ஜெயமோகன் குறுநாவல்கள் Quotes

Rate this book
Clear rating
ஜெயமோகன் குறுநாவல்கள் ஜெயமோகன் குறுநாவல்கள் by Jeyamohan
114 ratings, 4.21 average rating, 5 reviews
ஜெயமோகன் குறுநாவல்கள் Quotes Showing 1-2 of 2
“பார்த்தன் என்ன சொன்னான்?’
நான் திடுக்கிட்டேன். எப்படி அறிந்தார்? அவர் முகம் பதுமை போல் இருந்தது. பிறகு அமைதி ஏற்பட்டது. ‘நேரமாகிறது என்கிறார்’ என்றேன்.
‘பாவம்’ என்றார்.
‘ஏன்? அவர்தான் போரில் வென்று சவ்யசாஜி ஆகிவிட்டாரே. இனி அஸ்வமேதம், திக்விஜயம். வரலாற்றில் உங்களுக்கும் அவருக்கும் சிம்மாசனமல்லவா போட்டு வைக்கப்பட்டுள்ளது!’
‘உன் துயரம் கசப்பாக மாறிவிட்டிருக்கிறது சுபத்திரை. உலகமே உனக்கு எதிரியாகப் படுகின்றது. நீ என்னதான் எண்ணுகிறாய்? இன்று இங்கு ஒவ்வொருவரும் என்ன எண்ணுகிறார்கள் என்று நீ அறிவாயா? இந்தக் கணம் காலதேவன் வந்து போர்தொடங்குவதற்கு முன்பிருந்த தருணத்தைத் திரும்ப அளிப்பதாகச் சொன்னான் என்றால் அத்தனைபேரும் தங்கள் எதிரிகளை ஆரத்தழுவி கண்ணீர் உகுப்பார்கள். இந்தப் போர் ஒரு மாயச் சுழி. ஒவ்வொருகணமும் இதன் மாயசக்தி எல்லாரையும் கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தது. விதி அத்தனைபேர் மனங்களிலும் ஆவேசங்களையும் ஆங்காரங்களையும் நிரப்பியுள்ளது. இன்று.. வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை. எனக்கும் தெரியவில்லை…”
Jeyamohan, ஜெயமோகன் குறுநாவல்கள்
“இல்லை. கதகளியில் அனுமான் பல சமயம் கரிவேஷம்தான். கோமாளியாகவும் பக்தனாகவும் அனுமான் வருவது வழக்கம். ஆனால் நான் உக்கிரரூபியான அனுமானைத்தான் வணங்குகிறேன். அனுமானை எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி ஆக்கிவிட்டார்கள். ராமனுடைய காரியஸ்தன் ஆக்கிவிட்டார்கள். வால்மீகியும், எழுத்தச்சனும், கம்பனும், ஆட்டக் கதையாசிரியர்களும், அரங்க கர்த்தாக்களும் எல்லாருமாகச் சேர்ந்துதான் அப்படிப் பண்ணிவிட்டார்கள். அனுமான் யார்? குரங்கு! காட்டில் மரங்களில், தாவித்தாவிக் காற்றும் வானமுமாக இருக்கிற மகா சக்திமான்! அவனுக்குத் தாசவேலை தெரியாது. சுதந்திரத்தை நீ கோமாளித்தனம் என்கிறாய். அனுமான் சாந்தமூர்த்தி தான். ஆனால் அவனுக்குள் உக்கிரமூர்த்தியும் உண்டு. திரிபுரம் எரித்த சிவனையே எரித்துச் சாம்பாலாக்கக்கூடிய சம்ஹார அக்னி அவன் வாலில் உண்டு. அதை அவன் ஒருமுறைதான் காட்டினான். இலங்கையை எரித்துச் சுடுகாடாக்கினான். அப்போது மட்டும் அவன் உக்கிரரூபி ஆனான். பைசாசிக மூர்த்தி ஆனான். அந்த அனுமான்தான் என் இஷ்ட தெய்வம். அவனுக்குக் கரிவேஷமும், இறகுக் கிரீடமும் வாலும் இல்லை. வானம் முட்டும் செந்தழல் கிரீடமும், பூமாதேவி போல் ஒளிரும் பட்டுடையும், மின்னல் போல ஜ்வலிக்கும் கவசமும் உண்டு. சூரிய சந்திரர்கள்போலக் குண்டலங்களும் நட்சத்திர வைரங்களும் உண்டு. அவன் வால் நுனியில் தகதகவென்று தாமரை போல இதழ் விரித்து எரிகிறது பிரளயாக்கினி. அனுமான் அக்கினி நிறமானவன். கை வீசி, தாவித்தாவி எழுகிறதே அக்கினிச் சுவாலை, அதுதான் அனுமான் திருவுருவம். ஆஹா!’

அவர் கரங்கள் நெளிந்து சுடர்போல முத்திரை காட்டின. அவர் உடம்பு தீக்கொழுந்துபோல மெல்ல அசைந்தது. ஒரு கணம் அவ்வறையே நெருப்பாக எரிந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது.”
Jeyamohan, ஜெயமோகன் குறுநாவல்கள்