Kindle Notes & Highlights
by
Jeyamohan
Read between
January 17 - January 20, 2025
அறிவாளிகள் தான் உலகத்தை உருவாக்குகிறார்கள். பழைய காலப் பூசாரிகளைப் போல இன்று அறிவாளிகள். அவர்களால் பொதுமக்களுடன் கலக்க முடியாது. அவர்கள் கலக்க விரும்புகிறார்களா என்பது வேறு விஷயம்.
பேசுபவர்களுக்குப் பேச்சு தரும் போதை அபாரமானது. அந்தப் பசி கொண்ட மிருகம் ஓரத்திலிருந்து உலகைத் தின்ன ஆரம்பிக்கிறது. சில நொடிகளில் பாதி உலகை விழுங்கி விடுகிறது, பிறகுதான் மீதிப்பகுதியை உணர்ந்து மலைத்து நிற்கிறது.
துல்லியமான சொற்கள். அசைக்க முடியாத தர்க்கம். மனிதர்கள் இந்த அளவு தெளிவுடனும் நேர்த்தியுடனும் யோசிக்கலாமா? அதுவே ஒரு பாவம் என்று பட்டது. அதற்குப் பின்னால் அகம்பாவம் உள்ளது. அது இயற்கையை - கடவுளையா? அருணாசலம் புன்னகை புரிந்தான் - அவமரியாதை செய்வது போல் உள்ளது. இந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க, இந்த அளவுக்குத் தெளிவுடன் யோசிக்க, மனிதனுக்கு உரிமை இல்லை. இந்த அளவு கூர்மையுடன் இருக்கும் ஒருவனை எவையும் நெருங்காது...
கோர்வையற்ற சொற்றொடர்கள். இது வெறும் மனக்கூத்து. ஆனால் இதில் தான் மனசக்தி மிச்சமின்றி செலவாக முடிகிறது. கோர்வையாக சிந்திக்கப்படும் எதுவும் பாதிப்பங்கு உண்மையிலிருந்து விலகி நிற்கிறது. ஒரு வரியை அழுத்தம் தந்து, மறு வரியை மறைத்து அடுத்த வரியை முதல் வரியுடன் இணைத்துத்தான் நாம் கோர்வையான சிந்தனைகளை உருவாக்குகிறோம். கோர்வையான சிந்தனைகள் ஏன் நம் மனதில் அவநம்பிக்கையை உருவாக்குகின்றன. எந்த விதியும் அதன் எதிர்விதியை உள்ளே விழுங்கி செரிக்க முடியாது நெளிந்தபடி உள்ளது. எந்த சித்தாந்தியும் தருவது தனிமையை. அது ராமசாமியாக இருந்தாலும் சரி, கதிராக இருந்தாலும் சரி, டால்ஸ்டாயாக இருந்தாலும் சரி. எண்ணங்கள் சிதறிப்
...more
மனிதர்கள் இரண்டு வகை. பிறவியிலேயே அப்படி இருக்கிறார்கள். ஆன்மிகமானவர்கள். லௌகிகமானவர்கள், உலகின் அனைத்து மதநூல்களையும் காவியங்களையும் படித்தாலும் லௌகீகவாதி அவற்றிலிருந்து எதையும் பெறுவதில்லை. அவனுடைய பேச்சும் கனவுகளும் மட்டுமல்ல, அவன் உடலும்கூட லௌகீகமானது. ஆன்மிகவாதி எதையும் படிக்காதவனாக இருந்தால்கூட எளிய அன்றாட வாழ்வினூடாகவே ஆன்மீகமான தருணங்களை அடைந்தவனாக இருப்பான். எழுகப் படிக்கத் தெரியாத ஆன்மிக மனம் எளிதாக ஷேக்ஸ்பியருடனும் தல்ஸ்தோயுடனும் ஒட்டிநகர முடியும். இவ்விரு சாராரும் இந்த உலகில் இரு வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே உரையாடலே சாத்தியமில்லை. அவர்கள் ஒருவரையொருவர்
...more
காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல. நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது. அதில் வேகமூட்டி உண்டு. ஆனால் நிறுத்தக்கருவி இல்லை. எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும். காமம் மனிதனை எங்கெங்கு இட்டுச் செல்கிறது! அதை அஞ்சி, எம்பிப் பாய்ந்து, அதிர்ஷ்டவசமாக மெய்ஞ்ஞானத்தின் கிளையைப் பற்றிக் கொண்டவர்கள் உண்டு அருணகிரிநாதரைப் போல. அதை அஞ்சி முடிவற்ற சுழற்பாதையில் ஓடி ஓடி அதன் எதிரே வந்து நின்று மூச்சிரைத்தவர்கள் உண்டு. தல்ஸ்தோயைப்போல. தூங்கும் அதன் காதைப் பிடித்திழுத்து சீண்டி விளையாடி அதன் உதிரப் பசிக்கு உடலைத் தந்து மகிழ்ந்தவர்கள் உண்டு; மாப்பசானைப் போல முடிவற்ற எதிரிகள், காமம் என்பது ஒரு
...more
மனிதன் எப்போதும் தனிமையானவன், தனிமையை உடைக்க பிரயத்தனப்படுபவன். நட்பு மூலம், பகைமை மூலம், ரத்தம் மூலம் அவன் பிற மனிதரிடம் உறவு கொள்ள முடிகிறது. ஆனால் மிக அதிகபட்ச உறவு தியாகம் மூலமே சாத்தியமாகிறது. தியாகத்தை பிறர் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது. தியாகம் மூலம் அவன் தன்னை அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்தும் சுயம் என்ற எல்லைக் கோட்டுச் சட்டத்தை உடைக்கிறான். நான் என்ற சொல்லை விட்டுவிட்டு நாம் என்று சொல்வதற்கான தகுதியைப் பெறுகிறான். தகுதியா? அது அதிகாரமல்லவா? தியாகம் என்பது அதிகார இச்சையின் விளைவல்லவா?”
தான் சார்த்திருக்கும் அரசின் செயல்களுக்கு ஒரு தனி மனிதன் எத்தனை தூரம் கட்டுப்பட்டவன்? தோழர், இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு சிந்திக்கும் மனிதனும் ஒரு தடவையாவது இந்தக் கேள்வியை எதிர்கொண்டு மனம் கலங்கியிருப்பான். எளிய பதில்கள் இல்லை தோழர். வரலாறு இதற்கு விடையளிக்காது. ஓர் இயக்கத்தை ஏற்றுக்கொண்டதனாலேயே ஒருவன் அதன் அனைத்துச் செயல்களையும் ஏற்றுக் கொண்டவனாவானா? ஏற்றுக் கொள்ளாவிடில் இயக்கங்களை விட்டு விலகலாம். அதுவே சமூகம் என்றால், தேசம் என்றால் ஏன் மானுட குலம் என்றால்? ஒவ்வொரு தனிமனிதனும் அவன் சார்ந்துள்ள இயக்கம் அல்லது அமைப்பின் தவறுகளுக்கும் பாபங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டுமா? அப்படியானால்
...more
இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால் இந்தத் தனிமனித மன எழுச்சிகளுக்கும் அப்பால் மானுட குலத்திற்கென நிரந்தரமான தார்மீகம் ஏதும் இல்லையா? அதை எங்கு கண்டடைவது? வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன். என்னால் எந்த ஒழுங்கையும் காண முடியவில்லை. அப்படியானால் மனிதர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக வாழ்வைக் கடைந்து எடுத்தது என்ன? ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் இன்னும் எண்ணற்ற போர்க்களங்களிலும் விஷம் கொட்டியதே. அப்படியானால் அமுதம் எங்கே? இல்லை விஷம் மட்டும் தானா? எனக்குத் தெரியவில்லை தோழர். எனக்கு எதுவுமே தெரியவில்லை, என் கண்ணால் அள்ள முடிந்ததெல்லாம் இருள்தான். வரலாற்றின் இருள் இலக்கியத்தின் இருள். ஞானத்தின்
...more
உலகை ஆக்கும் அடிப்படைச் சக்தியே அதுதான் என்று. அதுதான் செங்கிஸ்கானையும், அலெக்ஸாண்டரையும் தைமூரையும், நெப்போலியனையும் இயக்கியது. கெதே அதை எலிமென்டல் பவர் என்கிறார். நாம் நேர் எதிராகக் கற்பனை செய்து கொள்கிறோம். மார்க்ஸும். எங்கல்ஸும், லெனினும், ஹெகலும் எல்லாம் அந்த சக்தியால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்ட கருவிகள்தாம். கருவிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி வீசப்படுகின்றன. பயன்படுத்தலினூடாக அழிகின்றன. பயனற்றவை அழிக்கப்படுகின்றன.
“உலக வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது எனக்கு மேலும் மேலும் தெளிவாகியபடியே வரும் விஷயம் ஒன்றுண்டு. பூமிமீது கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இயக்குவது இச்சையும், உடலின் சக்தியும். அவையிரண்டும் இணைந்த இயக்கமே நான் கூறும் ஆதார சக்தி, வரலாறு என்பது இந்த இச்சா சக்தியின் கொந்தளிப்பும் பீறிடலும் மட்டுமே. அனைத்து அரசு கருத்துகளும், நிறுவனங்களும், நம்பிக்கைகளும் அதன் விளைவுகள் தான். வன்முறையே அதன் முதல் ஆயுதம். தர்க்கம் அடுத்த ஒரு ஆயுதம். ஒருபக்கம் அறிஞர்களையும் மறுபக்கம் வீரர்களையும் அது உருவாக்கியபடி உள்ளது. ஆனால் எப்போதும் வீரர்களே அதன் பிரியத்துக்குரிய குழந்தைகள்.
கோடிக்கணக்கான மக்களின் இச்சா சக்தியின் பிரதிநிதிகள் அவர்கள். அவர்கள் வெளிப்படுத்தும் குரூரம் அம்மக்களின் இச்சா சக்தியின் மூர்க்கமேயாகும்.
இன்றைய ராணுவ இந்தியாவில் தேசிய வெறியின், முதலாளித்துவ அமைப்பின் வெறும் கருவிதான் காந்தி. அத்தனை அறிஞர்களும் வெறும் கருவிகள் தான்.”
சோவியத் நாட்டில் உதவாக்கரை தனிநபர்வாதம் பேசி, பாட்டாளி வர்க்க அரசை எதிர்த்து கருத்துக் குழப்பம் விளைவிக்கும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கூட உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொழிலாளர்களை முரடர்கள் என்றும் பண்பாடற்றவர்கள் என்றும் கருதும் இந்த மேட்டிமைவாதிகள் மண்ணில் உழைத்து அவர்கள் உண்ணும் சோறு எப்படி எவரால் உருவாக்கப்படுகிறது என்று அறியட்டும். அவர்களுக்கு உண்மையைக் கற்பிக்க வேறு வழியே இல்லை.
காவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை. எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக் கிடக்கிறது போலும். வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக் கொண்டவையே காவியங்கள்.
ஆனால் தீய நோக்கம் கொண்ட உண்மையும் பொய்யே.
தர்க்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.
நான் தோற்கடிக்கப்பட்டேனா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவர்களல்ல, நான்தான். ஆம், தோற்றுவிட்டேன் என்று நான் எனக்குள் முழுமையாக ஒத்துக்கொள்ளும்போதுதான் என் தோல்வி நிகழ்கிறது. எல்லாவிதமான சுயநிந்தனைகளுக்கும் சுய எள்ளல்களுக்கும் பிறகு என் மையமான அறவுணர்வு உயிர்த்தீவிரம் குன்றாமலேயே எஞ்சுகிறது. ஒவ்வொரு எதிர்த் தர்க்கமும், ஒவ்வொரு நிதரிசனமும், ஒவ்வொரு திட்டவட்டமான ஆதாரமும் அதற்கு நீரூற்றவே செய்கின்றன. அதுவே என் சாரம். நான் விதை. அது விதையிலுறங்கும் தாவரம். தான் மட்குவது அது முளைப்பதற்காகத்தான்.
பசி என்பது உண்மையில் ஒரேவிதமான அனுபவம் அல்ல ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்குப் பசி என்பது ஓர் இனிய அழைப்பாக இருக்கக்கூடும். கடுமையாக உழைத்தபிறகு பசி உடலெங்கும் - பரவுவது ஓர் இனிய அனுபவம். பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல். கணம் தோறும் சுருங்கிவரும் முழக்கோல். தனியறையில் பசித்துப் படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு. ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும்போதுதான் தெரியவரும். அந்தப் பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று
...more
மனிதர்கள் சோறிடுவார்கள். அது சக மனிதன் என்பதனால் அல்ல; ஏற்பவன் கீழானவன் என்பதனால்; ஒரு வாய் உணவும், ஒரு செம்பு நாணயமும் தூலமாக அந்த வித்தியாசத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதால். எனக்கு ஈபவர்களிடம் பிரியம் இல்லை; நன்றியும் இல்லை. அது சிறு விளையாட்டு, அல்லது வியாபாரம். எனக்குத் தரப்படுவது அவன் கர்வத்தை நான் திருப்தி செய்ததற்கான கூலி.
தனிமனித உறவுகளில் எனக்கு எந்த விதமான அரசியலும் சித்தாந்தமும் இலட்சியவாதமும் பொருட்டே அல்ல. ஒழுக்கமும் பொது நியாயங்களும்கூட சிறுசிறு சஞ்சலங்களுக்குப் பிறகு ஒதுங்கி வழிவிடக் கூடியவையே. பொருட்படுபவையே வேறு. என் பிம்பங்கள் பற்றிய எனது அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் முதன்மையானவை. என் பிம்பம் எத்தனை தூரம் பிறரில் செல்லுபடியாகிறது என்பது என் உறவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான அம்சம். பாதி உறவுகளை பிம்பங்களை உருவாக்கவும், நிலைநிறுத்தவும், எனக்கு நானே அதை நம்பிக் கொள்ளவும்தான் உருவாக்கி நடத்திச் செல்கிறேன் என்று படுகிறது. எனது பலவீனங்களின்போது எனக்கு ஊன்றுகோலாகும் உறவுகளை வேறு வழியின்றி
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
என் அந்தரங்கத்திற்கு மிக நன்றாகத் தெரிகிறது. பிறரை ஆழ்ந்து பொருட்படுத்தும் எவரும் எங்கும் இல்லை என்று. இறந்தவர்களை மறந்துவிடவே எப்போதும் மனிதமனம் முயல்கிறது. அடையாளப்படுத்துவதும், வகைப்படுத்துவதும், கவுரவிப்பதும் அஞ்சலி செய்வதும் எல்லாமே குற்ற உணர்வுகளையும், புரிந்துகொள்ள முடியாமைகளையும், நினைவுகளையும் தாண்டி இறந்தவர்களை மறப்பதற்கான மானுட மனதின் உத்திகள்தாம்.
சராசரிப் பாமரன் இவன். இவனது பெருந்திரளே வரலாறு என்று பெருகி நின்று என்னை நாளை மதிப்பிடும். இவனிடம் என் பிம்பத்தை ஓட்டைகளின்றி விற்றுவிட்டால், நான் வென்றேன். அதன் பொருட்டு – அந்த வெற்றியின் பொருட்டு - நான் சாகவும் தயார். எத்தனை இழிவு! எத்தனை கீழ்மை! எத்தனை அபத்தம்! என் அந்தரங்கம் கூசுகிறது. இந்த பேதமையின், குரூரத்தின், கபடத்தின் அளவுகோல்களுக்குமுன் என் முதுகைத் திருப்பிக் காட்டிவிட்டு வாழ முடிந்தால் - இம்மிகூட இச்சையும் சபலமும் இன்றி இதைச் செய்ய முடிந்தால் - அடையாளமின்றித் தொலைந்து போவதனுடாக என் முழுமையைக் காணமுடிந்தால் அன்று மட்டுமே நான் என் மரியாதைக்குரியவனாக இருப்பேன்.
அடுத்தவன் முதுகில் சாட்டை விழும் வலியை உணர முடியாதவன் நாகரிகமில்லாதவன் என்றார் தல்ஸ்தோய் (‘நடனத்திற்குப் பின்’ சிறுகதை). அடுத்தவன் வலி என் வலியாவது எப்போது? நான் அவனையும் நானாக உணரும்போது என் சுயஎல்லையை விரித்து அவனையும் இணைத்துக் கொள்ளும்போது. நம்மில் பலர் உதிர உறவுகளையும் குடும்பங்களையும் மட்டும் அப்படி இணைத்துக் கொள்கிறோம். பழங்குடிகள் தங்கள் இனத்துடன் அப்படிக் கரைந்து விடுகிறார்கள், தேசியவாதிகள் தங்கள் தேசங்களுடன். மனிதாபிகள் மனித குலத்தை ஞானிகள் உயிர்களையும் பிரபஞ்சத்தையும் முழுக்க. சரிதான். ஆனால் அவ்வாறு சுயம் விரியும் போது கூடவே விரியும் அகந்தையை என்னவென்பது? அந்த அகந்தையல்லவா
...more
இறந்தவர்களால் நிரம்பியுள்ளது இந்த உலகம். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஆயிரம் இறந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய கண்ணீரும் குரோதமும் இச்சையும் அவன்மீது படிகின்றன. அவைதாம் அவனை ஆட்டி வைக்கின்றன. இல்லையேல் இந்த உலகம் இப்படிப் புரிந்து கொள்ள முடியாதபடி இயங்க ஒரு நியாயமும் இல்லை. திடீரென்று ஒரு மாபெரும் தொழிற்சாலையில் தொடர்புகள் சிதறிப்போன அசைவுகள் போல உள்ளது உலக இயக்கம். கிரீச்சிட்டும், மோதி உடைந்தும் தேய்வுற்றும் இயந்திரங்கள் ஓடும் பேரோசை. ஒழுங்கின்மையின் வன்முறை. ஆனால் கூர்ந்து கவனியுங்கள். ஒழுங்கு இல்லாமலுமில்லை. ஒவ்வொரு யந்திரத்தையும் ஆவிகள் இயக்குகின்றன, அவற்றின் குரூரப் புன்னகையையும்,
...more
தல்ஸ்தோயா? தஸ்தாவெஸ்கியா? இந்தக்கேள்வியைத் தேர்ந்த இலக்கிய வாசகர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எந்தவிதமான ஐயமும் இன்றி இரண்டிலொருவரைத் தேர்வு செய்து கூறுபவர்களின் இலக்கிய நுண்ணுணர்வை சந்தேகப்படுவேன். அவர்கள் இருவரையுமே அறியவில்லை என்று கூடக் கூறுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி மிகமிக அடிப்படையானது. மானுட ஆன்மிகத் தேடலின் இரு ஆதார நிலைப்பாடுகளை இருவரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பிறகு விரிவான சுயகண்டடைதல் மற்றும் சுயவிளக்கங்களுக்குப் பிறகுதான் ஒருவன் ஒன்றைத் தேர்வுசெய்ய முடியும். முடிவை ஒரு சிறிய சந்தேகத்துடன் தான் முன்வைக்கவும் முடியும்.
...more
படைவீரர்களின் உதவியுடன் தொழிலாளர்கள் நடத்தும் புரட்சி ஒரு போலிப் புரட்சி என்றார்கள். அது அரசாங்க மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்றார்கள். புரட்சி ரஷ்ய மண்ணிலிருந்தே முளைத்தெழ வேண்டும் என்றார்கள்.
என் அகங்காரம் என்னை எங்கு கொண்டு வந்து சேர்ந்துள்ளது என்று பார்க்கிறேன். வெறுமை. முழுமுற்றான வெறுமை. ஆனால் வேறு வழியே இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஞானிகள் கூறுகிறார்கள், அகங்காரத்தின் முடிவு வெறுமை என்று. நரகம் என்பது ஒருவன் இறுதியில் கண்டடையும் இந்த வெறுமைதான்.
மனித குலத்தின் அகங்காரம். மண்ணின்மீது வாழ விதிக்கப்பட்டவன் மனிதன். மண்ணின் அடியில் உறங்கும் பெரும் பூதங்களை அவன் துயிலெழுப்பிவிட்டான். ஐரோப்பாவை ஒரு பெரும் பூதம் ஆட்டிப்படைக்கிறது. ஒரு பூதமல்ல, இரண்டு பூதங்கள். நிலக்கரியும் இரும்பும்! மண்ணின் அடியில் தூங்கிய ராட்சதனும் ராட்சசியும். அவை விசுவரூபம் கொண்டு எழுந்தன. அவை புணர்ந்து பெற்ற ராட்சதக் குழந்தைகள் பூமியெங்கும் நிரம்பின. கவச வண்டிகள், பீரங்கிகள், விமானங்கள், டிராக்டர்கள், மோட்டார்கள்... உலகை அவை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பெரும்பசிக்கு கண்டங்களும் தேசங்களும் இரையாகின்றன. நாம்
மனதை நாம் கவனிக்காதபோது ஒன்றுமில்லை. கவனிக்க ஆரம்பித்தால் பீதிகொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். அதன் ஒழுங்கின்மையும் அர்த்தமின்மையும் இலக்கின்மையும் நம்மைப் பதற வைக்கின்றன. நாம் ஒழுங்காகவும் சாதாரணமாகவும்தான் இருக்கிறோம் என்பதற்குப் புற நிரூபணம் தேவையாகிறது.
“மனம் என்பது இருவகையான செயல்பாடுகள் பின்னி உருவாகும் ஒரு ஓட்டம்தான். தருக்கமும் படிமமும். ஒன்று பலவீனமாகும்போது இன்னொன்று வலுப்படுகிறது. ஒன்று இன்னொன்றின்மீது படிய முற்படுகிறது. தத்துவவாதி தருக்கத்தின் சரடைப் பின்தொடர்கையில் கவிஞன் படிமங்களின் சரடைப் பின்தொடர்கிறான். இரண்டும் அதீத நிலைகள். அதீதநிலைகள் மூலம் மட்டும் அடையப்படக்கூடிய சில தருணங்கள் மன இயக்கத்தில் உண்டு. தத்துவவாதியும் கவிஞனும் அவற்றைத் தங்கள் மிகச் சிறந்த படைப்புக் கணங்களில் தொட்டுவிடக் கூடும். ஆனால் இவ்விரு ஓட்டங்களும் ஒரேயளவு தீவிரத்துடன் ஒன்றையொன்று பயன்படுத்திக் கொண்டபடி இயங்கும் படைப்பூக்கமே முழுமையானது.
சிந்தனை என்பது ஒரு ஆரம்பநிலையில்தான் கிளர்ச்சி தரும் அனுபவம். பழகிவிட்டால் ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் குறிப்பிட்ட பாணியில் சிந்தித்தபடியே போக முடியும். அதற்கு
சிந்தனையைக் கவித்துவத்தால் சிதறடிக்க வேண்டும். பிறகு கவித்துவத்தை சிந்தனையால் ஒழுங்கு படுத்த வேண்டும்.”
“கிறிஸ்தவம் பெரும் சோர்வை உலகமெங்கும் பரப்பிவிட்டது தோழர். உலகியல் மறுப்பையும் சரணாகதியையும் அது கற்பித்தது. தோல்வியைப் புனிதப்படுத்தியது. கிறிஸ்து யார்? தோல்வி அடைந்த ஓர் இலட்சியவாதி. அவரது தோல்வி தவிர்க்க முடியாதது. இருக்கும் விஷயங்களுக்குப் பதிலாக இல்லாத விஷயங்களை முன்வைக்க முயன்ற கனவுஜீவியின் சரிவு அது. அந்தத் தோல்வியை இரண்டாயிரம் வருடங்களாகக் கிறிஸ்தவம் மானுடத்தின் ஆகப் பெரிய இலட்சியமாக முன்னிறுத்தியது. கிறிஸ்துவின் முகம் காட்டுவது என்ன? துக்கம், புறக்கணிப்பு, தனிமை, நிராசை ஆகிய உணர்வுகளல்லவா? நமது வீடுகளில் அனைத்திலும் சிலுவையேறிய ஏசு, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று ஓயாமல்
...more
மனிதனின் இயல்பான நிலை வெற்றியும் மகிழ்ச்சியும் களியாட்டமும் அல்லவா? இச்சையும் வலிமையும்தானே அவனது ஆதாரங்கள்? அதிகாரம்தானே அவனது இலட்சியம்? சொல்லுங்கள். இந்த ஏழை மக்களுக்கு நாம் சாத்தானை எடுத்துச் செல்ல வேண்டும் தோழர். அடிமைகளாகவும் ஆட்டுமந்தைகளாகவும் வாழும் மக்களுக்கு இன்று சாத்தானின் இச்சையும் வலிமையும்தான் தேவை. இரண்டாயிரம் வருடங்களாக உலகிலுள்ள அத்தனை அரசாங்கங்களும் திருச்சபையையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டுள்ளன. பைபிள்களையும் கிறிஸ்துக்களையும் புனிதர்களையும் படைத்துத் தங்கள் பிரஜைகளுக்குத் தந்து நுகத்தடிகளையும் பலிபீடங்களையும் நோக்கி அவர்களை அணிவகுக்கச் செய்கின்றன அவை. அந்த அதிகாரத்தை
...more
“உயிராசையைக் கேவலமாக ஏன் எண்ண வேண்டும்? அது இயல்பானது. வாழ்வு மீதான காதலின் விளைவு அது. தோழர் அந்திரியான், எனக்கு வாழ்ந்து போதவில்லை. மண்ணும் காற்றும் வானும் ஒளியும் நீரும் என் புலன்களுக்குப் பேரின்பம் தரக் கூடியவையாகவே இப்போதும் உள்ளன. அவ்வின்பத்தை அத்தனை சுலபமாகத் துறக்க என்னால் முடியாது. அதே சமயம் எனக்கு வாழ்வு வெறும் போகவெளியும் அல்ல. ஐம்புலன்களுக்கு நடுவே அவற்றை ஆளும் ஓர் ஆத்மாவும் எனக்குள்ளது. அதற்குரிய தேடல்களும் தேர்வுகளும் எனக்கு உண்டு. இவையிரண்டு தளங்களுக்கும் இடையே தீராத மோதல் உண்டு. அதன் விளைவாக சஞ்சலங்களும் சமரசங்களும் உண்டு.
எல்லா சொற்களும் விலகிப்போக மரணம் மட்டும் துலங்கி நிற்கும் அபூர்வமான கணங்கள் அவை. பீதியோ துயரோ பதற்றமோ இன்றி பார்த்திருந்தேன். விளக்கங்கள் இல்லாத, அர்த்தங்கள் இல்லாத, எதிலும் பொருத்தம் கொள்ளாத ஒரு துண்டுபடுதல். அதை நெருங்குகையில் நமது அறியும் தன்னிலையும் துண்டுபட்டுப் போய்விடுகிறது. அப்போது மரணம் அறியப்படாததாகி எனவே இல்லாததாகிவிடுகிறது. உண்மையில், மரணத்தை நாம் அறிய முடியாது. அதிகபட்சம் அதன் முந்தைய கணம்வரை போக முடியும். அந்த முந்தைய கணம் என்பது வாழ்தலின் கணம்தான். வாழ்வில் பலவாறாகப் பிரதிபலிக்கும் மரணமே நாம் அறிந்தது.
நீதி என்பது ஒரு நடைமுறை அல்ல; ஓர் ஒழுங்கு அல்ல, ஒரு நம்பிக்கை அல்ல. நீதி என்பது... நீதி என்பது ஒருபோதும் நம்மால் முழுக்க அறிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு. பூமியின் அத்தனை மனிதர்கள் மீதும் சூரிய ஒளிபோல அது பிரபஞ்சவெளியிலிருந்து பரவியிறங்குகிறது. காற்று போல அனைவரையும் இணைத்திருக்கிறது. பூமிமீது மனிதர்கள் நிரந்தரமல்ல. மனிதன் அறியும் எதுவும் நிரந்தரமல்ல. நீதி நிரந்தரமானது.
சிந்தனைத் திறனே நம்மை நீதியிலிருந்து விலக்குகிறது. சுயநலத்தின்மீது நம்மை ஏற்றி வெகுதூரம் இட்டுச் செல்கிறது. ஒருவன் எத்தனை தூரம் பாமரனோ அத்தனை தூரம் நீதிக்கு அருகில் இருக்கிறான். எத்தனை தூரம் வெகுளியோ அத்தனை தூரம் நீதிக்கு அருகில் இருக்கிறான். நம் தேவமகன் சும்மா சொல்லவில்லை - நாம் குழந்தைகள் போல ஆகாவிடில் அவனருகே நெருங்க முடியாது என்று. நாம் நீதியின்பால் பசி தாகமுடையவர்களாக இருக்க வேண்டும் என்று. நீதி பசி போல, தாகம் போல, இயற்கையின் ஒரு சக்தி. இயற்கையைப் புரிந்து கொண்டால் அதையும் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் உள்ளே வாழ்ந்தால்தான் நீதியை வாழ்வாகக் கொள்ளவும் முடியும்.
“வன்முறைக்கு நம்மை மாற்றும் சக்தி உண்டு. அது நம் எதிரிகளைப் போன்றவர்களாக நம்மையும் ஆக்குகிறது. அது வெற்றியல்ல. பெரும் தோல்வி. நம்மை மேம்படுத்திக் கொள்வதே உண்மையான போராட்ட முறை.”
பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் இறைவனுடனான சூதாட்டங்கள்
மறதிக்குத் தள்ளப்படும் கடந்தகால வரலாறு அல்லது அழிக்கப்பட்ட வரலாறு அங்கு குற்ற உணர்வாகத் தேங்குகிறது. நொதித்து நுரைக்கிறது. அவற்றைக் குறியீடுகளாக மாற்றி வெளியே எடுத்து வழிபட ஆரம்பிக்கும் போதுதான் மனிதனுக்கு ஆறுதல் கிடைக்கிறது. புனிதர்கள் குறியீடுகளே. எனவே பேரழிவின் போது மனித குலத்திற்குப் பெரும்புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். புனிதன் என்பவன் அகங்காரம் கொண்டவன். தன் நேர்மை குறித்தோ, ஞானம் குறித்தோ அகங்காரம் கொண்டிருப்பவன். அவ்வகங்காரத்தை வெல்ல அவன் தன்னை எளிமைப்படுத்திக்கொள்கிறான். துறக்கத் தொடங்குகிறான். உடனே அவனது அகங்காரம் நேர் எதிர்த்திசையில் வளர்ந்து பூதாகர வடிவம் கொள்கிறது. அதை அடையாளம்
...more
அறம் என்பது என்ன? எனக்கும் உனக்கும் அவனுக்கும் பொதுவானதாக எந்த மதிப்பீட்டை நான் முன்வைக்கிறேனோ அதுவே என் அறம் என்பது. என் அறம் ‘எம்மவருக்குள்’ மட்டுமே அடங்கும் என்றால் மானுடம் என்ற ஒன்றை நான் ஏற்கவில்லை என்றுதான் முதல் பொருள். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. நீயும் நானும் அவனும் மானுடர்கள் என்பதை முத்தரப்பும் ஒரே குரலில் நிராகரித்தால்கூட நிராகரித்துவிட முடியாது. நாம் ஒரே மண்மீதும் ஒரே வான்கீழும் வாழ்ந்தாக வேண்டும். போரிடும்போதும் வெறுக்கும்போதும்கூட நாம் மானுடர்களே. என் அறத்தின் ஒரு சிறுபகுதியையேனும் நீ ஏற்றாக வேண்டும். உன் அறத்தின் அதற்கிணையான அளவு பகுதியை நான் ஏற்க அதுவே என்
...more
பொது அறங்களை நிராகரிக்கும் இயக்கங்களும் நிறுவனங்களும் தற்காலிகமாக வெற்றிகளை அடைந்துவிடக் கூடும். ஆனால் நீண்டகால அளவில் ஏற்படப்போகும் மோசமான தோல்விகளின் முன்னோடியே அவ்வெற்றிகள்.
பொது அறங்களை நாம் மீறும்போது நம் ஆழத்தில் ஒருபோதும் சரிசெய்ய முடியாத விரிசல் ஒன்று நிகழ்ந்துவிடுகிறது. அதன்பிறகு எனக்கு இப்படி நிகழலாமா, இது நியாயமா என்ற ஆங்காரம் நம் அடிவயிற்றிலிருந்து பீறிடாது. நமது நீதியுணர்வுதான் பயங்கரமான போர்ஆயுதமாகிறது. அணையாத நெருப்பாக தலைமுறைச் சங்கிலிகளுக்கு அதுதான் கைமாற்றப்படுகிறது. நமது நீதியுணர்வு உடைபட்ட பிறகு நம்மிடம் எஞ்சுவதென்ன? வாழ்க்கை ஒரு வலிமை விளையாட்டு என்ற வனநீதியல்லவா? முதுகு வளைந்து ஏதென் தோட்டத்திற்குள் மீண்டும் நுழைந்துவிடுகிறோம்.
எதை நான் ஒவ்வொரு மானுடனுக்கும் உரியது என்று கருதுகிறேனோ அதையே என் பிறப்புரிமையாகவும் கருத முடியும் அல்லவா? உயிர்வாழும் உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, தன்மானத்திற்கான உரிமை. ஏதாவது ஒரு நிபந்தனையின் பெயரால், ஒரு சந்தர்ப்பத்தின் பொருட்டு, அதைப் பிறருக்கு மறுப்பேன் என்றால் அதே நிபந்தனைகளின் பொருட்டு அது எனக்கு மறுக்கப்படுவதையும் தத்துவார்த்தமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லவா? ஆனால் உரிமை என்பது நிபந்தனைகளில்லாதது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. அத்தகைய உரிமைகளின் பொருட்டே நான் உயிரைத் தர முடியும். என் சந்ததிகளின் உயிரைப் பணயம் வைக்க முடியும். என் வாழ்வின் இறுதி உடைமையையும் வைத்துப் போரிட முடியும்.
...more
தருக்கபூர்வமானதெல்லாம் உண்மையென்றும், உரிய காரணங்கள் உடையதெல்லாம் நியாயம் என்றும் நம்புவதே அறிவைப் பேதமையின் உச்சமாக ஆக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக பூமியின் அறிஞர்கள் ஏறத்தாழ அனைவருமே அப்படி நம்புகிறவர்கள்தான். என்ன வித்தியாசம் என்றால், தாங்கள் கூறும் தருக்கங்களும் காரணங்களும் மேலும் துல்லியமானவை என்று அவர்கள் கூறுவார்கள். எந்த
‘அய்யோ இது அவதூறு!’ என்பவன் என்ன சொல்கிறான், அவதூறு என்பது அநீதிகரமானது, உனக்கானாலும் எனக்கானாலும் என்றல்லவா? ‘என்மீதான அவதூறு ஓர் அநீதி; நான் செய்யும் அவதூறு என் ஒழுக்கவியலின்படி ஒரு போராட்ட ஆயுதம்’ - இப்படி நீங்கள் கூறுவீர்களேயானால் பிறகு நாம் எதைப் பற்றிப் பேசமுடியும்? நீங்களும் நானும் ஏற்கும் பொதுத்தளத்தில், உங்கள் சொற்களுக்கும் என் சொற்களுக்கும் ஒரே அர்த்தம் உருவாகும் மொழிக் களத்தில்தான் நீங்களும் நானும் பேசிக்கொள்ள முடியும்.
சித்தாந்தம்னாலே எனக்குப் பயமா இருக்கு. இப்ப சொன்னீங்களே எல்லாத்துக்கும் அரசியல்ல வேற அர்த்தம்னு. எப்படி அந்த வேற அர்த்தம் வருது தெரியுமா? சிந்தாந்தப் படுத்தறது வழியாத்தான். யேசுவின் அளவிட முடியாத கருணையை சித்தாந்தப்படுத்தினா ஆப்ரிக்க நாடுகளில் குடிநீர்ல விஷம் கலக்கி மதம் மாத்தற துணிவு வரும். கருணையே உருவான புத்தர் பேரைச் சொல்லி இனவெறியைத் தூண்ட முடியும். சித்தாந்தம் எதையும் எப்படியும் மாத்திடும்னு படுது; ஒரு கொடூர மந்திரவாதிய மாதிரி. சித்தாந்தங்களையும் சித்தாந்திகளையும் நான் பயப்படறேன்.”
நேர்மையில்லாத அறிவாளி மாதிரி பயங்கரமானவன் வேறு யாரும் இருக்க முடியாது. தனிமனிதனோட அயோக்கியத்தனத்தைவிட சித்தாந்தத்தோட அயோக்கியத்தனம் பல மடங்கு அபாயகரமானது...”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)