மிருகவதை – கடிதம்

 


1

மரபணு மாற்றப்பட்ட பூனை


 


அன்பின் நண்பருக்கு,




‘மிருக வதை எனும் போலித்தனம்’ எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது திணிக்கப்படும் மிருக வதைகளில் மிகவும் முக்கியமானதும் ஆகும்.


மலையாள எழுத்தாளர் டி.டி.ராமகிருஷ்ணனின் ஆல்ஃபா நாவல், பேராசிரியர் குழுவொன்று ஒரு ஆராய்ச்சிக்காக ஆல்ஃபா எனும் தனித் தீவில் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. அப்பேராசிரியர் குழுவிலிருந்து உருவாகும் சந்ததிகளாக தீவில் எஞ்சிய நாற்பத்தெட்டு இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் தமது உணவுக்காக மீன்களை, பறவைகளை, விலங்குகளை வேட்டையாடி பச்சையாக உண்பதையும் ஒரு புனைவாக விவரித்திருப்பார் எழுத்தாளர். நம் ஆதி மனிதர்களும் அவ்வாறுதானே இருந்திருப்பர்? கற்காலத்தில் பசியின் தூண்டுதலில் சக விலங்கை வேட்டையாடிச் சுவைத்துப் பழகி, பசி நீங்கிய பின்னரும் வேட்டை என்பதே நடைமுறைப் பழக்கமாகி, பின்னர் அது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக் கூடும். அந்தப் பாரம்பரியத்தையே இந்த நூற்றாண்டிலும் கடல் சீல் பிராணிகளை, திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் மூலம் இன்றும் தொடர்கிறார்கள். அந்த வேட்டையை நியாயப்படுத்தும் சமூக நல ஆர்வலர்கள் இன்னும் இன்றும் இருப்பதுதான் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.


அதைப் போலவே அண்மைக்காலமாக புதிதாக ஆனால் மிகவும் இலாபத்தைத் தரத்தக்க ஒரு வியாபாரமானது, இந்நூற்றாண்டில் தோன்றியிருக்கிறது. கர்ப்பிணிக் குதிரைகளின் குருதியை உறிஞ்சி (Pregnant horse blood trade) எடுத்து, ஐரோப்பிய மருந்துத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வது மிக இலாபம் தரும் தொழிலாக மாறியிருப்பதால், குதிரை வளம் கொண்ட அநேக நாடுகள் மறைமுகமாக இதனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகவென்றே பண்ணைகளும் இருக்கின்றன.


 


2

பாண்டா கரடி போல அறுவைசிகிழ்ச்சை வழியாக மாற்றப்பட்ட நாய்


 


ஆசிய நாடுகளில்தான் விவசாயத்துக்கென விலங்குகளை வளர்ப்பதுவும், பயிற்றுவிப்பதுவும் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. ஏனைய நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இறைச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவுமே அவை வளர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வித விதமான செல்லப்பிராணிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பல நிற வண்டுகள் முதற்கொண்டு கரடி வடிவிலான நாய்கள், கைக்கடக்கமான பூனைகள், சிறகு வெட்டப்பட்ட பேசும் கிளிகள், கழுகுகள் எனப் பலதும் அதில் அடங்கியிருக்கின்றன.


இங்கு இணைக்கப்பட்டுள்ள பனிக்கரடி வடிவத்தையொத்த நாய்க்குட்டி மூன்று மாத வயதுடையது. கார்த்திக் சொன்னதுபோல designer dog பிரிவில் இதனை உள்ளடக்கலாம். இதன் மயிர்கள் சுடப்பட்டு, தோலினூடாக வர்ணப் பூச்சுக்களையேற்றி பனிக்கரடியாக்கியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக வேண்டி அதிக ஊட்டச்சத்துக்களும், ஊசி மருந்துகளும் ஊட்டப்படுகின்றன. ஒரு நாள் முழுவதுமாயினும், உடற்கழிவுகளை அகற்றாமலிருக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பூனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் எலும்புகளை முடங்கச் செய்யவும் சிறிய போத்தல்களில் போட்டு அடைத்து வைப்பதும் நடக்கிறது. சிட்டுக் குருவிகள் முதற்கொண்டு பல வகைப் பறவைகளையும் சிறகுகளை வெட்டி, கூட்டை விட்டு வெளியே விற்பனைக்காகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.


இவ்வாறான நாய்களையும், பூனைகளையும், ஏனைய விலங்குகளையும் ஒரு விளையாட்டுப் பொருள் போல வாங்கிச் செல்லும் அரேபியர்களும், ஏனையவர்களும், பின்னர் அவற்றைப் பராமரிக்க இயலாமல் தெருவில் எறிந்து விடுவதுவும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. திடீரென தெருவில் விடப்படும் சடை வளர்த்த நாய்களும், பூனைகளும் தமக்கான உணவைத் தேட இயலாமல், தெருவில் நடமாடத் தெரியாமல், ஏனைய வலிய விலங்குகளினதோ அல்லது வாகனங்களின்மீதோ தாக்குதல்களுக்கு இலக்காகி வீதிகளில் மரித்துக் கிடக்கும். சுத்திகரிப்பாளர்கள் தெருவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். அந்த நாளும், அந்தப் பிராணியின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து விடும்.


ஆனால், முடியாத ஒன்று இருக்கிறது. மேற்படி விலங்குகளை, பறவைகளை கொடூரமாகப் பயிற்றுவிக்கும் வேலைகளில், சொற்ப சம்பளங்களோடு ஈடுபடுத்தப்படுவது நமது இலங்கை, இந்திய, நேபாள, பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள். வருடக்கணக்காக இதையே தொழிலாகச் செய்யும்போது அவர்களது சக உயிர்கள் மீதான கருணையும், மனிதாபிமானமும் மரித்துப் போகத்தான் செய்யும். அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும்போது அம்முரட்டுத்தனத்தை, அக்காருண்யமற்ற நடத்தைகளை அவர்கள் தம்மோடு தமது கிராமங்களுக்குக் காவி வருவது ஆபத்தானது. சாதாரணமாக விலங்குகள், பறவைகளைக் காணும்போது கூட அவர்கள் அதற்கு ஏதாவது தீங்கினைச் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ, அவ்வாறானவர்களின் மனப் பிறழ்வுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையளிப்பதற்கோ எந்த விலங்கு நல அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும் முன்வருவதில்லை என்பது இன்னும் மிக மிக ஆபத்தானது.


- எம்.ரிஷான் ஷெரீப்


ஜல்லிக்கட்டு தீர்ப்பு


மிருகவதை என்னும் போலித்தனம்


ஜல்லிக்கட்டு பற்றி


ஜல்லிக்கட்டு ஒரு பேட்டி


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2017 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.