மார்ச் 6 -2017

aruna


 


இன்று காலை எழுந்து வழக்கம்போல நேராகவே வெண்முரசில் புகுந்து அடுத்தநாளுக்கான அத்தியாயத்தை எழுதி முடித்து கீழே வந்தபோது ஒரு குறுஞ்செய்தி. அஜிதனிடமிருந்து. ‘அப்பா, இன்றைக்கு அம்மாவுக்கு பிறந்தநாள்’


 


ஒருகணம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்துவிட்டேன். அந்த ஒற்றைவரி அவனுக்கு அவன் அம்மாவை நன்குதெரியும் என்றும் அதைவிட என்னை தெரியும் என்றும் காட்டியது. காலையில் அருண்மொழியிடம் பேசினேன். அவள் அலுவலகம் கிளம்பிச்சென்றபோதும் முகத்தில் எதுவும் தெரியவில்லை.


 


எனக்கு என் பிறந்தநாளே நினைவில் இருப்பதில்லை. சிங்கப்பூரில் பலமுறை என் பிறந்த மாதம் ஆறு என்று  தப்பாகப் பதிவுசெய்துவைத்தவன். பிள்ளைகள் உட்பட எவர் பிறந்தநாளையும் நினைவு சேர்த்துக்கொண்டிருப்பதில்லை. அஜிக்கோ பாப்பாவுக்கோ அருண்மொழி சொல்லாமல் நானாகவே வாழ்த்து சொன்னதே இல்லை. திருமணமான ஆரம்பநாட்களிலே கூட அவளே சொல்லித்தான் பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக்கொள்வது.


 


என் இயல்பு குழந்தைகளுக்கே நன்றாகத் தெரியும். நான் ஏன் நினைவில் வைத்திருக்கவில்லை என அவர்கள் இதுவரை கேட்டதே இல்லை. என்றாவது நினைவுகொண்டு வாழ்த்து சொன்னால்கூட ‘நீ எதுக்கு இதையெல்லாம் மண்டையிலே வச்சுகிட்டு…’ என்றுதான் அஜி சொல்வான்


 


அஜி என்னுடைய விரிவாக்கப்பட்ட வடிவம் – என் இளமையின் அதே கட்டின்மை, கனவு, கிறுக்கு. இப்போது மணிரத்னம் படவேலை என்பதனால் ஓரிடத்தில் இருக்கிறான். இல்லையேல் செல்பேசியில் ஆள் கிடைத்தால் “எந்த ஊர்?” என்றுதான் கேட்கவேண்டும். ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டிருப்பான்.


 


அதற்கு முதலில் செல்பேசியில் மின்னூட்டம் இருக்கவேண்டும். அது பலசமயம் நாலைந்து துண்டுகளாக பைக்குள் கிடக்கும். சரியாக இருந்தாலும் அவன் எடுக்கவேண்டும். பெரும்பாலும் ஒலியிலா ஒழுங்கில்தான் கிடக்கும். அவன் எதையாவது நினைவுகொள்ளும் வழக்கமே இல்லை, நினைவு அதுவாக வந்தால்தான் உண்டு. மானசீகமாக ரிச்சர்ட் வாக்னரும் ஷோப்பனோவரும் ஹெர்ஷாக்கும் வாழும் உலகில். அங்கே இலக்கியம் ,இசை, தத்துவம், சினிமா சேர்ந்து குழம்பிய பித்து தவிர ஒன்றும் இல்லை.


 


நான் பிறந்தநாட்களைத்தான் மறப்பது, அவனுக்கு பிறந்த ஊரே பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை. ஆனால் அம்மாவின் பிறந்தநாளை நினைவுகூர்கிறான். ஆம், ஒருபோதும் அதை மறந்ததில்லை. அவள் நான் வாழ்த்தவேண்டுமென விரும்புவாள் என அறிந்திருக்கிறான். கண்டிப்பாக நான் மறந்துவிடுவேன் என்றும் புரிந்துவைத்திருக்கிறான்.


 


அருண்மொழியைக் கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னேன். ‘ஆ, ஞாபகம் வந்திச்சா” என மகிழ்ந்தாள். “உன் மகன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். இல்லாவிட்டால் நினைவுகொண்டிருக்கவே மாட்டேன்” என்றேன். “நல்ல கணவனை நீ அடைந்திருக்கிறாயா எனத் தெரியவில்லை. நல்ல மகனைப் பெற்றிருக்கிறாய். அவனைப்போன்ற ஒருவனின் உள்ளத்தில் வாழ்வது பெரிய பேறு. நீ என்றும் அழியாமலிருப்பாய்” என்றேன்.


 


காதலன், கணவன் எல்லாமே பின்னால்தான். பெண் அழியாமல் வாழ்வது மகனின் உள்ளத்தில்தான். காளிவளாகத்துவீட்டு பத்மாவதியம்மா விசாலாட்சியம்மா ஒருநாளும் ஒருகணமும் இல்லாமலிருந்ததில்லை. அவள் மகன் மொழியை ஆளத்தெரிந்தவன், அழிவின்மையை கைகளால் ஆக்கத்தெரிந்தவன், எனவே அவனே அழிந்தாலும் அவள் அழியமாட்டாள்.


 


*


 


மண்டை கொதிப்புக்கு எலுமிச்சம்பழம் தேய்த்துக்குளிக்கலாமென ஓர் எண்ணம் . முழு பழத்தையும் தேய்த்தேன். அதன்பின் எண்ணை. அது தெரிசனங்கோப்பு டாக்டர் மகாதேவனிடமிருந்து வந்திருந்த ஏதோ எண்ணை. தேய்த்துக்குளித்து விட்டு மதியச்சாப்பாடு முடித்துப் படுத்தேன். எழுந்தபோது மணி ஐந்தரை. ஆனால் கண்கள் தெளிந்து உலகம் புதிதாக இருந்தது


 


மார்ச் மாதத்தில் குமரிமாவட்டத்தில் மழை அரிது. சென்ற டிசம்பர் மழை பொய்த்துவிட்டமையால் கொஞ்சம் காய்ந்திருந்தது. நேற்றுமுதலே மழையிருள். இன்று மழை. மாலையில் நடக்கச்சென்றேன். குளிர்ந்த காற்று வீசும் கணியாகுளம் பாறையடி பாதை. புதுமழை மணம். வேளிமலை நீராடி புத்துணர்ச்சி கொண்டிருந்தது.


 


திரும்பி வரும்போது போகனையும் நண்பரையும் பார்த்தேன். நின்று இருட்டு ஆளை மறைக்கும் வரைப் பேசிக்கொண்டிருந்தோம்.காமிக்ஸ் வழியாக ஷண்முகவேல்வரை வந்தது பேச்சு. சினிமா பத்திரிகை என பணம் வரும் இடங்களில் வரைவதை தட்டிக்கழித்து வெண்முரசுக்கு பிடிவாதமாக ஓசியில் வரையும் ஷண்முகவேலைப்பற்றிச் சொன்னேன். அவர் வெண்முரசுக்கு வரைவதில் எனக்கு மகிழ்ச்சி, எழுத்தாளனாக. ஆனால் என் உள்ளிருந்து எல்லா இடத்திலும் எட்டிப்பார்க்கும் பதற்றமான தந்தை உருப்படும் வழி அல்ல அது என்றும் பொறுமையிழக்கிறது


ஷண்முகவேல்


 


திரும்பிவரும்வழியில் ஷண்முகவேலே கூப்பிட்டார். ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. மணமாகி , மகள் பிறந்து, மேலும் எட்டாண்டுகள் காத்திருந்த பின்னர் ஒரு மகன்.   வெய்யோனில் கர்ணன் கௌரவர் பெற்ற ஆயிரம் பையன்களுடன் ஆடும் தருணங்களை வரையும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்றார். சிலநாட்களாக வெண்முரசுக்கு வரையாமலிருந்தது அதனால்தான். இந்நாளை இனியதாக நிறைவூட்டியது அச்செய்தி


 


இனி என்ன எழுத என நினைத்தேன்.  அருண்மொழியுடன் அமர்ந்து எழுபதுகளின் பாட்டுக்களைக் கேட்டேன். முத்தாரமே உன் ஊடல் என்னவோ, பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து, பொன்னல்ல பூவல்ல பெண்ணே, மீன்கொடித்தேரில் மன்மதராஜன், குறிஞ்சிமலரில் வழிந்த ரசத்தை, மழைதருமோ என் மேகம்,..


 


இதோ இந்தப்பாடலுடன் முடிகிறது. “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது?” அரிதாகவே சினிமாவில் உண்மையான கவித்துவம்கொண்ட வரிகள் அமைகின்றன. வரிகள் இசை அனைத்திலும் மென்மை மென்மை என மீட்டும் பாடல்.


 


சிலநாட்கள் என்னவென்றறியாத இனிமையுடன் அமைந்துவிடுகின்றன


 


 



 


 


======================================


 


நீர் நிலம் நெருப்பு – அஜிதன் எடுத்த ஆவணப்படம்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2017 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.