2.0

20161118_214547


 


எந்திரன்2 அல்லது 2.0 வின் முதல்தோற்ற வெளியீட்டுவிழா வரும் 20 ஞாயிறன்று மும்பையில் நிகழவிருக்கிறது.அழைப்பிதழே ஆல்பம் போலிருந்தது.


 


நான் வழக்கமாக சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை. எனக்கு அவற்றில் பெரிய இடமும் இல்லை என்பது ஒரு விஷயம். பலசமயம் நான் பயணங்களில் இருப்பதனால் கலந்துகொள்ள முடிவதுமில்லை. கடல், பாபநாசம் போன்ற படங்களின் விழாக்களில்  வெளிநாட்டில் இருந்தேன். எந்திரன் தொடக்கவிழாவின்போதும் வெளிநாட்டில்.


 


சினிமாவிழாக்கள்  பெரிய ஊடகக் கொண்டாட்ட நிகழ்வுகள். அங்கே விண்மீன்கள்தான் முதன்மை.நான் அங்கே என்ன செய்யப்போகிறேன் என்று  தெரியவில்லை. இருந்தாலும் ஞாயிறுகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்புகிறேன். ஊருக்கு நேற்று முன்தினம்தான் வந்தேன். கர்ணன் படவேலைகள்.


 


சினிமாக்கள் எப்படியோ இந்தியாவில் ஒரு சமகாலச் சரித்திரமாக ஆகிவிடுகின்றன. அவை நிகழும்போது ஓர் அன்றாட மனநிலையில் நாம் இருந்தாலும் திரும்பிச்சென்று பழைய செய்திகளைப் பார்க்கையில் ஒருகாலகட்டத்தின் பகுதியாக இருந்தமையின் மெல்லிய பரவசத்தை அடையமுடிகிறது. அவ்வகையில் எந்திரன் வெளியீட்டுவிழா ஓர் அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.


 


2.0 அனைத்துவகையிலும் ஒரு பெரிய தொழில்நுட்பக் களியாட்டம். ஷங்கரின் மனம் பொதுமக்களின் ரசனையை நுட்பமாக பின் தொடர்வது. நான் பார்த்தவரை இந்திய அளவில் சினிமாத் தொழில்நுட்பத்தின் உச்சம் இப்படம்தான்.


 


நான் படப்பிடிப்புக்கு எல்லாம் போனேன். என்ன நடகிறதென்றே புரியவில்லை. சினிமா சர்வதேசத் தொழில்நுட்ப நிபுணர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.மாரி இ வாக்ட், ஜான் ஹ்யூக்ஸ், வால்ட் ஜோஸ், கென்னி பேட்ஸ் , நிக் போவல், ஸ்டீவ் கிரிஃபின் என்று நம் சினிமாத்தொழில்நுட்பர்களின் பெயர்கள் திரையில் ஓடும் காலம். இயக்குநர் ஓர் இசையமைப்பாளர் போல கையசைத்து அவர்களை வழிநடத்தவேண்டியிருக்கிறது.


 


அக்‌ஷய்குமாரின் வில்லன் கதாபாத்திரத்தை நானே திரையில் பார்க்க விழைகிறேன். கிறிஸ்டோபர் நோலன் படங்களின் வில்லன்களைப்போன்ற தத்துவார்த்தமான ஆழம் கொண்ட கதாபாத்திரம்.


 


அத்துடன் வழக்கம்போல நம் உச்சவிண்மீனின் ஒளி. நான் பள்ளி மாணவனாக இருந்தபோது மூன்றுமுடிச்சு படத்தில் அவரைப் பார்த்தேன். இன்றுவரை நம்மை கவர்ந்திருக்கும் அந்தத் தோரணையும் துடிப்பும் முழுமையாக வெளிப்படும் படம்  இது


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2016 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.