பவிழமிளம் கவிளிணையில்…

1


இனிய ஜெயம்,



பிச்சகப்பூங்காட்டில் பாட்டைக்கேட்டேன்

அப்போதெல்லாம் பிழைப்புக்காக பார்த்த தொழிலில் பாடல் பதிவகம்  நடத்திய நாட்கள் அது.  உண்மையில் இளையராஜா இசை எத்தனை தீவிரமாக சாமான்யர்களை ஆட்கொண்டு ஆண்டது என அப்போதுதான்  நேரில் உணர்ந்தேன்.   நிலா அது வானத்து மேலே  பாடலை எவருக்கேனும் பதியாமல் ஒரு நாள் என்னை கடந்து சென்றதில்லை.  நிலா அது, மற்றும் கடலுல எழும்புற அலைகளை, இந்த இரு பாடலும் ஒலிக்காமல் ஒரு லான்ச் கூட கடலுக்குள்  மிதக்காது. இங்கே கடலூரில்  பின்னணியில் இளையராஜா குரல் எழுந்ததும், திரை முன் எழுந்து நின்று வெறிக் கூச்சலிடும் மீனவ நண்பர்களின் பரவசத்தை  நேரில் கண்டால் மட்டுமே  இளையராஜா வியர்வைக்கு வாழ்வை ஒப்புவித்த எளியவர்களின் அகத்தினுள் எந்தளவு வேரோடி இருக்கிறார் என்பது புரியும்.

மீனவ நண்பர்கள் குழந்தைமை கூடிய எழுத்துப் பி அபிஷேகம்ழை செய்து களுடன், உதா [ குயில புடிச்சி  குண்டில டிச்சி,,, சின்ன தம்பி] கொண்டு வரும் பாடல் வரிசையில் இளையராஜா அல்லது எம்ஜியார் இருவர் தவிர பிறருக்கு இடமே இல்லை.   இதில் இரண்டாம் இடம் பிடிப்பவர் கே ஜே யேசுதாஸ்.  காலை முதல் நள்ளிரவு வரை  தலைக்குள் இளையராஜாவும் யேசுதாசும் மட்டுமே பொழிந்து கொண்டிருப்பார்கள். இத்தனை நாட்கள் கழிந்து வந்து திரும்பிப் பார்க்கையில், யேசுதாஸ் அவர்களின்  குரல் மட்டுமே இன்று என்னுள் கரைந்து கிடப்பதை உணர முடிகிறது.  சென்ற ஆயுளில் சரஸ்வதிக்கு லட்சத்து எட்டு குடம் தேன் அபிஷேகம் செய்து அவர் அடைந்த குரலாக இருக்கக் கூடும். ஒரே சொல். அது விண்ணில் இருந்து மானுடனுக்கு இறங்கும் கடவுளின் குரல்.

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம், பாடலில்  ஆண் குரல் எழும் போதெல்லாம், நல்லாத்தான் இருக்கு  ஆனால் இதை யேசுதாஸ் பாடி இருந்தால் இன்னும் எங்கேயோ போய் இருக்கும் என்ற எண்ணம் எழும்.  நீண்ட நாள் கழித்து  நீங்கள் சுட்டி அளித்த பிச்சகப் பூங்காட்டில் வழியே மலையாளத்தில் யேசுதாஸ் அவர்களின் குரலை கேட்டேன். ஆம் நீங்கள் சொன்னது மெய்தான். கேரளம் கடவுளின் நிலம். யேசுதாஸ் குரல் கடவுளின் குரல். கேரளத்தின் குரல்.

ரீப்ளே மோடில் வைத்து இரவெல்லாம் இந்த ஒரே பாடலில் திளைத்துக் கிடந்தேன்.  புதிய நகச்சாய புட்டியை திறந்தால் அதிலிருந்து ஒரு வாசம் எழுந்து, சைனசில் நிறைந்து, பின்மூளையை கிரு கிறுக்க வைக்குமே, அதே உணர்வை இப் பாடல் வழி இரவெல்லாம் அனுபவித்துக் கிடந்தேன்.  இது கொடுத்த கற்பனையில் இரவெல்லாம் கிரிதரனாகி நீலியின் பின் திரிந்தேன்.  குறிப்பாக இதில் பூக்கும்  தமிழ் முயங்கிய மலையாளம். அதுதான் இந்தப் பித்தின் ஆணி வேர்.  சில சொற்கள் வைரஸ் போல மூளைக்குள் தங்கி விடும், நாளை எனக்கு அம்னீஷியா வந்து மொத்த நீலமும் என்னை விட்டு அகன்றாலும்,

”ஒரு நாளும் அவளறிய உரைக்காத அன்பைஎல்லாம் பலகோடி சொற்களாக்கி தன்னுள்ளே ஓடவிட்டு  காலக் கணக்கெண்ணி காத்திருக்கும் தனியன்”  ”அவள் நினைவை உச்சரித்து உயிர் துறக்கும் இனியன்”

இந்த வரிகளை என்னுள்ளிருந்து அழிக்க முடியாது. அதற்க்கு இணையான இசை மொழி  பாடலின் ”பவிழமிளம் கவிளினையில் பழமுதிரும் பிராயம்.”  என்ற இந்த வரிகள்.  கற்கண்டு போல நா நுனியில் தித்தித்துக் கரைகிறது.   இடைக்கா,  செண்டை  கேட்ட முதல் கணமே  நம் அகம் கேரள மண்ணுடன் பிணைந்து விடுகிறது.கேரள நிலம் முழுமையையும்  சாரமாக்கி அகத்தில் படர வைக்கும் வாத்தியம் செண்டை. இப்படி ஒரே ஒரு இசைக் கருவி. அதைக் கேட்டால் தமிழ் நிலம் மொத்தமும் அகத்தில் விரிய வேண்டும் எனில் அது என்ன வாத்தியமாக இருக்கும் என யோசித்துப் பார்த்தேன். மௌனமே எஞ்சியது.

இரவெல்லாம் கேட்டு கேட்டு நிலவை வழியனுப்பி வைத்தேன்.  இசை போதை. இத்தனை போதையை  இந்த  பாடலில் நிறைத்து  அகத்தை விம்மச் செய்வது எது?  காதல் . காதல்.  என் காதல் தோழியுடன் களித்துக் கிடந்தது எய்திய போதை.  மெல்ல மெல்ல பூத்தது புலரி. புள்ளினங்கள் ஆர்ப்ப மெல்ல எழுந்து வந்தான் பரிதி.

ஆன்மாவின் கூட்டில் துளி ஒளி சொட்டி, வெளியும் கொள்ளாத காதலை திறந்தான்.

எங்கே வாசித்த வரி? பரபரத்து தேடி அடைந்தேன்.

பெண்ணைப் பற்றி கடவுள்

பெண்ணைப் பற்றி கடவுள் சிந்திக்கத் தொடங்கினானே

அப்போதுதான் நான் அவனை உணர்ந்தேன்.

கோடிக் கற்பனையில் யுகங்கள் மூழ்கியிருந்து

அவளுக்கொரு வடிவைப் புன்னகையுடன் தேர்ந்தானே

அப்போதுதான் அவனை அறிந்துகொண்டேன்.

அவளை அவ்விதமே தீர்மானித்ததற்காக

முற்று முழுக்கவும் அவனை நம்பினேன்

தன் முடிவில் எந்தத் தடுமாற்றமுமின்றி

அப்படியே அவளைப் பிறப்பித்தானே, அதனால்

வெகுவான மரியாதை அவன்மீது கூடிக்கூடி வந்தது.

பருவத்தின் கொடை சுமந்துபோகும் பெண்களை

எங்கு கண்டாலும் வழங்கிய பெரும் வள்ளன்மைக்காக

அவ்விடங்களிலேயே அவனைத் தொழுதேன்.

ஆன்மாவின் கூட்டிற்குள் ஒரு துளி ஒளி சொட்டி

வெளியும் கொள்ளாத காதலைத் திறந்தான்,

நோன்பிருந்து என் பொழுதுகளில் அவனைப் போற்றினேன்.

அவனே காமத்திலிருந்து உய்வித்தான் எனவே

அவன் அடிமையாய் தாசனாய் ஆராதகனாய் ஆகினேன்.

எனக்கொரு சின்னஞ்சிறு மகள் பிறந்தாள்

நானும் கடவுளுக்குரிய தகுதியடைந்துவிட்டேன்




யூமா வாசுகியின்  கவிதை அது.   பெண் , காதல்,  எல்லாம், காணும், இவை எல்லாம் எதற்க்காக  ?  வேறெதற்கு கடவுளின் தகுதியை அடையத்தான்.
 
இனிய ஜெயம், இதுதான் அன்று, எனக்கு அன்றைய நாளின் கவிதை.

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2016 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.