வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் by Jeyamohan
25 ratings, 4.52 average rating, 1 review
வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் Quotes Showing 1-30 of 40
“நிகழ்ந்ததனைத்தும் கனவென்று கொள்க! இல்லையென்று எண்ணினால் இல்லாமல் ஆகுமளவுக்கு கனிவு கொண்டதே இங்குள்ள அனைத்தும்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“அவர் அரசியுடன் தனித்து தங்கி அங்கு என்ன செய்யப்போகிறார்? தவம் செய்வது அவர் இயல்பல்ல” என்றான் சகதேவன். “சிலர் விழைந்து தவம் இயற்றுகிறார்கள். சிலர் தவம் நோக்கி செலுத்தப்படுகிறார்கள். கணமேனும் தவம் அமையாத வாழ்க்கையே மண்ணில் இல்லை என்பார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நோயும் முதுமையும் தனிமையும் தவமாகக்கூடும்” என்றபின் “தனிமை தவமாக மாறும், கைவிடப்பட்டு அமையும் தனிமையே ஆயினும்” என்றார்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“நான் அறிந்தவரை நூல்களில் கொண்டாடப்படும் வரிகளெல்லாமே இடைச்செருகல்கள்தான்” என்றான் உஜ்வலன். “ஏன்?” என்றான் சுகோத்ரன். “நூல்கள் உருவாகி படிக்கப்பட்டு பல கோணங்களில் ஏற்றும் மறுத்தும் உசாவப்பட்டு தெளிந்தபின் அவற்றில் எஞ்சுமிடம் ஒன்று கண்டடையப்படுகிறது. அந்த இடமே அந்நூலின் மையம். அங்கே அந்நூலில் இருந்து கடைந்து திரட்டி எடுக்கப்பட்ட சொல் சேர்க்கப்படுகிறது. அந்நூலின் மெய்மை அதுவே” என்றான் உஜ்வலன்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“அவர்கள் மீண்டும் வந்தமர்ந்ததும் யுதிஷ்டிரன் நிமிர்ந்து நோக்கினார். சுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது. இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.

யுதிஷ்டிரன் விழிகள் பளபளக்க அவனை ஏறிட்டு நோக்கிக்கொண்டிருந்தார். சகதேவனின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை. சுகோத்ரன் முதுசூதரிடம் “என் பெயர் இங்கே சொல்லப்படலாகாது, சூதரே. இக்குலத்தில் இருந்தும் இக்குருதியின் சரடில் இருந்தும் நான் என்னை முற்றாக விடுவித்துக்கொள்கிறேன்” என்றான்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“குடியச்சத்தால் அவனை நான் துறந்தேன். முடிவிழைவால் அவனை மறந்தேன். அவனுக்கு நான் முலையூட்டவில்லை. ஓர் இன்சொல்கூட கூறவுமில்லை. இன்று இந்த ஈமநிலையில் இந்தக் குடியவைமுன் சொல்லும் இச்சொற்களே என் மைந்தனுக்கு, என் மைந்தர்களில் தலைமகனுக்கு, நான் செய்யும் ஒரே கடன். அவன் இவ்வன்னையை பொறுத்தருளட்டும். தன் இளையோரை வாழ்த்தட்டும். விண்ணில் தன் மூதாதையருடன் அவன் நிறைவுற்று அமரட்டும்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“குந்தி எதிர்பாராதபடி தெளிவான குரலில் “யுதிஷ்டிரா, என் வயிற்றில் பிறந்த உன் தமையன் கர்ணனுக்கும் உரிய நீர்க்கடன்களைச் செய்க!” என்றாள். யுதிஷ்டிரன் கைகளைக் கூப்பியபடி, ஒடுங்கும் தோள்களுடன், நடுங்கும் உதடுகளுடன் கேட்டு அமர்ந்திருந்தார். “அனைவரும் அறிக… இதை இவ்வுலகே அறிக! நான் ஈன்ற மைந்தன் கர்ணன். கதிரவனை நோற்று என் வயிற்றில் அவனை ஏந்தி பெற்றெடுத்தேன்.”

அவள் குரல் நடுக்குடன் மேலும் ஓங்கியது. “அஸ்தினபுரியின் முதல் மைந்தன் அவனே. மணிமுடிக்குரியவனும் அவனே. அவன் அதை அறிந்திருந்தான். அவனிடம் நான் சென்று இரந்து பெற்ற இறுதிக்கொடையே பாண்டவர்களின் போர்வெற்றி. அவர்களின் உயிர் அனைத்தும் தமையன் தம்பியருக்கு அளித்த பரிசு மட்டுமே.” பீமன் எழுந்துவிட்டான். முதுசூதர் கைநீட்ட அவன் அவரை கையை அசைத்து விலக்கினான். அர்ஜுனன் தலைகுனிந்து நிலம்நோக்கி அமர்ந்திருந்தான். சகதேவனும் நகுலனும் கைகளை பற்றிக்கொண்டார்கள்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“துறவு என்பது துறப்பனவற்றைவிட மேலான சிலவற்றைப் பற்றிக்கொண்டால் மட்டுமே பொருளுள்ளதாகிறது. துறந்தவை அனைத்தையும் மிகச் சிறியவை என ஆக்கும் ஒன்றைச் சென்றடையவில்லை என்றால் துறந்தவை பேருருக்கொள்ளும். சூழ்ந்துகொண்டு துயர் அளிக்கும். பல்லாயிரம் கைகள் கொண்டு பெருகி நம்மை அள்ளி திரும்ப இழுத்துக்கொள்ளும்”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“எச்சமிலாது அளிக்கையில் எஞ்சும் ஒன்று உண்டு. அதுவே நிறைவென்பது.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“எந்தக் கலையும் தன்னை முற்றளிக்கும்படி கோருகிறது. முற்றளிக்காதவனை அது ஏளனம் செய்கிறது. ஒரு கலையின் பொருட்டு பிற அனைத்தையும் இழப்பவனே அக்கலையை அடைகிறான். அக்கலையில் அவன் தேர்வான் என்றால் பிற அனைத்தையும் அக்கலையே அவனுக்கு அளிக்கும்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“ஷத்ரியரே, ஒன்று அறிக! மானுடன் தன் ஊழிலிருந்தும் உறவிலிருந்தும்கூட விடுபடலாம். தான் கற்றறிந்தவற்றிலிருந்து விடுபடுவது மிகமிகக் கடினம்…”

“ஏனென்றால் தானறிந்த கல்வி தான் அறிந்தது என்பதனாலேயே தன்னுடையதாகிவிடுகிறது. தன்னுடையது எதையும் நம்பிச் சூடிக்கொள்வதும் அதன்பொருட்டு நிலைகொள்வதும் மானுட இயல்பு. தான் அடைபட்ட கூண்டை தன் உடைமை என விலங்குகள் நினைக்கும் என்பார்கள்… மீறுக, வெளிவருக! அறிவென்பது கூண்டு. மெய்யறிவு என்பது அதிலிருந்து வெளியேறுவது” என்றான் உஜ்வலன். “வெளியேற ஒரே வழிதான். தன்னை கிழித்துக்கொண்டு அனைத்தையும் உடைத்துக்கொண்டு வெளியே பாய்தல். கணநேரத்தில் வெடித்தெழுதல். அறிவின் கூண்டில் இருந்து அறிவைக்கொண்டு வெளியேறலாம் என எண்ணும் அறிவின்மைதான் அறிவு அளிக்கும் மாயைகளில் முதன்மையானது. அறிந்து அறிந்து எவரும் அறிவை கடக்க முடியாது. அறிவைக் கடத்தல் என்பது ஓர் அறிதல்நிலை அல்ல. அது ஒரு மீறல். ஓர் ஆதல். வேறேதும் அல்ல.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“நம் ஊழ் எதிர்காலத்திலிருந்து ஊறிப்பெருகி வந்து நம்மை அறையும் ஒரு பேரலை. நான் அத்திசை நோக்கி செவிகூர்கிறேன்”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“எப்போதும் உங்கள் உள்ளம் என்ன என்று எனக்கு புரிந்ததே இல்லை. நான் ஒரு மலையோடை போலவும் நீங்கள் பாறை போலவும் எனக்குப் படும். உங்களைச் சூழ்ந்து கொந்தளித்து அலைகொண்டபடியே இருக்கிறேன்… ஆனால் உங்கள் சொற்களில் சிலவற்றை உண்மையில் என் சொற்களிலிருந்தே கண்டடைகிறீர்கள். காற்றில் விழும் ஆலம்பழ மழையில் ஒன்றிரண்டை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். நான் மிகையாகப் பேசுவது அதற்காகவே”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“நீத்தார் அனைவரிடமும் நீங்கள் பேசக்கூடுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அவர்கள் இங்கே நீர்க்கடன் முடிக்கப்பட்டு நிறைவுகொண்டு ஃபுவர்லோகத்திற்குச் சென்றுவிட்டிருக்கக் கூடாது.” அவள் தாழ்ந்த குரலில் “சூதர் மைந்தர்களுமா?” என்றாள். “ஏன், அவர்களும் உயிர்கள் அல்லவா? அனைத்துயிரும் இச்சுழற்சியிலேயே உள்ளன. ஆனால் பிற உயிர்கள் உடலால் மட்டுமே வாழ்பவை, உள்ளம் உடலின் ஒரு பகுதியென்றே இயங்குபவை. உடலழிந்ததுமே உளம் அழியும் ஊழ்கொண்டவை. மானுடர் உள்ளம்செலுத்தி சித்தம்திரட்டி வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உடலுக்கு அப்பால் எழும் உள்ளம் உள்ளது. உடல் அழிந்த பின்னரும் அது காற்றில் வாழ்கிறது.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“இளைய யாதவர் சற்றே சலிப்படைந்து “இவ்வெண்ணத்தை விட்டுவிடு, சுபத்திரை. இது நன்றல்ல. ஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார்.

“நீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“ஒரு வாழ்வில் ஒருவர் அடையும் துன்பங்கள் அனைத்தும் முந்தைய பிறப்பின் தொடர்ச்சிகள் என்றும் அடுத்த பிறப்பின் தொடக்கங்கள் என்றும் உணர்வது ஒரு மெய்யறிதல்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“சுபத்திரை அவர் முகத்தை பார்த்து “உங்களுக்கு மலர்ச்சூழ்கையிலிருந்து வெளியேறும் வழி தெரியுமா?” என்றாள். அவர் புன்னகைத்து “நான் வெளியேறும் முறைகள் எதையும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எப்போதும் வெளியேதான் நின்றிருக்கிறேன். எதற்குள்ளும் நுழைவதில்லை” என்றார்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“மண்ணில் வினை முடித்து எவருமே விண்புகுவதில்லை. ஊழ்கத்தில் நிறைவுகண்ட முனிவர்களைத் தவிர. எஞ்சும் கடன்களே மானுடரின் பிறவிச்சரடின் அடுத்த கண்ணியை முடிவுசெய்கின்றன.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“நீர்க்கடன்கள் நிகழட்டும், மைந்தா. நம் சிறுவர் விண்ணேகட்டும். இங்கு அவர்கள் ஒருதுளியும் எஞ்சாதொழியட்டும். எழுமுலகில் அவர்கள் நிறைவுகொள்ளட்டும். நம்மிலிருந்து அவர்கள் முற்றிலும் மறையட்டும். வான்பறவைத் தடம்போல் ஆகுக அவர்கள் சென்ற பாதை!”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“இத்துயர் என்றல்ல, எத்துயரும் பொருளற்றதே. உயிரின் இயல்புநிலை மகிழ்ச்சி. துயர் என்பது திரிபு”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“அமைச்சரே, என் தந்தையின் இடத்தில் இருப்பவர் நீங்கள். கூறுக, மெய்யாகவே மறுபிறப்பு என ஏதேனும் உண்டா?” என்று சகதேவன் கேட்டான். “பிறவிச் சுழலில் இருக்கின்றன உயிர்க்குலங்கள் என நினைவறிந்த நாள் முதலே கற்பிக்கப்பட்டவன் நான். ஆனால் மெய்யாகவே உள்ளதா? அந்தச் சிறு ஐயம் என்னுள் இல்லாமலிருந்ததே இல்லை.” விதுரர் “அந்த ஐயம் இல்லாதவர்களே இல்லை, மைந்தா” என்றார். அவன் தலையைத் தொட்டு குழலில் கைசெலுத்தி நீவியபடி “ஏனென்றால் இங்கு, இப்போது, இவ்வண்ணம் என்றே மானுட அகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று பிடிகளால் நாம் இங்கே நிறுத்தப்பட்டுள்ளோம். இங்கு உயிருடன் உணர்வுடன் இருக்கும் வரை முந்தைய பிறவியை நினைவுகூரவோ வரும் பிறவியை முன்னுணரவோ இயலாது. ஆகவே எந்நிலையிலும் பிறவிச் சுழல் என்பது சொல் என, எண்ணம் என மட்டுமே மானுடருக்குள் நின்றிருக்கும்” என்றார்.

“ஆனால் அறிதலென அது ஆகும் தருணம் ஒன்றுண்டு” என்று விதுரர் தொடர்ந்தார். “அது ஓர் அறிதல். விண்ணிலிருந்து மின் என நம் மீது இறங்குதல். நெற்றியில் மூன்றாம் விழியொன்று எழுதல். நாமறிந்த அனைத்தும் மாறிவிட்டிருக்கும். அறிவு அறிவின்மையென்றும் மாயை மெய்மையென்றும் மாறிவிடக்கூடும். அதன்பின் நாம் அறிகிறோம், அது சொல் அல்ல, எண்ணமும் அல்ல. அது மெய்மை. மாற்றோ மறுப்போ இல்லாதது எதுவோ அதுவே மெய்மையென்றறிக! அது மெய்மை.” சகதேவன் அவர் கைகளை தன் நடுங்கும் கைகளால் பற்றியபடி “நீங்கள் அறிவீர்களா?” என்றான். “ஆம், நான் அறிந்தேன்” என்றார் விதுரர்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“அனலில் தோன்றி “நீ கோருவதென்ன, பாஞ்சாலனே?” என்றான். “உன் கையிலமைந்த அந்தத் திருவோடு எனக்கு அம்பென வரவேண்டும்” என்று அஸ்வத்தாமன் இறைஞ்சினான். “இது முற்றழிப்பது. வெறுமையின் வடிவான ஐந்தாவது முகம் இது. நாற்திசை மையம். இதை மானுடர் ஏந்தலாகாது” என்றான் மூவிழியன். “இதை ஏந்தும் பொருட்டு நான் விண்ணவனாகிறேன். எந்நிலையிலும் என் புகழுக்காகவோ வெற்றிக்காகவோ இதை எதிராக செலுத்தமாட்டேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எனில் இது உனக்கு எதற்கு?” என்றான் சிவன். “இதை நான் பெற்றேன் எனும் தருக்குக்காக. இங்குள அனைத்தையும் என்னால் அழிக்க இயலுமென்றாலும் என் அளியால் இவற்றை அழிக்கமாட்டேன் எனும் நிறைவுக்காக.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“இல்லை, அரசரிடம் சொல்க! நான் போருக்கு எழும்நிலையில் இல்லை. இனி எப்போதும் காண்டீபத்தை கையில் எடுக்கப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“அது மூத்தவரின் ஆணை” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆம், அதை அறிந்தே இதை சொல்கிறேன். இனி எவருடைய ஆணையையும் நான் தலைக்கொள்ளப் போவதில்லை” என்றான் அர்ஜுனன். “அரசி சொல் அளிக்கவில்லை என்றால் மைந்தருக்கு தந்தையர் என நீங்கள் ஐவரும் நீரளிக்க முடியாது” என்றான் யுயுத்ஸு. “எனில் அவர்கள் விண்ணுலகு அடையவேண்டியதில்லை. அவர்கள் இங்கேயே அலையட்டும். அது அவர்களின் அன்னையின் ஆணை என்றால் அவ்வண்னமே ஆகுக!” என்றான் அர்ஜுனன். கசப்புடன் “தன் வஞ்சத்தின்பொருட்டு உயிர்நீத்தவர்களையும் அவள் கருவியாக்குவாள் என்றால் அதை தெய்வங்களே கையாளட்டும். அவளை இனி மானுடர் நடத்த இயலாது” என்றான்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“அவர்கள் ஆடிப்பாவைகள். எப்போதேனும் ஆடியில் தன்னை நோக்கிக்கொண்டால் நகுலன் விரல் நீட்டி ஆடிப்பாவையின் விரலை தொடுவான். விழிகளுக்குள் நோக்கி புன்னகைப்பான். இளமையில் ஒருமுறை சகதேவன் உடல்நலமின்றி ஆதுரசாலைக்குச் சென்றபோது விடாது அழுதுகொண்டிருந்த நகுலன் அருகே பெரிய ஆடி ஒன்றை வைத்து அவ்வழுகையை நிறுத்தி உணவூட்டி தூங்க வைத்ததை செவிலி சொல்வதுண்டு. அவன் வளர்ந்த பின்னர் ஆடி நோக்குவதில்லை. அது ஒரு துணுக்குறலை அளித்தது. ஆடியில் தோற்றம் பெருகும் உணர்வாலேயே அதை மானுடர் விழைகிறார்கள். அவன் தான் மட்டும் ஆடியில் நோக்கினால் இருப்புக் குறைவை உணர்ந்தான். இருவராக ஆடி நோக்கினால் ஆடியில் ஒருவரை இன்னொருவர் நோக்குவர். ஒருவர் விழிகளை இன்னொருவர் நோக்கி புன்னகைப்பர்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“பெருமலைப்பாறைகளை பார்க்கையில் எல்லாம் உள்நுழைய வழியில்லாத மாளிகைகள் என்று அவன் இளமையில் எண்ணிக்கொண்டதுண்டு. மெய்யாகவே அவை உள்ளீடற்றவைதானா என்ற ஐயம் வளர்ந்த பின்னரும் வந்ததுண்டு. பலமுறை கனவுகளில் பாறைகளை முட்டியும் உந்தியும் சுற்றிச் சுற்றி வருவதாக கண்டிருக்கிறான்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“சாவை உள்ளம் ஏற்றுக்கொள்வதற்காகவே சடலத்தின் மேல் விழுந்து அழுகிறார்கள் மானுடர்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“இந்தக் குடில்களில் திரௌபதிமேல் வஞ்சமில்லாத எவரேனும் இன்று இருக்கக்கூடுமா? அவளே இவ்வழிவனைத்திற்கும் முதன்மையாக வழிவகுத்தவள் என்று அனைவரும் நம்புகிறார்கள். அவளை பழிக்கிறார்கள். அவள் தன் மைந்தரை இழந்து கொடுந்துயரில் உழல்வதைக் கண்டு உள்ளூர நிறைவு கொள்கிறார்கள். மேலும் ஒன்று அவளுக்கு நிகழவேண்டும் என விழைகிறார்கள்.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“தெய்வங்கள் உச்சநிலைகளை விரும்புபவை. மானுடரை மோதவிட்டு கண்ணீரையும் குருதியையும் கண்டு மகிழ்பவை.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“உள்ளம் துயர்கொண்டிருக்கையில் மென்குளிர்காற்றுபோல் அணுக்கமானது வேறில்லை. அது ஒரு தழுவல். திசைகளின் அணைப்பு. வானின் குழல்வருடல். இளங்குளிர்காற்று மானுடன்மேல் தெய்வங்கள் இன்னமும் அன்புடன் இருக்கின்றன என்பதற்கான சான்று. அவை மானுடப்பிழைகளை எப்போதும் பொறுத்துக்கொள்கின்றன என்பதற்கான சுட்டு. மேலிருந்து இமைக்கும் விண்மீன்கள் ‘ஒன்றுமில்லை ஒன்றுமில்லை’ என்கின்றன. மிகமிக அப்பால். மிகமிக விரிந்து. ககனக் கடுவெளி. முடிவிலி. இருள்பெருக்கு. அது மானுடனை சிறிதாக்கிவிடுகிறது. ஒவ்வொன்றையும் சிறியதாக்குகிறது. துயர்களை இழப்புகளை வெறுமையை சிறிதாக்குகிறது.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
“ஒவ்வொரு சொல்லாலும், எண்ணத்தாலும் என்னை நானே குத்திக் கிழித்துக்கொள்கிறேன். குருதி வார ஒவ்வொரு தருணத்தையும் கடந்து செல்கிறேன். ஒவ்வொரு நாளிலும் நூறுமுறை மாய்ந்து எழுபவனுக்கு மெய்யான சாவு சிறிதாகிவிடுகிறது.”
Jeyamohan, வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்

« previous 1