விவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்

1


 


அன்புள்ள ஜெமோ,


 


உங்களைச் சீண்டவோ, சில்லறை வம்புக்காகவோ இதைக் கேட்கவில்லை. நான் சமீபத்தில் ஒரு கடையில் விவேக் ஷன்பேக் கதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்த நூலை வாங்கினேன். அதை வம்சி வெளியிட்டிருந்தது. கூடவே நின்ற நண்பர் ஒரு ஜெமோ வெறுப்பாளர். ஒரு கதைகூட வாசித்ததில்லை. அவர் வாசிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்பார். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு குறை சொல்வார். அன்றைக்கு அந்த நூலை காட்டி அதில் பலர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், உங்கள் பெயர் மட்டும் அட்டையில் உள்ளது, இது மோசமான வியாபார தந்திரம் என்று வசைபாடினார். இந்த ஏமாற்றுவேலையை நீங்கள் ஏன் தட்டிக்கேட்கக்கூடாது என்றுகேட்டார். முதல்முறையாக இதுசரிதானே என நினைத்தேன். ஆகவே இதை எழுதுகிறேன்


 


சரவணக்குமார்


 


 


அன்புள்ள சரவணக்குமார்,


 


உங்கள் அறச்சீற்றத்துக்கு பாராட்டுக்கள்.


 


ஆனால் விவேக் ஷன்பேக் தமிழில் அறியப்படாத எழுத்தாளர். அவர் எழுதிய அந்நூல் 300 பிரதிகள் அச்சிடப்பட்டது. அதில் வணிக மோசடியால் குவிக்கப்பட்ட பணம் பல லட்சங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஊழலுக்கெதிரான உங்கள் கொந்தளிப்பை நீங்கள் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கலாம்.


 


ஒருபதிப்பகம் ஒரு அயல்மொழி ஆசிரியரின் ஆக்கத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க அறியப்பட்ட ஓர் எழுத்தாளரின் பெயரை பயன்படுத்தியிருந்தால் என்ன பிழை? சரி, வணிகமே என்றாலும் அதில் என்ன ஊழல்? அதில் கதைகளை மொழியாக்கம் செய்தவர்களின் பெயர்கள் தெளிவாகவே உள்ளே அளிக்கப்பட்டுள்ளன. முதல்பக்கத்தைப்புரட்டிப்பார்க்கும் எவருக்கும் தெரியும். அட்டையை மட்டுமே பார்க்கும் ஆசாமிகள் வாசகர்களா என்ன?


 


கடைசியாக , உண்மையில் நிகழ்ந்தது என்ன என்பது பற்றி. 2009 டிசம்பரில் நான் விவேக் ஷன்பேக் கதைகளை மொழியாக்கம்செய்யத் தொடங்கினேன். காரணம் அப்போது புனைவுலகிலிருந்து சற்று வெளிவந்திருந்தேன். மொழியாக்கம் செய்வதென்பது புனைவுலகுக்குள் நம்மை செலுத்திக்கொள்வதற்கான நல்ல வழி. அன்றைய வேகத்தில் இரண்டுநாட்களுக்கு ஒரு கதைவீதம் மொழியாக்கம் செய்தேன்


 


ஆகவே நூலை 2010 ஜனவரி புத்தகக் கண்காட்சிக்குள் நூலை முடித்துத் தருவதாக ஷைலஜாவிடம் சொன்னேன். அதை நம்பி அவர் நூலுக்கான அட்டையும் அச்சிட்டுவிட்டார். பொதுவாக அட்டைகளை நான்குநான்கு நூல்களுக்காகத்தான் அச்சிடுவார்கள் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


 


ஆனால் நான் நினைத்தபடி மொழியாக்கம் செய்ய முடியவில்லை. என் மனம் விலகிவிட்டது. ஆகவே நூல் வெளிவரவில்லை. பலமாதகாலம் நூல்திட்டம் அப்படியே கிடந்தது. 2011ல் நான் அறம் தொகுதியை எழுதினேன். அது அளித்த உத்வேகம் என்னை பல இடங்களுக்குக் கொண்டுசெல்ல மீண்டும் மொழியாக்கம் செய்யவே முடியவில்லை


 


அட்டை பழையதாகி அட்டைக்கான செலவு இழப்பாக ஆகும் என ஷைலஜா அஞ்சினார். என்னை போனில் அழைத்துக் கட்டாயப்படுத்திக்கொண்டே இருந்தார். 2012  புத்தகக் கண்காட்சி நெருங்கியது. ஆகவே நான் 2011 ஆகஸ்ட் வாக்கில்  என் குழுமத்தில் என் நிலைமையை விவரித்து, கதைகளையும் அளித்து இவற்றை மொழியாக்கம் செய்துதரமுடியுமா என நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் மொழியாக்கம் செய்தனர். அதுதான் நூலாகியது. ஆகவே அட்டையில் என்பெயர் மட்டும் உள்ளது. உள்ளே அனைவர் பெயரும் உள்ளது


 


அதில் நான்குகதைகள் நான் மொழியாக்கம் செய்தவை. மற்றவர்கள் ஆளுக்கொன்றாக மொழியாக்கம் செய்தனர். நான் முன்னுரை எழுதினேன். விவேக் ஷன்பேக் போன்ற ஒரு சீரிய படைப்பாளியை தமிழுக்குக் கொண்டுவர முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படியெல்லாம்தான் எல்லா நூல்களும் வெளிவருகின்றன.


 


உங்கள் நண்பரைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.என் மேலான வெறுப்பு வேறுவிஷயம். இத்தனைச் சிறிய விஷயத்தில் இப்படி ஒரு  ‘வணிகச்சதியை’ ப்பார்ப்பவர்  இதே தொழிலாக இருக்கும் மிகமிக ஆபத்தான மனிதர். தனிப்பட்ட செய்திகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள். அதிகபட்சம் ஐநூறுரூபாய்க்குமேல் அவரை நம்பாதீர்கள்.


 


 


ஜெ


 


சில்லறை [கன்னடச் சிறுகதை]


நம் வழியிலேயே நாம் விவேக் ஷன்பேக்


 



ஜாமீன் சாஹேப்-2
ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

 


 


 



விவேக் ஷன்பேக் சிறுகதை- 4
விவேக் ஷன்பேக் சிறுகதை 3
விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2016 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.