சிறுகதைகள் -கடிதங்கள்4
ஆசானே
எதுவாக இருந்தாலும் பேசித்தீத்துக்கலாம். கோபம்லாம் இருக்கும். அதுக்காக ஒரு லிமிட் தாண்டிப்போயிரப்பிடாது கேட்டேளா? இதுக்குமேலும் அமெச்சூர் கதை போட்டு சாவடிசீங்கன்னா… வேண்டாம் . சொல்லீட்டேன்
செல்வா
அன்புள்ள செல்வா
சரி நிப்பாட்டியாச்சு
ஆறுதல் அடையுங்கள்
ஜெ
அன்புள்ள ஜெ
இந்தத் தளத்தில் நீங்கள் சுட்டிகொடுக்கும் கதைகள் எப்படியோ உங்களுக்குப் பிடித்தமானவையாகவே இருக்கும். இப்போது வரும் கதைகள் அப்படித்தெரியவில்லை. ஓரிரு கதைகள் மட்டும்தான் படிக்கும்படி உள்ளன. பலகதைகள் ஒழுங்காகப் பத்திகூட பிரித்துப்பிரசுரிக்கப்படவில்லை. இவற்றை ஏன் பிரசுரிக்கிறீர்கள் என அறிய ஆவல்
ஜெயச்சந்திரன் ஆர்
அன்புள்ள ஜெயச்சந்திரன்
நான் படித்துப்பிரசுரிக்கவில்லை. இவை எனக்குச் சுட்டி அளிக்கப்பட்டவை. என் கருத்துக்களை மன்றாடி கேட்டுக்கொள்வார்கள். ஆனால் 90 சதவீதம் எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவற்றை நினைவில் வைத்திருந்து எங்கோ ஒருநாள் என்னிடம் கசப்பாக வெளிக்காட்டுவார்கள். என் நண்பர்களாக இருந்து வெளியே சென்று வசைபாடுபவர்கள் பலரிடம் இதைக் கண்டுகொண்டிருக்கிறேன் . ஆகவே சரி வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என இக்கதைகளை சுட்டி கொடுக்கிறேன். ஏற்கனவே பிரசுரமானவற்றுக்கு மட்டுமே சுட்டி. நானே எதையும் பிரசுரிக்கவில்லை.
சிறுகதைகளை எழுத ஆரம்பிக்கும்போது எல்லாருக்குமே ஒரு அமெச்சூர்த்தனம் இருக்கத்தான் செய்யும். நடை தெளிந்திருக்காது. கரு சாதாரணமாக இருக்கும். கதைக்கரு தேவையற்ற சித்தரிப்புகளுக்குள் சிக்கி இருக்கும். கதைக்கரு தெளிவாக முன்னெழும் அளவுக்கு சித்தரிப்பு இருக்காது. அவற்றை வாசகர்கள் சுட்டச்சுட்டத்தான் தெளிவு வரும். ஆனால் வாசக எதிர்வினைகளே இல்லாத சூழலில் அது சாத்தியமல்ல.
இதன்மூலம் அந்தத்தெளிவு கிடைத்தால் நல்லதுதானே? இந்த வரிசையில் கதை வெளிவந்த சுமார் 12 பேர் என்னுடைய எதிர்கால எதிரிகள் என தெரிந்தும் இதைச்செய்தது இந்நோக்கத்தால்தான்
ஜெ
இனிய ஜெயம்,
ருசி வாசித்தேன். நல்ல கதை. கதை சொல்லியின்ன் உணர்ச்சிகளுடன் நம்மை இயந்து பயணிக்க வைக்கும் மொழியும் வடிவும் நன்றாகவே கூடி வந்திருக்கிறது. இது நியாயமா எனக் கேட்கக் கிளம்பும் ஒருவன், தனது அற்பத்தனத்தை ”கண்டு கொண்டு” நியாயம் கேட்கும் தகுதியை இழக்கும் தருணத்தைக் கண்டு கொண்டு ஊர் திரும்ப முடிவு செய்யும் தருணம், நுட்பமாகவும் அழகாகவும் திரண்டு வந்திருக்கிறது.
முன்பு ஒரு பழைய சிவாஜி படம் பார்த்தேன். சிவாஜி மல்டி மில்லினியர். ஒரே மகள். அவளை காதலுக்கு தொலைத்தவர். ஒரு சின்ன மகளை பேத்தி போல வளர்க்கிறார். அவளுக்கு மூளையில் எதோ பின்நவீனத்துவ கலாட்டா ஆகி சீரியஸாக கிடக்கிறாள். பார்த்து விட்டு வெளியே வரும் சிவாஜி ஒரு கோன்ஐஸுக்கு ஆர்டர் தருவார்.
சமீபத்தில் நான் மிக மனம் சோர்ந்து அமர்ந்திருந்த தருணம் , நண்பர் வா முதல்ல ஏதாவது சாப்பிடுவோம் , தெம்போட இருந்தாத்தான் சோகத்த சுமக்க முடியும் என்று சொல்லி அவர் ஆர்டர் செய்தது குலோப் ஜாமூன்.
சிவாத்மா சொன்னார் என் தோழி ஒருத்தி இருக்கா மூட் ட்ராப் ஆகிடிச்சுன்னா சட்டுன்னு ஏதாவது ஹோட்டல் போய் ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்ட ஆரம்பிச்சிடுவா. பாக்க பயமா கூட இருக்கும் அப்டி சாப்பிடுவா என்றார்.
உண்மையில் இந்த மனச் சோர்வுக்கும், ருசிக்கும் ஏதேனும் ஏதேனும் தொடர்பு உண்டா என அறியேன், ஆனால் அதை இக் கதையில் வாசிக்கையில் இலக்கியம் பேசக் கூடிய உண்மை அது எனத் தோன்றியது.
நல்ல கதை. கொஞ்சமாக எதோ குறைகிறது. அது என்ன என சொல்லத் தெரியவில்லை.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
ஏதோ குறைகிறது, என்னவென்று சொல்லத்தெரியவில்லை, பொதுவாச்சொன்னா போன்ற வரிகள் விமர்சனமே அல்ல. அதேபோல சினிமாத்தனமா இருக்கு, செண்டிமெண்டா இருக்கு, இன்னும் சரியா வரலை, இதேமாதிரி படிச்சிருக்கேன் , முடிவ ஊகிச்சேன் போன்ற வரிகளும் விமர்சனம் அல்ல.
இவை கமெண்டுகள். இலக்கியமனநிலைக்கு எதிரானவை. ஏன் இப்படி இருக்கிறது, என்ன செய்திருக்கலாம் என்பதை மட்டுமே வாசகன் ஆசிரியனிடம் சொல்லவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

