யோகமும் மோசடியும்

index


 


அன்புள்ள ஜெமோ


நான் மணி மும்பையிலிருந்து


 


நித்தியை எதிர்த்த நீங்கள் ஏன் ஜக்கியை ஆதரிக்கிறீர்கள்?


உங்கள் பதில் இது


நித்யானந்தா செய்வது நோய்குணப்படுத்துதல். டிஜிஎஸ் தினகரன் , சாது அப்பாத்துரை, மோகன் சி லாசரஸ் செய்வதுபோல.


நோய் குணப்படுத்துதல் ஹீலிங் முறை என்று சொல்கிறோம். அதை டிஜீஎஸ் தினகரனோடு சம்பந்தப்படுத்துவது அநியாயமானது.


குண்டலினி சக்தியால் விழிப்புறும் சக்தி மையங்களும், யோகியின் தொடலால் வரும் மின் அதிர்வுகளும் (பீட்டா நிலையும்) நிறைய உடலியல், உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது அடிப்படை யோக அறிவியல்.


இதைப்பற்றிய சில அறிவியல் அடிப்படை சொல்லும் விடியோக்கள்


https://youtu.be/CcMAL0cgX14


 


https://youtu.be/nDqucDVeX7Y


 


சுவாமிஜி சொல்லும் ஓவ்வொரு யோக சாஸ்திரமும் சாஸ்திர பிரமானம், ஆப்த பிரமானம் மற்றும் சாட்சி பிரமானங்களோடு இருக்கிறது. அவர் எதையும் தான் கண்டுபிடித்ததாக சொல்வதில்லை. தனது குருபரம்பரை மற்றும், யோக குறிப்புகளையும் சேர்த்தெ தருகிறார்.


http://www.nithyananda.org/nithya-kriyas#gsc.tab=0


மேற்கண்ட லிங்கில் 108 வியாதிகளுக்கான கிர்யாக்களை அதன் மூலக்குறிப்புகளோடு காணமுடியும்.


 


  அவர் தன்னை கடவுள் என்கிறார். அது மோசடி. ஆகவே எதிர்த்தேன்,


மணி :அவர் தன்னை கடவுள் என்று எப்போதும் சொன்னதேயில்லை.


I am not her to say i am God. I am here to say you are God.


நம்முள் இருக்கிற இறைத்தன்மையை பற்றியே அவரது பேச்சு. வேதாகமம், உபநிடதங்கள், புராணங்களை சுவாமிஜியை விட அதிகமாக பேசிய கார்ப்பரேட் குருக்கள் ( இந்த பதத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ) யாருமில்லை.. 20000 மணி நேரத்திற்கு மேலான வீடியோக்கள் யூடிப்பில் கிடைக்கும்.


https://youtu.be/v69nS34UZ6U


பெரும்பாலான குருக்கள் தங்களது இந்து அடையாளத்தையும், மெதுவாக புறக்கணிக்கும் இந்த வேளையில் இந்து மத அடையாளங்களை விட்டுக்கொடுக்காது பேசுவது அவ்வளவு எளிதல்ல என்பது தாங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.


 வசைபாடவில்லை, தடைசெய்யக்கோரவுமில்லை. கவனம் என அறிவுறுத்தினேன். 


பிரச்சனைகள் எழுந்த போது உண்மையே வெல்லும் என்று எழுதியிருந்தீர்கள்.. நடுநிலமையோடு அலசியிருந்தீர்கள்.


ஜக்கி செய்வது ஒரு கருத்தைப் பரப்புதல். அதனுடன் விவாதிப்பதோ புறக்கணிப்பதோ அறிவுடையோர் செயல்.


வசைபாடுவதல்ல. நித்தி என்று மஞ்சள் பத்திரிக்கையும்,  இந்து மத வெறுப்பு  மீடியாக்களும் எழுதலாம்.. நீங்களுமா.. நித்தியானந்தா என்று எழுதலாமே..


மூடநம்பிக்கைகளை பரப்பாதவரை, நோயை குணப்படுத்தல் என்றெல்லாம் அறிவியலுக்கு எதிரான பேச்சுக்களை பரப்பாதவரை, பழமைவாதத்தில் ஊன்றி சாதியக்காழ்ப்பை முன்வைக்காதவரை அவை செயல்படும் உரிமைகொண்டவையே.


நோயை குணப்படுத்துதல் அறிவியலுக்கு எதிரான பேச்சல்ல.. ரேகி, பிரானிக் என்று பல வகை அறிவியல்கள். இது ஒரு வகை . அதை மற்றவர்களுக்கு கொடுத்து, நிறைய ஹீலர்க்ளை உருவாக்கியிருக்கிறார். 60 அறிவியல் ஆய்வுகள் மருத்துவ இதழ்களில் கொடுக்கப்பட்டுள்ளன..


மூன்றாம் கண் விழிப்படைதல், மெட்டிரியலைசேசன் என்ற இன்னும் பல ஆகமத்தில் சொல்லப்பட்ட  400 சக்திகள்  சாட்சி பிரமானமாகி வருவது சனாதன இந்து தர்ம வெறும் கட்டுக்கதை அல்ல என்று நிருபணமாகி கொண்டு வருகிறது.


 


மணி ராமலிங்கம்


 


அன்புள்ள மணி,


 


நம்பிக்கைகளுடன் விவாதிக்க முடியாது, ஆகவே உங்களிடம் விவாதிக்கவில்லை. இது பொதுவான என் கருத்து, பிற வாசகர்களுக்காக


 


இசை, அறிவியல் உட்பட பலவிஷயங்களில் என் கருத்துக்களை நான் முற்றுமுடிவாகச் சொல்வதில்லை. அரசியலில் கூட. ஆனால் சிலவற்றில் உறுதியாகச் சொல்லமுடியும் – அவ்வகையில் இதைச் சொல்கிறேன்


 


அறிவியல் என்னும் சொல்லை இப்போது எல்லாருமே சகட்டுமேனிக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது உண்மையில் மார்க்ஸியர் செய்த அபத்தம். அவர்கள் மார்க்ஸியக் கொள்கையை மார்க்ஸிய அறிவியல் எனச் சொல்ல ஆரம்பித்தனர். அதன்பின் எல்லா சமூகவியல், மொழியியல், மானுடவியல் கொள்கைகளையும் அறிவியல் எனச் சொல்ல ஆரம்பித்தனர். கடைசியாக மத நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அறிவியல் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்


 


நான் வாசித்த கார்ல் பாப்பரை என்னால் முடிந்த அளவில் எளிமையாக்கி  எது அறிவியல் என்று சொல்கிறேன்


 


அ  புறவயமான தரவுகளின் அடிப்படையில் கண்டடையப்படும் ஒரு கருத்துதான் அறிவியல் உண்மையின் தொடக்கம்


 


ஆ. அது அனைவருக்கும் உரிய அங்கீகரிக்கப்பட்ட தர்க்கமுறைபபடி வகுத்துரைக்கப்படவேண்டும்


 


இ.அதற்குச் சென்றடைந்த வழிகள் அனைவரும் பரிசோதிக்கும்படியாகச் சொல்லப்படவேண்டும். அதாவது புறவயமாக அது நிரூபிக்கப்படவேண்டும்.


 


ஈ.அதை பிறர் செய்துபார்ப்பதற்கும் அதே விளைவை அடைவதற்குமான முறை வகுத்துரைக்கபடவேண்டும். அதாவது அது ஒருசிலரால் ஒருசில சூழலில் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு மட்டுமே நிகழ்வதாக இருக்கக்கூடாது. அது திரும்பத்திரும்ப நிகழவேண்டும். ஒவ்வொருமுறையும் ஒரேவகையில் நிகழவேண்டும்.


 


உ.அதை பிறர் பொய்யென்று நிரூபிப்பதற்கான வழிமுறை இருக்கவேண்டும். பொய்ப்பித்தல் வாய்ப்பு இல்லையேல் அது அறிவியல் அல்ல


 


உதாரணமாக கொட்டன்சுக்காதி எண்ணை மூட்டுவலிக்கு மருந்து என்றால்  :


 


1 என்னென்ன பொருட்களால் கொட்டன் சுக்காதி உருவாக்கப்படுகிறது என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும்


 


2 கொட்டன்சுக்காதி எப்படி மூட்டுவலியை போக்கும்படி உடலுக்குள் வேலைசெய்கிறது என்பது  தர்க்கபூர்வமாக அனைவருக்குமாக விளக்கப்படவேண்டும்


 


3 கொட்டன்சுக்காதி எத்தனைபேரிடம் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது, எத்தனை பேர் குணமானார்கள் என்பது தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படவேண்டும்


 


4 அந்தக் கொட்டன்சுக்காதியை அனைவரும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி ஏறத்தாழ ஒரே பயனை அடையவேண்டும்


 


5. மேலே சொன்னவை அனைத்தையும் மறுக்கும் வாய்ப்பு இருக்கவேண்டும். கொட்டன் சுக்காதி அதை முன்வைப்பவர் சொன்னபடி வேலைசெய்யவில்லை என நிரூபித்தால், திரும்பத்திரும்ப ஒரே விளைவை அளிக்கவில்லை என நிரூபித்தால் அதை மருந்தல்ல என அதை முன்வைத்தவர் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கவேண்டும்


 


*


 


பெரும்பாலான மதநம்பிக்கைகள் ஐந்தாவது அம்சத்தால் ஆரம்பத்திலேயே அறிவியல் அல்லாமல் ஆகிவிடுகின்றன. என்னதான் சொன்னாலும், எப்படி நிரூபித்தாலும் நாங்கள் எங்கள் நம்பிக்கைகளை மறுப்பதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை, அது வழிவழியானது என ஒருவர் நிலைபாடு எடுத்தால் அது அறிவியலே அல்ல..


 


யோகம், தியானம், வாமமார்க்கச் சடங்குகள் உட்பட அனைத்துமே அகவயமானவை. உறுதியான நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் செய்யப்படும் செயல்கள் மூலம் ஒருவர் தன்னகத்தே அடையும் மாற்றங்கள் சார்ந்தவை.அவை அவ்வாறு ஆகலாம், ஆகமுடியாமலும் போகலாம். அவற்றுக்கு எந்த விதமான தர்க்கமும் இல்லை. அவற்றை இயற்றுபவரின் உள்ளத்தையே அவை சார்ந்துள்ளன.


 


ஆகவே, அவை ஒருநிலையிலும் அறிவியலாக ஆகமுடியாது. அவை செயல்படும் முறையை புறவயமாக வகுத்துரைக்க முடியாது. அனைவருக்கும் உரியதாக தரப்படுத்த முடியாது. எந்த சோதனையிலும் புறவயமாக நிரூபிக்க முடியாது. மீண்டும்மீண்டும் நிகழ்வதாக ஆக்கமுடியாது.


 


இன்றுவரை இந்தியாவில் மாயத்திறன்களை யோகம் மூலம் அடைந்ததாகச் சொல்லிக்கொண்ட எந்த யோகியும் அறிவியலாளர்களின் புறவயமான ஆய்வுநோக்குக்கு முன் எதையும் செய்து காட்டியதில்லை. எதையும் நிரூபித்ததில்லை. ஒரே ஒருமுறைகூட. தங்கள் நம்பிக்கையாளர்களின் முன்னிலையில் செய்ததாகவே சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையாளர்கள் மட்டுமே அவர்களின் சான்றுகள்.


 


இந்த வகையான கூற்றுக்களை எவரும் பொய்யென நிரூபிக்கவும் முடியாது – நான் பயன்பெற்றேன் என ஒருவன் ஓங்கிச்சொன்னால் அதை எவர் மறுக்கமுடியும்? ஆகவே அவை அறிவியல் அல்ல. அந்த சொல்லாட்சி ஏமாற்றக்கூடியது. மோசடியாக ஆகும் வாய்ப்பு கொண்டது


 


அறிவியலின் ஆய்வுப்பொருளாக ஒருவிஷயம் ஆகலாம். அறிவியல்  அதில் சில ஆர்வமூட்டும் விஷயங்களைக் கண்டுகொள்ளலாம். அறிவியல் சிலவற்றை அதில் வகுத்துரைக்கவும் செய்யலாம். ஆனால் அதனால் அந்த ஆய்வுப்பொருள் அறிவியலாக ஆகாது. அறிவியல் என்பது அறிவியலுக்குரிய விதிகளின்படி நிறுவப்படுவதும் நிறுவப்படச் சாத்தியமானதும் ஆகும்


 


யோகமுறைகள் மருத்துவமுறைகளாக எங்குமே அறிவியல்ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஏனென்றால் அவை அவற்றை செய்பவரின் நிலை சார்ந்தவை. அகவயமானவை. அவற்றின் உளவியல் செயல்பாடுகளை அறிவியல் ஆராய்கிறது, அவ்வளவுதான்.


 


சமூகக்கொள்கைகள் , அழகியல்கொள்கைகள், பண்பாட்டுக்கொள்கைகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும். அவை முழுமையான அறிவியல் உண்மைகளாக ஆகமுடியாது. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அவை அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அவை புறவயமாக நிரூபிக்கப்படுவதில்லை, மீளமீள நிகழ்வதுமில்லை. அவற்றுக்கு புறவயமான ‘ஒரு’ தருக்கம் உள்ளது என்பதனால் மட்டுமே அவை துணைஅறிவியல்கள் சொல்லப்படுகின்றன.


 


நீங்கள் என்ன அறிவீர்களோ, உங்கள் சுவாமி என்ன அறிவாரோ அதைப்போல எனக்கும் யோகமுறைகளைப்பற்றித் தெரியும். உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதுமில்லை. அவற்றின் எல்லைகளும் சாத்தியங்களும் எனக்கே நன்கு தெரியும்


 


முதலில் யோகமுறைகள் நோய்குணப்படுத்தும் மருத்துவமுறைகள் அல்ல. அவை மாயமந்திரங்களும் அல்ல. அதேபோல ப்ழைய ஆகமங்கள் எவையும் யோக- மருத்துவமுறைகளை வகுத்துரைக்கவில்லை. ஆகமங்கள் எவையும் காலத்தால் மிகப்பழைமையானவையும் அல்ல. ஆகமங்கள் என புழங்குவனவற்றில் மிகப்பெரும்பகுதி பிற்காலத்தைய சமையல்கள். மிகப்பெரும்பாலானவை தோராயமான குறியீட்டு மொழியில் எழுதப்பட்டவை.


 


தொன்மையான யோகநூல் என்றால் அது பதஞ்சலி யோகம். அது மாயமந்திரங்களை, குணப்படுத்தல் வித்தைகளை சொல்வது அல்ல.  இன்றைய மொழியில் சொல்வதென்றால்  அறியும் தன்னிலையை மேலும் மேலும் தூய்மைப்படுத்தி தூய அறிவை அடைவதற்கான சுயப்பயிற்சிகள்தான் யோகம் எனப்படுகின்றன. சாங்கிய மரபு உருவாக்கிய தூயபுருஷன் என்னும் உருவகத்திலிருந்து தொடங்கிய ஒரு மெய்யியல் கருத்து அது. அதை பல்வேறு குறியீடுகள் வழியாக பல கோணங்களில் தொன்மையான நூல்கள் சொல்கின்றன


 


அதில் உடலை செம்மைசெய்தல் ஒரு பகுதி. அவ்வகையில்தான் உடல் சார்ந்த பயிற்சிகள் யோகம் என இடம்பெற்றன. அவற்றை ஒருவர் ஓரளவுக்குச் சீர்ப்படுத்தி ஒருவனின் உளத்துக்கும் உடலுக்குமான தொடர்பை சீரமைக்கும் பயிற்சிகளாக சொல்லித்தர முடியும். அதுவும் அவன் அதை முழுமையாக நம்பி ஏற்று அப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து தன் உள்ளத்தை வென்றான் என்றால் மட்டும் பயனளிக்கும்.


 


நீங்கள் சொல்வதுபோல அனைத்து நோய்களையும் தீர்க்கும் வழிகளேதும் யோகமரபில் இல்லை. நோய் தீர்த்தல் என்பது இந்திய மரபில் வேதாங்கமாகிய ஆயுர்வேதத்தைச் சார்ந்ததே ஒழிய யோகத்தின் பணி அல்ல அது. அதை சிகிழ்ச்சை என ஒருவர் சமூகத்தின் முன்வைக்கிறார் என்றால் , அனைவருக்கும் உரியதாக கூவி விற்கிறார் என்றால், ஐயமே இல்லை அது மோசடியே.


 


அதற்கும் ஏசுவை மேடையில் வரவழைத்து தினகரன் போன்றவர்கள் செய்யும் ‘முடவர்கள் நடக்கிறார்கள்’ வகை மூளைச்சலவைக்கும், பெந்தேகொஸ்தேக்களின் ‘சுகப்படுத்தல் மற்றும் பேயோட்டுதல்’ களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. வெறும் நம்பிக்கைகளை கொண்டு ஆடும் ஆட்டம் அது.


 


 


ஜெ


 


ஜாக்ரதை


 


 



ஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.
ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5
ஆன்மீகம், போலி ஆன்மீகம் 4
ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3
ஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2
ஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1

 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2017 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.