UGC வரைவறிக்கையும் சீமானின் பெரியார் எதிர்ப்பும்

 


புதிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை வந்திருந்த நேரம் அது. தமிழ்நாடு மிக உக்கிரமாக அதை எதிர்த்து களமாடிக்கொண்டிருந்தது. ”எல்லா மாநிலங்களும் இந்த வரைவறிக்கையை ஏற்கின்றன. தமிழ்நாடு மட்டும் ஏன் நாங்கள் எதைக் கொண்டுவந்தாலும் இப்படி முறுக்கிக்கொண்டு எதிர்க்கிறது?” என்று ஒரு ஒன்றிய அமைச்சர் கேட்டார்.வேறொன்றுமில்லை. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் கல்வியிலும் பண்பாட்டிலும் நன்கு விளைந்து செழித்துக் கிடக்கிறது தமிழ்நாடு. நீங்கள் மாட்டை அவிழ்த்து விடுகிறீர்கள். பொட்டலாக இருந்தால் பாதகம் இல்லை என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். எங்கள் பூமி விளைந்து கிடக்கிறது. எனவே வேலி போடுகிறோம். அவ்வளவுதான் என்று அழகாக அவரை எதிர்கொண்டார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.இப்படியாக தமிழ்நாடு செழித்துக் கிடப்பதும் அதன் விளைவாக அவர்களது ஆதிக்கத்திற்கு அடங்கிக் கிடக்க மறுத்து முரண்டு நிற்பதும் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் கனவு காண்கிற சனாதன பாரதத்தை கட்டமைப்பதற்கு முட்டுக்கட்டையாக தமிழ்நாடு முன்நிற்பதாக அவர்கள் கருதுகிறார்கள். தான் முட்டுக்கட்டையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களையும் தன்னோடு அணிசேர்க்கிற முயற்சியில் தமிழ்நாடு இருப்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறர்கள்.கேட்டுப் பார்க்கிறார்கள், கெஞ்சிப் பார்க்கிறார்கள், முறைத்துப் பார்க்கிறார்கள், எங்களோடு உடன்படாவிட்டால் உங்களுக்கு உரிய நிதியை முடக்குவோம் என்கிறார்கள். முடக்கியும் பார்க்கிறார்கள். எதுகண்டும் அடங்க மறுக்கிறது தமிழ்நாடு. இந்த உறுதி தமிழ் மக்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று ஆராய்கிறர்கள்.“கல்வி” என்ற பதில் அவர்களுக்கு கிடைக்கிறது. தமிழ் மக்களுக்கு கிடைக்கும் கல்வி மக்களை பண்பட்டவர்களாகவும் உறுதி மிக்கவர்களாகவும் கட்டமைத்து வைத்திருக்கிறது என்ற காரணத்தை படிக்கிறார்கள். இவர்களை வழிக்கு கொண்டுவர வேண்டுமென்றால் இந்த கல்விக் கட்டமைப்பை, அதன்வழி அவர்களுக்கு இந்த அளவிற்கேனும் கிடைத்திருக்கிற சமத்துவத்தை சிதைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இது உடனடி பலனைத் தராது என்பதையும் அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்தத் தலைமுறையில் இல்லை என்றாலும், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகேனும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தி தாங்கள் விரும்புகிற சனாதன பாரதத்தை தங்களது பேரப்பிள்ளைகளாவது கட்டமைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் UGC நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். அதற்கான வரைவறிக்கையை சுற்றுக்கு விடுகிறார்கள்.அந்த வரைவறிக்கை வந்தவுடன் அதை முதலில் எதிர்த்து SFI பிள்ளைகள்தான் களத்தில் இறங்குகிறார்கள். ஏதோ ஒரு அறிக்கை வந்திருக்கிறது. அதை உடனடியாக எதிர்க்க வேண்டும் என்ற அவசரகதியிலான தாந்தோன்றித்தனத்தின் சிறு அளவிலான முனைப்பும் அவர்களது எதிர்வினையில் இல்லை. ஊரே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பின்னிரவு முழுக்க கண்கள் எரிய விழித்திருந்து அந்த வரைவறிக்கையை வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். அய்யங்களை மூத்தோர்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறார்கள். இது ஆபத்தானது, தமிழ்நாட்டை பின்னுக்கு இழுப்பது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஒன்றிய அரசின் சதிக்கு எதிராக உடனடியாக களத்தில் இறங்குகிறார்கள்.தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள பல்கலைக்கழகங்களுக்கென்று தனிச்சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களின்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் கொண்ட அமைப்புகளாக ‘செனட் ’ மற்றும் ’சிண்டிகேட்’ ஆகிய இரு அமைப்புகளும் உள்ளன. இந்த இரு பிரிவுகளின் உறுப்பினர்களும் பெரும்பாலும் கல்வி குறித்த தெளிவுள்ளவர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கிறவர்களில் பெரும்பான்மையோரும் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோரும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களாக இருப்பது தற்செயலானது அல்ல.இப்படியாக இவர்கள் சமூகநீதி சார்ந்த்வர்களாக இருக்கிற காரணத்தினால் கல்வித் திட்டம், மாணவர் சேர்ப்புமுறை, தேர்வு முறை உள்ளிட்ட கல்விக் கட்டமைப்பும் சமூக நீதி சார்ந்ததாகவே அமைந்துவிடுவதும் இயல்பானதுதான். இந்த சமூகநீதிசார்ந்த கல்விக் கட்டமைப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த “அனைவரையும்” என்ற சொல்லிற்கு “புறக்கணிக்கப்பட்டவர்களை” என்ற பொருளை சமூகநீதி தருகிறது. இந்தக் கல்விக் கட்டமைப்பானது புறக்கணிக்கப்பட்டவர்களை சமூகத்தின் முன்னடுக்கில் கொண்டுவந்து அமரவைக்கிறது. படிப்பு அறிவைத் தரவேண்டும் என்பதை இந்தக் கட்டமைப்பு கேள்வி கேட்கிறது. பிற இடங்களில் கல்வியானது அறிவை, வேலை வாய்ப்பை, ஊதியத்தை, வளமான வாழ்வை மையப்படுத்துகிறது. இது ஒடுக்கப்பட்டவர்களை கல்விக்கு தொலைதூரத்திலேயே தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கிறது. ஆகவே மேற்சொன்ன அனைத்தையும் மேட்டுக்குடியின மக்களுக்கே சாத்தியமாக்குகிறது.தமிழ்நாட்டில் கல்வி சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இது சனாதனத்திற்கு எதிரானதாக அமைகிறது.தமிழ்நாடு இப்படி வேறுபட்டு முன்னேறி நிற்பதற்கு பெருங்காரணமாக இங்குள்ள மாநில அரசின் பல்கலைக்கழகங்களுக்கென்று இருக்கக்கூடிய அவற்றிற்கான சட்டங்களே காரணம் என்பதை ஒருவாறு உணர்ந்துகொண்ட ஒன்றிய அரசு அதை சிதைத்தால் தமிழ்நாட்டை வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறது. அதன்பொருட்டே UGC திருத்த வரைவறிக்கையை சுற்றுக்கு விடுகிறது.இதில் உள்ள மூன்று விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை,1) UGC விதிகளுக்கு அனைத்துப் பல்கலைக் கழகங்களும் கட்டுப்பட வேண்டும்2) பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக இனி மாநில ஆளுநர் இருப்பார்3) UGC விதிகளுக்கு கட்டுப்படாத பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாதுஇதன்படி இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த UGCயின் விதிமுறைகள் இனி சட்டங்களாகும். மீறினால் பட்டங்கள் செல்லாது. இவற்றிற்கு தோதாக இதுவரை துணைவேந்தர் தேர்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மாநில ஆளுநரை தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கவேண்டும் என்கிறது அந்த வரைவறிக்கை.இது நடைமுறைக்கு வந்துவிட்டால் தனக்கு, அதாவது ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு இசைந்து போகிற மனிதர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க முடியும். தமக்கு ஏதுவான கல்வியை, தமக்கு வேண்டிய பிள்ளைகளுக்கு மட்டும் இதன்மூலம் இனி கொண்டுபோக முடியும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. இந்த வரைவறிக்கை சுற்றுக்கு வந்தால் தமிழ்நாடு முறுக்கும் என்பதும், அதன் அசைவு தமிழ்நாடு கடந்து பரவும் என்பதும் ஒன்றிய அரசிற்கு நன்கு தெரியும். ஆகவே இந்த செய்தியை பரவலாக்காமல் தமிநாட்டை திசைதிருப்ப வேண்டும் என்கிற முயற்சியில் அது இறங்குகிறது.அதன் ஒரு பகுதிதான் சீமான் அவர்கள் பெரியார் குறித்த அவதூறை பரப்புவது. சீமான் அவர்களுக்கு இந்தப் பணியைத் தந்ததன்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதற்கு முற்சி செய்திருக்கிறது ஒன்றிய அரசு,1) UGC வரைவறிக்கைக்கு எதிரான எதிர்வினை குறித்த வெளிச்சத்தை கொஞ்சம் மங்கச் செய்வது2) தமிழ்நாட்டின் சிறப்பான கல்விக்கட்டமைப்பிற்கான அடித்தளமான தந்தை பெரியாரின் பிம்பத்தை சிதைப்பதுபெரியாரை சிதைக்க வேண்டும் என்ற அவர்களது திட்டத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது தமிழ்நாடு. சீமானின் அபத்தமான ஆதாரமற்ற அவதூறுகளுக்கு நண்டு நடுசகளிடமிருந்து வயதானவர்கள்வரை, படித்தவர்கள், பாமரர்கள், அரசியல் சார்ந்தவர்கள், அரசியல் சாராதவர்கள் என்று அத்தனைபேரும் மூர்க்கமாக எதிர்வினையாற்றுகிறார்கள். இதன்மூலம் பெரியார் மீண்டும் ஒருமுறை இவர்கள் வழியாக நாடு முழுக்க வலம் வந்துகொண்டிருக்கிறார்.நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். UGC வரைவறிக்கையின் ஆபத்துகளை அம்பலப்படுத்துவதோடு அதை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதற்கான எதிர்ப்பியக்கங்களை முன்னெடுக்க வேண்டும்-- புதிய ஆசிரியன் பிப்ரவரி 2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2025 22:36
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.