வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

vannadasan


 


2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.


 


எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும்  தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார்.


 


அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை மென்மையாகச் சொல்பவர் என அவர் வண்ணதாசனைப்பற்றிச் சொன்னார். மேலோட்டமான வாசகர்கள் — இவர்களில் வண்ணதாசன் ரசிகர்களும் அடங்குவர் — பலர் அவ்வகையிலேயே அவரை மதிப்பிடுகிறார்கள்.


 


இன்னொன்று, வண்ணதாசனின் தனியாளுமை பற்றிய சித்திரத்தை அவர் புனைவுகள் மேல் ஏற்றிக்கொள்வது. வண்ணதாசன் நெகிழ்ச்சியான, மென்மையான மனிதராக இருக்கலாம். அது அவரது சமூகமுகம் மட்டுமே. எழுத்தாளர்களின் தனிப்பட்ட பேச்சு, கடிதங்கள், பேட்டிகள் போன்றவற்றினூடாக வரும் அவரது தனியாளுமையை புனைவுகள் மேல் பரப்பிக்கொள்வது வாசிப்பின் முதிர்ச்சியின்மை .


 


ஏனென்றால் எழுத்து அவ்வெழுத்தாளனில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் பல்வேறு உள்ளோட்டங்களால் நெய்யப்பட்ட பரப்பு. அதை அப்படைப்புகளைக்கொண்டு மட்டுமே நாம் மதிப்பிடவேண்டும். அதன் சொல்லப்பட்ட தளங்களுக்கு அப்பால் அப்பால் என செல்லும் பார்வை வாசகனுக்கு வேண்டும். படைப்பாளியின் தனியாளுமை என்பது அவன் முகங்களில் ஒன்று மட்டுமே.பலசமயம் தனக்கு எதிரான உளநிலைகளையே எழுத்தாளன் வெளிப்படுத்தக்கூடும்.


 


நாம் அறியும் வண்ணதாசனின் ஆளுமை கல்யாணசுந்தரம் என்னும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குரியது.  தி.க.சிவசங்கரனின் மகன். இடதுசாரி அரசியல் கொண்டவர். திராவிட அரசியல் சார்பும் உண்டு. அன்பானவர். நெகிழ்ச்சியானவர். தனித்தவர். மாறா அலைக்கழிப்புகள் கொண்டவர். ஆகவே பெரும்பாலும் துயரமானவர்


 


ஆனால் கதைகளில் வெளிப்படும் வண்ணதாசன் மேலும் பலமடங்கு வயதானவர். தொன்மையான நெல்லை ஆலயத்தையும் தாமிரவருணியையும் போல அவர் அவரைவிட பெரிய பலவற்றின் பிரதிநிதி. அவரது எழுத்து பெருமைகொண்ட பண்பாடு ஒன்றின் எஞ்சிய பகுதியின் பதற்றங்களும் கனவுகளும் உட்சுருங்கல்களும் கொண்டது. வன்முறையும் வன்மங்களும்  உளச்சிக்கல்களும் வெளிப்படுவது.


 


வண்ணதாசனை முழுமையாக வாசிக்க, அனைத்துக்கோணங்களையும் நோக்க இந்தத்தருணம் வழியமைக்கவேண்டும்.


 


வண்ணதாசனுக்கு அவரது முதன்மை வாசகன், இளையோன் என்னும் நிலையில் வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.