கிராதம்,அய்யனார்,கதகளி

338px-Kalamandalam-Gopi-2


 


இனிய ஜெயம்,


 


 


ஜன்னல் இதழில்  நாட்டார் தெய்வங்கள் உருவான சாரத்தின் வித விதமான  வண்ண பேதங்கள் கூடிய உலகில் கற்பனையில் உலவிக்  கொண்டிருக்கிறேன்.  இதழ்களை சேர்த்து வைக்கும் பழக்கத்தை தற்ச்சமயம் கை விட்டு விட்ட்டதால், உண்மையில்  இத் தொடர் நூல் வடிவம் கொள்கையில்தான் அதில் மூழ்கித் திளைக்க வேண்டும். முன்பு ஒரு உரையாடலில்   சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வம் இவற்றுக்காண  பேதத்தை விளக்கி, தொடர்ந்து  அருள்மிகு எனும் அடைமொழியுடன்  நாட்டார் தெய்வங்கள்  பெருந்தெய்வங்களின் வரிசைக்குள் உயரும் பரிணாம கதிவரை   விளக்கினீர்கள்.  அன்றைய  உரையாடலின் தொடர்ச்சியாக சில வாரங்களுக்குள் இத் தொடர் வாசிக்கக் கிடைத்தது  என் நற்பேறு.


 


 


ஊரில் பெரிய சண்டியன், பெண்களை கவர்ந்து செல்கிறான், கைகலப்புக்கு அஞ்சாதவன், அரசனின் சட்ட திட்டங்களுக்கும் தண்டனைக்கும் கூட பயப்படாதவன். வஞ்சனையால் கொலை செய்யப் படுகிறான். பேயாய் அலைகிறான். கொல்லப்பட்டவன் சண்டியன் மட்டுமல்ல, அவன் உருவில் இங்கே வந்த, மானுடத்தின் சாரமான ”அடங்காமை”. வென்று செல்லும் ஷாத்ரம்,  குற்ற உணர்வில் ஊரார் அவனை சாமியாக்கி வழி படுகிறார்கள்.வீரத்துக்கு ஒரு சாமி.  பல நாட்டார் தெய்வங்களின் தோற்றப் பின்னணி இது. இந்தப் புள்ளியில்  வைத்து,  சந்தன வீரப்பன், [சாதி அமைப்புக்குள் என்றாலும் கூட] சில இடங்களில் குல சாமி அளவு கொண்டாடப்படும் நிலையின் பின்னுள்ள   காரணியை அறிய முடிகிறது.


 


நேர் எதிராக, கள்ளர் குடியில், மல்லர்கலான தந்தை தாய்க்குப் பிறக்கும் சோப்ளாங்கியின் கதை. பரிதாபமாக வாழ்ந்து, பரிதாபமாக செத்து, ஊரார் பரிதாபப்பட்டு அவனை சாமியாக்கி, அவன் ஒரு நாட்டார் தெய்வம். பரிதாபத்துக்கு ஒரு சாமி. தென்னன் தோப்பை காக்க, ஐயனாரின் நாயை தோப்புக்கு காவலாக மாமா மாற்றும் கதை மிக்க சுவாரஸ்யம் கொண்டது. அக் கதையின் இறுதியில் ஒரு வரி,// ” இன்று  பேய், என பயப்படும் பல விஷயங்கள், முன்பு வென்றவர்களின் [இன்றைய தோல்வியாளர்கள்] தெய்வமாக விளங்கியவை.’// ‘ மார்க்சிய சிந்தனையாளர் எஸ் ஏ டாங்கே, தனது கட்டுரை ஒன்றினில் இப்படி எழுதுகிறார், // ஒரு அரசியல் பண்பாடு பின்வாங்கி, புதிய அரசியல் பண்பாடு நிலைபெற்ற பின், முந்தய பண்பாட்டின் உயர்வான பல அலகுகள், இப்போது கீழான வெறுக்கத்தக்க, அல்லது பயப்படத் தக்க விஷயமாக காணக் கிடைக்கிறது//.


 


முன்பு ஆ கா பெருமாள் அவர்கள் வசம் ஒரு வினா எழுப்பினேன்.  இன்று எங்கெங்கும் காணக் கிடைக்கும் திரௌபதி அம்மன் கோவில், மயானக் கொள்ளை நிகழ்ச்சி, அனைத்துக்கும் மேலாக சபா பார்வ, பாரதப் போர் கூத்துக்கள், இங்கே வலுவான நாட்டார் கலையாக நிலை பெற்றது எப்படி?


 


அவர் சொன்னார், செவ்வியல் பாரதம்  நாட்டார் கலைகளை பாதித்து போல, நாட்டார் கலைகளில் இருந்தும் பல  அம்சங்களை செவ்வியலுக்குள் காணலாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனை தமிழகத்தில் பல்லவர் காலத்தில் வேகம் பெற்றது. அன்றைய அரசியல் நிலரவரப் படி, மக்கள் மத்தியில் போர் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்த, இங்கு ஏற்க்கனவே இருந்த வேறு கூத்துப் பிரதிகளுக்குப் பதிலாக, பாரதத்தின் பகுதிகள் பல்லவ அரசு மானியத்தில் கூத்தாக அரங்கேறின.


 


இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் ஒரு இழை  பாம்பும் கீரியும், கதையில் வருகிறது.  தொடரின் கதை வரிசை நெடுக வித விதமான தாய்களின் கண்ணீர்.  இக் கதையில் அந்த பிராமணத்தி ஏன் கிரியை, கொள்கிறாள் ? தனது மகனுக்கு இணையாக மறு முலையை கீரிக்கு அளித்து அதை வளர்த்தவள், ஒரு கணம் கூட சிந்திக்காமல் அதை அவளால் கொல்ல முடிகிறது என்றால் என்ன பொருள்? எந்த எல்லைக்கு சென்றாலும் தாயால் தன்னுடைய மகவுக்கு மட்டும்தான் தாயாக இருக்க முடியும், மற்றைய எல்லாம் வெறும் உள மயக்கு தானா? சிந்தனைகளை எங்கெங்கோ அழைத்து செல்லும் கதை. மகனை, கணவனை இழந்து, ஆற்றில் விழுந்து இறக்கிறாள், வெள்ளம் வந்து ஊரே அழிகிறது. ஊரார் அவளை சாமி ஆக்குகிறார்கள். ஊரை வெள்ளத்தில் இருந்து நோய் நொடிகளில் இருந்து காக்கும் சாமி ஆகிறாள் அவள். இன்னொரு எல்லையில் பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலைகளில் நின்று அக் கூறு தத்துவ  எல்லைக்குள் காலடி வைக்கிறது. சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வத்தின் வரிசைக்கு உயரும் கூறு.  இக் கதை மகா பாரதத்திலும் வரும் கதை  என எழுதுகிறீர்கள்.


 


 


கிராதம் நாவல் குறித்த அறிவிப்பு கண்டேன். கிராதம் கதகளியில் முக்கிய இடம் வகிப்பது என்றும் எழுதி இருந்தீர்கள்.  இனிய ஜெயம், வெண் முரசு  வழங்கும் உணர்சிகரம், கதகளியில் தோயாமல் முழுமை கொள்ளாது என கடந்த சில நாட்கள் கிடந்தது ஊறிய கதகளி காணொளிகள் உணர்த்து கின்றன. உங்களது கலைக் கணம் வாசித்ததில் இருந்தே [அதற்க்கு முன் ஊட்டி குரு குலத்தில் ராஜீவன் அவர்களின் வெளிப்பாடு]  ஒரே ஒரு முறையாவது கதகளியை பார்த்து விட வேண்டும் என ஆவல் உந்தியது. சிதம்பர நாட்யாஞ்சலியில் என்னென்னவோ நடக்கிறது ஏன் ஒரே ஒரு முறை கூட கதகளி நடைபெற மறுக்கிறது என்ற என் உள்ளத்து வினாவுக்கு ஆலப்புழாவில் பதில் கிடைத்தது.


 


 


 


அஜிதனுடன் தொற்றிக் கொண்டு ஆலப்புழா சென்றேன். அருகே ஒரு கிராமத்தில் அன்று கிருஷ்ணன் கோவிலில் கதகளி.  ஒப்பனை துவங்கி, அதி காலை அனைத்தும் நிர்மால்யம் கொள்ளும் கணம் வரை அருகிருந்து கண்டேன். முதலில் ஒரு கதகளி நிகழ்ச்சி நடத்தி முடிக்க குறைந்த பக்ஷம் ஐம்பதாயிரம் முதல், ஒரு லட்சம் வரை தேவை, அதன் ஒப்பனை துவங்கி, ஒப்பனை கலைதல் வரை நடிகர்களுக்கு தேவையான நேரம், கதகளி இரவெல்லாம் அப்போதும் முடியவில்லை எனில் மறுநாள் இரவும் தொடரும் கலை, இது எதற்கும் நாட்யாஞ்லியில்  இடமே இல்லை.


 


 


 


அனைத்துக்கம் மேலே கதகளி ஒரு ரணகளமான நிகழ்த்துக் கலை. தமிழக சக்கரைப் பொங்கல் கோவில்கள் இதற்க்கு தாங்காது.  கதகளி ஒரு எல்லையில் மிகுந்த பிராந்திய தன்மை கொண்டது. மலையாளம் அறிந்திருந்தால் மட்டுமே முதல் கட்ட பிடி கிடைக்கும், [பாவம் அன்றெல்லாம் அஜிதனை நிகழ்வின் கூடவே அதை தமிழில்  மொழி மாற்றம் செய்ய சொல்லி அவனது கதகளி ஆவலை கொன்றேன்] அடுத்தது கை முத்திரைகள், இதில் தேர்ச்சி கொண்டால் மட்டுமே கதகளி ருசிக்கத் தொடங்கும்.


 


 


அன்று ஒரு இளம்பெண் முதன் முதலாக அணி புனைந்து புறப்பாடு செய்ய மேடை ஏறினாள். மணிமுடி, வாத்தியக் கலைங்கர்கள், மேடை என அப் பெண் ஒவ்வொன்றாக வணங்கும் போது, என்ன என்னவோ உணர்சிகள் உள்ளே முட்டி கண்கள் பனித்தன. அதன் பின் ருக்மாங்கத சரிதம், அதன் பின் வாலி வதம் . என்ன சொல்ல ஒரு புதிய கலை அறிமுகம் ஆகும் போது கிடைக்கும் புரியாமையும், பரவசமும், அதுதான் வாழ்வின் காதலனை உயிர்த்திருக்க செய்கிறது. அதை அன்று மீண்டும் அனுபவித்தேன்.


 


 


 


 


இல்லம் மீண்டு, கதகளி சார்ந்த அணைத்து காணொளிகள்களிலும் விழுந்து எழுந்து புகுந்து புறப்பட்டேன். கதகளி அறியாதவர்களால் செய்யப்பட்ட ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு. அந்த இடர் தாண்டியும் அக் கானோளிகளின் வசீகரம் குறையவில்லை. குறிப்பாக கர்ண சபதம். மனதுக்குள் ஆயிரம் முறை அம் மேடையை விழுந்து தொழுதேன். கர்ணனின் மனோ தர்மத்தில் ஒரு இடம்,  கர்ணன் குற்ற உணர்ச்சி மேலிட புலம்புகிறான், ”என்  தனுஷுக்கு எதிர் இங்கே ஏதும் இல்லை. ஆனால் இந்த ஞானம், குரு உளம் கனிந்து எனக்கு அருளியது அல்ல, குருவின் இதயத்தைப் பிளந்து நான் எடுத்துக் கொண்டது.” மொட்டை மாடி, இரவு, தனிமை, கலை மட்டுமே கிளர்த்தும் தூய துயரம்.


 


 


மனோ தர்மம்ஒ ரே உருவம், துரோணராக, பரசுராமராக, குந்தியாக, கர்ணனாக மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்து மாயம் நிகழ்த்தியது. அந்த உருவத்தில் எதை நாம் துரோணராக, குந்தியாக, கர்ணனாக காண்கிறோம்?  குந்திக்கு பாண்டாவர்களின் உயிரை கர்ணன்உ த்திரவாதம் செய்யும் இடம். பல முறை மீண்டும் மீண்டும் கண்டு, அந்தக் கணத்தின் உணர்வு உச்சத்துக்கு சென்று சேர்ந்தேன். இனிய ஜெயம் உங்கள் நாவல் ஒன்றினில் ஒரு வரி வரும், பறந்து, பறந்து, பறவை உதிர்ந்து வெறும் பறத்தல் மட்டுமே எஞ்சும் கணம் என, அதைத்தான் அங்கே கண்டேன். அங்கே இருந்தது கர்ணனின் மேன்மை அல்ல,  வெளிப்பட்டத்து மேன்மை மட்டுமேயான மேன்மை. எனது கர்ணனை இங்குதான் முழுதாக கண்டு கொண்டேன்.


 


 


 


கர்ணனாக நடித்தவர் கலாமண்டலம் கோபி. இன்றைய கதகளியின் லிவிங் லேஜான்ட்.  அன்று அஜிதனுடன்  நெல்லியோடு வாசுதேவன் நாயர், மார்கி விஜயகுமார், கலாமண்டலம் கோபி  இவர்களின்  முன்னிலையில், இவர்கள் காலடியில் அமர்ந்து முதன் முதலாக கதகளியை அறிந்தேன். ருக்மாங்கதன் மகனை கொல்ல வாளுயர்த்தும் போது உயர்ந்த செண்டை,  வாலியின் இறுதித் துடிப்பு அடங்குகையில் வெளியே சன்னமாக பெய்துகொண்டிருந்த மழை, அனைத்தையும் நோக்கிக் கொண்டு நின்றிருந்த பம்பா விளக்கு. என்ன சொல்ல, எல்லாம் என் நல்லூழ்.  கிராதம் துவங்க வாழ்த்துக்கள் .


 


கடலூர் சீனு


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2016 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.