மெல்லுணர்ச்சிகளும் கலையும்

ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் மெல்லுணர்ச்சிகளுக்கான இடம் என்ன என்று கேட்கப்பட்டது.  நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது


உணர்ச்சிகள் அல்லது மெல்லுணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. இந்தக்காலத்தில் நுண்மையான உணர்ச்சிகள் குறைகின்றன என்று சொல்வது ஒரு வழக்கம் என்றாலும் அது உண்மை அல்ல. யோசித்துப்பாருங்கள், பெரும்போர்கள் பஞ்சங்களின் காலமாக இருந்த நம் இறந்தகாலங்கள் மெல்லுணர்ச்சிகளுக்கு இன்றைவிட சாதகமான காலங்களா என்ன? மெல்லிய உணர்ச்சிகள் எப்போதும் இருக்கும். அவை இலக்கியத்தையும் கலைகளையும் எப்போதும் ஊடகமாகவும் கொள்ளும்.


ஆனால் இந்த மெல்லுணர்ச்சி என்ற சொல்லை நாம் கொஞ்சம் கவனமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. பலசமயம் சல்லிசான ஒரு உணர்ச்சியையே மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.  பெரும்பாலும் அன்றாட லௌகீக வாழ்க்கையின் சில சாதாரணமான தருணங்களை வேறுகோணங்களில் கண்டடைவதையே அப்படி எண்ணுகிறார்கள். அவற்றை முன்வைக்கும் எழுத்துக்களுடன் எளிதாக அடையாளம் காணமுடிகிறதென்பதே அவற்றை ரசிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.


பலசமயம் ஹோமியோ மருந்துபோல ஊசிமுனையில் தொட்டு ஒரு செம்பு நீரில் கலக்கி ஒன்றை அளித்தால் அது நுண்மை என்றும் அதை ஊகித்தெடுப்பதே கலையுணர்வு என்றும் சொல்லப்பட்டது. அவை உத்திநுட்பங்களே அல்லாமல் இலக்கியநுட்பங்கள் அல்ல. நல்ல வாசகன் ஒருபோதும் படைப்பின் உத்திநுட்பங்களை அக்கறைகொண்டு வாசிக்கமாட்டான்


அறுபது எழுபதுகளில் சாதாரணமான மனிதர்களிடம் மனிதாபிமானம் வெளிப்படும் தருணங்களைக் கண்டுபிடித்து எழுதுவது மெல்லுணர்ச்சி சார்ந்ததாகக் கருதப்பட்டது. இத்தகைய கணிசமான கதைகளைத் 'தப்பாகப்புரிந்துகொண்டுவிட்டுப் பின்னால் வருந்துவது' என்ற வகைமைக்குள் அடக்கிவிடலாம். ஒரு முறைமீறிய பாலுறவை மெல்ல தொனிக்கவிட்டுச் சொன்னால் அது மெல்லுணர்வு என்று எழுபதுகளில் கருதப்பட்டது.    இன்று அக்கதைகளை செம்மலர் கணையாழி தொகுதிகளில் வாசித்தால் ஆச்சரியமாகவே உள்ளது.


சுந்தர ராமசாமி சொல்வார் 'காலையில் எழுந்ததுமே இன்று எதைப்பார்த்து நெகிழலாம் என யோசிக்கும் மனநிலை இது'  என. இதை மிகையுணர்ச்சி [செண்டிமென்ட்] என்றே சொல்வேன். எப்படி மிகைநாடகம் [மெலோடிராமா] இலக்கியத்துக்கு ஒவ்வாததோ அப்படித்தான் இதுவும். ஆசிரியரே நெகிழ்ந்துகொண்டே கதைசொல்வது எப்போதுமே தமிழில் ரசிக்கப்படுகிறது. வாசகர் முன்கூட்டியே அந்த மனநிலைக்குத் தன்னைத் தயாரித்துக்கொள்கிறார். தன் முதிர்ச்சி, தர்க்கபுத்தி, நகைச்சுவைஉணர்ச்சி ஆகியவற்றை இக்கதைகளுக்காக கொஞ்சம் ரத்து செய்துகொள்கிறார்.


நல்ல வாசகன் அதைச்செய்வதில்லை. அவனுக்குத் தேவை சௌகரியமான சில மனநிலைகள் அல்ல. உண்மைகள். ஆகவே தன் முழுத் தர்க்கத்தாலும், முழு நகைச்சுவையாலும், முழு முதிர்ச்சியாலும் இலக்கியத்தை அணுகுவதே அவன் வழக்கமாகும். அந்த நிலையிலும் அவனை ஈர்த்து மேலே கொண்டுசெல்லும் ஆக்கங்களையே நாம் முக்கியமானவை என்கிறோம். தர்க்கத்தை நிறைவுசெய்தபின் உணர்வுகளையும் உள்ளுணர்வுகளையும் நோக்கிப் பேசுபவையாக அவை இருக்கும்.


அப்படியானால் மெல்லுணர்ச்சி என்றால் என்ன? 'மெல்லுணர்ச்சி என்பது இயற்கையிலும் மனிதர்களிலும் மறைந்துகிடக்கும் நுண்ணிய விஷயம் 'ஒன்றை உணர்வால் தொட்டு எடுப்பது' என வரையறை செய்யலாம். அந்த அம்சம் என்றும் இலக்கியத்தில் உண்டு. அத்தகைய உண்மையான மெல்லுணர்ச்சி என்பது அதைத் தொட்டதுமே சல்லிசாகப் போய்விடாது. நினைவிலும் உணர்விலும் வளரும். நாம் இங்கே சாதாரணமாக மெல்லுணர்வு என்று சொல்லிக்கொள்ளும் பலவிஷயங்கள் ஒருநாள் தாண்டினால் அற்பமானவையாக ஆகிவிடுகின்றன.


கலையின் இலக்கு இதெல்லாமா என்ன? கலையின் ஊடகம் கற்பனை. அது நம்மைக் கற்பனைவழியாக இணையான ஒரு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். அன்றாடவாழ்க்கையில் எப்போதோ ஒரு உச்ச அனுபவத்தருணத்தில் மட்டுமே நாம் நம் ஆழத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தத் தருணத்தைக் கலை கற்பனைமூலம் அளிக்கவேண்டும். அதன் வழியாக நம் ஆழ்மனத்தை நோக்கி , அதன் வழியாக வாழ்க்கையின் மையம் நோக்கி அது செல்லவேண்டும்.


அறிவுடன் மட்டும் பேசும் மேலான ஆக்கங்கள் உள்ளன. அங்கத இலக்கியங்கள் அவ்வகைப்பட்டவை. ஆனால் சிறந்த இலக்கியங்கள் நம் கனவுடன் பேசுகின்றன. நம்மில் ஊடுருவி நம் கனவை அவை கட்டமைக்கின்றன. அதற்காக மொழியைப் படிமங்களாக ஆக்குகின்றன.


அப்படியானால் படைப்பில் தர்க்கம் எதற்காக? ஒரு நல்ல வாசகனின் கனவுத்தளம் வலிமையான தர்க்கத்தால் மூடப்பட்டதாகவே இருக்கும். அவன் அதுவரை வாசித்தவையும் யோசித்தவையும் அடங்கிய ஒரு ஓடு அது. அதை உடைத்துத் திறக்கக்கூடிய அளவுக்கு வல்லமையான தர்க்கம் எழுத்தில் தேவை. வாசகனைவிட மேலான அறிவார்ந்த தர்க்கதளம் இல்லாத  படைப்பு அவனைக் கவர்வதில்லை. ஆனால் அந்தக்கதவைத் திறந்தபின் இலக்கியம் செல்லும் இலக்கு அவனுடைய ஆழ்மனக் கனவுகளை நோக்கியே.


நல்ல வாசகனின் கனவுலகைச்சுற்றி அவன் அறிவுத்தர்க்கம் வீட்டைக் காக்கும் நாய்களைப்போல நின்றுகொண்டிருக்கிறது, எப்போதும் விழிப்புடன். அவனுக்கு அந்தக் கனவு அவ்வளவு முக்கியமென்பதனால் அவன் அதை அப்படிப் பத்திரமாக அந்தரங்கமாகத்தான் வைத்திருப்பான். அதைத் தீண்டாமல் ஆயிரம் கதைகளை சும்மா வாசித்துத் தள்ளிக்கொண்டுமிருப்பான். புனைகதையின் அறிவார்த்தம் என்பது அந்த வேட்டைநாய்களுக்கான இறைச்சித்துண்டுகள்தான். அவற்றை மீறி உள்ளே நுழைவதற்காக.


ஒரு நல்ல படைப்பின் உடல் மெல்லுணர்வைத் தீண்டும் நூற்றுக்கணக்கான அவதானிப்புகளுடன் மொழிவெளிப்பாடுகளுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில வரிகளை எடுத்து நீர்க்கச்செய்து அளித்தால் எளிய வாசகர்கள் எழுச்சியும் உவகையும் கொள்வார்கள். ஆனால் நல்ல வாசகனுக்கு அவை அவன் செல்லும் வழியாகவே இருக்கும் , இலக்காக அல்ல. இலக்கு என்பது மெய்மையைத் தீண்டும் கனவாகவே இருக்கமுடியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.