வழித்தனிமை
இன்று நேற்றைய உணர்வு நிலையின் நேர் எதிர். இதுவே வாழ்க்கை. மிக அணுக்கமான ஒருவருக்குள் இருந்து குரூரமான ஒரு வெறுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அன்பை விட வெறுப்பு மிக மிக உண்மையானது. அதுவே அதை ஆற்றல் மிக்கதாக்குகிறது. இது அடிக்கடி நிகழ்வது. எத்தனை முகங்கள். மானுட உள்ளங்களை அறிந்தவன் என்னும் முறையில் அது இயல்பென உணர்கிறேன். எளிய மானுடன் என்னும் முறையில் கையாலாகாதவனாகவும்.
அனேகமாக எப்போதுமே பிழை என் மீதுதான். காரணம் என் மிதமிஞ்சிய தன்முனைப்பு, அதை ஆணவம் என்று சொல்லலாம் தான்- எனக்கே கஷ்டமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் நான் சுயநலமியாக அல்லது சுயமைய நோக்கு கொண்டவனாகவே எப்போதும் இருந்திருக்கிறேன். என் அலைக்கழிதல்கள் வழியாக என் கலையை அடைய மட்டுமே முயன்றிருக்கிறேன்
ஆனால், பிறரைச் சுரண்ட முயன்றதில்லை. பிறரை பயன்படுத்திக் கொண்டதுமில்லை. சிறியோரை அவமதித்ததில்லை. நேர்மையென நான் எண்ணுவதில் பெருமளவு நிலைகொண்டிருக்கிறேன். அவ்வகையில் சுந்தர ராமசாமிக்குக் கடன்பட்டவன். சொல்லப்போனால் அவரை ‘இமிட்டேட்’ செய்கிறேன். அவருடைய சமநிலையை மட்டும் அடையமுடியாமல் சரிந்துகொண்டே இருக்கிறேன். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியும் கொண்டிருக்கிறேன்
வழக்கமாக எனக்கு வரும் மின்னஞ்சல்களில் வசை என எனக்குப் படுவனவற்றை உடனே அழித்துவிடுவேன். வசைபாடிகளை உடனே தடுத்தும் விடுவேன். இன்று குப்பைக் கூடைக்குள் சென்று அந்த மின்னஞ்சல்களை எடுத்துப் பார்த்தேன். துன்பம் மேலும் துன்பத்தைக் கோருகிறது, ஏனென்றால் அது ஒரு திளைப்பு
எத்தனை வசைகள். எவ்வளவு அதியுக்கிரமான வெறுப்பு. ஏழு தலைமுறைக்கான சாபங்கள். இஸ்லாமியர், இந்துத்துவர், இடதுசாரிகள், திராவிட இயக்கத்தினர், இவை ஒன்றுமே அல்லாத என்னைப்போன்ற எளியவர்கள். இவையும் நான் ஈட்டியவையே. சென்று குத்தும் சொற்களுக்காக.முற்றிலும் தகுதியுடைய வசைகள்.
இவற்றைக் கடந்து நிற்கச்செய்வது அழியாமல் என்னுள் கொந்தளித்துக் கொண்டே இருக்கும் படைப்பூக்கம். அது இல்லாத நாட்கள் மிகமிகச் சிலவே. அந்த தெய்வப்புரவிமேல் இருக்கையில் தேவனாக உணர்கிறேன். ஒளிமிக்க உலகங்களில் வாழ்கிறேன். குனிந்து எளிய மானுடரை நோக்கிப் புன்னகை செய்கிறேன். அங்கிருப்பவனை இங்குள்ள வெறுப்புகள் ஒன்றுமே செய்வதில்லை. அமர்ந்தாலே கதைபெருகும் விரல்கள் இருப்பதுவரை வானமே என் பாதை.
ஆனால் உபாசனா மூர்த்திகள் கைவிடும் காலம் வரும். மந்திரங்கள் நாவில் தடுமாறும். பல்விழுந்து ஒலி மாறுபாடு கொள்ளும். அப்போது தேவதைகள் பேய்களாகி கண்கள் ஒளிர தன்னை ஆள்பவனை நோக்கியே திரும்புகின்றன. இந்த உத்வேகம் அணையுமென்றால் நொய்மை கொண்டு உளம் நலிவேன். அன்று கூழாங்கற்கள்கூட பெரும்பாறைகளாக வந்து மேலே விழுமோ? இவையனைத்தும் கோரவடிவெடுத்துச் சூழ்ந்துகொள்ளுமோ?
எங்கிருந்து இவையெல்லாம் தொடங்கின? இன்றெல்லாம் அம்மாவின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தேன். என்ன ஒருவிழிகள். இறந்ததுமே மானுடவிழிகள் தெய்வ நோக்கு கொண்டு விடுகின்றனவா? இதெல்லாம் அவள் கொண்ட ஆணவம். எட்டு வயதில் சொன்னாள், “இன்று ஒன்றை நீ தெரியவில்லை என்று சொல்லலாம், நாளையும் அப்படியே சொன்னால் நீ தோற்றுப் போனவன்” தோற்கலாகாதென்று எப்போதும் வெறிகொண்டிருந்தேன். “அவர்களைப் போன்றவன் அல்ல நீ, அவர்கள் வேறு நீ வேறு” எப்போதும் தனித்திருந்தேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது கையில் ஒரு அறுவை சிகிழ்ச்சை. மூங்கில் முள் குத்திச் சீழ்கட்டியது. மரப்பு மருந்து போடலாம் என்றார் டாக்டர். “வேண்டாம் அவன் வலிதாங்குவான்.” என்று அருகே நின்று சொன்னாள். என் கையை அறுத்துக் கிழிப்பதை நான் நோக்கிக் கொண்டிருந்தேன். திரும்பும் வழியில் “அதென்ன கேவலம், வலிமுன் தோற்பது?” என்றாள்
அந்தப்பெண்மணியிடம் ஏதோ மிகமிகத் தவறாக இருந்திருக்கிறது. நோபல்பரிசுபெற்ற சால் பெல்லோவின் நூலை மெல்ல தூக்கி போட்டு “ரொம்ப கொஞ்சதூரம்தான் பறக்க முடியும் இவனால்” என்றவள். கிராமத்தில் புல்பறித்து மாடு புரந்த பெண்மணியின் குரல் அல்ல அது. நேராக அவள் தூக்குக் கயிற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் அப்போதே.
அவளிடமிருந்து வந்திருக்கலாம்.அறிவாணவம் ஒருபோதும் மடங்க விட்டதில்லை. வலிக்கும் தனிமைக்கும் மடிந்ததில்லை. வெறுப்புக்குரியதாக இருந்தாலும் நாற்றமடிப்பதாக இருந்தாலும் ஆணவமே காப்பென இருந்துள்ளது இன்றுவரை. வருவது படைப்புவறுமையின், முதுமையின் வெறுமை என்றால்? நிமிர்ந்தே விழுவது நிகழவேண்டும் என்றல்லாமல் இப்போது எதை வேண்டிக்கொள்வேன்? விழியொளிர வந்துசூழும் பேய்களுக்கு என்னை விட்டுக்கொடுக்காமலிருக்க வேண்டும் என்பதல்லாமல் எதை விழைவேன்?
முப்பத்தொரு ஆண்டுகளாக நாள்தோறும் அவளை எண்ணியிருக்கிறேன். ஆக அவளுக்கும் ஒரு கடமை இருக்கிறது. இவ்விரவில் அவள் விழிகளையே நோக்கியிருக்கிறேன். அவள் இறந்த போதும் நான் அழுததில்லை. ஆண்கள் அழலாகாது என பயிற்றுவிக்கப்பட்டவன். இன்று இத்தனிமையில் என் கண்ணீரை தொட்டுப்பார்க்கிறேன் எனக்கும் விழிநீர் உண்டு என ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று அறிந்தேன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

