முகம்சூடுதல்

index


 


அன்புள்ள ஜெ


 


வியாசப்பிரசாத் அவர்களின் வகுப்புகளை யூடிபில் போய்ப்பார்த்தேன். எந்தவகையான பாவனைகளும் இல்லாமல் நேரில் பேசுவதுபோல பேசுகிறார். ஆழமான உரை. சிலமுறை கவனித்தால்தான் புரியுமென நினைக்கிறேன்


 


என் கேள்வி சாதாரணமானது. அவரும் நீண்ட தாடி வைத்திருக்கிறார். கொஞ்சம் கார்ல்மார்க்ஸ் போலத்தெரிகிறார். நடராஜ குரு, நித்யசைதன்ய யதி ஆகியோர் தாடி வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால். நாராய்ணகுரு தாடிநீட்டி வளர்க்கவில்லை. ஜித்து கிருஷ்ணமூர்த்தியும் தாடி இல்லை. இந்தத்தாடி ஒரு யூனிஃபார்ம் போல உள்ளதா?


 


மாதவன்


image

முனி நாராயணப்பிரசாத்


 


 


அன்புள்ள மாதவன்


 


’மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்’  என்பது குறள். உலகம் பழிக்கும் அனைத்தையும் தவிர்க்கமுடியும் என்றால் துறவு தேவையில்லை என்பது இதன்பொருள். இக்குறள் காட்டும் இன்னொரு தகவல் இருவகையான துறவுமரபுகள் இருந்தன என்பதுதான். ஒன்றுக்கு மழித்தலும் இன்னொன்றுக்கு நீட்டலும் அடையாளங்களாக இருந்தன.


 


சைவ,சாக்த மரபுகளில் துறவு என்பது தாடியும்முடியும் நீட்டுதல்தான்.   துறவுக்கு சங்கல்பம் எடுப்பதன்பெயர் தீக்ஷை கைக்கொள்ளுதல். ஒரு குருவிடமிருந்து அதைப்பெறுவார்கள். தாடிவளர்ப்பதும் தீக்ஷை என்றே கொள்ளப்பட்டது. இன்றும் தாடியை தீக்ஷை என சொல்வதுண்டு. பிரம்மசாரியாக இருக்கையில் மழித்துக்கொள்வதும் காவிபெற்றபின் அதைத் தவிர்த்துவிடுவதும் வழக்கம்


 


அதன் நேரடி அர்த்தம் என்னவென்றால் அணிபுனைவதை விடுவது என்றே. தாடி மழித்தல் என்பது தன்னை அலங்கரித்து அழகாக முன்வைத்தல். ஆகவே அதைத் தவிர்ப்பது துறவின் ஒர் அடையாளமாகக் கருதப்பட்டது. எண்ணைதேய்த்துச் சீவுவதை விடுவதனால் நாளடைவில் சடைகளும் உருவாயின.  இது தொன்மையான ரிஷி மரபிலிருந்தே இருந்துவந்த வழக்கம்.


 


அதேபோல மழித்தலும் துறவுக்கோலமே. முழுமுண்டனம் என்பது இல்லறத்தோருக்கு அமங்கலமாகவே கருதப்பட்டது. ஆகவே அது, துறவின் அடையாளம். பௌத்த சமண மரபுகள் அதை முன்வைத்தன. அவர்கள் தாடி முடி வளர்ப்பதை ஏன் ஆதரிக்கவில்லை என்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவர்கள் பெரும்பாலும் திறந்தவெளிகளில் தங்குபவர்கள். ஆகவே நீண்டதாடிமுடி போன்றவை பேன் முதலிய சிற்றுயிர்களைப் பெருக்கும். அவற்றை ஒழிக்க முயன்றால் உயிர்க்கொலைக்கு காரணமாகநேரிடும்.இரண்டு தாடியும்சடையும் கருணைமிக்கத் தோற்றத்தை மறைத்துவிடுகின்றன.


 


மழித்தல் நீட்டல் இரு முறையுமே இன்று இந்து துறவுமரபுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன நாராயணகுரு பௌத்த மரபுக்கு அணுக்கமானவர். பௌத்த துறவடையாளங்களையே அவர் மேற்கொண்டார். காவிக்குப் பதிலாக மஞ்சளைத் தெரிவுசெய்தார். நாராயணகுருவின் மரபில் பலர் முண்டனம் செய்துகொள்பவர்களே. இப்போதைய நாராயணகுருகுலத் தலைவர் முனி நாராயணப்பிரசாத்  மழித்துக்கொண்டவர். ரமணரும் முண்டனம்தான் செய்துகொண்டார்..


 


துறவி ஏன் துறவடையாளங்களை வெளிப்படையாகச் சூடவேண்டும்? பல நூல்களில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான காரணம் என்னவென்றால் அவரிடம் வேறு எவரும் இரந்து கையேந்தக்கூடாது என்பதனால்தான். துறவியே ஆனாலும் இரப்பவனுக்கு ஈயாதிருத்தல் இழிவு. ஈய ஆரம்பித்தால் பொருள்தேடவும் ஆரம்பிக்கவேண்டும். அதன்பின் துறவு இல்லை, உலகியல்வாழ்க்கைதான்.


 


துறவிக்குச் சில நெறிகள் சில வழக்கங்கள் உள்ளன. ஒன்று, அவர் எவருக்கும் தலைகுனிந்து தான் முதல்வணக்கம் செய்யக்கூடாது. அவர் இல்லறத்தாருடன் தங்கக்கூடாது. சிலவகை உணவுகளை அவர்கள் அருந்தக்கூடாது பலமரபுகளில் குழந்தைகளை அவர்கள் தொடுவதுகூட விலக்கப்பட்டுள்ளது. இந்நெறிகளை ஒரு துறவி பேணவேண்டுமென்றால் அவர் துறவி என பிறர் அறிந்திருக்கவேண்டும்.


1

2-2-2017


 


ஆனால் இறுதியாக ஒன்றுண்டு, நாம் உள்ளே எவரோ அந்த முகத்தைச் சூடவே விரும்புவோம். கண்ணாடியில் பார்த்தால் யாரிது எனத் துணுக்குறக்கூடாதல்லவா? ஹார்மோன் சிக்கலால் பெண்ணாக மாறிக்கொண்டிருப்பவர்களுக்கு ஆண் உடையும் ஆண் தோற்றமும் பெரும் அருவருப்பை அளிக்கும் என்பார்கள். கிட்டத்தட்ட அதேபோலத்தான்


 


நான் எப்போதுமே கண்ணாடியில் என்னைப் பார்க்கையில் ஓர் அன்னியனைத்தான் காண்கிறேன். அது என் முகமல்ல என்று உணர்கிறேன். எப்போதாவது பயணங்களில் தாடிமீசை வளர்ந்து ஒருவகையான தீவிரம் கொண்ட முகம் அமையும்போது ’இதுநான்’ என நினைப்பேன்.


 


இப்போது மூகாம்பிகை பயணம் நடந்தபோது அப்படி ஒரு முகம். மீண்டுவந்து நாவல் தொடங்கும் மனநிலைக்கும் அதுவே உகந்ததாக இருந்தது. அப்படியே இருக்கலாமென நினைத்தேன். வேறொன்றைச் சூடவேண்டியதில்லை என தோன்றியது


2

5-2-2017


 


பின்னர் தெரிந்துகொண்டேன், அது பெரியசுமை. அந்த முகத்துடன்   நான்  வாழும் சூழலில் புழங்கமுடியாது. அந்த தாடிமீசை முகத்துடன் இங்கே அன்னியனாக ஆகிறேன். கவனிக்கப்படாமல் எங்கோ இருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டிருப்பதே எழுத்தாளனாக எனக்கு வசதியானது. தீவிரமான முகம் என்னை எங்கும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது


 


ஆகவே மீண்டும் முகத்தை மாற்றிக்கொண்டேன். தாடி வளர்ந்திருந்தமையால் சரி, மீண்டும் மீசை வைத்துக்கொள்ளலாம் என ஓர் எண்ணம் வந்தது. மீண்டுமொரு முகம். இது என்னுடையதல்ல, ஆனால் வசதியாக ஒளிந்துகொள்ள ஏற்றது


 


 


ஜே

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2017 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.