன் உளக்கூர் அவனையே நோக்கியிருந்தது.
அதன் உடன்பிறந்தவை இரண்டும் எழுந்து வந்து அதற்குபின்னால் நின்றபடி அவனை நோக்கின. பிறைநிலா பெருக்கிய ஒளியில் அவற்றின் மென்மயிர்ப்பிசிறுகள் வெண்ணிறப் புல்விதைச் செண்டுகள்போல் ஒளிவிட்டன. ஒன்று மெல்ல திரும்பியபோது இருவிழிகளும் அனனெல சுடர்கொண்டு அணைந்தன. அவன் மீண்டும் ஒருமுறை அவற்றை அழைத்தான். ஒருவேங்கை ஒருமுறை உறுமியபின் திரும்பிச்செல்வதுபோல காட்டி தலைமட்டும் திருப்பிக்காட்டியது. அதை இன்னொன்று மெல்ல அடித்தது.
கசன் அவற்றை நோக்குவதைத் தவிர்த்து நிலவை நோக்கி இடையில் இரு கைகளையும் வைத்தபடி முற்றத்து செண்பக மரத்தடியில் நின்றான். மெல்லிய காலடிகள் கேட்டும் திரும்பி நோக்கவில்லை. அவனருகே வந்து சற்று அப்பால் நின்ற வேங்கை தாழ்ந்த ஒலியில் உறுமி அவனை அழைத்தது. அவன் திரும்பி நோக்காமல் வானையே நோக்கிக்கொண்டிருந்தான். அது மீண்டும் அருகே வந்து அழைத்தது. அவன் திரும்பி நோக்கி புன்னகைத்து அழைக்கும்பொருட்டு விரல் சொடுக்கினான். பூனைக்குட்டிபோல் முதுகை வளைத்து தூக்கி வாலை செங்குத்தாகத் தூக்கி கால் தூக்கிவைத்து அவனை நோக்கி வந்தது. மெல்ல முனகிக் கொண்டு அவன் கால்களில் தன் விலாவை தேய்த்துச்சென்றது.
அப்போது அதன் உடலிலிருந்து எழுந்த மணத்தை உணர்ந்த பிற வேங்கைகள் அங்கிருந்து செல்லத்துள்ளலுடன் பாய்ந்து ஓடி வந்து அதை பொய்க்கடி கவ்வி விலக்கியபின் தாங்கள் அவன் மேல் உரசின. அங்கிருந்த சிறு கல்லொன்றில் அமர்ந்து அவன் அவ்வேங்கைகளை கொஞ்சத் தொடங்கினான். அவற்றின் காதுகளுக்குப் பின்னாலும் அடிக்கழுத்திலும் வருடினான். அவற்றிலொன்று உடனே அவன் முன் மல்லாந்து படுத்து நகமெழாத பூங்கால்களால் அவனை மெல்லத்தட்டி வால் குழைத்து விளையாடத்தொடங்கியது. இன்னொன்று அதன் அடிவயிற்றை முகர்ந்தது. பிறிதொன்று அவன் பின்னால் சென்று தன் முதுகை உரசியபடி சுழன்றது. எழுந்து தன் இரு கால்களையும் அவன் தோள்களில் வைத்து தலையை தன் தலையால் தட்டி விளையாடியது.
அவற்றின் ஓசை கேட்டு தன் குடிலில் இருந்து ஓடிவந்த தேவயானி விழிதுழாவி அப்பால் கசனின் குடில் முன் அவை அவனுடன் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தாள். தன் குடில் வாயிலிலேயே மூங்கில் தூணைத் தழுவியபடி கன்னத்தை அதில் பதித்து, குழல்கட்டு அவிழ்ந்து சரிய தலை சாய்த்து நின்று அவ்விளையாட்டை நோக்கிக்கொண்டிருந்தாள்.. அவள் நோக்கிக்கொண்டிருப்பதை ஆழ் புலன் ஒன்றால் உண்ர்ந்த கசன் திரும்பி அவளை பார்த்தான்.
அரையிருளிலும் மின்னும் அவள் கண்களுடன் நோக்கு கோக்க அவனால் முடியவில்லை. அவள் தன் ஆடையை திருத்துகையில் எழுந்த அணியோசை தொலைவிலிருந்து அவனை வந்தடைந்தது. அவள் நோக்குவதை அவன் நோக்கினூடாக அறிந்த வேங்கைகளில் ஒன்று எழுந்து நின்று அவளைப்பார்த்து உறுமி பின்னர் துள்ளி ஓடி படிகளில் தாவி ஏறி அவளருகே சென்று வாலைத்தூக்கியபடி அவள் உடலை தன் உடலால் உரசித் தழுவி சுழன்றது.
மீண்டுமொரு உறுமலுடன் அங்கிருந்து அவனை நோக்கி ஓடிவந்தது. அவனருகே படுத்திருந்த வேங்கை எழுந்து வால் தூக்கி அவளை நோக்கி உறுமியபடி இருகால்களையும் விரித்து இதோ ஓடிவிடுவேன் என்று சைகை காட்டியது. அவள் புன்னகைத்து அதை சுட்டுவிரலால் அருகழைத்தாள். அவ்விரலின் ஓரசைவுக்கும் அதன் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. பின்னர் உவகையொலியுடன் அது பாய்ந்து அவளை நோக்கி சென்றது. கசன் அவளை நோக்கி புன்னகைத்தான். அவள் புன்னகையுடன் தன் அறைக்குள் செல்ல அங்கு நின்றிருந்த வேங்கை திரும்பி அவனை நோக்கி உடல்குழைத்தபடி ஓடிவந்தது.
தொடர்புடைய பதிவுகள்
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

