காந்தி கடிதங்கள்

05884aa23728fd8e765d73a75044fe34[1]


அன்புள்ள ஜெ…


 


 


உங்களின் வலைப் பக்க வாசிப்பாளன் என்ற முறையில் உங்களைப் பின் தொடர்பவன் நான்  காந்தியைப் பற்றிய உங்களது உரை என்னை ஒரு வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டது! நீங்கள் எப்படி காந்தியை அவதானித்து எழுதுகிறீர்களோ அதைப் போலவே உங்களை அவதானிக்கும் ஒரு முயற்சி என்னிடம் உண்டு. நான் ஒன்றும் தேர்ந்த அறிவாளி அல்ல. ஆனால் அறிவாளிகள் எழுதுவதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உடையவன்.


 


 


அமெரிக்காவில் 18 வருடங்களாக உள்ளேன். அமெரிக்காவைப் பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நீங்கள் உங்கள் உரையில் தொட்டுச்  சென்ற எல்லாவற்றுக்கும் முதலான காரணி அமெரிக்கா என்பது என் அசையா நம்பிக்கை. நீங்களே கூட காந்தியை ஆராதித்தாலும் வலதுசாரி சிந்தனைகள் அதிகம் கொண்டவராகவே நான் நினைத்ததுண்டு! ஆனால் Federalism, Consumerism, Globalism என எல்லாவற்றிலுமே நீங்கள்  சொன்ன விடயங்கள் என் கருத்துகளை ஒத்தவையே. அமெரிக்காவின் காபிடலிசத்துக்கும் இவற்றுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன.  நம் வாழ்க்கையே ஒரு hypocrisy என ஆகி விட்டது! என் நண்பரிடம் நான் அடிக்கடி சொல்லுவேன்.  Life is Hypocrisy.  இதை நினைத்து நான் வருந்தும் போது சுற்றிலும்  மற்ற நண்பர்களையும் பார்க்கிறேன். என்னையே ஒரு முட்டாளாக உணர்கிறேன்! ஏன் எல்லாரும் வாழ்க்கையை ஒரு running race மாதிரி நினைத்து ஓடிக் கொண்டுள்ளோம்? அவன நிறுத்தச் சொல்லு …அப்புறமா நான் நிறுத்தறேன் என ஏன் இருக்க வேண்டும். ஆனால் தீவிரமாகச்  சிந்தித்தால் புரிவது என்னவென்றால் இதை இனிமேல் தனி மனிதர்களால் மாற்ற முடியாது என்பதே! இதுவே ஒரு வாழும் முறை என்றாகி விட்டது! செல் போன் பற்றி நீங்கள் சொல்லியதை வைத்து எத்தனை பேர் 3  வருடங்களுக்கு ஒரு செல் போன் வாங்கப் போகிறார்கள்? கடந்த 18 வருடங்களில் நான் 8 செல் போன்கள்  பாவித்துள்ளேன். இப்போது இருப்பது என் இரண்டாவது         ஆண்ட்ராய்ட்  ஸ்மார்ட் போன். மூன்று வருடங்களாகப் பாவிக்கிறேன். எல்லாரும் என்னைக் கஞ்சன் என்கின்றனர்!


எல்லாவற்றிலும் மையம் தேடும் அல்லது மையம் இருக்க வேண்டும் என்ற  நம் மனோநிலையின் விளைவே இந்த வாழ்க்கைமுறை. அதை நீங்கள் மிக அழகாகச் சொன்னது கண்டு வியந்தேன்.  பல நாடுகள் சுற்றும் போது தான் வாழ்க்கை என்றால் என்ன எனப் புரியும். அந்தப் புரிதலுடன் கூடிய இத்தகைய உரைகள் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும். அதனால் அவர்களது வாழ்க்கை முறையில் ஒரு தெளிவு பிறந்தால் நல்லதே!


உங்களிடம் பேச நிறைய உள்ளது. முடியும் போது எழுதுகிறேன்!


அன்புடன்,


பாலா.


 


அன்புள்ள பாலா


 


இன்றையநிலையில் காந்தியைப்புரிந்துகொள்வதென்பது அவர் முன்வைத்த பிரச்சினைகளை புரிந்துகொள்வதே. தீர்வுகளை அவருக்கு நூறாண்டுகளுக்குப்பின் அவர் எண்ணிப்பார்க்காத சூழலில் வாழும் நாம் வேறுவகைகளில்தான் புரிந்துகொள்ளவேண்டும்


 


அது உலகம்தழுவிய பிரச்சினை என்பதனால் உலகளாவிய காந்தியசிந்தனையாகவே தீர்வும் வளரமுடியும் என நினைக்கிறேன்


 


ஜெ


 


 


அன்புள்ள ஜெ..


 


வாசன் , சாவி போன்றோர்களின் நோக்கம் வணிகம் என்றாலும் இலக்கியப்பங்களிப்பும் ஆற்றி இருக்கின்றனர் என சொல்லி இருந்தீர்கள்


 


சாவியின் நவகாளி யாத்திரை நூலை வெகு ஆவலுடன் படித்தேன்.. எப்பேற்பட்ட வரலாற்று சம்பவம் , எப்பேற்பட்ட வரலாற்று மனிதரை சில நாட்கள் அவதானிக்கும் வாய்ப்பு… ஆனால் அந்த புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது..   உங்களாலேயே பாராட்டப்படும் ஒருவர் , இவ்வளவுதான் கவனித்தாரா என தோன்றியது…மற்றபடி அவர் நல்லெண்ணம் புரிந்தது


 


அந்த யாத்திரை குறித்து அன்றைய தமிழ் இதழ்களின் பதிவுகள் அல்லது அது குறித்து எழுதப்பட்ட தமிழ் நூல்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என அறிய ஆவல்…


 


அன்புடன்,


பிச்சைக்காரன்


 


அன்புள்ள பிச்சைக்காரன்,


 


உண்மையைச் சொல்லப்போனால் நவகாளி யாத்திரை பற்றி அல்ல  ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைபற்றியும் தமிழில் முறையான பதிவுகள் இல்லை. நுணுக்கமான தகவல்களுடன் எழுதப்படும் சித்திரங்கள் இங்கே இல்லை. எளிய போகிறபோக்கிலான குறிப்புகள். மிகைநவிர்ச்சிகள். நம்பகத்தன்மை என்பது சொல்பவரின் சமநிலை சார்ந்தது. அதைத்தேடித்தான் பார்க்கவேண்டும்


 


ஏன் சமகால வரலாறான ஈழப்போர் பற்றி எத்தனை சமநிலைகொண்ட பதிவுகள் உள்ளன? நான் புஷ்பராஜவின் நூல் ஒன்றை மட்டுமே சுட்டிக்காட்டுவேன். பிற எல்லாமே பொய்யுணர்ச்சிக்கூச்சல்கள்.


 


சில விதிவிலக்குகள் உண்டு. தி.சே.சௌ.ராஜனின் நினைவலைகள், கோவை அய்யாமுத்துவின் வாழ்க்கைக்குறிப்புகள், க.சந்தானத்தின் நினைவலைகள் போன்றவை.


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.