‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16
[ 22 ]
மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே அவன் காலடி ஓசை கேட்டு விழியொளி கொண்டு உடலில் உவகை அசைவுகளுடன் எழுந்தன. அவனைக் கண்டதும் கைவிரித்தோடி வந்து பற்றிக் கொண்டன.
முதலில் வந்தவள் ஓநாயின் முகம் கொண்டவளாகிய ஜடரை. மெல்லிய முனகல் ஓசையுடன் எழுந்து காற்றென வந்து அவன் உடலைத் தழுவி அவனை முத்தமிடத்தொடங்கினாள். குளிர்ந்த மூக்கின் முத்தங்களால் அவன் உடல் சிலிர்த்துக் கூசியது. அவள் வாயிலிருந்து வெம்மைகலந்த மூச்சு ஊன் மணத்துடன் எழுந்தது. அனலென அவன் வாய்க்குள் புகுந்து வயிற்றில் குடிகொண்டாள். அவன் முன்னால் நடந்தபோது உடலெங்கும் அவள் எரிவதை உணர்ந்தான்.
மூவேளை பசியென அவன் உடலில் அவள் எழுந்தாள். அவன் வாழ்ந்தகாலத்தை மூன்றென பகுத்தாள். அவன் உடலை எரிவதும் அணைவதுமென இரு செயல் கொண்டதாக ஆக்கினாள். அவன் நோக்கிய அனைத்தையும் உண்ணத்தக்கதும் அல்லதுமாக பிரித்துக்காட்டினாள். அவன் கால்களில் ஆற்றலாகவும் கைகளில் விசையாகவும் எண்ணங்களில் ஒளியாகவும் ஆனாள்.
ஓநாயின் மங்கிய சிப்பிவிழிகள் கொண்டவள். இளநீல நீள்கூந்தல் பறக்கும் செந்நிற உடல்கொண்டவள். அவள் கொண்ட விழிகளை நோக்கி அவன் சொன்னான் “உன்னை விட்டுச்செல்லல் அரிது.” அவள் சிரித்து “ஆம், இளையோனே! நானே இங்குள பருப்பொருள் அனைத்திற்கும் விழுப்பொருள் அளிக்கிறேன். பொருள் ஒவ்வொன்றும் சுவையென்றே முதன்முதலாக மனித நரம்புகளில் உணரப்படுகின்றன. அதன்படியே நன்று தீது அழகு அல்லது என ஆகின்றன. நானே முதலறிவை” என்றாள்.
“அன்னம் உடலென்றாகும்போது அதிலெழும் முதல் உணர்வு நானே. உடல் அன்னமென்றாகும்போது இறுதியாக மறைபவளும் நானே” என்றாள். “தேவி! நீ என்னுடன் இரு. இவ்வுலகனைத்தையும் சுவையென சமைத்து எனக்குப் பரிமாறு” என்றான் அர்ஜுனன். அவள் கனிந்த சிரிப்புடன் அவன் தலையை வருடி “நீ என்றும் எனக்கு இனிய மைந்தன்” என்றாள். “உன் நாவில் அஸ்தினபுரியின் மண்ணும் தேனும் கலந்த வடிவில் வந்து தொட்டு இனித்தபோதே நான் உணர்ந்தேன், உன்னை நான் கைவிடப்போவதில்லை என்று.”
பிறகு வந்தவள் காமினி. அன்று மாலையில் ஒரு மரத்தடியில் சருகு மெத்தையில் அவன் துயின்று கொண்டிருந்தபோது அவள் மெல்ல வந்து அவன் அருகே அமர்ந்தாள். உடலின் மெல்லிய வெம்மையையும் தோல்மணத்தையும் அவன் புலன்களுக்குள் வாழும் நுண்புலன் ஒன்று உணர்ந்தது. நன்கு உணர்ந்திருந்த அருகமைவு. ஆழ்குரலில் “நீயா?” என்று அவளிடம் கேட்டான். கையூன்றி அவள் அவன் மேல் மெல்ல குனிந்தாள். அவள் கருங்குழல்கற்றை அவன் முகத்தின்மீது சரிந்தது. “நான் தளர்ந்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான்.
“உயிர்கொண்ட அனைத்திலும் எரிய என்னால் இயலும்” என்று அவள் சொன்னாள். அவளுடைய திரண்ட முலைக்குவைகள் அவன் முகத்தில் இரு வெம்மலர்மொட்டுகள் என அழுந்தின. குழந்தைவிரல்கள் போல முலைக்காம்புகள் அவன் இதழ்களை வருடின. காமம் கொண்ட உடலின் வெம்மணம். காமத்தில் உருகும் தசைகளின் ஊன் மணம். அவள் உடல்வளைவுகள் அவன் மேல் பதிந்து அவன் உடல் இறுக்கத்தை அடைந்து குழைவுகொண்டன. நெளிந்துபரவிய கைகள் பதைப்புடனும் தவிப்புடனும் தேடித்தேடி அவனை வருடிச் சென்றன. பிறிதிலாதாகவேண்டுமென வெம்பல்கொண்ட கால்கள் அவன் கால்களை வளைத்துக் கொண்டன.
முதுமரம் முளைப்பசுமை சூடுவதுபோல தன் உடல் உயிர் கொள்வதை அவன் உணர்ந்தான். “நெடுநாளைக்குப் பின்…” என்று அவன் அவள் காதில் சொன்னான். “ஆம், நீண்ட நாளாகிறது. ஆனால் பெருமழை பெய்து குளிர்ந்து அணைந்த காட்டிலும் எங்கோ ஒரு மூங்கிலுக்குள் அனல் ஒளிந்திருக்கிறது” என அவள் அவன் செவிகடந்து நேராக சித்தத்துடன் உரையாடினாள். “ஆம்” என்று அவள் நெஞ்சிடம் முணுமுணுத்தான். அவள் முலைக்குவைக்குள் அழுந்திய உதடுகளின் அசைவு முத்தமென்றும் ஆகியது. முத்தத்தால் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அவள் கைகள் அவன் உடலில் சீற்றம்கொண்ட இரு நாகங்கள் போல முத்தமிட்டுச் சென்றன. அவை தொட்ட இடத்தில் எல்லாம் அவன் உடல் தளிர்த்து அனலிதழ்கள் எழுந்தன. “உயிர்” என்றான். “என்ன?” என்றாள். “உயிரை இப்படி உணர்ந்ததே இல்லை.” அவள் சிரித்து “உடலை அது மீட்டெடுக்கிறது” என்றாள். “ஆம், அருவிபெய்வதுபோல வந்திறங்குகிறது…” என்றான். “வானிலிருந்து” என்றாள். அவன் “ஆம்” என முனகினான். முனை கொண்டது அவன் உடல். அங்கு சித்தம் சென்று குவிந்தது. பின் அவன் உடலே அம்முனையென ஆகியது. உள்ளம் ஒற்றைச் செயலென ஆயிற்று. அவளை உடலுடன் இறுக்கி, தான் என்றாக்கி அப்பெருக்கில் திளைக்கத் தொடங்கினான்.
அவளை உண்ண விழைபவன்போல இதழ்களை கன்னங்களை நீள்கழுத்தை தோள்களை முலைக்குவைகளை கவ்வினான். “நீ உண்ணத்தக்கவள் என்று என் உடல் ஏன் அறிகிறது?” என்றான். “நான் ஜடரையின் தங்கை” என்று அவள் சொன்னாள். வியப்புடன் “நான் அறிந்ததில்லை” என்றான். “அவளை அறிந்த இதழ்கள் என்னையும் கண்டுகொள்கின்றன” என்று அவள் கூறினாள். மயங்கிச் சொல்லிழந்து சென்றுகொண்டே இருக்கும் அமிழ்வில் நெகிழ்ந்த குரலில் “இனியவளே, என்னுடன் இரு” என்று அர்ஜுனன் சொன்னான். “உடலணைவது வரை நரம்புகளில் வாழ்வேன். அங்கிருந்து மூலாதாரத்திற்குச் சென்று அனல்துளியென எஞ்சுவேன். தன்னுணர்வு இருக்கும் வரை உன்னை நான் விட்டுச் செல்வதில்லை” என்று அவள் சொன்னாள்.
பிறகு வந்தவள் வாக்தேவி. தொலைவில் எழுந்த அடுமனைப்புகையால் ஊர் ஒன்றின் அணுக்கத்தை உணர்ந்து அவன் அதை நோக்கி சென்றான். எதிரே நீராடி ஈர உடையுடன் கையில் நீர்க்குடுவைகளுடன் இருவர் சொல்லாடிச் சென்றதை கேட்டுக்கொண்டே அவன் கடந்தான். அவர்கள் அங்கிருக்கும் குருநிலை எதிலோ கல்வி கற்கும் இளையவர். கற்றவற்றை தன்வயப்படுத்திக் கொள்வதற்கென மிகையாகப் பேசும் அகவை. ஒருவர் சொல்வதை மறுக்காவிடில் தன் இருப்பு நிறுவப்படுவதில்லை என்னும் வளர்நிலைக் காலம். அவர்கள் அவனை காணவில்லை, அவர்கள் உலகில் எவரும் சொல்லாகவே நுழையமுடிந்தது.
“வேதச் சொல் அழியாததென்று சொல்லும் நூல்களை ஐயுறுகிறேன். அதை அழிவற்றதென உணர்வது அழியும் மானுடரின் தன்னிருப்பே” என்றான் ஒருவன். “மானுடன் பிறந்திறக்கிறான். இப்புவி பிறந்திறக்கிறது. ஆதித்யர்கள் பிறந்திறக்கிறார்கள். விண்ணகமே பிறந்தழிகிறது. அழியாததென்று ஒன்று எங்கேனும் எவ்வண்ணம் இங்கிருக்க முடியும்?” இன்னொருவன் “இவை அனைத்தும் அழிந்து மீண்டும் பிறப்பதே அவ்வழிவிற்கும் மறுபிறப்பிற்கும் நடுவே மாறாது ஒன்று உள்ளதென்பதற்கு சான்று. அதுவே பிரம்மம்” என்றான். “பிரம்மத்தின் ஒலியென்பது வேதம். பிரம்மம் அழிவற்றது என்றால் வேதமும் அழிவற்றதே.”
“அழிவற்றது இருக்கலாம் இல்லையென்றுமிருக்கலாம். அது அதற்கே தெரியாதென்கின்றன வேதங்கள். இளையோரே, அழிவின்மையை நாடும் மானுட உள்ளத்தின் தேவைதான் என்ன? தீமையிலிருந்து நன்மைக்கு இருளிலிருந்து ஒளிக்கு என ஏங்கும் உள்ளம் ஏன் இறப்பிலிருந்து அழிவின்மை நோக்கி எழுகிறது?” என்று அர்ஜுனன் கேட்டான். “முதலிரண்டும் உலகியல். மூன்றாவது எவ்வுலகுக்கான ஏக்கம்? அந்த மூன்றாம் வேண்டுதலுக்கான விடையென எழுந்ததா வேதம்?”
அவனை பித்தனென்று எண்ணியவர்கள்போல் விழி திருப்பாது அவர்கள் கடந்து சென்றனர். அர்ஜுனன் வியப்புடன் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் அவர்களிடம் குரல்கொண்டு பேசவே இல்லை. சொல்லுக்கு எதிர்ச்சொல்லென எழுந்தது அவன் சித்தச்சுழிப்பே. அழிவென்பது ஒவ்வொரு கணமும் தன்னில் இருந்தும் சூழ்ந்த பிறவற்றில் இருந்தும் வந்தடைவதனாலா மானுடன் அழிவின்மையை எண்ணிக் கொண்டான்? கடையப்படுகிறது பாற்கடல். அதில் கரைந்துள்ளது அமுதம். இங்கு ஒவ்வொன்றிலும் இருக்கும் உவகைப்பெருக்கு.
எத்தனை சொற்கள்! பொருளாக ஆகும் பொருட்டல்ல, பிறந்து குமிழியிட்டு கொப்பளிப்பதன் பேரின்பத்திற்காகவே இச்சொற்கள். பிறந்து வாடும் மலருக்குள் மலரென்று ஒன்று அழியாதிருக்கலாகும். சுருங்கி விரியும் காலப்பெருக்குக்குள் காலமென்று தன்னை நிகழ்த்தும் ஒன்று அழியாதிருக்கலாம். பொருள் கொண்டு பொருள் அளித்து பிறந்து இறக்கும் சொல்லுக்குள் சொல்லென்று வாழும் தெய்வம் என்றுமிருக்கலாம். ஒரு கையில் மின்னல். மறு கையில் மாமலர். இரு கைகளில் இசையாழ். ஏடும் ஆணியும். விழிமணிமாலை எனும் காலப்பெருக்கு.
எண்ணியதுமே அருகிலிருந்த வெண்மலரில் இருந்து அவள் எழுந்து அவன் அருகே வந்தாள். வெண்கலையாடை அணிந்தவள். “வணங்குகிறேன், தேவி” என்று அவன் சொன்னான். “உன் சித்தப்பெருக்கை மீண்டும் கண்டடைந்தேன். அது இறுதியாக அணைந்தபோது நீ விட்டுச்சென்ற சொல் அமுது” என்றாள். “அச்சொல்லை ஏந்தியபடி இங்கு நான் உனக்காகக் காத்திருந்தேன்.” அவன் நினைவுகூர்ந்து “ஆம், அமுது” என்றான். அமுது அமுது என உள்ளம் சொல்லோட்டமாக மாறியது.
பிறந்த குழவி மண்படிந்து, வாய்குவித்து காற்றை உண்டு, தான் என அறிந்ததுமே வாய்திறந்து கூவி அழைப்பது அமுதுக்காக. அழிவின்மை அன்னையின் இருமுலைகளில் இருந்து ஊறி அதன் வாய்க்குள் சொட்டுகிறது. ஒவ்வொரு கணமும் என அழிவை அது உந்தி முன்னகர்த்துகிறது. ஆம், அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வெண்ணத்துடன் இங்கொரு கல்லில் கால் தடுக்கி நிலைதடுமாறினேன். மீண்டபோது என்னிடம் சொற்சுழி இருக்கவில்லை. சொல்லிருந்த இடமெல்லாம் வெற்றுத் திசைவெளியே சூழ்ந்திருந்தது.
“அங்கிருந்து தொடங்குக!” என்று அவள் புன்னகைத்தாள். அர்ஜுனன் “அன்னையே, கைகால் நீள்கையில் தாய்முலைப்பால் நின்றுவிடுகிறது. பின்னர் உன் முலைப்பாலை மானுடன் அருந்தத் தொடங்குகிறான். உன் இரு ஊற்றுகளும் வற்றும்போதுதான் அழிவு வந்து அவனைத் தொடுகிறது. உள்ளத்தில் மூலையில் இருந்து இருள் எழுந்து தன்னுணர்வின் மேல் ஆணவத்தின் மேல் அறிவின் மேல் மெய்மையின் மேல் படரத்தொடங்குகிறது. அவன் விழிகள் ஒளி மங்குகின்றன. சொற்கள் கூரிழக்கின்றன. உடல் உள்ளத்தின் எடை தாளாது தளர்கிறது” என்றான் அர்ஜுனன். “முதிய மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் சுமந்து செல்லும் எடை என்பது என்ன? தசைகளில் குடிகொண்ட இறப்பா? நனைந்து எடைமிகுந்த நினைவுகளா? வாழ்ந்து திரிந்த காலங்களில் சேர்த்த சொற்களின் பொருளின்மையா? அன்னையே! உன் ஒழியாத முலைப்பாலை வாழ்வெல்லாம் உண்டுகொண்டிருப்பவன் இறப்பை வெல்லலாம் அல்லவா?”
“உன் சொற்சுழலுக்குள் மீண்டு வந்துவிட்டாய்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். “இனி நீ செல்லும் தொலைவு அதிகம்.” அவன் பெருமூச்சுடன் “சொல்க, உன் முலைப்பால் வற்றுவது எப்போது? உன் காம்புகளில் வேப்பம்சாற்றை நீ தடவிக் கொள்வது எப்போது? நாவூற அருகணையும் மைந்தரைப் பற்றி மெல்ல விலக்கி நீ முகம் சுளிக்கத் தொடங்குவது எந்த வயதில்?” என்றான்.
அவள் “ஒருபோதும் இல்லை” என்றாள். “ஆனால் அருந்த அருந்த என் முலைப்பால் கொழுமை கொள்ளும். எலிப்பாலென நீர்மை கொண்டு இளமைந்தனின் நாவைத் தொடுவது யானைப்பாலென செறிவடைகிறது. உண்ட பால் செரிக்காமல் மறுபாலுக்கு பசியெழுவதில்லை. இளையவனே, பசியின்மையால் என்னை விட்டு விலகுகிறார்கள் மானுடர்.” அர்ஜுனன் “அன்னையே, என்னுடன் இரு! நானென என் சித்தம் உணரும் தருணம் வரை சொல்லென துணை வருக!” என்றான். அவள் அவன் நெற்றிமேல் வருடி “உன்னுடன் இருப்பேன். உன்னை நீ இழக்கும் கணத்திற்கு முன்பு வரை உன் நாவில் எழுவேன்” என்று சொன்னாள்.
பின்னர் எழுந்து வந்தாள் ஐஸ்வர்யை. அது சித்திரை மாதம். அச்சிற்றூரின் முகப்பிலேயே சரக்கொன்றை வடிவில் கிளிச்சிறைப்பொன் சூடி அவள் நின்றிருந்தாள். அச்சிற்றூரை அவன் கடந்து சென்றபோது கையில் வைத்திருந்த சிறுகொம்பை அங்கு வீசினான். அதன் கணுவொன்றிலிருந்து அவள் வேர் கொண்டாள். தொலைவிலேயே அவள் பூத்த மஞ்சள் ஒளியை அவன் கண்டான். முகம் மலர்ந்து விழிவிலக்காது நோக்கியபடி அவளை நோக்கி சென்றான்.
நாணச்சிரிப்புடன் அவள் எழுந்து அவனை நோக்கி தளர்நடையிட்டு வந்தாள். பொன்னிற ஆடை உலைந்தது. விழிகள் நிலம் நோக்க இதழ்களில் எழுந்த புன்னகையை அடக்கியபடி “வருக, இளையவரே!” என்றாள். “எப்படி உன்னை மறந்திருந்தேன்?” என்று அவன் கேட்டான். “வாழ விழைவுகொண்ட எவரும் என்னை மறப்பதில்லை” என்று அவள் சொன்னாள். “மனை துறந்து பொன் விலக்கி காடேகுபவர்களுக்குக்கூட அங்கே பசுமையென்றும் மலர்வண்ணமென்றும் முகிலொளி என்றும் காட்சியளித்து சூழ்ந்துகொள்வேன்.”
அவன் கைநீட்டி அவளுடைய மெல்விரல்களை தொட்டான். விரல்கள் பின்னியதும் அவள் உடல் விதிர்ப்பு கொண்டது. அவள் விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். “ஆண்டுதோறும் மலர்கொண்டு ஒவ்வொரு மலராக உதிர்த்து வெறுமை ஈட்டி மீண்டும் தவமிருந்தேன்” என்றபோது அவள் கண்களில் நீர்மை படர்ந்தது. முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நீல நரம்புகள் துடித்தன. முலைக்கூம்புகள் எழுந்தமைய “கனிந்தபின் காத்திருப்பது பெருந்துயரம்” என்றாள்.
“இனி எப்போதும் என்னுடன் இரு” என்று அவன் சொன்னான். அவள் கண்ணீருடன் புன்னகைத்து முகம் தூக்கி “ஆம் இளவரசே, உங்களுக்காகக் காத்திருக்கின்றன அணிநகர்கள், நிறைகருவூலங்கள், மணிமுடிகள், குருதி தோய்ந்த வெற்றிக் கொடிகள். என்றும் உங்களுடன் இருப்பேன்” என்றாள். அவளை இடை வளைத்து அணைத்து தன் நெஞ்சுடன் பொருத்திக்கொண்டான். குனிந்து அவள் சிறிய இதழ்க்குமிழ்களில் முத்தமிட்டான். கை வளைத்து அவன் கழுத்தைத் தழுவி அவன் உடலுக்குள் புகுந்துவிடுபவள்போல ஒட்டிக்கொண்டாள். அவள் இதயத்துடிப்பை, உடலெங்கும் பரவிய குருதிக் குழாய்களின் அதிர்வை தன் உடலில் என அவன் உணர்ந்தான். அவளுள் ஓடும் ஒவ்வொரு சொல்லையும் அறிந்தான்.
“ஏழழகு என்று உன்னை ஏன் சொல்கிறார்கள் என்று இன்று அறிந்தேன்” என்றான். “ஏன்?” என்று சிரிப்புதெறித்த விழிகளுடன் அவள் கேட்டாள். “நீ சொல்! ஏன் உனக்கு ஏழு அழகு?” அவள் நாணத்துடன் “நான் அறியேன். கவிஞர் என்னை நிலமகள், நீர்மகள், பொன்மகள், மலர்மகள், வெற்றிமகள், கூலமகள், புலரிமகள் என கொண்டாடுகிறார்கள்” என்று அவள் சொன்னாள். அவன் “ஏழுமுறையும் நீ வெற்றித்திருமகள். வெற்றி அன்றி மங்கலம் பிறிதொன்றில்லை” என்றான்.
சிரித்தபடி “இதை உணர அந்த மலை அனைத்தையும் ஏறியாகவேண்டுமா?” என்றாள். “அரிதொன்றை உணர அதை ஒரு முறை முற்றும் துறந்து பார்ப்பது உகந்தது” என்று அவன் சொன்னான். சிரித்தபடி அவன் தோளை அறைந்து “துறந்து சென்றீர்கள். அது பிறருக்கு அளிக்கும் துயரை ஒரு கணமேனும் எண்ணினீர்களா?” என்றாள். “அதுவும் நன்றெனத் தோன்றுகிறது. துயரால் நீ கனிந்திருப்பாய், பிரிவு நம்மை அகற்றி இணைக்கிறது” என்றான்.
அச்சிற்றூரிலேயே அன்றிரவு தங்கினான். நீராடி உணவருந்தி ஓய்வுகொண்டான். நள்ளிரவில் அவன் குடிலுக்கு வெளியே மெல்லிய பெண்குரல் விம்மலோசையை அவன் கேட்டான். எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தபோது இடப்பக்கம் சுவர் ஓரமாக ஒண்டி உடல்குறுக்கி அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான். கரிய உடையணிந்து கருங்குழல் மண்ணில் பரவி வேர்வலைபோல கிடக்க விழிகளின் மின்னால் தன்னைக் காட்டினாள். “யார் நீ?” என்றான். “தெற்கிலிருந்து வருபவள். உங்களுக்கு அணுக்கமானவள். என் பெயர் கிராதை” என்றாள்.
“நான் உன்னை அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “இளையவரே, நூறுநூறு தருணங்களில் உங்கள் அருகணைந்து நின்றவள் நான்” என்றாள். “என்னை அறியாது எவரும் இப்புவியில் வாழமுடியாது.” அவன் “உன் முகத்தை நான் கண்டதில்லை” என்றான். “என்னை முகமெடுத்து முகம்நோக்குபவர் மிக அரிது. விழிமூடி உங்கள் உடலின் இடப்பகுதியிடம் கேளுங்கள், என்னை அது அறிகிறதா என?” என்றாள்.
அவன் விழிமூடி தன் இடப்பகுதியை கூர்ந்தான். நன்கறிந்த ஒருத்தி என்றது தோள். திகைப்புடன் திறந்து “ஆம், அறிந்திருக்கிறேன்” என்றான். “எதை எண்ணினீர்கள்?” என்றாள். “ஒரு போர்த்தருணம்” என்று சொன்னபோது அவன் குரல் தணிந்திருந்தது. “சொல்க!” என்றாள். “நான் துருபதனை வென்று சிறுமைசெய்த தருணம்” என்றான். அவள் சிரித்தபடி எழுந்து “பேராற்றலை தோளில் அறிந்தது அப்போது அல்லவா? எந்த எல்லையையும் கடக்கமுடியுமென உங்களை உணர்ந்தீர்கள். அங்கிருந்தல்லவா தொடக்கம்? உங்கள் கையில் வில்லெழும்போதெல்லாம் அத்தருணம் உள்ளத்தில் மின்னிச்செல்வதுண்டு அல்லவா?” என்றாள்.
“ஆம்” என்றான். “அன்று உங்களை தழுவிக்கொண்டேன். உங்கள் விழிகளுக்கும் தோன்றினேன்.” அவள் மெல்ல முன்னகர்ந்தபோது சாளரம் வழியாக வந்த விளக்கொளி அவள்மேல் விழ அவள் முகத்தை நன்கு கண்டான். “ஆம், நான் மறக்காத முகம்” என்றான். “நீங்கள் அறிந்த முதல்பெண் நான் அல்லவா?” அவன் தலைகுனிந்து உடல்கூச “ஆம்” என்றான். “நான் பரத்தையர் தெருவில் அந்தச் சிற்றில்லத்தின் முன்னால் நின்று உங்களை அழைத்தேன். என் விழிகளை சந்தித்த கணம் உங்கள் உள்ளம் கூசியது. ஆனால் உடல் காமம் கொண்டு எழுந்தது. தடுமாறும் கால்களுடன் என் இல்லத்திற்குள் நுழைந்தீர்கள்.”
“போதும்” என்று அவன் சொன்னான். அவள் அதை கேட்காததுபோல் தொடர்ந்தாள் “என்னை தொடத் தயங்கி நின்றிருந்தீர்கள். நீங்கள் மிக இளையவர் அன்று. உங்களை அணுகி அன்னையென விழி கனிந்து உங்கள் தலையைத் தொட்டு குழலை வருடினேன். வேண்டாம் என்பதுபோல தலையை அசைத்தீர்கள். உங்கள் தோள்களை தழுவினேன். என் பெருத்தமுலைகளால் உங்கள் மார்பை அழுத்தினேன். உங்கள் தவிப்பு சினமென்றாகியது. ஆனால் உடல் காமம்கொண்டெழுந்தது.” அர்ஜுனன் “வேண்டாம்…” என்றான். “என்னைப் புணர்பவர்கள் தாளாவெறுப்பின் உச்சத்தில் அதை காமம் என ஆக்கிக்கொண்டவர்கள். ஆகவே ஆற்றல் மிக்கவர்கள்.” அவன் மேலும் குரலிறங்க “என்ன வேண்டும் உனக்கு?” என்றான்.
“நான் உங்களைத் தேடி காத்திருந்தேன். என்னை இங்கு விட்டுச்சென்றீர்கள்.” அவன் “இங்கா?” என்றான். “ஆம், இந்தச் சிற்றூர் வரும் வழியில் நின்று அங்கு பால்குடம் ஏந்திச்சென்ற ஆய்ச்சியிடம் பால் அளிக்கும்படி ஆணையிட்டீர்கள். அவள் அஞ்சி குடத்தை வைத்தாள்” அவள் சொன்னாள். “அந்த இடத்திலிருந்து நான் இவ்வூருக்குள் புகுந்துகொண்டேன். என்னால் மானுடருள்ள இடத்திலேயே வாழமுடியும்.”
அவன் அவளை நோக்கியபடி நின்றான். கொழுவிய கன்னங்கள், சிறிய கூர்விழிகள், குவிந்த உதடுகள், உருண்டபெருமுலைகளுடன் பருத்த தோள்கள். பசுபோன்ற பெண். அத்தனை ஆண்டுகளுக்குப்பின் அதே மாறாத்தோற்றத்துடன். “அவள் என்ன ஆனாள்?” என்றான். “இருக்கிறாள். முதுபரத்தையருக்குரிய வாழ்க்கை” என்றாள். “அன்றே அரசியின் படைகளால் அவள் அஸ்தினபுரியில் இருந்து துரத்தப்பட்டாள். அவளுக்கு அளிக்கப்பட்ட செல்வத்தை அணுக்கர் பிடுங்கிக்கொண்டனர். சிந்துவைக் கடந்து கூர்ஜரம் சென்றாள். அங்கு பரத்தைமையில் உழன்றாள். முதுமைகொண்டாள். நோயுற்றாள்.”
“அவளை அழகியெனக் காட்டியது என் மாயம். அது இன்று அவளை புண் என சீழ் என சிக்கு என அழுகல் என கெடுமணம் என சூழ்ந்திருக்கிறது. அங்கு ஒரு அழுக்கோடை அருகே மட்கிய மரவுரியில் படுத்திருக்கிறாள். அவளுக்கு அருகிருக்கும் சண்டிகை ஆலயத்திலிருந்து உணவளிக்கிறார்கள்.” அவன் “போதும்!” என்றான். “அவள் உடலில் இருந்து சலமும் நீரும் வழிந்தோடுகின்றன. நீ மகிழ்ந்த அவள் முலைகள் அழுகி கிழிந்துள்ளன.” அவன் உரக்க “போதும்!” என்றான்.
“நீ தவிர்ப்பவற்றால் ஆனவள் நான்” என்றாள். “ஆனால் நான் இல்லாது உனக்கு போர்வெற்றிகள் இல்லை. இளையவனே, நானே ஆற்றல். என்னை அருகமைப்பவர்களே தங்கள் உள்ளமும் இப்புவியின் நெறிகளும் அமைக்கும் எல்லைகளை கடக்கமுடியும். வென்று தலைநிமிர்ந்து புதிய நெறிகளை அமைக்கமுடியும். அவர்களையே தெய்வமென்று வழிபடுகிறது மானுடம்.” அர்ஜுனன் தலையை இல்லை என அசைத்தான்.
“பிற நால்வரையும் நீ அடையவேண்டுமென்றால் நான் உன்னுடன் இருந்தாகவேண்டும்” என்றாள் அவள். அவன் கைகள் ஓய்ந்து கிடக்க தோள்கள் தொய்ந்து நின்றிருந்தான். “சொல், தெரிவு உன்னுடையது” என்றாள் அவள். அவன் பெருமூச்சுவிட்டான். “முடிவு கொள்!” என்றாள். அவன் விழிகளைத் தாழ்த்தியபடி பதுமையென கைநீட்டி அவள் கைகளை பற்றிக்கொண்டான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

