ஜெ. பிரான்சிஸ் கிருபா > Quotes > Quote > Premanand liked it

ஜெ. பிரான்சிஸ் கிருபா
“உடைமரங்களுடே நெளிந்து சென்ற ஒற்றையடிப் பாதை முடிந்து வெளி விஸ்தீரணமடைந்த போது திடீரென்று கடல் எதிரே விரிந்து கிடந்தது. மிக அமைதியாக, சிறு முணுமுணுப்பும் செய்யாமல். சில நிமிடங்கள் அந்த இடத்திலேயே பிரமித்து வியப்பில் சிலையாகி நின்றுவிட்டான். ஒடுக்கமான கரை இரு பக்கமும் நீண்டு சென்று வளைந்தது. வகுப்பறையில் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் வாத்தியார் வந்ததும் அடங்கிப் போகுமே அப்படி கடல் அடங்கிப் போய் செயற்கை அமைதியைச் சேர்த்துக்கொண்டது போலிருந்தது. நீலமும் பச்சையும் கலந்த அதன் நிறம் மிக அழகாகக் கண்களைக் கவர்ந்தது. அதே நேரம் பெரும் அச்சத்தையும் அவசர சந்தேகங்களையும் உண்டாக்கியது. கரையில் ஆள் நடமாட்டமே இல்லை. கடலில் ஒரு அலை கூடத் தென்படவில்லை.

தேரித்துறை கடல் அலைகளால் ஆனது. சதா இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கும். திரள் திரளாய் நுரை புரளும் அதைப் பார்க்க பயம் தோன்றுவதில்லை. ஆனால் கல்லுளிமங்கனாகக் கிடக்கும் இந்தக் கடல் அவன் முகத்தை வியர்க்கக்கூட வைத்தது. சீக்கிரமே அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட்டான். சில எட்டுகள் நடந்த பிறகு நின்று தலையைத் திருப்பிக் கடலைப் பார்த்தான். அது முன்பு போலவே 'உம்' மென்றிருந்தது. தூரதொலைவில் கூட அலைகளுக்கான அறிகுறிகளைக் காணோம். பள்ளியில் பரிட்சைக்கு லீவு விட்டதுபோல கடலில் அலைகளுக்கும் லீவு விட்டிருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டான். அப்பாவிடம் விசாரித்தபோது 'அது பெண் கடல்' என்றார்.”
ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni

No comments have been added yet.