உப பாண்டவம் [Uba pandavam] Quotes

Rate this book
Clear rating
உப பாண்டவம் [Uba pandavam] உப பாண்டவம் [Uba pandavam] by S. Ramakrishnan
259 ratings, 4.09 average rating, 21 reviews
உப பாண்டவம் [Uba pandavam] Quotes Showing 1-8 of 8
“நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

"நாம் எங்கே செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“காட்டு நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப் போலவே தன் பூப்பின் காலத்தில் அடி எடுத்து வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவதை அறிந்திருந்தாள்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“தொலைவிலிருந்த காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் அது சுழன்று சுழன்று சப்தித்து வீசியது. நெருப்பின் ஒரு கிளை தனியே பிரிந்து பீஷ்மரின் முன் வந்து நின்றது. அவர் அலைவுறும் நெருப்பினைக் கண்டார். நெருப்பு அவரிடம் கேட்டது,

‘காற்றால் நான் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு நடுக்கமேறிக் கொண்டே இருக்கிறேன். சலனமற்ற இடத்தைக் காட்டக்கூடாதா?’

பீஷ்மர் சொன்னார்.

‘ஒரு ஸ்திரீயின் மனக் குகையில் ஆசையென பிரவேசித்து விடு. பின் உனக்கு சலனமில்லை. அழிவுமில்லை. சுடர்ந்து கொண்டேயிருப்பாய்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“யாருமில்லை என்ற வெற்று வெளியில் தனித்த பீஷ்மரின் முன்பாக காற்று சுற்றி அலைந்தபடி அவர் உடலின் மீதேறிச் சிகையைக் கலைத்தது. அவர் காற்றின் மிருதுவை அறிந்தவராக அதன் நெருக்கத்தோடு எதையோ பேச முற்பட்டவரைப் போல கேட்டார்.

‘நீ எதைக் கேட்க விரும்புகிறாய் காற்றே?’

காற்று அந்த மனிதனை வலம் சுற்றியபடியே கேட்டது.

‘இத்தனை அலைக்கழிப்பும் வேகமும் கொண்ட என் இயல்பு எப்போதுதான் சாந்தி கொள்ளும்…’

காற்றின் கேள்வியை அறிந்த அவர் மனம் விழித்துக்கொண்டபடியே பதில் தந்தது.

‘காற்று என்பது கரைகளற்ற நதி, நீ ஓடிக்கொண்டேயிருக்கிறாய். உனது கண்கள்தான் உலகியலின் ரகசிய ஈர்ப்பு. உன் இயக்கத்தின் சூட்சும தாதுக்கள்தான் இயக்கத்தின் உயிர்ச்சத்தாகின்றன. நீ ஒரு சாட்சியாகின்றாய். கடந்து போனவைகளின் நடப்பின் எதிர் நாட்களின் சாட்சியாகிறாய். முடிவற்ற சுழல் நதியான உனக்கு இயக்கமே சாந்தி. அலைக்கழிப்பே அமைதி. காற்றே.. நீ அலைய விதிக்கப்பட்டவன். துயரவான்.’

அவர் குரலின் மிருதுவையும் தன்னில் ஏந்தியபடி காற்று தனது துக்கத்தினை அவிழவிட்டபடி கடந்து போய்க் கொண்டே இருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“நான் நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். இதனுள் பெரிய சைன்யமே புதைவு கொண்டுள்ளது என்பதை காணவேண்டி காத்திருந்தேன்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“முதுமை சதா விழித்துக் கொண்டே தானிருக்கிறது. உதிராமல் மிஞ்சியிருக்கும் இலைகளைப் போல இன்னமும் சில ஆசைகள் மனதில் அசைந்து சப்தமிட்டபடியே இருக்கின்றன. விழித்திருப்பவர்களுக்கு இரவு நீண்டது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]