கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள்.
நமது சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான இலட்சியவேகம், வெள்ளைய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் பிறகு வந்த ஆக்கங்களில் இலட்சியவாதத்தின் சரிவை , அதன் விளைவான சமூக வீழ்ச்சியின் சித்திரத்தைக் காணமுடிகிறது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகியவை முதல் வகை. ‘பொய்த்தேவு ‘ [க நா சுப்ரமணியம்] முதல் ‘ ஒரு புளியமரத்தின் கதை வரை நாவல்கள் பெரும்பாலும் வீழ்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. ஆனால் இரு போக்குகளிலும் இருந்து விலகி கோபல்ல கிராமம் ஒரு தனியான பார்வையை அளிக்கிறது .
அப்பார்வை மேலே சொன்ன பொதுவான கருத்தியல் போக்குகளிலிருந்து உருவானதல்ல. மாறாக தன் இனக்குழுப்பின்னணியிலிருந்து கி ராஜநாராயணன் உருவாக்கிக் கொண்டது. அதை வேறு எவரும் எழுதிவிடமுடியாது. அந்த தனித்த இனக்குழுவேர்தான் தமிழுக்கு அவரது பங்களிப்பு. அவரது கலையின் ஆதாரம். அவரது ஆக்கங்களின் உள்வலிமை . அவரது ஆக்கங்களின் எல்லையையும் இங்கேயே நாம் தேடவேண்டியுள்ளது.
கி.ராஜநாராயணனின் அழகியல் கூறுகள்
கி.ராஜநாராயணனை தான் சந்தித்த தருணங்களைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் தனிப்பட்ட உரையாடல்களில் சொல்லியிருக்கிறார் . முதலில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் ‘வட்டத்தொட்டி ‘ அவைகளில் . அப்போது அவர் சட்டைபோடாமலேயே ஊரில் இருந்து வருவார், தரையில் ஒரு மூலையில் அமர்வார் , சபையில் எதுவுமே பேசமாட்டார் என்று சுந்தர ராமசாமி நினைவு கூர்ந்தார். பிறகு விவசாயிகள்போராட்டங்கள்மூலம் இடதுசாரி அரசியலுக்கு வந்த கி.ராஜநாராயணனை நெல்லை கம்யூனிஸ்ட் வக்கீல் என்.டி. வானமாமலை வீட்டில் வைத்து சந்தித்ததையும் அப்போது அவரில் உருவாகியிருந்த மாற்றங்களையும் நினைவு கூர்ந்த சுந்தர ராமசாமி ஆனால் அவரது பேச்சுமொழி மட்டும் மாறவேயில்லை. பேச்சிலே சாதாரணமாக அவர் கிராமத்து உவமைகளையும், கதைகளையும் தான் பயன்படுத்துவார் என்றார்.
கி.ராஜநாராயணனின் படைப்புலகின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இதன் மூலம் நான் அடையாளம் காண்கிறேன். டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் வழியாக கி.ராஜநாராயணன் பெற்றுக் கொண்டது ரசனையை என்று சொல்லலாம். கம்யூனிஸ்டு இயக்கங்கள் மூலம் முற்போக்கு மனிதாபிமான பார்வையை . அவரது பிறப்பு வளர்ப்பு ஆகிய பின்னணியிலிருந்து கிடைத்து அவரது மனதில் முக்கியமான் இடம் பிடித்திருந்த கிராமத்துப் பண்பாட்டுக் கூறுகள் இவ்விரு புதுக் கூறுகளுடனும் கலந்து அவரது ஆளுமையை உருவாக்கின .
ரசனை என்பதை கி ராஜநாராயணனின் அழகியல் அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகவே காணலாம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழலையே வெளியே இருந்து வந்த ஒருவனின் பார்வையுடன் பார்த்து ரசித்து சொல்லும் பாணியை அவரது கதைகளில் வாசிக்கிறோம். இயற்கைச் சூழலை , மனிதர்களின் குணாதிசயங்களை , அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எல்லாமே ஒரு வேடிக்கை பார்க்கும் கண்ணோடு விலகி நின்றே அவர் பார்க்கிறார் . இந்தப் பார்வையே அவருடைய படைப்புகளில் வெகுஜன ரசனையையும் திருப்தி செய்யும் கூறாக உள்ளது. ஏறத்தாழ இதே சூழலை எழுதிய பூமணியிடம் இத்தகையை ரசனை அம்சமே இல்லை என்பதையும், அவர் படைப்புகளில் வாழ்க்கை சாதாரணமாகத் தகவல்களாகவே வருகிறது என்பதையும் இத்துடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரசிப்பது, அந்த ரசனையை நுட்பத்துடனும், ஆர்வத்துடனும் பகிர முயல்வது கி.ராஜநாராயணனின் இயல்பு.
இயற்கையைச் சித்தரிப்பதில்வெற்றி அடைந்த தமிழ் எழுத்தாளர்கள் குறைவே. தி.ஜானகிராமன்[காவிரிக்கரைகள்] ப.சிங்காரம் [கடல்] இருவரை மட்டுமே என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது. இயற்கையை சித்தரிப்பதில் ஒரு எழுத்தாளன் எங்கே தோல்வி அடைகிறான் ? ஒன்று இயற்கையை வெறும் தகவல்களாக புறவயமாக சொல்லி செல்லும்போது, க.நா.சுப்ரமணியம் ,செல்லப்பா போல. அல்லது அகவயமான உணர்வுகளை முக்கியப்படுத்தி , பிரயத்தனப்படுத்தி அவற்றை இயற்கை மீது ஏற்றும்போது. உதாரணம் மெளனி, சுந்தர ராமசாமி. இயற்கையைப் பற்றிய சிறந்த சித்தரிப்பு அதில் ஆழ்மனம் ஈடுபடுவதன் தன்னிச்சையான வெளிப்பாடாக இருக்கும். இயல்பான காட்சிப்படத் தன்மையைக் கொண்டிருக்கும்போதே அக உணர்வுகளைபிரதிபலித்து படிமத்தன்மையும் கொண்டிருக்கும். இயற்கையின் பிரம்மாண்டம் ஒரு படைப்பாளியிடம் உண்மையான எதிர்வினையை எழுப்பியிருக்கிறதென்றால் அது கண்டிப்பாக கட்டுப்பாடற்ற தன்மையைத்தான் கொண்டிருக்கும். ப.சிங்காரத்தின் மொழி உளறல்போல மாறுவதைக் காணலாம். காரணம் தன் சுயத்தை நிராகரித்தே ஒரு மனம் இயற்கையில் ஈடுபட முடியும்.
கி.ராஜநாராயணனின் படைப்புகளில் நவீனத் தமிழில் உள்ள மிகச்சிறந்த சில இயற்கைச் சித்தரிப்புகளைக் காண்கிறோம். இவற்றில் முதன்மையானது கோபல்ல கிராமம் நாவலில் கிராமத்தில் காலைநேரம் விடிந்து எழும் சித்திரம்தான். அவரது பிஞ்சுகள் என்ற குழந்தைகள் நாவல் இயற்கையின் அழகிய சித்தரிப்புக்காக முக்கியமானது. கி.ராஜநாராயணன் தன் கதைகூறல்முறைகளில் எப்போதுமே நாட்டார் வாய்மொழி மரபின் அழகியலையே கைக்கொள்கிறார். அதன் சாமர்த்தியம், நக்கல்கள், இடக்கரடக்கல்கள், அனைத்தையும் விட முக்கியமாக நிதரிசனப்பாங்கு. ஆனால் இயற்கையை சொல்லும்போது மட்டும் அவர் செவ்வியல்தன்மைக்குள்ள் சென்றுவிடுகிறார். ஏனெனில் இயற்கையை விலகி நின்று பார்த்து வியப்பது நாட்டார் மரபின் இயல்பல்ல. இயற்கை தன்னிச்சையான ஓர் இடத்தை மட்டிலுமே நாட்டார் மரபில் பெறமுடிகிறது. இயற்கையை சொல்லுமிடத்தில் கி.ராஜநாராயணனின் வாசாலகத்தன்மை அகன்று அவர் மொழி செறிவும் வேகமும் கொண்டு கவிதைவாவது நவீனத் தமிழிலிலக்கியத்தின் முக்கியமான அழகுகளில் ஒன்று.
‘ ..மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல வானம் சுத்த நீலமாய் இருந்தது.யாரோ மேற்கே கை காண்பித்தார்கள். வெகுதூரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இன்று ரொம்பக் கிட்டே வந்திருப்பதுபோல தோன்றியது. எப்பவும் ஒரு நீல அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள் கூட தெளிவாகத் தெரிவதை பார்த்தார்கள். யாரோ அதிலிருந்த பாறைகள் மரங்கள் கூட தெரிவதாகச் சொன்னார்கள் கோயிலின் படிக்கட்டின் அடியிலிருந்து ‘டொர்ர் டொறக் ‘என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது…
வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளைமேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல் கொண்ட யானைமந்தைகள்போல நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டன உச்சியில். கட்டுத்தறியை அறுத்துக் கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது.இரைக்கு சென்றிருந்த அரசமரத்து காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பிவந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி மூலையில் திடாரென்று மின்னல் அந்த பகலிலும் கண்னை வெட்டியது…. ‘ [நிலைநிறுத்தல்]
நீண்ட கோடைக்கு பிறகு வரும் மழையின் சித்திரத்தை அளிக்கும்போது இக்கதையின் மொத்த குறியீட்டுத்தன்மையும் தீவிரமாக மேலெழுவதைக் காணலாம். மேகங்கள் குளிர்ந்து நிற்பது, அந்தக் காளையின் குதியாட்டம் எல்லாமே உளநிகழ்வுகளும் கூட! நாட்டார் மரபிலிருந்தே கிராஜநாராயணன் துவங்குகிறார். ஆனால் டி.கெ.சி அம்சம் அவரை அதிலிருந்து நகர்த்திக் கொண்டு செல்கிறது.
மனிதர்களைப்பற்றி சொல்லும்போது அவர்களுடைய மனஓட்டங்களை பெரும்பாலும் குறிப்பாகச் சொல்லி , உடல் அசைவுகளை விவரித்து சித்தரிப்பது கி.ராஜநாராயணனின் பாணி . நேரடியாக மனதை சித்தரிப்பது அவரது இயல்பல்ல என்பதனாலேயே அவற்றை அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் ஆசிரியர் கூற்றாக அமைந்து ‘பரிந்துரை ‘த்தன்மை கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த உணர்வுகளை அவர் கதாபாத்திரங்களின் உடல் மொழியின் வழியாக சொல்லும்போது எப்போதுமே புதுமையும் தீவிரமும் உருவாகிவிடுகின்றன.கோபல்ல கிராமத்தில் கி.ராஜநாராயணன் கோபல்லகிராமத்தின் வெவ்வேறு நாயக்கர்களைப்பற்றி சொல்லுமிடங்களில் முழுக்க உடல்மொழியையே பிரதானமாக சொல்லியிருப்பதைக் காணலாம்.
‘ ஊர்க்கூட்டத்துக்கு ஊர் சாட்டியவுடன் வந்து சேரும் முதல் நபரும் அவரே. விறுவிறுவென்று சாப்பிட்டுவிட்டு தெருவழியே கையைத் துடைத்துக் கொண்டே கடைக்கு வந்து எழாயிரம் பண்ணை தென்னைப்பொடியில் ஒரு சிட்டிகை ஓசிப்பொடி வாங்கிக் கொண்டு கூட்டம் கூடும் இடத்தில் உயரமான இடமாகப் பார்த்து வகையாய் உட்கார்ந்துவிடுவார். விவகாரம் கேட்கும்போது இடதுகையை இடுப்பில் வைத்து வலதுகையை சின்முத்திரைபோல வைத்துக் கொண்டு ஒரு பூவை முகர்ந்துபார்பதுபோல அதை முகர்ந்துகொண்டே லயிப்பில் கண்களைமூடி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு ராகஆலாபனனையைகேட்பதுபோல எதிராளியிடம் கேட்டுக் கொண்டே வருவார் ‘ [கிடை]
மனங்கள் உரசிக் கொள்ளும் நுட்பமான தருணக்களைக் கூட கி. ராஜநாராயணன் உடல்மொழியின் வழியாக சொல்லிவிடுகிறார்
‘உணவு படைக்கும்போது மல்லாம்மாவிடம் மெளனமாக தன் கையை நீட்டிக் காண்பிக்கிறான்கொண்டையா. கையில் இரத்த விளாறுகளாக நகங்களால் கீய்ச்சப்பட்ட காயங்கள் .இரவில் அவள் படுத்திருந்த திசையில் அவன் கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில்கள் அவை. அதைப் பார்த்தும் பார்காததுபோல அவனுக்கு நெய் வட்டிக்கிறாள். வேண்டாம் போதும் போதும் என்று அவன் கை தடுக்கிறது. அப்போது அந்த காயங்களின்மேல் சொட்டுகிறது நெய் ‘[ கனிவு]
இந்த ரசனைக்கூறுதான் கிராஜநாராயணனின் கலையின் மிக முக்கியமான அம்சம் . இன்று அவரை வாசக மனதில் நிலைநிறுத்தியிருக்கும் அம்சமே இதுதான். மிக நுட்பமான புலன் பதிவுகளைக் காண்கையில் ஏற்படும் பரவசத்துக்காகவே நான் கிராஜநாராயணன். படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பது. ‘கிறிஸ்தவர்களுக்கே உண்டான ஒரு வாசனை ‘ [ஒரு காதல் கதை] ‘ பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரைமீது பாலைபீய்ச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல மெல்லிய குரட்டை ஒலி ‘ [கன்னிமை] ‘ … ‘சேங்கரன்கோயில்! ‘ பஸ் கண்டக்டரின் குரல் வெங்கலத்தினால் செய்தது. அவன் முன்பு காப்பி ஹோட்டல் சர்வராக வேலைபார்க்கும்போது ‘ஒரு தோசை ஸ்பெஷலே ‘ என்று குரல்கொடுத்தால் ஏழு ஹோட்டல் சரக்குமாஸ்டர்களுக்கு கேட்கும் ‘[ அவத்தொழிலாளர்] பிரம்மாண்டமான பூதம் ஒன்று இருண்ட கரும்புகையாக மாறி , அந்தப்புகை வரவரச் சின்னதாக மாறி , ஒரு சிறு குப்பிகுள் புகுந்துகொண்டு தானாகவே கார்க்கால் மூடிக் கொண்டதுபோல அவளுடைய எண்ணத்தின் விசுவரூபம் குறைந்து தற்காலிகமாக மனசினுள் ஒரு மூலையில் அட்டைபோல சுருங்கி ஒட்டிக் கொண்டது ‘[பலாபழம்] அப்பளக்கட்டை பிரித்து ஒவ்வொரு அப்பளமாக எடுப்பதுபோல புதிய ரூபாய்க் கட்டிலிருந்து ரூபாய்த்தாள்களை எடுத்தாள்[குருபூசை]
கிராஜநாராயணனின் படைப்புகளின் பார்வையில் மார்க்ஸியக் கருத்தியலின் பாதிப்பு குறிப்பிடத்தக்கது. கதவு, தோழன் ரங்கசாமி, அவத்தொழிலாளர் வேட்டி போல பல கதைகளில் மார்க்ஸிய சமூகப்பார்வை நேரடியாகவே பிரச்சாரக்குரலுடன் வெளிப்படுகிறது. ‘வேலை வேலை வேலையே வாழ்க்கை ‘ போன்ற கதைகளில் அது உள்ளார்ந்த கண்ணோட்டமாக உள்ளது. பெரும்பாலான கதைகளில் மார்க்ஸிய மனிதாபிமானக் குரலே கி.ராஜநாராயணனிடம் ஓங்கி ஒலிக்கிறது எனலாம். கனிவு, கன்னிமை போன்ற அக உலகம் சார்ந்த கதைகளில் கூட அக்குரலை உள்ளே நாம் அடையாளம் காணமுடியும். கோபல்லகிராமம் உருவாகி வரும் சித்திரத்தை அளிப்பதில் மார்க்ஸிய நோக்கு செல்வாக்கு செலுத்துகிறது. மனித உழைப்பின் சிருஷ்டிகரத்தை மார்க்ஸிய எழுத்துக்கள் எப்போதுமே முன்னிறுத்தியுள்ளன. தகழி சிவசங்கரப்பிள்ளை , யஷ்பால் , நிரஞ்சன போன்றவர்களின் படைப்புகளில் நாம் இதன் அழகிய சித்த்திரங்களக் காணலாம். ஆனாலும் கோபல்லகிராமம், விஷகன்னி [ எஸ் கெ பொற்றெகாட்/ மலையாளம் ] ஆகிய படைப்புகளில்தான் உழைப்பின் சிருஷ்டிகரம் கவித்துவமாக பதிவாகியுள்ளது.
நமது முற்போக்கு விமரிசகர்கள் பொதுவாக கட்சி அட்டைக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை அழகியலுக்கு கொடுத்தது இல்லை . நம் முற்போக்கு அழகியலின் முன்னோடி புதுமைப்பித்தன் என்றால் அதன் அடிப்படைகளை வடிவமைத்தவர்கள் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் ஜி நாகராஜனும் என்றால் அதன் அடுத்தகட்ட நகர்வை நிகழ்த்தியவர் கி.ராஜநாராயணன். நமது முற்போக்கு இலக்கியத்தின் அடுத்த கட்டத்தவர்களான பொன்னீலன், பூமணி , சு சமுத்திரம், மேலாண்மைபொன்னுச்சாமி முதல் இன்றைய முக்கிய முற்போக்கு அழகியல்வாதிகளான சோ.தருமன், தங்கர் பச்சான் ,இமையம், இலட்சுமணப்பெருமாள், கண்மணி குணசேகரன் வரையிலானவர்களிடம் கி.ராஜநாராயணனின் அழுத்தமான பாதிப்பு உண்டு. கதையை நவீன யதர்த்தவாதத்தின் சாத்தியங்கள் எதையும் நழுவவிடாமல் நாட்டார் மரபின் வாய்மொழிக்கூற்றுமுறைக்கு அருகே கொண்டு செல்ல முயல்தல் என இதை மதிப்பிடலாம்.
ஆயினும் கி.ராஜநாராயணனின் தனித்தன்மையை வடிவமைப்பது ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல அவரது இனக்குழுவேர்தான். அதை தனியாகவே காணவேண்டும்.
இனக்குழு அழகியலின் முதல்வடிவம்
இனக்குழு என்றபெயரை அழகியல் விவாதத்தில் பயன்படுத்தி வழிகாட்டியவர் பிரேம். சாதி என்ற பேரை சாதாரணமாக பயன்படுத்தலாம்தான், இரு தடைகள். ஒன்று அது அதிகமும் எதிர்மறையான பொருளையே இங்கு அளிக்கிறது. கி.ராஜநாராயணன் போல அடிப்படையில் முற்போக்குத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளியைப்பற்றி பேசும்போது அச்சொல் உசிதமற்றதாக மாறிவிடலாம். இரண்டாவதாக நம் சூழலில் சாதி என்பது உண்மையில் உள்சாதிகளாக பிரிந்து சென்ற படியே இருக்கும் ஒன்று. ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று இங்கே தோராயமாகவே அடையாளப்படுத்தமுடியும். பல சாதிகள் ஒரு பொது அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொகுத்துப் பார்க்கப்படுவது இங்கே இயல்பாகவே உள்ளது.
மூன்றாவதாக இலக்கியக்கலைச்சொல் விரிவாக்கத்துக்கு சாத்தியம் கொண்டதாக இருக்கவேண்டும். இனக்குழு அடையாளம் என்றால் என்ன ? அதன் இயல்புகளைகீழ்க்கண்டவாறு வகுக்கலாம் அ] அது பிறப்பு அடிப்படையில் ஒருவன் மீது உருவாகக் கூடியது ஆ] ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகம் ரத்த உறவின் அடிபடையில் சேர்ந்து நூற்றாண்டுகளாக வாழும்போது உருவாகும் வாழ்க்கைமுறையை தன் தனியியல்பாக கொண்டது இ] உட்பிரிவுகள் இருப்பினும் உட்பிரிவுகள் கொண்டுள்ள தனித்தன்மையை விட பொதுத்தன்மை அதிக வலுவாக இருக்கக் கூடியது.
தமிழிலக்கியத்தில் அதற்கு முன் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர்களில் எவருமே தங்கள் இனக்குழு அடையாளத்தை படைப்புகளில் வெளிப்படையாக வைக்கவில்லை. ஜெயகாந்தன் எந்த சாதி என்று பெரும்பாலான அவர்து வாசகர்களுக்கு தெரியாது. சுந்தர ராமசாமிக்கும் ஜி நாகராஜனுக்கும் அவர்கள் சாதியடையாளம் பிறரால் ஓயாது நினைவூட்டப்படுவதன் வழியாகவே தங்கி நிற்கிறது.நேர்மாறாக கி.ராஜநாராயணன் தன் தனித்த சாதி அடையாளத்துடன் தான் எழுத்துக்கு வந்தார் . அவரது முதல்கதையான மாயமான்[1958. சாந்தி இதழ்] அவ்வடையாளத்தை துல்லியமாக பதிவு செய்கிறது. பிற்காலக் கதைகளில் மிக விரிவாக பதிவான தெலுங்கு நாயக்கர் சாதியின் வாழ்க்கையை இக்கதையில் காண்கிறோம்
‘அப்போதுதான் நாயக்கர் அவர்கள் எண்ணை ஸ்நானம் செய்துவிட்டு ,வெள்ளைவேட்டியை கட்டிக்கொண்டால் எண்ணைச் சிக்கு ஆகும் என்று ஒரு பழையகண்டாங்கி சேலையை வேஷ்டிக்குப் பதிலாக உடுத்திக் கொண்டு அந்த சேலையின் மறுகோடியையே தலையில் கட்டிக் கொண்டைபோல சுற்றிவிட்டு நெற்றிக்கு இட்டுக் கொள்ள நாமம் குழைத்துக் கொண்டிருந்தார் ‘ [மாயமான்] இந்தக் கதையில்கி.ராஜநாராயணனின் பிற அழகியலடிப்படைகளான ரசனை,முற்போக்கு அணுகுமுறை ஆகிய இரண்டுமே வலுவாக இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர்தான் கி.ராஜநாராயணன். அவரது மொழியும் கூறுமுறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன. அதை மீறிச்சென்று அவரை நவீனக் கதைசொல்லியாக ஆக்கும் அம்சங்கள் பலவும் அவரிடம் உண்டு. அவற்றை பிறகு காணலாம். நாட்டார் கதைசொல்லிகள் ஒரு சமூகத்தின் வம்சகதைப்பாடகர்களைப்போன்றவர்கள். எல்லா பழங்குடி சமூகங்களிலும் இவர்கள் இன்றியமையாதவர்கள். அவர்களே அச்சமூகத்தின் வரலாற்றை தொடர்ச்சியாக்குபவர்கள் என்றால் அது மிகையல்ல. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் மூதாதையர் வரிசை நினைவில் நிறுத்தப்படுகிறது. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகின்றன. வாழ்க்கைமுறையின் அடிப்படைக்கூறுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.[புன்னகைக்கும் கதைசொல்லி :அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் என்ற கட்டுரையில் இதை விரிவாகவே விவாதித்துள்ளேன்] அந்த கதைசொல்லியிலிருந்து நவீன இலக்கியவாதியாக உருவெடுத்தவர் கி.ராஜநாராயணன்.
தமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்ய்வது செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல.தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். மோதல்களற்றவனாகவும் தேடல்கள் அற்றவனாகவும் அதனாலேயே வடிவசோதனை போன்றவற்றில் மிதமிஞ்சிய நாட்டம் கொண்டவனாகவும் இருப்பான்.
வேர்கள் எனும்போது மொழி, நிலப்பகுதி, தேசியம், மதம் , மரபிலக்கியமும் கலைகளும் என பல கூறுகள் அதில் உள்ளன. ஆனால் நம் சூழலில் முதலிடம் பெறுவது இனக்குழு அம்சமே. ஏனெனில் நாம் பிறந்து விழுவது அதில்தான். நமது மனம் அதிலிருந்தே உருவாகி வருகிறது. நாம் கல்வி மூலம் வாசிப்பு மூலம் அரசியல்பிரக்ஞை மூலம் அதிலிருந்து எவ்வளவுதான் விலகி வந்தாலும் நம் ஆழ்மனம் அதிலிருந்தே உருவாகியுள்ளது . இலக்கியப்படைப்பை பொறுத்தவரை ஒருவனின் பிரக்ஞைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அது ஆழ்மனம் மொழியை சந்திக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட கலை.
மரபான இனக்குழுக் கதைசொல்லிகள் தங்கள் இனக்குழு உருவாக்கிய கருத்தியல் எல்லையை தங்கள்போதம் மூலம் மாற்றுவதில்லை, நிகழும் மாற்றங்கள் பெரும்பாலும் தன்னிச்சையானவை. வாழ்க்கையின் இன்றியமையாத அலைகள்மூலம் அச்சமூகம் அடைந்த மாற்றங்களை அக்கதைசொல்லிகள் பிரதிபலிக்கிறார்கள். அதாவது இனக்குழுக்கதைசொல்லியின் பிரக்ஞை கவன் இனக்குழுவை சரியாக பிரதிபலிக்குமளவுக்கு அதனுடன் சமானமாக ஓடுகிறது. நவீனப்படைப்பாளியின் பிரக்ஞை அச்சமூகத்துக்கு முன்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆக இனக்குழுவேர் கொண்ட நவீனப்படைப்பாளியை அவனது இனக்குழுப் பிரக்ஞைக்கும் நவீன காலகட்டத்திற்குரிய கருத்தியல்களுக்கும் நடுவேயுள்ளவனாக நாம் ஊகிக்கலாம். அவன் எப்போதுமே ஒரு பயணத்தில் ஒரு போராட்டத்தில் இருகிறான் .சர்வ சாதாரணமாக அவனால் புதுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாது, பழைமையில் ஊறிக்கிடப்பதும் சாத்தியமில்லை. இந்தப்போராட்டமே அவனது கலையின் முக்கியமான முரணியக்கமாகும். இதை அவனது பிரக்ஞைக்கும் நனவிலிக்கும் இடையேயான போராட்டம் என்று சொல்லலாம். அவன் முன்னிலைப்படுத்தும் சமூகத்துக்கும் அவனுக்கும் இடையேயான போராட்டமாக உருவகிக்கலாம். அவனது கலையின் தன்னிச்சையான கூறுகளுக்கும் அவனது வடிவ உணர்வுக்கும் இடையேயான மோதலாகவும் காணலாம்.
இத்தகைய இயல்பான முரணியக்கம் இல்லாத படைப்பாளிகள் இல்லை. இன்று மேலைநாடுகளில் பெரும் படைப்பாளிகளுக்குள் உள்ள இந்த இனக்குழுத்தன்மையை தொண்டி எடுத்து ஒற்றைப்படையாக வெட்டி முன்வைத்து அவர்களை முன்முடிவுகளும் மனக்குறுகல்களும் கொண்டவர்களாக சித்தரித்துக் காட்டும் போக்கு ஒன்று உள்ளது. ஷேக்ஸ்பியர் முதல் டி எஸ் எலியட் வரை அதற்குத் தப்பவில்லை. ஆனால் அதற்கு பெரிய இலக்கிய முக்கியத்துவம் அங்கு உருவாகவில்லை என்பதே என் எண்ணம். நம் சூழலில் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் தெருமுனைக் கூட்டங்களில் கோஷமிடுபவர்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாதவர்களின் ஓயாத ‘பிளாக் மெயிலுக்கு ‘ ஆளாகியபடித்தான் தமிழ் எழுத்தாளன் செயல்பட வேண்டியுள்ளது . இலக்கிய ஆக்கத்தின் சிக்கலான முரணியக்கநிலைகளை சற்றும் அறியாத அரசியல்வாதிகள் இலக்கியவிமரிசனம் என்றபேரில் நிகழ்த்தும் முத்திரைகுத்தல்கள் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படைகளுக்கே ஆபத்தாக மாறிவிட்டிருக்கின்றன. சென்றகாலங்களில் மதவாதிகளும் ஒழுக்கவாதிகளும் உருவாக்கிய கெடுபிடிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல இது. இலக்கிய ஆக்கத்துக்கு முற்போக்கு அல்லது மனிதாபிமானம் அல்லது ஒழுக்கம் அல்லது அழகு கூட ஒரு நிபந்தனையாக ஆகமுடியாது. படைப்பு என்பது இலக்கியவாதியின் ஆழ்மனம் . ஆகவே அது அச்சமூகத்தின் பொதுஆழ்மனமும் கூட. தீவிரமான இலக்கியப்படைப்பாளி இக்கூச்சல்களை முற்றிலும் உதாசீனம் செய்து தன் அந்தரங்கத்தை மொழியால் அளப்பதில் மட்டுமே குறியாக இருப்பான்.
ஒரு படைப்பாளியின் இனக்குழுத்தன்மையை அவன் படைப்புகளைவைத்து மதிப்பிடுவதே இயல்பானது .அவன் படைப்புக்ளில் வெளிப்படும் இனக்குழுத் தன்னிலை என்ன என்பதற்கு அப்படைப்பு சில சமயம் நேரடியான பதிலை அளிக்கலாம், சிலசமயம் உள்ளடங்கிய பதிலை. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் , லா.ச. ராமாமிருதம் ஆகியோரின் படைப்புகளின் அவ்வடையாளம் தெளிவாக உள்ளது. ப.சிங்காரத்தின் படைப்பில் படைப்பின் உள்வலிமையாக ஆனால் பூடகமாக உள்ளது. புதுமைப்பித்தன் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார் ? அவரது அடையாளங்களை குறைந்தபட்ச அலகின் அடிப்படையில் வகுக்கலாம். வேளாளர், சைவர், திருநெல்வேலிக்காரர், தமிழர் , இந்து – என. வேளாள அடையாளம் அவரது படைப்பின் சூழல் சித்தரிப்பு மற்றும் கதாபாத்திரங்களுக்கு தெளிவாக இருப்பதனால் அதை நாம் இனம் கண்டுகொள்ள முடிகிறது. அந்த வேளாளசைவ அம்சம் இல்லையேல் புதுமைப்பித்தனின் படைப்புகள் எந்த அளவுக்கு வெளிறி நிறமிழந்திருக்கும் என்று யோசிக்கலாம். அவரது கதாபாத்திரங்கள் வெற்று முகங்கள் ஆகியிருக்கும். மொழி தட்டையானதாக ஆகியிருக்கும். அதைவிட முக்கியமாக அவரது படைப்புகளின் முக்கியமான படிமவெளி இல்லாமலாகியிருக்கும். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கபாடபுரம், கயிற்றரவு, சிற்பியின் நரகம் போன்ற சாதனைப்படைப்புகள் உருவாகியிருக்காது.
ஆனால் இந்த இனக்குழு அடையளத்தை ‘சார்ந்து ‘ செயல்பட்டவரல்ல புதுமைப்பித்தன். அதிலிருந்து மேலைநவீனத்துவ அழகியல் மற்றும் பொருள்முதல்வாத தத்துவநிலைப்பாடு ஆகியவற்றை நோக்கி நகரும் துடிப்பே அவரில் இருந்தது. தென்னாடுடைய சிவன் அவரிடமிருந்து விடைபெறவில்லை, அவரது புனைவுப்பரப்பில் தோன்றி மேலைநாத்திகக் குரலை பிரதிபலிக்கிறார்.புதுமைப்பித்தனின் இந்த போராட்டமே அவரது படைப்பியக்கத்தின் செயல்வலிமைக்கு காரணம். சிற்பியின் நரகம் பேசும் கலைச்சிக்கல் உண்மையில் புதுமைப்பித்தனின் குரலே. தன் இனக்குழு அடையாளத்துக்கு உள்ளே வாழக்கூடிய ஒருவர் ஒருபோதும் ‘ நாசக்கார கும்பல் ‘ , ‘ துன்பக்கேணி ‘ போன்ற கதைகளை உருவாக்க முடியாது. இலக்கியப்படைப்பாளி இனக்குழுத்தன்மையால் உருவாக்கப்பட்டவன், அதிலிருந்து மீறிச்செல்லும் தேடல் கொண்டவன்.
கி.ராஜநாராயணன் துவங்குவது அவரது இனக்குழு அடையாள்த்தில் இருந்தே. தெலுங்கு நாயக்கர்களின் சமூக, வரலாற்று, அன்றாட வாழ்க்கைப் பின்புலம் அவரது ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவரது கதைக்கருக்கள் பல அச்சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பதுவயதுக்குமேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்டபிறகுதான் எழுத ஆரம்பித்தார் என்ற செய்தி நம் முன் உள்ளது. அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது . மார்க்ஸிய அரசியல் கருத்துக்களும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். அவரது முதல்கதையான ‘ மாயமான் ‘ இவ்விரு இழைகளும் கலந்து உருவானது . அதன் தலைப்பையே நாம் ஒரு குறியீட்டு ஆய்வுக்காக பயன்படுத்தலாம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு குறித்தும் அதன் இலட்சியவாதங்கள் குறித்தும் உருவாகி வந்த ஆழமான அவநம்பிக்கையை இக்கதை சொல்கிறது. ‘சோஷலிச ‘ அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நடைமுறையில் மோசடிகளாக ஆவதைப்பற்றிய கதை இது. அதற்கு அவரது ‘வைணவ ‘ கரிசல் மண்ணில் வேரூன்றிய ராமாயணத்திலிருந்து படிமத்தை எடுத்துக் கொள்கிறார்.
தன் கதைகள் முழுக்க கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலை ‘கரிசல்படுத்த ‘ முயன்றார் . மார்க்ஸிய அழகியலின் முக்கியமான குறை அது கோட்பாட்டுக்கு உதாரணமாகத்தான் வாழ்கையைக் காண்கிறது என்பதே. இந்தியச்சூழலில் ‘சப்பையான ‘ மார்க்ஸியர்களில் கோட்பாட்டிலிருந்து துவங்கும் தன்மையைக் காண்கிறோம். உதாரணம் டி.செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்கள். சிறந்த எழுத்தாளர்களில் வாழ்க்கையிலிருந்து துவங்கி கோட்பாட்டை எட்ட முயலும் தன்மையைக் காணலாம். உதாரணம் தகழி சிவசங்கரப் பிள்ளை. கி.ராஜநாராயணன் இரண்டாம் வகைக்கு இந்திய முற்போக்கு இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமான முன்னுதாரணம். இப்படி வாழ்விலிருந்து தொடங்கி கோட்பாட்டுக்கு வரும்போது பொதுவாக ‘கச்சிதமாக ‘ கோட்பாட்டுக்கு வந்துவிட முடிவது இல்லை . குறி கொஞ்சம் தவறிவிடுகிறது . அப்போது தி.க.சிவசங்கரனைப்போனற ‘அட்டை பரிசோதகர்கள் ‘ இதனால் குழம்பிப்போய் இவர்களை வாசலிலேயே நிற்கச்செய்துவிடுகிறார்கள். தகழி இப்படி ‘விசாரணைக்கு ‘ உட்படுத்தப்பட்டதுண்டு, ஆனால் அங்கே ஜோசப் முண்டசேரி போல அழகியல் அறிந்த மார்க்ஸிய விமரிச்கர்கள் இருந்தனர். இங்கே தி.க.சிக்கள்.
இப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்லவேண்டியதில்லை. மார்க்ஸியக் கோட்பாடு ‘உலகு தழுவிய ‘ மானுடம் பற்றிய கனவை முன்வைப்பது. மனிதனை அவனது ஒட்டுமொத்தம் சார்ந்து பேசமுற்படுவது, அந்த ஒட்டுமொத்தத்தின் அடிப்படையாக அவனை ‘ உற்பத்தி அலகு ‘ மட்டுமாக சுருக்கும் தன்மை கொண்டது. அவனது கலாச்சாரத்தின் ஒட்டுமொத்தத்தை பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானம் மட்டுமாக பார்ப்பது. மார்க்ஸியம் மனிதவரலாறு கண்ட மாபெரும் குறுக்கல்வாதம், மகத்தான குறுக்கல்வாதமும் கூட ! மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு.கி.ராஜநாராயணனின் கோணம் முதலில் அவனை அவன் சார்ந்துள்ள இனக்குழு கலாச்சாரத்தின் ஓர் அலகாக பார்க்கிறது. அங்கிருந்து தொடங்கி உற்பத்தியை அடித்தளமாக கொண்ட பொருளியல் /சமூக/ அரசியல் அமைப்பின் அடிப்படை அலகாகப் பார்க்க முயல்கிறது.
இந்த விவாதத்தில் இனக்குழுப்பார்வை மிக வெளிப்படையாக, கொச்சையாக என்றும் சொல்லலாம், வெளிப்படும் இடத்திலிருந்து நாம் தொடங்குவது உசிதமானது . ‘ஒரு காதல் கதை ‘ கி.ராஜநாராயணன் கதைகளில் அதிகமும் பேசப்படாத ஒன்று. வேறு சாதியைச்சேர்ந்த கிறித்தவப்பெண் ராணிமேரியை காதலித்து மணந்துகொண்ட ராகவனின் கதை இது. அவர்களுடைய காதல் குறையவில்லை, ஆனால் உணவு உடை பழக்கவழக்கம் எதிலுமே அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. அவர்கள் அழுதபடியே பிரிகிறார்கள். இதற்கு மாற்றாக ராகவனின் நண்பனான கதைசொல்லி தன் சாதியைசேர்ந்த தனக்கு இளமையிலேயே அறிமுகமான லட்சுமியை மணம்ச் செய்துகொண்டு மிக நிறைவாக வாழ்கிறான். இவ்விரு எதிரீடுகளும் கதையில் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ராகவன் மேரியை பிரிந்து மீண்டும் தாய்மதம் திரும்பி தன் சாதி /மதத்துப் பெண்ணை மணந்துகொள்கிறான். இச்செய்தியைக்கேட்டதும் லட்சுமி ‘எனக்குத்தெரியும் இப்படித்தான் ஆகும் என ‘ என்கிறாள்.
இக்கதை ஒரு நிதரிசனப்பார்வையின் விளைவு என்பதில் ஐயமில்லை . நானறிந்த எத்தனையோ உதாரணங்களை இதற்கு ஆதரவாக அடுக்கலாம். ஆனால் கி.ராஜநாராயணன் இந்த நிதரிசனத்திலிருந்தே கதையை உருவாக்கி விட்டிருக்கிறார். காதல் மணம் ஏற்றதல்ல ,இனக்குழு உள்மணமே சிறப்பானது என்று இக்கதை சொல்கிறது. ஏன் ? ஒரு மனிதன் தன் இனக்குழுவின் அடிப்படை உறுப்பினன் என்பதனால். அவனது இருப்பின் முக்கிய அம்சங்களையெல்லாமே அது தீர்மானிக்கிறது என்பதனால் என்கிறது கதை. ஆனால் இது உண்மையா ? கரணிய ஆய்வு இதை ஏற்குமா ? என் பார்வையை சொல்கிறேன். திருமணம் என்பது ஒரு மரபுசார் அமைப்பு. சாதி இன்னொரு மரபு சார் அமைப்பு. ஆகவே மரபான மணமுறை அதில் இயல்பாக அதிகப்பொருத்தமாக இருக்கிறது. அந்த முறையில் மணம் முடிக்கும் இருவரை மரபின் எல்லா அம்சங்களும் சேர்த்து பிடித்துள்ளன. ஒர
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 841 followers

