பிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு

index


அன்புள்ள ஜெ


 


 


​ஞானபீடம் வென்ற கதாசிரியர் அம்ரிதா பிரிதமின் நாவலின் காட் சி வடிவான, பிஞ்சர் எனும் திரைப்படத்தை  கண்டேன்.. மகத்தான நாவலை வைத்து நம்மவர்கள் எடுத்துள்ள மகத்தான திரைப்படம்..


 


பொதுவாக நம் மக்களிடம் ஒரு பேச்சு உண்டு… ​கடந்த கால மக்கள் நம்மை விட நிம்மதியாக​ / ​மகிழ்ச்சியாக​ / ​ஆரோக்கியமாக​ /​ பாதுகாப்பாக  இருந்தார்கள் என்று… அது ஒரு விருப்ப கற்பனை மட்டும்தானே….


 


 


1946 காலகட்ட பஞ்சாப் கிராமம்… புர்ரோம் எனும் கதை நாயகிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது… ​செல்வசெழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்த ​ இனிய குணம் நிறைந்த மகள், தோழி, சகோதரி அவள்…


 


 


அவளை பார்த்து காமுறுகிறான் முசல்மான் ஒருவன் ( மனோஜ் பாஜ்பாய்), ஓர் பகலில் தோட்டத்தில் வைத்து, மிக மிக மிக எளிதாக ​அவளை ​கடத்தி செல்கிறான்..


 


 


விசயம் புர்ரோவின் குடும்பத்திற்கு தெரிகிறது.. அவர்களின் முதல் கவலையே, பெண் கடத்தப்படுதல் என்பது குடும்பத்திற்கு இழுக்கு என்பதும் இது வெளியில் தெரிய கூடாது என்பதுமே..​ ​யார் கடத்தியது என்றே தெரியாததினால், அவளை மீட்க எதுவும் செய்ய முடியவில்லை..


 


 


இரண்டு நாள் கழித்து அவளின் தந்தை ஓர் இடத்திற்கு அழைத்து செல்லபடுகிறார் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு…​ ​அவரின் பெண்ணை கடத்தியது தாங்கள் தான் என்றும், அவர்களுக்கும் / அவர்கள் குடும்பத்து பெண்களுக்கும், இவரின் மூதாதையர்களால்,  இழைக்கபட்ட அநீதிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே புர்ரோவை கடத்தினோம் என்றும் தெரிவிக்கிறார்கள்…


 


 


இது குறித்து வெளியில் தெரிந்தா​லோ/  போலீஸிடம் சென்றாலோ, அவரின் அடுத்தடுத்த பெண்களுக்கும் இதுதான் நிலை என்பது போல மிரட்டப்படுகிறார்…​ மிகுந்த வலியுடன் ​தன் பாசத்துக்குரிய பெண்ணை, அதோடு கைவிடுகிறார் அத்தந்தை…​கடத்தியவன் வீட்டில் நீர் கூட அருந்தாமல் அழுது கொண்டிருக்கும் புரோ, ​ஒரு வாரம் கழித்து, இரவில்​அங்கிருந்துதப்பித்து,  அடித்து பிடித்து, தன் வீடு வருகிறாள்​..​ இரவு நேரம், வீட்டு கதவு தட்டப்படுகிறது… தன் வீட்டிற்கு தப்பித்து வந்து விட்டோம் என்ற உணர்வில் இருக்கிறாள் புர்ரோம்..


 



​.. ​


கதவு திறக்கப்படுகிறது…புரோவை பார்த்த அவள் தாயும், தங்கைகளும் வாரி அணைக்கின்றனர்…​ ​இறுகிய முகத்துடன் இருக்கும், தந்தையின் காலடியில் வீழ்கிறாள் புர்ரோ…​ ​வாரி அணைக்க வேண்டிய தந்தை​ ( மிகுந்த பாசம் நிறைந்த தந்தை அவர் )​


 


 


ஏன் இங்கு வந்தாய்? உன்னை தேடி வரும் அவர்கள் எங்களை கொல்ல வேண்டுமா? மீதமிருக்கும் இரண்டு பெண்கள் வாழ வேண்டாமா? ​ ​நீ கடத்தப்பட்டது ஊருக்கு தெரிந்து, நான் தலை குனிய வேண்டுமா? உன்னை ஏற்று கொண்டாலும், இனி யார் மணப்பர்? காலமெல்லம் உன்னை எப்படி நான் சுமப்பது? எங்கேயோ செல், இங்கே வராதே, என் மகள் இறந்து விட்டாள் என்கிறார்….


 


 


எவ்வளவோ கெஞ்சும், கதறும் புர்ரோவின் சொற்கள், அவளின் தாயாராலுமே மதிக்கப்படுவதில்லை… ( முதற்கனல் – அம்பை ​ – பால்குனர் ​ நினைவுக்கு வந்தது) சவம் போல் அந்த வீட்டில் இருந்து வெளி வருகிறாள்? வீட்டின் அருகில் ஒரு கிணறு தெரிகிறது….


 


 


அந்த கிணற்றடியில் மனோஜ் பாஜ்பாய் அமர்ந்திருக்கிறா​​ர்… அவள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருப்பவன்.. அவனுடன் இருந்த நாட்களில் அவளை தொடாதவன்…உன்னை உன் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்பது தெரியும் என்கிறான்.. ​ கைவிடப்படுதலின்  பெருவலியில் இருக்கும் அவள், சித்த பிரமை பிடித்தவள் போல அவனுடன் செல்கிறாள்​…​


 


 


இது போல பல நுட்பமான ​கவித்துவ ​​தருணங்கள் செறிந்தது இத்திரைப்படம்.. ​படத்தின் இறுதி காட்சி ஒரு​மகத்தான ​நீள்கவிதை.. ​​ ​புர்ரோவுக்கும் அவள் அண்ணனுக்குமான பாசம், அவளை மீட்க அவன் தொடரும் போராட்டம், புர்ரோவை மறக்காமல் இருக்கும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, பிரிவினையின் ஊற்றுக்கண் அதன் கறை படிந்த நிகழ்வுகள், இந்திய சுதந்திரம்​, பிரிவினையில் இந்துஸ்தானத்தின் பெண்கள் அடைந்த மாபெரும் துயரம் ​ என ஆழமான அகவய உணர்வுகளால் பின்னப்பட்ட திரைக்காவியம் இது…


 


 


இத்திரைப்படம் பின்னிச்செல்லும் ஊடுபாவுகளில் முக்கியமானது,​ இந்திய  பெண்களின் மீது ஆண்களும், இந்த சமூக​மும் ​செலுத்தும் எல்லையில்லா சுரண்டல் மற்றும் வன்முறை…


 


 


​அடிவாங்கி  அழுதாலும் அடித்த தாயிடமே மீண்டும் செல்லும் குழ​வி போல, பெண்கள் மறுபடியும் ஆண்களிடமும், இந்த சமூகத்திடமுமே வர​ வேண்டியிருக்கிறது…


 


​​சீதை​ / கண்ணகி போன்ற  இலட்சிய படிம​ங்கள் நிலைபெற்றுள்ள தேசம் இது..​  அமைதி, பொறுமை, எதிர்கேள்வி கேட்க்காமல்​ கணவனுக்கு  கீழ்ப்படிதல் எனும் ​குணங்கள் அவளின் இயல்புகளாக சொல்லப்படுகின்றன.. நூற்றாண்டுகளாக ​இந்திய பெண்களை துன்பத்தில் தள்ளும் தளை​களில்  ​இ​துவும் ஒன்றா?


 


 


​எந்த எதிர்ப்பும் / சத்தமும் எழுப்பாத பல​வீ​ னம்​ (முரணியக்கமின்மை)​ பலத்தால்​ சுரண்டப்படும் அல்லது ​ முற்றாக வெல்லப்படும் ​என்பது ​இயற்கையின் நியதி​… ​அப்படி இருக்க கணவனை கிஞ்சுத்தும் எதிர்க்காத “சீதை மாடல்” ​நடைமுறை நோக்கில் ​பிழைகள் கொண்டதா?


 


 


​​மகத்தான மலர்தலையும், தன்னளவில் முழுமையும், ஆன்மீக விடுதலையையும்​, கனிதலின் ருசியையும், ​இன்னும் பலதையும் சீதை அடைந்திருக்கலாம்..​ ஆனால் சீதையை காட்டி காட்டி வளர்க்கப்படும் / அவளை பின்பற்றும் நம் பாட்டிகளும், அம்மாக்களும், அக்காள்களும்​ அடைவது என்ன? சீதை எனும் படிமத்தால் இந்திய ஆண்களும், இந்திய சமூகமும் அடையும் நன்மைகள் பல.. மாறாக இந்திய பெண்கள் துன்பத்தையே அதிகமும் அடைகிறார்களா? ​ எனும் பல கேள்விகள் சூழ்ந்து நிற்கின்றன.. இது குறித்து உங்கள் எண்ணங்களை அறிய விழைகிறேன்…


 


நன்றி..


 


பிரசாத்.​


சேலம்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2017 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.