இன்றைய அரசியல் தேவைகள்
சண்முக. விமல் குமார்
உண்மையில் இடதுசாரிகளுக்கு இருக்கும் நெருக்கடி எதுவும் வலதுசாரிகளுக்கு இருப்பதில்லை. ஒரு வலதுசாரியால் ஒரேசமயத்தில் புத்திசாலியாகவும் இருக்கமுடியும் முட்டாளாகவும் இருக்க முடியும், குரூரமும், போலித்தனங்களும், வக்கிரமும் அப்பிக்கொண்டிருக்கும் தன் மனதை மேல்பாவனையில் ஒரு குழந்தைநேயராகக் காட்டி, மானுடத்தின் தலைவனாகப் பிறரை வணங்கச் செய்ய முடியும், எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு அதை தேசம், மொழி, மதம் உள்ளிட்ட மேஜிக் தொப்பிகளில் போட்டு வண்ணப்பூக்களாகவும், வெள்ளை புறாக்களாகவும் வெளியில் எடுக்க முடியும். ஆனால், ஓர் இடதுசாரிக்கு அது இலக்கணமாவதில்லை. அது அடிப்படையிலேயே, தீமையை நீக்கிவிட்டு நன்மையை நாடவேண்டும் என்கிறது; மேலும், பகுத்தறிவைத் துணைகொள்கிறது. குற்றமற இயங்கவேண்டும் என்பதோடு, தன் குற்றம் செய்ய நேரும்போது, அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாண வேண்டும் என்றும் மனசாட்சியைத் தூண்டுகிறது. (இப்படித்தான் இருக்கிறார்களா என்று குறுக்குக் கேள்வி கேட்கவேண்டாம்) வலதுசாரிக்குத் தர்க்கிக்கும் திறனோ, பேச்சு, எழுத்துப் பயிற்சியோ அத்தனை அவசியம் இல்லை; மாற்றாக ஓர் வலதுசாரி நாடி இருப்பது யாவும் கதையாடல் – மாற்று வார்த்தையில் சொல்வதானால் கம்பிக் கட்டத் தெரிந்திருப்பது அவர்களுக்குப் போதுமானது. ஆனால், இடதுசாரிக்கு எதையையும் நிருவவேண்டிய தேவை உள்ளது (இந்தப் பதிவு உட்பட). இந்தப் பின்னணியில்தான் அரசியல் நீக்கத் தேவையை முன்னிறுத்தும் தூய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்கிறேன்.
புனைவில் பொருண்மையையின் இருமை (Binary) உலகைப் பரிசீலித்துப் பார்க்கும் படைப்பாளிக்கு அரசியல் அச்ச மூட்டுகிறது; உண்மையின் குறுக்குமறுக்கான பாய்வில் தாங்கள் பரிசீலித்துப் பார்க்கும் அத்துமீறல்கள், குரூரத்தின் அழகியல், யோக்கியதையின் பெருஞ்சுமை ஆகியவற்றை அரசியல் கேள்வி கேட்கும் என்று அஞ்சுகிறார்கள்; அவற்றை அற்றுப் போகச் செய்யும் என்று நினைக்கிறார்கள். (ஆனால், வாஸ்தவம் அதுவல்ல) எனவேதான் பகுத்தறிவின் அரசியல் சார்பைக் கேள்விகேட்டுவிட்டு, ஓர்மையுடனோ, ஓர்மையின்றியோ வலதுசாரி கதையாடல்களுக்குள் தங்களின் தரிசனங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தைத் தேடிமுடிகிறது. ஆனால், இங்கு நான் அவர்களைப் பரிசீலித்துக்கொள்ளக் கோரமாட்டேன், அவர்களை (ஏனைய நடுநிலையாளர்களையும்) உள்முகப்படுத்தத் தோதான நெகிழ்ச்சியை, சுயபரிசீலனையைக் கைக்கொள்ளுமாறு இடதுசாரி இயக்கங்களைத்தான் கோருவேன்.
காரணம், பொல்லையான இந்த சமூக ஊடகக் காலத்தில் திரும்பவும் மெய்மையை இருமையாகப் பிரித்துக்காட்டி காலங்கடத்துவது பலனளிக்காது. சமீபத்திய திராவிடர் கழக மேடையொன்றில், ஆ. ராசாவின் கம்யூனிசக் கட்சிகளின் தலைவர்கள் குறித்த பேச்சை எதிர்கொண்ட மு. வீரபாண்டியன் நட்பு இயக்கங்களுக்குள் விமரிசனங்களைக் காயப்படுத்தாமல் வளர்த்துக்கொள்ளத் தேவையான சொற்சேர்க்கையொன்றைப் பயன்படுத்தினார். அது: வளர் முரண். அந்த வளர்முரணோடு, இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள் தங்களைப் பரிசீலித்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதுதொடர்பான என்னுடைய அவதானங்கள்:
1. தி.மு.க. தனது இடைசாதி மேலாண்மை, சாதியை அழித்தொழிக்க முடியாத தோல்வி ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும்.
2. கம்யூனிசம் இன்னும் மண்ணுக்கேற்றதாகவும், குறிப்பாக தமிழ் மண்ணுக்கேற்றதாகவும் மாற முடியாமல் இருப்பதையும், இரண்டு கம்யூனிசக் கட்சிகளையும் ஒன்றிணைத்துவிடுவது அவசியம் என்று கருதுகிறேன். தேசிய கட்சிக்கே உரிய நெருக்கடியில் தேசியளவில் ஒரு நிலைப்பாடும், பிராந்தியளவில் ஒரு நிலைப்பாடும் எடுக்க வேண்டிய தேவையை நிராகரித்து, மாநிலத்தின் நலன்களை மட்டுமே வலியுறுத்திச் செல்ல வேண்டும்.
3. தலித் இயக்கங்கள் தனிமைப்படுத்திக்கொள்வதை அதிகாரமாக, விடுதலையாக நினைப்பதை மறுபரிசீலனை செய்யலாம் (திருமா பிற சாதிகளோடு இணைந்து பணியாற்றுவதையே விடுதலையாகக் கொள்ளக் கூடியவர்; அவர் தொலைநோக்குச் சிந்தனையாளர்; அவர் பொதுத்தலைவராக மேலெழ முடியாதது தமிழ்ச் சமூகத்திற்கு மாபெரும் அவமானம்)
4. அரசியலுக்குரியதல்லாதவையாகக் கருதும் செய்தி ஊடகங்கள் நீங்கலான அனைத்து ஊடகங்களின் உள்ளடகத்தையும் போக்கையும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்; ஆராய வேண்டும். இந்த ஆய்வுகள் தமிழில் 0.000000000000000000001 சதவீதம் கூட நடக்கவில்லை. மேலும், வலது மயப்பட்டுவிட்ட கல்வி நிலையங்கள், ஊடகங்கள், தலைவர்கள், புத்திஜீவிகள் யாவரின் அழுக்குகளையும் கழுவித்தள்ள வேண்டும்; இது சாதாரண காரியமல்ல.
5. கொள்கை, விடுதலை, அரசு, சட்டம் போன்ற கட்டமைப்புகள் யாவும் மக்கள் நெருக்கடியைச் சந்திக்கும் போது உருவாகக் கூடியவை. இத்தகைய நெருக்கடிகள் இல்லாத போது அல்லது உருவாகாத போது, அல்லது உணர்த்தப்படாத போது, மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியல் என்பது வெறும் நல்லாச்சி மட்டும்தான் (just a good governace). அதன்பொருட்டே, ஊழல் ஒழிப்பு மாற்று அரசியல் போர்வையிலான கட்சிகளால் ஓர் முதன்மை கொள்கையாக முன்வைக்கப்படுகிறது; அதற்கிசையவே ஊழக்கு அப்பால் இருப்பவர்களாக நாம் நம்பிவரும் அல்லது அவ்வாறு நம்பவைக்கப்பட்ட அதிகாரிகளைப் புதிய, பழைய அரசியல் கட்சிகளில் கொண்டுவருவதும், முதன்மைப் படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது (உதா. ஆம் ஆத்மி; பல்வேறு கட்சிகளில் பொறுப்பாளர்களாக இருக்கும் மேனாள் குடிமைபணிகள் அதிகாரிகள்). ஆனால், என்னளவில் இருப்பதிலேயே ஊழல் ஒழிப்பு என்ற தத்துவம்தான் பொல்லையானது. காரணம், அந்தக் கொள்கையொன்றில்தான் மேட்னஸ் இல்லை; மதம், தேசியம், திராவிடம், மொழி போன்று. அது சீக்கிரம் தொண்டர்களை இழக்கும் தன்மையுடையது.
7. எனவே, காலத்திற்கு ஏற்ற மாதிரியான புதிய தத்துவங்களை, கொள்கைகளை, கோட்பாடுகளைக் கட்சிகள் உண்டுபண்ண வேண்டும் அல்லது இவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய கட்சிகள் உருவாக வேண்டும். சினிமா பிம்பங்களைத் தாண்டி, இந்தக் கொள்கைப் போதாமையைக் கொஞ்சமாகவாவது முன்னிருத்தி, அரசியலற்ற இளைஞர்களை அரசியல் மயப்படுத்த முனைந்ததில் நாம் தமிழர் கட்சி உருவான பின்னணி அசலானது; ஆனால், அக்கட்சி வெறும் மூர்க்கம், தூய்மைவாதம் போன்றவற்றை முன்னிறுத்தி மதப் பாசிசத்தைப் பதிலி செய்யும் மொழி பாசிசமாகச் சுருங்கிக் காட்டிக்கொண்டு, தன் வளர்ச்சியின் ஆபத்தைக் கேலி செய்யச்சொல்லி சமூகத்தை நிர்பந்தித்து தற்போது அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டது. எனவே, அது புதிய மொந்தையில் பழைய கள் மட்டுமல்ல; பதிலி கள்ளும் கூட என்பதால் அதன் வரலாறு ஒரு வெற்றுக்கூத்து.
8. இருப்பதிலேயே டிசாஸ்டர் இந்த த.வெ.க.தான். அதைத் தனிக்கட்டுரையாக எழுத வேண்டும். ஆனால், இப்போதைக்கு அதன் எழுச்சியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அவசர பாடம் உண்டு. தமிழகம் முன்னேறிவிட்டது என்கிற ஆவணப்படுத்தப்பட்ட உண்மையின் போர்வைக்கு அடியில் ஒரு ஜனத்திரள் அரசியலற்றும், பிம்பத்தேவையிலும், திரை வாழ்விலும் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம் என்பதுதான். இதைக் களையாவிட்டால் தமிழகம் தொடர்ந்து பெருமைப்பட்டுக்கொண்டே இருக்க முடியாது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு's Blog
- றாம் சந்தோஷ் வடார்க்காடு's profile
- 2 followers

