மருபூமி [Maruboomi] Quotes
மருபூமி [Maruboomi]
by
Ajithan27 ratings, 4.52 average rating, 3 reviews
மருபூமி [Maruboomi] Quotes
Showing 1-7 of 7
“நீ மட்டுமே இருக்கிறாய், எங்கும் இல்லாமல், ஏக்கத்தையும் தனிமையையும் நிறையச்செய்து புன்னகைக்கிறாய். விழியிழந்த குழந்தைகள் போல நாங்கள் அழுது கூக்குரலிடுகிறோம், சிலர் ஓசையின்றி தேம்புகிறோம். நிதம் வந்து அமுதூட்டுகிறாய், லயித்த கணம் மீண்டும் மறைகிறாய். கணம், யுகக்கணம். இந்தக் கணம் நான் நிறைவு பெறுகிறேன். போதும், என்னை அழைத்துச்செல். என் உடலை இந்த மண் உண்ணட்டும். மரத்தின் வேர்கள் உண்ணட்டும். என் உடலின் எச்சமாக இந்த மரத்தின் இலைகள் பாலை காற்றுடன் சிலிர்த்து பேசும். நான் நிறைவுறுகிறேன். இந்த இரவு, இந்த கணத்திற்காகவே இவ்வளவும்.”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“எத்தனை கோடி நட்சத்திரங்கள்? பால்வெளிகள், அவற்றிலெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் நிறைந்திருக்கும் கோடானு கோடி கிரகங்கள், அவற்றின் இரவுகளை ஒளிமயமாக்கும், சமுத்திரங்களை பொங்கி எழச் செய்யும் முடிவில்லா நிலவுகள். எல்லாம் அவன் மூச்சின் அருகாமையில் அதிர்ந்தன. சிறு குழந்தைகளை போல அவற்றின் மழலை மொழி காற்றில் எழுந்தது. உரு திரண்டு ஒரு மந்திரமாக ஆனதை போல. தீராத பசியுடன், வற்றாத தாகத்துடன் அவை உடல் நடுங்கின. அணைக்க முடியாத நெருப்பாக அவற்றினுள் கனன்றது யுகாயுகங்களின் பெரும் மோகம். எனக்கு முன் சென்ற அனந்த கோடி இரவுகள், இனிவரப்போகும் கணக்கில்லா இரவுகள், எல்லாம் ஒன்று கலந்து மாபெரும் இன்றாக. எல்லையில்லா இந்த இரவு, கண்முன்னே நான் காலத்தை கண்டேன். அகாலத்தில் சிறு துளியென விழுந்து தெறித்தது பிரபஞ்ச காலம். கணம் ஒவ்வொன்றும் முடிவில்லாது விரிந்தது. முன்னும் பின்னும் இல்லாத நிகழ் கணம். அணுவிலும் சிறிது, முடிவற்றது. காற்றில் எங்கும் ஏக்கமாக அது நிறைந்தது. தீராத காதல். காதலின் பித்து.”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“நான் நடப்பதை நிறுத்தினேன். ஒரே இடத்தில் அல்லவா சுற்றி வருகிறேன். அண்ணாந்து பார்த்தேன். வானமில்லை, இருள் மட்டுமே. தெய்வமே! வானமும் துணையற்ற தனிமை ஒன்றுண்டா?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“கள்ளிச்செடிகள் இடை உயரத்திற்கு வளர்ந்து நின்றன. ஒவ்வொன்றும் கொண்டையில் நீல நிற பூக்களை சூடியிருந்தன. முட்களால் காற்றைக்கீறி அவை இசைத்தன. ஏதோ தேவர்களின் சங்கீதம். கைம்பெண்ணின் ரகசிய முணுமுணுப்பு. என் உடல் சிலிர்த்தது. எங்கும் நீலம், நீலத்தின் எண்ணில்லா வண்ண பேதங்களில் அவை பூத்திருந்தன. மை நீலத்தில் துவங்கி வான் நீலம் வரை. அவற்றிலிருந்து மிக மெல்லிய வாசம். பாலை என் புலன்களை அதிகூர்மையாக்கியிருந்தது. ஏகாந்தத்தில் சுகந்தம் பரப்பி காத்துநின்றன அம்மலர்கள். யாருக்காக?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“இன்னும் எவ்வளவு தூரம்? நான் எண்ணுவதை விட்டுவிட்டேன். மாறாத அந்த தாளம் மட்டுமே நெஞ்சில் அதிர்ந்தது. ஏற்றமும் இறக்கமும், இரவும் பகலும். தூரம் அல்ல அது, காலம். மனிதர்களாக நாம் கடப்பதெல்லாம் அது ஒன்றே. ஓடியும் நீந்தியும் சந்ததிகளை பெற்று பெருகியும் அசையாமல் தியானத்தில் அமர்ந்தும். என் முன்னே காலமே வெளியாகி விரிந்திருந்தது. எங்கு திரும்பினாலும் திசை ஒன்றே, பின்னால் ஒருபோதும் திரும்பமுடியாத கடந்த காலம். இறந்த காலம், பூத காலம். நிரந்தரமாக அது முன்னால் செலுத்தியது. என் முன்னால் தொலைவில் தெரிந்தது அன்றைய பிற்பகல், மேலும் நெடுந்தொலைவில், சூரியனின் காலடியில் கிடந்தது அந்தி. இனி வரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களுமெல்லாம் அதன் பின்னே. எங்கோ என் மரணம். எண்திசையிலிருந்தும் அருகி வரும் ஒரு வட்டம். ஒருவேளை அசையாமல் நான் இங்கு நின்றுவிட்டால் காலமும் உறைந்து நின்றுவிடுமா?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“நான் இந்த நாட்டினுடையவன் அல்ல, இந்த உலகத்தினுடையவனும் அல்ல, ஏன் இந்த பிரபஞ்சத்தினுடையவனும் கூட அல்ல, நான் என்னுடையவன், எனக்கு மட்டுமே உரியவன், என்னுள் விரியும் ஆயிரம் பிரபஞ்சங்களையும் மெல்ல ஊதி அணைத்துவிட்டு நான் உறங்க செல்கிறேன்.”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]
“எங்கிருந்து வருகிறாய் நல்லவனே? எங்கே செல்கிறாய்?” முதல்முறையாக அக்கேள்வி எனக்கு முற்றிலும் பொருளற்றதாக ஒலித்தது. எங்கு செல்கிறேனோ அங்கு, எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து, அதற்கு மேல் என்ன கூறிவிட முடியும்?”
― மருபூமி [Maruboomi]
― மருபூமி [Maruboomi]