எஸ்.கெ.பி.கருணாவும் ஒத்திசைவும்
ஒத்திசைவு ராமசமி
அன்புள்ள ஜெ
உங்கள் நண்பர் ஒத்திசைவு ராமசாமி உங்கள் இன்னொரு நண்பர் எஸ்.கெ.பி.கருணா பற்றி எழுதியிருக்கும் இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? உங்கள் பெயரும் இதில் அடிபடுவதனால் கேட்கிறேன். மௌனமாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை
ஆர்
எஸ்.கெ.பி கருணா
அன்புள்ள ஆர்,
உண்மையில் மௌனமாகவே இருக்கவேண்டும், ராமசாமியின் அந்த சிறு உள்வட்டக்குறிப்பை பிரபலமாக ஆக்காமலிருக்கும்பொருட்டு. ஏனென்றால் இன்று இணையம் என்பது ஒரு வெறுப்புக்கலம். காழ்ப்புகளும் வெறுப்புகளும் எவர்மீதேனும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அதில் இறங்கி விளையாடுவது எளிதல்ல.கலக்குவது அபாயமும் கூட.
ஆனால் எஸ்.கெ.பி. கருணா என் விருப்பத்திற்குரிய நண்பர். ராமசாமி என் நண்பர் அல்ல, அவ்வாறான நெருக்கமேதும் எனக்கும் அவருக்கும் இடையே இல்லை. அவரைப்பற்றி அறிந்து அவர் மேல் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். இத்தருணத்தில் நான் எஸ்.கெ.பி.கருணா பற்றி பேசவேண்டியது நட்பு முறையில் ஒரு பொறுப்பு என்றே நினைக்கிறேன்.
அதற்கு முன் ராமசாமி இன்றிருக்கும் மனநிலை பற்றி சொல்லவேண்டும். அவரை இரு உணர்ச்சிகள் ஆள்கின்றன. ஒன்று, முழுஅவநம்பிக்கை மற்றும் அதன் விளைவான பெருங்கசப்பு. இன்னொன்று, கறுப்புவெள்ளைச் சித்திரங்களைத் தீட்டிக்கொள்ளும் வெறுப்பரசியல்.
ராமசாமி அவர்கள் என்னைவிட மூத்தவர், கல்வித்தகுதியில் நான் நினைக்கமுடியாத அளவு உயர்ந்தவர், நான் அடுத்தபிறவியில் ஆசைப்படும் சேவைசார்ந்த வாழ்க்கையை தெரிவுசெய்துகொண்டவர். ஆகவே நான் அவரை விமர்சிப்பது மிகையான செயல்பாடு. ஆலோசனை எல்லாம் சொல்வது அராஜகம். ஆகவே அந்தத் தொனி வந்துவிடக்கூடாதென்று கவனமாக இருக்கிறேன். அவருடைய வாழ்க்கைச்சூழல், அனுபவங்களில் இருந்து அவர் சென்றடைந்த இடம் அதுவாக இருக்கலாம்
ஆனால் நான் என் வரையில் அவநம்பிக்கை, கசப்பு நோக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். அவநம்பிக்கை, கசப்பு கொள்ளும் சூழல் இங்குள்ளது என்பதை நானும் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் நம்பிக்கையின் பொறிகளை எப்போதும் கண்டடைகிறேன். முடிந்தவரை அதில் மூழ்கி முடிந்தவரை என் தளத்தில் என்னால் இயல்வதைச் செய்துகொண்டும் இருக்கிறேன்.
என் உணர்வுகள் சார்ந்து கறுப்புவெள்ளையாக அரசியலைப் பார்ப்பதும், இலக்கியச்சூழலை அணுகுவதும் நிகழக்கூடாதென்பதும் என் உறுதிகளில் ஒன்று. அவ்வாறு இயல்பாக இருக்கமுடியவில்லை என்பதும், தொடர்ந்து அதற்காக முயலவேண்டியிருக்கிறது என்பதும், அடிக்கடி உணர்வுபூர்வமான எதிர்வினைகள் நிகழ்ந்துவிடுகிறது என்பதும் உண்மை
ராமசாமி அவர்களின் அக்குறிப்பு அவருடைய அந்த இரு உணர்வுநிலைகலில் இருந்து உருவானது. அவர் நம்ப விழைவதை அடைந்து ,அதை பெருக்கிக்கொண்டு சொல்லும் நிலைபாடு. அதனுடன் விவாதித்தல் அரிது. இது உங்களைப்போன்ற சிலருக்காக மட்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் பவா செல்லத்துரையின் இல்லத்தில் ஒருவரைச் சந்தித்தேன். பீடி பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக பவாவின் அப்பாவிடம் அரசியல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்றார் பவாவின் அப்பா. மிகமிகநேர்மையாக முப்பதாண்டுக்காலம் அரசியலில் ஈடுபட்டிருந்தவர். திமுகவின் கொள்கைகளுக்காக அரசியலில் ஈடுபட்டு சொந்தச் செல்வத்தை இழந்தவர். ’வெறுங்கால்த் தொண்டர்’ என்போமே அத்தகையவர். அப்போதும் இருளர் முதலியவர்களுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தார்
அத்தகைய ஒருவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். திமுக ஊழல்கட்சி, குடும்பநலக் கட்சி என்னும் சித்திரமே நம்முள் உள்ளது. திமுக அரசியல்வாதி என்னும்போதே நம்முள் என்.கே.பி.ராஜாவும் ,வீரபாண்டி ஆறுமுகமும் , கே.என்.நேருவும் நினைவில் எழுந்துவிடுவார்கள். அவர்கள் குறுநில மன்னர்கள். ஆனால் திமுக அரசியலில் கொள்கைநம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கொண்ட எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள், ஓரளவு இருக்கவும் செய்கிறார்கள். இன்றைய திமுக ஆதரவாளருக்கு அவர்களுக்கும் திமுக குண்டருக்கும் இடையே வேறுபாடில்லை, அல்லது குண்டர் அதிகாரம் கொண்டவர் என்பதனால் மேலும் முக்கியமானவர். திமுக எதிர்ப்பாளர்களுக்கும் அந்த வேறுபாடு தெரியாது, குண்டர்களே அவர்களின் முன்னுதாரணங்கள்.
ஆனால் திமுகவின் அடிப்படையில் ஓர் இலட்சியவாதம் இருந்துள்ளது, ஓரளவு அது நீடிக்கிறது. பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி, மத ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என அதற்கு ஒரு தளம் உள்ளது. அது சார்ந்து செயல்பட்ட இலட்சியவாதிகளும் பலர் உள்ளனர். ஓர் எழுத்தாளனாகிய நான் அவர்களையும் கருத்தில்கொண்டே என் தரப்பை உருவாக்கிக்கொள்ளவேண்டும். அந்த எண்ணத்தை அப்போதுதான் அடைந்தேன்
பவாவுடன் நடந்த அந்த உரையாடல் வழியாகத்தான் நான் திரு கு.பிச்சாண்டி அவர்களைப்பற்றி அறிந்தேன். அன்று திருவண்ணாமலைக்கு நான் மிக அணுக்கமானவன். ஆகவே பலதரப்பட்ட மக்களை சந்திப்பவனாகவும் அங்குள்ள அரசியலை நன்கு அறிந்தவனாகவும் இருந்தேன். கு.பிச்சாண்டி அவர்களை இதுவரை நான் சந்தித்ததில்லை.நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அறியவந்தவற்றில் இருந்து அவரைப்பற்றி மிக உயர்வான எண்ணமே எனக்கு உருவானது.
குறிப்பாக அன்று நான் அறிந்திருந்த இடதுசாரிகள் அவருடைய நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைப்பற்றிப் பெருமதிப்புடன் மட்டுமே பேசிவந்தனர். அவரைத் தங்களில் ஒருவராக எண்ணினர். அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பில் இருந்திருக்கிறார். திமுக அரசியலார்வலர்கள் அவரை ‘நல்லமனிதர், ஆனால் பிழைக்கத்தெரியாதவர்’ என்றனர். அதன்பின் பிழைக்கத்தெரிந்தவர்களால் கு.பிச்சாண்டி ஓரம்கட்டப்பட்டார். அவர்கள் பூதாகரமாக எழுந்தனர். கு.பிச்சாண்டி அமைச்சராக இருந்தவர், ஆனால் இன்றும் பொருளியல்நெருக்கடிகளுடன் எளிய வாழ்க்கை வாழும் சேவைமனம்கொண்ட அரசியல்வாதிதான்.
மேலும் பல ஆண்டுகள் கழித்தே எஸ்.கே.பி. கருணாவைச் சந்தித்தேன். அவர் கு.பிச்சாண்டியின் தம்பி என மேலும் பிந்தியே அறிந்தேன். அவர்களின் குடும்பம் திருவண்ணாமலையின் வணிகர்கள். அவர்களின் தந்தை குப்புசாமி அவர்கள் லாரி,பேருந்து தொழில் செய்தவர். இப்போதும் அத்தொழில்கள் அவர்களுக்கு உள்ளன. ஆரம்பகால திராவிட இயக்க அரசியலில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர்.
அவர்களிடம் இன்றிருக்கும் செல்வம் அவர்களின் தந்தையாரால் ஈட்டப்பட்டது. அது அங்குள்ள பிழைக்கத்தெரிந்தவர்களின் செல்வத்துடன் ஒப்பிட்டால் பெரிய செல்வமும் அல்ல. கு.பிச்சாண்டி கட்சியரசியலில் அதில் தன் பங்கை பெரும்பாலும் இழந்தார் என்பதே உண்மை. அவர் ஒரு தொண்டர்சூழ் அரசியல்வாதி. மக்கள் பிரச்சினையில் சொந்தக்காசுடன் இறங்குபவர். ஆகவே வேறுவழியில்லை.
எஸ்.கே.பி. பொறியியல்கல்லூரி எஸ்.கெ.பி.கருணாவின் குடும்பச் சொத்தில் தொடங்கப்பட்டு குடும்பச் சொத்தை கரைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். ஆனால் அமைச்சரின் தம்பியின் பொறியியல் கல்லூரி, வேறு எப்படி அது வந்திருக்கும் என ஓர் எளிய சமன்பாட்டை நாம் போடுவோம். தனிப்பட்டமுறையில் அறியாமலிருந்திருந்திருந்தால் நானும் அதையே செய்வேன்.
இனி ராமசாமியின் கேள்விகள். எஸ்.கெ.பி.கருணா உழைத்துச் சாப்பிடுகிறாரா, இல்லை பெற்றோர் ஈட்டிய காசில் வாழ்கிறாரா என்பது. உழைத்து மட்டுமே சாப்பிடவேண்டும், மற்றவர்களை வைவேன் என ராமசாமி உறுதி எடுத்திருந்தால் அவர் தினசரி பல்லாயிரம் பக்கம் எழுதவேண்டியிருக்குமே என்று தோன்றுகிறது. நல்லவேளை என் அப்பாவிடமிருந்து எனக்கு ஒன்றும் வந்துசேரவில்லை. என்ன ஒரு ஆறுதல்!
அதன்பின்னரும் என்னவகையான உழைப்பு தேவை என்றெல்லாம் ராமசாமி அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால் அந்த செத்துப்போன குஜராத்திக்கிழவர் தவிர அத்தனைபேரும் அயோக்கியர்கள் என்னும் முடிவுக்குத்தான் வருவார். அப்படி என்றால் நமக்கும் ஒருவகை தெளிவு கிடைக்கும். மற்றபடி கருணா அவர் நம்பும் கல்விப்பணியில் கடுமையாக உழைத்து அப்பா தேடிவைத்ததை அருமையாகச் செலவிட்டு வருகிறார் என்பதே நான் அறிந்தது
அடுத்தது, அவருடைய கல்விக்கொள்கை. நானும் காந்திய நம்பிக்கைகொண்டவன். ஆனால் சர்க்காவால் நூல் நூற்று வாழாதவனெல்லாம் செருப்பாலடிக்கத்தவன் என்று சொல்லும் காந்தியவாதி அல்ல. கருணாவின் கல்விக்கொள்கை, அனுபவங்கள் பற்றி நான் அவரிடம் உரையாடியதுண்டு. அவருடையவை அனுபவம் சார்ந்த புரிதல்கள். இங்கே எது சாத்தியமோ அதைச்செய்வதற்கான முயற்சிகள்
இங்கே நாகர்கோயிலில் ஒரு மருத்துவர் உண்டு. மிகுந்த அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் அத்தொழிலைச் செய்பவர். அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். அலோபதி மருத்துவத்திற்கு மருத்துவம்பார்க்க ஒரு முறைமை இருக்கிறது. படிப்படியாக பல அவதானிப்புகள் வழியாக அந்த மருத்துவம் செய்யப்படவேண்டும். எடுத்த எடுப்பிலேயே முறிமருந்துகள் அளிக்கக்கூடாது. அதைத்தான் கல்விநிலையங்களில் கற்பிப்பார்கள். அவர் தொழிலை ஆரம்பித்தபோது அப்படித்தான் செய்தார். தொழில் படுதோல்வி. மனைவியின் நகைகளை விற்று சாப்பிடவேண்டிய நிலை.
ஏனென்றால் மக்கள் டாக்டரிடம் சென்றதுமே ஒரே மாத்திரையில் நோயை அவர் சரிசெய்யவேண்டுமென நினைக்கிறார்கள். அப்படிச் செய்பவர்களிடம் மட்டுமே மேலும் செல்கிறார்கள். அவர்களிடம் அலோபதியின் முறைமை என்ன, அதை மீறினால் என்ன விளைவு ஏற்படும் என விளக்க முடியாது. ஆகவே ஒரு குறைந்தபட்ச அறத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். அதாவது கடுமையான மருந்துகளை பயன்படுத்துவதில்லை. லாபநோக்கில் மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. நோயாளியிடம் அலோபதியின் முறைமை பற்றி ஒரு சுருக்கமான விளக்கம் அளிப்பார். அவர் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நோயாளி விரும்பும் உடனடி மருத்துவம்தான்.
அஜிதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் நான் அவரிடம் சென்றபோது பல ஆய்வுகளுக்குப்பின் அவனுக்கு மருந்து தேவையில்லை, தொடர்ச்சியாக நிறைய புரோட்டீன் உணவு மட்டும் கொடுத்தால்போதும் என்றார். நான் ஆச்சரியத்துடன் ”இப்படித்தான் நீங்கள் மருத்துவம் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். ”உங்களிடம் அலோபதி பற்றி முதலில் பத்துவரி சொன்னேன். நீங்கள் செவிசாய்த்தீர்கள். ஆகவே இதைச்சொல்கிறேன். எப்படியாவது பையனுக்கு நாளைக்கே சரியாகணும் டாக்டர் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நோய்முறி மருந்துகளை எழுதியிருப்பேன்” என்றார்.
இன்றைய சூழலில் இலட்சியவாதத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் இருவகை மனிதர்கள் உண்டு. மூர்க்கமாக இச்சமூகத்தின் கருத்தியல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக தன் கொள்கைகளை முன்னிறுத்திப்போராடுபவர்கள் முதல்வகை. சமரசமற்றவர்கள். ஆகவே தனியர்கள். பெரும்பாலும் தோல்வியடைபவர்கள். ஆகவே கசப்பு நிறைந்தவர்கள்- மிகச்சிலரே அக்கசப்பைக் கடக்கமுடியும். காந்தி போல அல்லது அண்ணா ஹசாரே போல அல்லது நானாஜி தேஷ்முக் போல அல்லது கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியினர் போல. இந்தவகையைச் சேர்ந்தவர் ராமசாமி அவர்கள். நம்பிக்கை இழந்தவர், கசந்தவர்.
இன்னொரு வகையினர் உரிய சமரசங்களுடன் ,தங்கள் எல்லைக்குள் முடிந்தவரை தாங்கள் நம்பும் இலட்சியவாத அம்சம் கொண்ட வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டவர்கள். அவர்களுக்குக் குற்றவுணர்ச்சி இருக்கும். தங்கள் எல்லைகள் குறித்த அறிதலும் இருக்கும். ஆகவே முதல்வகையினரிடமிருக்கும் ‘நான் இலட்சியவாதி’ என்னும் தோரணை இருக்காது. ‘இவ்வளவுதாங்க நம்மால முடியும்’ என்னும் பாவனையே இருக்கும். நான் இவ்வகைப்பட்டவன். எஸ்.கெ.பி.கருணாவும் இவ்வகையினரே.
ஆகவே என்னை ராமசாமி அவர்கள் என் சமரசங்களுக்காக வசைபாடினால் ’பரவாயில்லை, வேண்டியதுதான். உங்க நிலையிலே நின்னுட்டு அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு சார், மன்னிச்சிடுங்க’ என்றே சொல்வேன். ஆனால் அதை அனைவருக்கும் உரிய அளவுகோலாக அவர் ஆக்கினால் அதில் உள்ள நடைமுறைப் பிழையை சுட்டிக்காட்டுவேன். வெறும் அவநம்பிக்கையால், வெறுப்பரசியலால் பச்சை அயோக்கியர்களையும் சமரசங்கள் கொண்ட நேர்மையானவர்களையும் ஒரேவகையானவர்களாக எண்ணி வசைபாடுவது அயோக்கியர்களுக்கு ஆதரவான குரலாக மட்டுமே பொருள்படும். ’ஸுத்தன் துஷ்டனின் ஃபலம் செய்யும்’ என ஒரு மலையாளச் சொலவடை உண்டு. தூய்மையானவன் தீயவனின் விளைவை உருவாக்கக்கூடும் என்பது பொருள்.
இன்றைய சூழலில் ஒரு பொறியியல் கல்லூரியை எப்படி பயனுள்ளதாக நடத்தமுடியும், அப்படி நடக்கிறது எஸ்.கெ.பி.பொறியியல் கல்லூரி. மாணவர்களுக்கு நவீன அறிவியலை, பொறியியலை சாத்தியமான அளவுக்குக் கொண்டுசெல்ல கருணா முயல்வதை நான் அறிவேன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு இருக்கும் பொருளியல் எல்லைகள் பல. அதனுள் நின்றுகொண்டு அலைந்து திரிந்து அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
ஆனால் அவை இன்றைய சூழலில் பத்து சதவீதம் மாணவர்களுக்குக்கூட பயன் அளிப்பவை அல்ல. ஏனென்றால் இங்குள்ள பள்ளிக்கல்விமுறை வெளியே அனுப்பும் மாணவர்களின் தரமும் இயல்பும் வேறு. அவர்களுக்கு எதையும் வாசிக்கத்தெரியாது. புரிந்துகொள்ளும் பயிற்சி குறைவு. ஆர்வம் அதைவிடக்குறைவு. மேலும் அவர்களிலேயே கீழ்நடுத்தர மாணவர்களே இன்று இத்தகைய பொறியியல் கல்லூரிகளுக்கு வருவார்கள். ஆகவே எஞ்சியவர்களுக்கு மூர்க்கமான மனப்பாடக் கல்வியையே அங்கே அவர் பரிந்துரைக்கிறார்.
’எப்படியாவது மார்க். எப்படியாவது ஒருவேலை. இதைத்தவிர இங்கே வருபவர்களிலே பெரும்பாலானவர்களுக்கு நோக்கம் இல்லை. அவங்க அப்பா அம்மாவுக்கும் அதேதான். அதைக்குடுக்காம இந்த கல்லூரியை நடத்தமுடியாது’ என ஒருமுறை சொன்னார். கிராமப்புறச் சூழலில் இருந்து வருபவர்களின் கனவு அந்த மாணவனின் வேலையினூடாக ஒரு பொருளாதார மீட்பு. அது இன்றைய சூழலில் இக்கல்வி வழியாக கண்டிப்பாகச் சாத்தியமாகிக்கொண்டுதான் இருக்கிறது. வேறெந்தக் கல்வியைவிடவும். நம் சூழலில் நான் அறிய பல்லாயிரம் உதாரணங்கள். கருணாதன் கல்லூரி சார்ந்தே பலநூறு உதாரணங்களை அளிக்கமுடியும்.
சரி , உண்மையான பொறியியல் கல்வி, சிந்தனைக்கல்வியை இங்கே அளிக்கமுடியுமா? நான் சென்னை ஐஐடியில் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். உயர்தர மாணவர்கள் பயிலும் பல ‘உச்சகட்ட’ பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். அவர்களிலும் அதே ஐந்து சதவீதம் பேர்தான் எதையாவது புரிந்துகொள்ளக்கூடியவர்கள். மற்றவர்கள் வெறுமே தெரிந்துகொண்டு ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடியவர்கள் மட்டுமே. ஒரு சிறிய கொள்கையை, கோட்பாட்டைக்கூட எந்தக்கொம்பனும் அவர்களுக்குப் புரியவைத்துவிட முடியாது.சாதாரணக்கல்லூரி மாணவர்களுக்கு மெல்லிய பதற்றமும் அடக்கமும் இருக்கும். உயர்தரத்தினருக்கு தாங்கள் தேர்வுசெய்யப்பட்ட ரத்தினங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதிசெய்யத்தக்க முதல்தர உற்பத்திகள் என்னும் போலிச்செருக்கு மண்டையை களியாக மூடியிருக்கும் என்பதே வேறுபாடு.
ஆகவே இது இந்தியாவின் பிரச்சினையாக இருக்கலாம். நம் கல்விமுறை இப்படியா அல்லது நம் மரபணுவே இப்படித்தானா, தெரியவில்லை. நம்மால் முடிவது வெள்ளைக்காரனுக்கு எடுபிடியாக வேலைபார்த்து டாலர் சம்பாதிப்பது என்றால் அதைச்செய்வோம். அந்த அளவுக்கு இங்கே வறுமை குறையட்டும். அவ்வகையில் பார்த்தால்கூட இங்கே சொந்தச்செலவில் பொறியியல் கற்றுக்கொண்டு சம்பாதித்து குடும்பத்தை கரையேற்றுபவன், இந்தியாவுக்கு பணம் சம்பாதித்து அளிப்பவன் இந்தியாவின் அரசுநிதியில் கற்றுக்கொண்டு அமெரிக்கா ஓடும் ஐஐடி மேன்மக்ககளைவிட மேலானவன், பயனுள்ளவன்.
கடைசியாக, இந்த மிகைக் கட்டணம். தனியார்க் கல்லூரிகளில் இன்று நன்கொடையல்ல, உரிய கட்டணம் வசூலிக்கவே தலையால் தண்ணீர்குடிக்கிறார்கள் என்பதே உண்மை. பலவகையான சர்க்கஸ்கள் வழியாக பேராசிரியர்களுக்கு ஊதியமளிக்கிறார்கள், அவ்வளவுதான்.
சரி, உடனே இத்தகைய பொறியியல் கல்லூரிகள் பெரிய மோசடிகள் என்றும் மக்களுக்கு எளிய தொழிற்கல்வி போதும் என்றும் இலட்சிய முழக்கமிடலாமா? இடலாம். இதேபோல வெளிநாட்டு மோகம் வேண்டாம், உழைப்பாளர் இங்கேயே வேலைசெய்யலாமே என முழங்கலாமா? ஆம், அதுவும் இலட்சியமுழக்கமே.
ஆனால் இந்தக் கல்வியால், வெளிநாட்டு பணவரவால்தான் எண்பதுகள் வரை இருந்த உச்சகட்ட வேலையில்லாத் திண்டாட்டம் சற்றேனும் ஒழிந்தது. எண்பதுகளில் தமிழகத்திலிருந்த கிராமப்புற வறுமை மறைந்தது. லட்சக்கணக்கான குடும்பங்கள் அடுத்தகட்டத்திற்கு வந்தன. இது யதார்த்தம். என்னைப்போன்ற யதார்த்தவாதிகள் இதை ஆக்கபூர்வமானதாகவே பார்ப்போம். அடுத்தகட்டமாக மேலும் நல்ல கல்வி அளிக்கப்படலாமே என கோருவோம்.
கருணா அவர் ஆர்வம் கொண்டுள்ள ஒரு துறையில் முழுத்தீவிரத்துடன் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார் என நான் பல மாணவர்களை அடிப்படையாகக்கொண்டு அறிந்தேன். சென்ற காலங்களில் நண்பர் முத்துராமனின் பரிந்துரைப்படி ஈழ அகதிமாணவர்கள் பலருக்கு அவர் இலவச இடமளித்துக் கல்வியளித்திருக்கிறார். பலருக்கு அதிதீவிர மனப்பாடக் கல்விதான் அளிக்கப்பட்டது. அவர்களால் அதுதான்முடியும் என்றால் அது. ஆனால் ஆர்வமுள்ளவர்களுக்கு சற்றேனும் மேம்பட்ட கல்வி அளிக்கப்படுகிறதா என்றால் ஆம் என்பதே ஆறுதலான பதில்தான்.
அப்படியென்றால் எஸ்.கெ.பி கருணா இந்தியக்கல்விமுறையை மாற்றியமைக்க தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கலாமே என ராமசாமி கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால் அவர் தன்னை கல்வியாளர் என்றோ சமூகசேவகர் என்றோ சொல்லிக்கொள்வதில்லை. முடிந்தவரை தன் எல்லைக்குள் நேர்மையாகச் செயல்படுகிறார் என்பதைக்கூட அவர் சொல்வதில்லை, நான் அவரை அறிந்தமையால் சொல்கிறேன்.
ஒத்திசையாத ராமசாமி போன்றவர்கள் நமக்குத் தேவை. ஒத்திசையும் என்னையும் எஸ்.கெ.பி.கருணாவையும் போன்றவர்களும் ஓரமாக ஆங்காங்கே பொத்தினாற்போல இருந்துவிட்டுப் போகலாம் என்பதே என் எண்ணம். அதாவது மலையாளத்தில் ‘ஒந்நு ஜீவிச்சு போகட்டே ஆசானே’ என்று கேட்டுக்கொள்கிறோம்.
என் கவலை எல்லாம் இப்படியே போனால் ராமசாமி அவர்களிடம் வசைபெறுவது ஒரு தகுதியாக ஆகிவிடக்கூடாது என்பதுமட்டுமே.கடைசியில் அதற்காக அவரிடம் லஞ்சம்கொடுக்க ஆட்கள் வரும் நிலை ஏற்பட்டுவிடும். அவர் வாங்கவும் மாட்டார், ரொம்ப கஷ்டம்
ஜெ
=====================================
வலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி
கருணா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

