கல்வி கடைசியாக…

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


முதலில் என் கடிதத்தினைப் பிரசுரித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள், அக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது தாங்கள் பிரயோகப்படுத்தியிருந்த வார்தைகளே (மானுட மிருகங்கள், வஞ்சகர்கள், பொறுக்கிகள் , மாபியா மற்றும் புல்லர்கள்). இதை ஒரு சில அற்பர்களுக்கு மட்டுமே தாங்கள் எழுதியதாகக் கூறவில்லை. மாறாகப் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரமாக அனைத்து ஆசிரியர்களையும் உள்ளடக்கி (தாங்கள் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தவர்கள், தங்கள் மாமனார், மற்றும் திரு வேதசகாயகுமார் ஆகியோரயும் சேர்த்தே) தாக்குவதாகவே அது அமைந்திருந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நல்லவர்கள் மைனாரிட்டியாக இருக்கலாம் அதற்காக அவர்களும் அந்த அவப்பெயரினைச் சுமக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்?


எனக்குப் புரியவில்லை இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு வேளை ஆசிரியர்கள் கையாலாகதவர்கள் என்பதாலா? (அல்லது ஊதியம் ஒரு காரணமாக இருக்கலாம் – இதன் அடிப்படையிலேதான் மென்பொருள் வல்லுனர்களும் பரவலான எதிர்ப்பினைப் பெற்றுள்ளனர் எனக் கருதுகிறேன்) இதே போன்ற வசைகளைப் பிற துறை அலுவலர்களிடம் பயன்படுத்தமுடியுமா? கிராம நிர்வாக அதிகாரிகளிடம் செருப்பைக் கழற்றி வெளியே போட்டு விட்டு ரேசன் கார்டு விண்னப்பத்திற்கும் வருமான, சாதிச் சான்றிற்கும் ரூ 100 உடன் நமது பல்லிளிப்புடன் 'கொஞ்சம் சீக்கிரமாp பாத்து செஞ்சா பரவாயில்லை' என்று கோரிக்கை வைப்பவர்கள்தாமே நாம். அவர்களிடம் நம் வீரம் எடுபடவில்லையே. இன்னும் இலஞ்சம் வாங்காத அல்லது வாங்க இயலாச் சூழலில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால்தான் மரியாதை இல்லையோ? (அதிகமாக இலஞ்சம் வாங்குவரிடம்/ அமைப்புகளிடம் நாம் காண்பிக்கும் மரியாதையும் / பயமும் அதிகமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை)


நான் உண்மை நிலை உணராமல் எழுதியிருப்பதாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். தெளிவாக விளக்குகிறேன்.தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், 1வது மற்றும் 6ம் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கையானது மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது. இது தொடருமேயானால் பள்ளிகளில் ஆட்குறைப்பு முதல் பள்ளியினையே இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் ( தற்போதே தொடக்கப் பள்ளிகள் சேர்க்கைக் குறைவு காரணமாகப் பரவலாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன). இதனைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர். தன் வேலைக்கே ஆபத்து என்ற சூழலில் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார்கள் என நம்பலாம் (வேறு வழியே இல்லை என்பதால்)


இன்றைய சூழலில் அரசுப் பள்ளிகளைக் குறை கூறுபவர்கள் ஓருமுறையேனும் தான் படித்த பள்ளிக்குச் சென்று இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா? (என்னை இந்நிலைக்குத் தாழ்த்திய பள்ளிக்கு நான் எவ்வாறு செல்வது எனக் கருதவேண்டாம் – படித்தபோது இருந்த ஆசிரியர்கள் இன்று இல்லையே-அதனால் தாராளமாக செல்லலாம்-குறைந்தது உங்களைப் போல் பிற மாணவர்களும் ஏமாறுவதைத் தடுக்கவாவது செல்லலாம்) அவ்வாறு நினைத்து அப் பள்ளிக்கு அடிக்கடி சென்றிருந்தால் மிகுந்த உரிமையுடன் அங்கு நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி சரிசெய்யலாமே. அல்லது உண்மை உணர்வதற்காகவாவது ஒரு வாய்ப்புக் கிட்டும். பள்ளியின் புரவலர் திட்ட்த்தில் வெறும் ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்துவிட்டு அப்பள்ளியில் உரிமையுடன் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கலாமே. இன்னும் கூறப்போனால் பணமும் வள்ளல்தன்மையும் இருந்தால் ஒரு பள்ளியினையே தத்தெடுத்து அதைத் தலைகீழாக மாற்றும் சக்தி,குறைகூறும் நண்பர்களுக்கு வாய்ப்பாகக் காத்துள்ளது செய்வார்களா?


இதற்கு இரு உதாரணங்களை என்னால் காட்ட இயலும்.


நாமக்கல், கொக்கராயான்பேட்டை அரசுப் பள்ளியில் ஒரு காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையினால் வெறும் 120 மாணவர்களையும் மேல்நிலைத் தேர்வில் 30 சதவீத தேர்ச்சியையும் பெற்ற பள்ளி,2005க்குப் பிறகு ஆசிரியர்களின் முயற்சியால் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.பிறகு இன்றளவு வரை அப்பள்ளிக்கு வெற்றிமுகம்தான். இதைக் கண்ணுற்ற அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை பொன் பியூர் கெமிக்கல்ஸ் தலைவர் அவர்கள் அப்பள்ளியினைத் தத்தெடுத்துத் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பினை ஏற்படுத்தித் தந்து உதவியுள்ளார். தற்போது அப்பள்ளி மாவட்ட அளவில் முன்னோடிப் பள்ளியாகத் திகழ்கிறது.


இரண்டவதாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட்த்தில் தமிழக அளவில் தனியார்பள்ளிகள் கோலோச்சி வரும் இன்றைய சூழலில் ஆர்.புதுப்பாளையத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் 100% மிகச் சிறப்பான ஆங்கில வழிக் கல்வி நிலவுகிறது (அட்மிஷனுக்குப் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருமளவிற்கு நிலைமை உள்ளது). இதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பகுதியின் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள்.


நண்பர்களே, அனைத்துப் பள்ளிகளும் 100க்கு 100 மிகச் சரியாகச் செயல்படுகின்றன என்ற கருத்தினை முன் வைக்கவில்லை. ஆனால் 20 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 5 அரசுப் பள்ளிகளாவது இருக்கும். அதில் நிச்சயம் ஓரிரண்டு பள்ளிளாவது உறுதியாக நல்ல பள்ளியாக இருக்கும். அந்த நல்ல பள்ளியில் படிக்கவைத்துக் குறையுள்ள பள்ளியைப் புறக்கணியுங்கள். சேர்க்கை குறையும் போது நிச்சயம் தவறு செய்யும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் திருந்துவார்கள். (இல்லையென்றால் பள்ளியினையே இழுத்து மூடவேண்டி வருமே). முறையான வழியில் அப்பள்ளிகளின்/ ஆசிரியர்களின் குறைபாடுகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். இது ஆசிரியர்களைக் கடலில் கொண்டு தள்ளுவதைவிடச் சற்று சுளுவான வேலை.


குறைகூறுபவர்கள் களத்தில் நின்று குறைகளைச் சரி செய்யுங்கள். அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. இங்கு உங்களது மேலான அக்கறை மட்டுமே தேவைப்படுகிறது. படித்தவன் சூதும் வாது செய்தால் அய்யோ என்று போவான் என பாரதியார் ஒரு முறை அல்ல மூன்று முறை கூறுகிறார். ஆசிரியர் மட்டும் படித்தவனல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.


இறுதியாக ஒரு சிறிய நையாண்டியுடன் முடித்துக் கொள்கிறேன்,


ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் (கணித ஆசிரியர் உட்பட) தன் சம்பளத்தினைக் கூட எண்ணத்தெரியாது என்பதைத் தம்மம்பட்டி நண்பர் கண்டுபிடித்துவிட்டதால் இப்போது ATM மூலம் பணம் வழங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த 1 ரூபாய் நாணயத் தட்டுப்பாடு நீங்கிவிட்டது. ஆனால் எனக்குத்தான் இன்னும் குழப்பம் உள்ளது.பணத்தை எண்ணத் தெரியாதவர்கள் வட்டித் தொழில் மிகச்சிறப்பாகச் செய்வதாக நண்பர் எப்படிக் கூறுகிறார் எனத் தெரியவில்லை (வட்டித் தொழில் செய்பவர்களுக்கு பிரெயிலி முறைகூடத் தெரியும். இருட்டில் கூடப் பணத்தை எண்ணும் ஆட்கள் அவர்கள்)


மிகுந்த அன்புடன்,


ந.மகேஷ்குமார்,


நாமக்கல்


பி-கு. அண்ணாச்சிக்கு (இவ்வாறு அழைக்கலாம்தானே), சென்ற கடிதத்தில் தங்களை மரியாதைக் குறைவாக நான் எழுதியதாக என் மனைவி வருத்தப்பட்டாள். என்னால் ஒரு போதும் அவ்வாறு தங்களுக்கு எதிராக மரியாதைக் குறைவாக எழுதமுடியாது எனவும், கருத்தினை விமர்சிப்பது தனிமனித அவமரியாதையல்ல என்றும் கூறினேன். மீண்டும் கூறுகிறேன்,தங்கள் மேல் கொண்ட மிகுந்த அன்பின் காரணமாகவே அப்போதும் இப்போதும் எழுதுகிறேன். வேறு ஒருகாரணமும் அல்ல.


மேலும் கடிதம் எழுதிக் கருத்துக்களை முன்வைத்தல், மற்றும் நுணுக்கமான செய்திகளைத் தேர்ந்தவர்களுக்கு மட்டும் புரியுமாறு எழுதுதல் ஆகியவற்றில் நான் ஒரு சதவீத தேர்ச்சி (இனி) பெற்றாலும் அதன் பெருமை நிச்சயம் தங்களையே சாரும். இதை உறுதிபடக் கூறுவேன்.


தீட்டிய மரத்தில் கூர் பார்த்த குற்ற உணர்வு சற்று உள்ளது. என்ன செய்வது,நமது பாரம்பரியம் அதுதானே.


 


அன்புள்ள மகேஷ்


மன்னிக்கவும் தாமதம். பயணங்கள் , எழுத்துவேலை


பரவாயில்லை, நீங்கள் கூர் பார்க்கலாம். அது மரியாதைக்குறைவெல்லாம் இல்லை, மறுப்புத்தானே?


உங்கள் எழுத்துக்களில் பிரச்சினை ஒன்றுமில்லை. உரைநடை கச்சிதமாகவும் நையாண்டி வெளிப்படுமிடங்களில் கூர்மையாகவும் உள்ளது. எதையுமே எழுதிப்பார்ப்பது நல்லது என்பது என் கருத்து. அது எண்ணங்களைச் சுருக்கமாக செறிவாக தர்க்கபூர்வமாக அமைக்க உதவும்.  தொடர்ந்து எழுதுங்கள்.


அன்புடன்


ஜெ


'ஒரு தற்கொலை'

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2011 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.