சிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்

ஆசியமொழிகள் பிரிவின் தலைவர் ஹதீசாவிடமிருந்து விடைபெறல் நினைவுப்பரிசு பெற்றுக்கொள்ளுதல்


 


அன்புள்ள ஜெ.


விமர்சனம் செய்வது என்பது எளிதான செயலாக நினைக்கவில்லை. தொடர்ந்த வாசிப்பின் மூலமும் சமூகப்போக்குகளும், இலக்கிய போக்குகளையும் அவதானிப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். அதுவும் பல்வேறு அனுபவங்களும் தொடர்புகளும் இளைமையில் பெறுவது அதற்கு மிக முக்கியம். இத்தனை இருந்தும் ஒருவர் விமர்சனத்தை எடுக்காமல் தான் உண்டு தன் படைப்பு உண்டு என்று இருக்கும் எழுத்தாளர்களும் உண்டு. ஒரு சின்ன விமர்சனத்தை செய்ய நினைக்கும் ஒருவர் பல்வேறு பாவனைகளின் மூலமே அதைச் செய்யவேண்டியிருக்கிறது. விமர்சிக்கபடுபவர் முக்கிய ஆளுமையாக இருத்தல் கூடாது, அவர் காலமாகியிருக்கவேண்டும், எந்த அமைப்பையும் சாராதவராக இருத்தல் வேண்டும், பெண் எழுத்தாளராக இருத்தல் கூடாது இப்படி பல.


குறிப்பாக பெண் எழுத்தாளர்களை விமர்சிக்க நினைக்கும் ஒருவருக்கு கிடைக்கும் பட்டங்களும் அவமரியாதைகளும் மற்றதைவிட அதிகம். சாதாரணமாக அலுவலகங்களில்கூட சகபெண் ஊழியரை எதுவும் சொல்லிவிடமுடியாது. ஆண்களிடமிருந்து பெண்களைவிட அதிக கண்டனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இலக்கிய சூழலில் பெண் எழுத்தாளர்களை விமர்சிக்கும் முறை மிக மென்மையானதும் அதிகம் அவர்களை தூக்கிபிடிக்கும் நிலையே இருக்கிறது.


நீங்கள் விமர்சிக்கும் முறை முற்றிலும் வேறானது. மற்றவர்கள் எழுத நினைக்கும் பலவற்றை எந்த தயக்கமும் இன்றி செய்கிறீர்கள். பாராட்ட ப்பட வேண்டிய விஷயம்தான்.


ஆனால் ஏன் இத்தனை குதூகலமாக செய்கிறீர்கள் , அதில் ஒரு துள்ளலோடு கொடூர மனதோடு செய்வதாக படுகிறது அல்லது நான் அப்படி நினைக்கிறேனா தெரியவில்லை. உங்கள் பேட்டிகளில் சொல்லும்போது மிகச்சாதாரணமாக படுகிறது. ஆனால் விமர்சன கட்டுரையாக வரும்போது சம்பந்தப்பட்டவரை வேண்டுமென்றே பெரியளவில் காயப்படுத்த நினைப்பதுபோல் இருக்கிறது.


விமர்சனங்களில் அளவுகோல் வைக்கமுடியாது. விமர்சிக்கபடுபவர்களுக்கு அளவுகோல் இருக்கும்தானே ? வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களை நோக்கி வைக்கும் விமர்சனத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவும் படுகிறது. ஜெயகாந்தனுக்கு வைக்கும் அதே அளவு விமர்சனத்தை ஆரம்பநிலை எழுத்தாளனுக்கு வைக்கமுடியாது என நினைக்கிறேன். அத்தோடு இப்படி விமர்சிப்பதனால் நீங்கள் பெறப்போவது வெறுப்பும் தேவையற்ற ஆவேசங்களும்தான். நீங்கள் இதை விரும்புகிறீர்கள் என்றுகூட சிலநேரங்களில் நினைக்கிறேன். அதனால் கிடைக்கும் ஏச்சுகளாலும் விவாதங்களாலும் உங்கள்மேலும் உங்கள் எழுத்தின்மேலும் ஒரு பரபரப்பு கிடைக்கலாம் என்பதாலா? ஆனால் அது உங்கள் படைப்பாற்றலை விட்டு விலகவைக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.


சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மீது விமர்சனம் வைக்கும்போதே சர்ச்சைகள் வெளிகிளம்பும் என யூகித்தேன். நீங்கள் யூகிக்காமல் இருக்க முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்களால் நீங்கள் பெறப்போவது தான் என்ன? வெண்முரசு படைப்பில் இருக்கும்போது உங்கள் நேரத்தை விரயமாக்கி படித்து அதைப்பற்றி எழுதி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று தெரிந்தே நீங்கள் செய்வது ஒருவகையில் வருத்தம்தான்.


நன்றி


அன்புடன்


கே.ஜே.அசோக்குமார்.


***


அன்புள்ள ஜெ


வெண்முரசு தவிர உங்கள் பயணக் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வரும் வாசகி நான்.


சமீபத்தில் சிங்கப்பூர் சென்று பணி புரிந்து வருவது பெருமைக்குரிய ஒன்று.


இது அதிகம் பேருக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை. உங்களுக்கு அமைந்தது பொருத்தமாக எனக்குப் பட்டது.


சமீபத்தில் சிங்கை எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் எழுதியதை வாசித்த போது எனக்கு பகீரென்றே இருந்தது.


முதலாவதாக constructive criticism என்ற நோக்கில் உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நல்லது. அது அவ்வளவு சாத்தியமில்லை நடைமுறையில். இது உண்மை.


நீங்கள் உண்மையிலேயே மாற்றம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தால் உங்களின் அணுகுமுறை உதவி செய்யுமா என்று தெரியவில்லை.


நீங்கள் மிகவும் straight forward but bit blunt.


புலன் பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு தமிழ் பரிச்சயமும் , அனுபவமும், அறிய முயல வாய்ப்புகளும், நேரமும் அதிகம் இருக்காது. ஆனால் ஆர்வம் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்குள்ள ஆர்வத்தினால் அன்னிய மண்ணில் தமிழ் வளரவும் வாழவும் உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். முழுநேர எழுத்தாளர்களாக இருப்பது கொஞ்சம் கடினம். ஆனாலும் முயன்ற அளவில் தன்னால் ஆனதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள்.


நான் ஆஸ்திரேலியாவில் 25 வருடங்களாக வாழ்ந்து வருவதாலும் சில இலங்கை எழுத்தாளர்களை அறிந்துள்ளதாலும் இதை உங்களுக்கு எழுத நினைத்தேன்.


புலன் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கும் , சைவ சமயத்திற்கும், பரதம், வீணை, சங்கீதம் போன்ற கலைகளுக்கும் ஆற்றி வரும் சேவைகள் கவனிக்கப்பட வேண்டியதும் அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியம் என்பது என் எண்ணம்.


ஆஸ்திரேலியாவில் எதிர் மறை எண்ணங்களை நேர்முறையாக்கிச் சொல்வார்கள். அந்த முறை கேட்பவர்களுக்கு வலிக்காது. எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்.


நானும் அதை கடை பிடிக்கிறேன். என் மகளிடம் ஏனம்மா லேட்டாய் வருகிறாய் என்று கேட்க மாட்டேன். பதிலாக நான் உனக்காக காத்திருந்தேன் , நீ வராததால் சோர்வடைந்து உறங்கி விட்டேன் என்பேன். அவள், ஒன்று, லேட்டாக வர மாட்டாள். லேட்டானால் என்னை தொலைபேசியில் அழைத்து நேரமாகி விட்டது அம்மா. நீ காத்திருக்காதே என்பாள். எங்கேயம்மா இருக்கிறாய் என்றால் எனக்கு பதிலும் கிடைக்கும் அவளின் அன்பும் கிடைக்கும். கோபித்தால் பொய்தான். அன்பும் அரிதாகும்.


புலன் பெயர்ந்த எழுத்தாளர்களிடம் நிறைய கதைகள் உள்ளன. அவையெல்லாம் எழுதப்பட வேண்டும். தமிழிலும் ஆங்கிலத்திலும்.


இந்த கதைகளில் உயிர் உள்ளது. உங்களைப் போன்றோரின் உதவியுடன் அந்தக் உண்மைக் கதைகள் எழுதப் பட்டால் அவை வரலாறாகும் என்று நினைக்கிறேன்.


அசோகமித்திரன் , சுந்தர ராமசாமி போன்றவர்களின் கதைகள் வேறு. கி ராஜநாரயணன் கதை வேறு.


இந்தியாவை தாயகமாய் இன்னும் நினைக்கும் இந்தியாவை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் புலன் பெயர்ந்தவர்களின் கதைகள் வேறு.


என் இரு மகள்களுக்கும் தமிழ் நன்றாக புரியும். சரளமாக பேச வராது. ஆனால் தன்னை தமிழர்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். அவர்களுக்கு கதை சொல்லப் படவேண்டும். அதற்குத் தான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றேன்.


உங்களைப் போன்றோர் அந்த கதைகளுக்கு எப்படி உயிர் கொடுக்க வேண்டும் என்று வாய்ப்பிருக்கும் போது படிப்பிக்க வேண்டும்.


நீங்கள் criticize செய்யாமல் அந்த எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து உங்கள் கதைகளை இப்படி எல்லாம் எழுதுங்கள். எழுதினால் உங்கள் கதைகளுக்கு உயிரும் வலிமையும் கிடைத்திருக்கும் என ஒரு work shop வைத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது.


அரசாங்கம் வேறு ஆதரவு தருவதால் நீங்களும் அன்னிய நாட்டில் தமிழ் வளர ஒரு கருவியாக இருந்திருக்கலாம்.


இப்போது எல்லார் வாயிலும் பூர்ந்து புறப்படும் போல் ஆகிவிட்டது.


Hopefully you will take my points in a positive way.


கொஞ்சம் பயம் தான். காய்ச்சிடுவீங்களோ என்று. இருந்தாலும் சொல்லத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.


Please take it as a constructive criticism and try to see where I come from.


அன்புடன்


மாலா


இன்னொன்றும் தோன்றியது. நீங்கள் படிப்பித்திருந்தால் உங்கள் எழுத்து பாணி கடல் கடந்து அறியப்பட்டும் வழக்கப்பட்டும் ஆகி ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கும்.


*


அன்புள்ள நண்பர்களுக்கு ,


பொதுவாக எழுத்தாளர்களை உபதேசம் செய்து சீர்திருத்தவேண்டிய பொறுப்பு வாசகர்களுக்கு உண்டு என்னும் நம்பிக்கை தமிழில் உண்டு. ஒருநாளில் எனக்கு வரும் கடிதங்களில் பாதிக்குமேல் எனக்கு அறிவுரை சொல்லி வழிகாட்டும் கருணை நிறைந்த கடிதங்களே. அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள், கணிப்பொறி நிபுணர்கள், பள்ளி ஆசிரியர்கள், இதழாளர்கள், வணிகர்கள், வலைப்பூக்காரர்கள், குடும்பத்தலைவிகள், தலைச்சுமை வியாபாரிகள் அனைவரும் உபதேசம் அளித்தபடியே உள்ளனர். ஆகவே கோபம் எல்லாம் வரவில்லை. தமிழில் எழுதுவதன் மூலம் அடையும் ஒரு பேறு இது என ஆறுதல் கொள்ளவே செய்கிறேன். ஒரு சமூகமே திரண்டு எழுத்தாளனை ஆற்றுப்படுத்துவது வேறெந்த மொழியில் நிகழும்?


இது நம் பண்பாடு. சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் முழுக்க அவரிடமிருந்து எதையேனும் கேட்டுத்தெரிந்துகொள்ள வந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலரே. ஆனால் நாளுக்கு இருவர் அவரிடம் பேசி அவருக்கு வழிகாட்டத்தான் தேடிவந்துகொண்டிருந்தார்கள். ஏனென்றால் நாம் ‘தந்தைக்குபதேசம்’ செய்த தனயனை வழிபடுபவர்கள். ‘ஆசிரியன் தலையில் குட்டி’ அறிவுறுத்திய ஞானப்பழங்கள். நமக்கு பிறரிடமிருந்து ஒருவரியேனும் கற்றுக்கொள்ள இருப்பதில்லை. பிறருக்குச் சொல்லிக்கொடுக்கவே ஞானம் ஊறிக்கொண்டே இருக்கிறது.


அந்தத்தன்னம்பிக்கைக்கு முன்னால் என்னுடைய முப்பதாண்டுக்கால இலக்கிய வாசிப்போ, நான் எழுதியுருவாக்கிய இலக்கிய விமர்சனத் தொகுதியோ, பேசிய மதிப்பீடுகளோ, இலக்கிய முன்னோடிகளுடனான உறவோ பெரிதாகப்படுவதில்லை. என் முன்னோடிகளாகிய சுந்தர ராமசாமியோ, க.நா.சுவோ, புதுமைப்பித்தனோ இப்படித்தான் எழுதினர் என்பதும் கண்ணுக்குப்படுவதில்லை. உலக இலக்கியவிமர்சன மரபே இதுதான் என்பதும் தெரிவதில்லை. ஆனாலும் பேசிக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. நான் சுந்தர ராமசாமியையும் பி.கே.பாலகிருஷ்ணனையும் செவிகொடுத்துக் கேட்டதுபோல ஒரு நாலைந்துபேர் என்னையும் கேட்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.


இந்த உபதேசங்களைச் செய்யும்போதே நான் எழுதுவதையும் வாசித்தீர்கள் என்றால் என் நிலைபாடு புரியும். இரு வகையில் ஆரம்பகட்ட எழுத்தை அணுகுகிறேன். அதில் ஆண் பெண் என்னும் பாகுபாடெல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாதென்று உறுதியாக இருக்கிறேன்.


ஒன்று சூர்யரத்னா, கமலாதேவி அரவிந்தன் வகை எழுத்து. அது அறியாமையும் கூடவே மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் கொண்டது. அந்த போலியான தன்னம்பிக்கை சற்றேனும் உடையாமல் அவர்களால் எதையுமே கற்றுக்கொள்ளமுடியாது. அவர்களிடம் சென்று இலக்கியக்கொள்கையையோ அழகியலையோ பேசுவது வீண். அறிவுறுத்துவது அசட்டுத்தனம். இதற்கு முன் அவ்வகையில் ‘அகிம்சையாக’ முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்று சென்று பார்த்தால் இது தெரியும்.


மேலும் இந்த அசட்டு எழுத்தை வைத்துக்கொண்டே அவர்கள் பலவகையான லாபங்களை , புகழை, வெற்றிகளை அடைந்தும் இருப்பார்கள். ஆகவே தங்கள் எழுத்து மேல் அவர்களுக்கு ஐயமும் இல்லை. விமர்சனம் என்பது தங்கள் வெற்றிகளுக்கு எதிரான சதி என்றே அவர்களின் கண்ணுக்குத்தெரியும். இலக்கியமறியாத பெரும் கூட்டமே அவர்களின் வெளித்தோற்றத்தை நம்பிக்கொண்டும் இருக்கும். பல்வேறு லாபங்களுக்காக அவர்களைப் புகழ்ந்து பேசுபவர்களின் வரிசையும் உடனிருக்கும்.


விளைவாக உண்மையான எழுத்து உருவாகி வருவதற்கான பெரும் தடைச்சுவராக இவர்கள் நின்றிருப்பார்கள். மோசமான முன்னுதாரணமாக அடுத்த தலைமுறைக்கு காட்சியளிப்பார்கள்.


ஆகவே அவர்களின் தன்னம்பிக்கையை முடிந்தவரை உடைக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் உண்மையான மதிப்பு இதுதான் சூழலில் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களை நிராகரித்துத்தான் இலக்கியம் நோக்கிச் செல்லவேண்டும் என நிறுவவேண்டியிருக்கிறது. அவர்கள் சூழலில் உண்மையான எழுத்துக்குத் தடையாக இல்லை என்றால் அவர்களைப்பற்றிப் பேசவே வேண்டியதில்லை. நான் இதேதரம் கொண்ட பெரும்பாலானவர்களைப்பற்றி ஒரு சொல்கூட சொன்னதில்லை என்பதை வாசகர்கள் அறிவர்.


இன்னொரு வகை எழுத்து அழகுநிலா பாணி. அதை பிரியத்துடனும் அக்கறையுடனுமே அணுகியிருக்கிறேன் என வாசகர் காணலாம். குறைகளைச் சுட்டி , செல்லும் வழியையும் சுட்டியிருக்கிறேன். வாசிக்கவேண்டிய நூல்களை அடையாளம் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அவர் கவனிக்கும் மனநிலையில் இருக்கிறார். அனைத்து இடங்களிலும் தன்னை துருத்திக்கொண்டு நிற்கவில்லை. மிகையான தன்னம்பிக்கையுடனும் இல்லை. அவர் வளர வாய்ப்பிருக்கிறது. அவரை எவ்வகையிலும் புண்படுத்தலாகாது என்பதே என் எண்ணம்.


இந்த அக்கறையை குறிப்பிடத்தக்க அத்தனை இளம்படைப்பாளிகளிடமும் நான் காட்டியிருக்கிறேன். இன்று தமிழில் எழுதிவரும் எனக்கு பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த அத்தனை படைப்பாளிகளையும் அவர்களின் படைப்புத்திறன் வெளிப்பட்ட முதல் தருணத்திலேயே அடையாளம் கண்டு சுட்டிக்காட்டியவன் நான். பெரும்பாலும் என் கடிதமோ குறிப்போதான் அவர்கள் அடையும் முதல்பாராட்டாக இருக்கும். அதை ஒரு நெறியாகவே இருபதாண்டுக்காலமாகக் கொண்டிருக்கிறேன். என் தளத்தை வாசித்தாலே தெரியும். அதில் ஆண் பெண் என்னும் பேதம் எப்போதும் இருந்ததில்லை.


அதேபோல முன்னோடிகளை விமர்சிக்கையில் அவர்களின் கலைத்திறனை தனியாகவும் வரலாற்றுப்பங்களிப்பைத் தனியாகவுமே விமர்சிக்கிறேன். என் விமர்சனங்களைப் பார்ப்பவர்கள் எதை கடுமையாக நிராகரிக்கிறேன் , எதை வகுத்துக்கொள்ள விழைகிறேன், எதை கனிவாக விமர்சிக்கிறேன், எதை ஊக்கப்படுத்துகிறேன் என எளிதில் புரிந்துகொள்ளமுடியும். இந்த வேறுபாட்டில்தான் என் அளவுகோலே இருக்கிறது.


நல்லுபதேசங்களுக்கு நன்றி. ஆனால் நான் செய்வதென்ன என்பது எனக்குத் தெரியும். அதன் விளைவுகள் என்னவென்றும் அறிவேன். இத்தனை ஆண்டுகளாக இலக்கியம் எழுதி வாசித்து விமர்சிப்பதனால் சுயபுத்தி என்பதும் கொஞ்சம் இருக்கிறது. தயவுசெய்து அதையும் கொஞ்சம் நம்புங்கள்


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.