அவன் நடை உலாவும் உபவனத்தில்
அன்று பூமியின் பச்சைக்குடம்
பாலமுதாய் நிறைந்து
பொங்கி வழிந்தோடுவது போல
சிலந்தி அல்லிச் செடிகளின்
வெண்மலர் வரிசை…
பெருவெளியெங்கும்
ததும்பி அலையடிக்கிறது
பேரமைதி கொந்தளிக்கும்
அதன் ஆட்டமும் பாட்டமும்
யாருடையவோ இதயத்தை
எதிரொலிப்பதுபோல!
அறிமுகமற்ற மனிதர்களானாலும்
ஒரே வழியில் எதிர்ப்பட்டவர்களாய்
புன்னகைத்துக் கொள்ளும்
மனிதர்களில் ஒருவர்
அன்று புதிதாய் வாய்மலர்ந்து
காலநிலையையும்
காற்றையும் வெளியையும் புகழ்கிறார்.
சொல்லமுடியாத ஒன்றை
மொத்த உலகிடமும்
பகிர்ந்து முடித்துவிட்டவர்கள் போலும்
இத்தகையதோர் பெருநிலைதான்
பொங்கிவழிந்து
நிறை பெருகிக் கொண்டிருக்கிறதைக்
கண்டு கொண்டவர்கள் போலும்…
Published on June 05, 2025 12:30