Kudavayil Balasubramanian > Quotes > Quote > Karthick liked it

Kudavayil Balasubramanian
“பங்காரு காமாட்சியம்மன் கோயில்:

மேலராஜவீதியின் மேல்சிறகில் உள்ள இக்கோயில் காமாட்சி அம்மனுக்காகக் பிரதாபசிம்மர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப் பெற்றதாகும். பங்காரு என்னும் தெலுங்குச் சொல் பொன் அல்லது தங்கம் எனப் பொருள்படும். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த உற்சவத் திருமேனியான காமாட்சி விக்ரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கச் சில அந்தணர்கள் மறைத்துக் கொண்டுவந்ததாகவும், வரும் வழியில் பல இன்னல்களை அனுபவித்தும், உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் அடைக்கலம் பெற்றும், கடைசியாகத் தஞ்சைக்குக் கொண்டு வந்து மராட்டிய மன்னர்களின் அரவணைப்போடு காப்பாற்றியதாகவும் கூறுவர். பல்லாண்டுகள் தஞ்சையிலேயே இத்திருமேனி இருந்துவிட்டதால் காஞ்சி காமகோடி மடத்துச் சங்கராச்சாரியாரின் அருளாணைப்படி மராட்டிய அரச குடும்பத்தால் இங்கேயே கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யப்பெற்றதாகவும் மரபுச் செய்தியாகக் கூறிவருகின்றனர்.

முதலில் பிரதாபசிம்மராலும், பின்னர் துளஜா மன்னராலும், 1874இல் காமாட்சிபாயி சாகிப்பும் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் நல்கியுள்ளனர். இவற்றை இக்கோயிலுள்ள மராட்டி மொழிக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. 1842இல் பச்சையப்ப முதலியார் மாலைக்காலப் பூஜைக்காக அளித்த அறக்கொடை பற்றிய ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. 1895இல் புகைப்படக்காரர் ஒருவரின் மனைவியான மீனாட்சி அம்மாள் என்பவரால் மகாமண்டப வடக்கு வாயில் கட்டப்பெற்றது. அதன் நிலைக்காலில் அவ்வம்மையாரின் உருவச்சிலையும், கல்வெட்டும் இருப்பதோடு, புகைப்படக்கருவியின் கல்வெட்டு (காமரா) வரைபடம் ஒன்றும் உள்ளது.

இக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தால் நிருவகிக்கப் பெறுகின்றது.”
Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்

No comments have been added yet.